கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!

கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!

கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!

கடந்த எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வந்த அமளிகள், சிரமங்களிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு சகஜ நிலைக்கு வரவில்லை.

பலவித விமர்சனங்களுக்கு உள்ளான இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் கள்ள ரூபாய் நோட்டுகளை அழிப்பதும் கருப்பு பணத்தை ஒழிப்பதும் என்று கூறப்படுகிறது.

புதிதாக வெளிவந்துள்ள ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகள் சிறிது காலத்துக்கோ தொடர்ந்தோ வராமல் இருக்கலாம். ஆனால் இவர்களால் கருப்பு பணம் என்று வர்ணிக்கப்படும் பணம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஒருவர், தான் வருவாயாக ஈட்டிய பணத்துக்கு அரசாங்கத்திடம் கணக்கு காட்டி அதற்கான வருமான வரி செலுத்தப்படாமல் வைத்திருக்கும் பணம் கறுப்புப் பணம் என்று குறிப்பிடப்படுகிறது.

இங்கு ஒரு நியாயத்தை கூறியாக வேண்டும், அரசாங்கம் விதிக்கும் வருமானவரி நியாயமானதாக இருந்தால் தான் அந்த வரி செலுத்தப்படாத பணம் கறுப்புப் பணம் என்று குற்றம் சாட்ட முடியும்.

கொடிய வருமான வரி

இப்போதுள்ள வருமான வரியின் அளவு, அளவுக்கு அதிகமானதாகவும் அட்டூழியமானதாகவம் உள்ளது. ஒருவர் தன் வருமானத்திற்கு எழுபது சதவிகிதம் வரி கட்ட வேண்டுமென்று சொன்னால் அது அநியாய வரி என்று சொல்வோம். அதே போல் தான் முப்பது சதவீதம் வரி கட்ட வேண்டுமென்று சொன்னாலும் அநியாயம் தான்.

இப்படிப்பட்ட அநியாய வரியை காட்டாமல் ஒருவர் வைத்திருக்கும் பணம் கறுப்புப் பணம் என்று சொல்வது சரி என்றால், அதற்கு காரணமாக அமைந்த இந்த அநியாய வரியை கொடிய வருமான வரி என்று சொல்வது மிகச் சரியாகும்.

இப்போது நம் நாட்டிலுள்ள வருமான வரியின் அளவு மிக அதிகமானது என்பதற்கு ஆதாரம் எங்கும் தேட வேண்டியதில்லை. ஆட்சி அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும் நிர்வாகம் செய்யும் அதிகாரிகளும், வருமான வரியை முறையாகச் செலுத்தவில்லை என்பதே ஆதாரமாகும்.

இப்போது மத்தியிலும் மாநிலங்களிலும் மந்திரிகளாகவும் எம்.பி களாகவும் எம்.எல்.ஏ களாகவும் உள்ளவர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள் தான். இவர்களெல்லாம் தங்களிடம் உள்ள பணத்திற்கு முழுமையாக வரி செலுத்துவார்களா? பெரும்பாலானவர்கள் செலுத்துவதில்லை.

அரசியல் கட்சிகளுக்கு, குறிப்பாக ப.ஜ.க விற்கு நன்கொடை வழங்கும் தொழிலதிபர்கள் எல்லோரும் தங்களிடமுள்ள சொத்துக்களுக்கு முழுமையாக வரி செலுத்துகிறார்களா என்று சொல்ல முடியுமா?

வருமான வரியில் திருத்தம் வேண்டும்.

மக்கள் வருமான வரியை சரியாக செலுத்தாமல் இருப்பதற்கு மக்களே காரணமல்ல. வருமான வரி விதிப்பில் உள்ள குறைபாடுகள்தான் காரணம். சட்டத்தில் குறைப்பாட்டை வைத்துக் கொண்டு அதை நடைமுறைப் படுத்தாதவர்களை குற்றம் சொல்வது தவறு.

இப்போதுள்ள வருமானவரி சட்டப்படி ரூ.5 இலட்சத்திற்கு பத்து சதவீதமும், 10 இலட்சத்திற்கு இருப்பது சதவீதமும், இருப்பது இலட்சத்திற்கு முப்பது சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

இது மிக அதிகமும் அநியாயமுமாகும், சொந்த வீடு இல்லாத சாமானிய மனிதர் ஒருவர் தன் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தும், நகைகளை விற்றும் 10 இலட்சம் சேர்த்து ஊருக்கு வெளியில் சிறு இடத்தை வாங்க நினைக்கும் போது அவரிடமிருந்து ஒரு இலட்ச ரூபாயை வரி என்ற பெயரில் பிடுங்குவது அநியாயமும் அட்டூழியமுமாகும்.

அதை போல் சொந்த வீடு இல்லாத ஒருவர் வருடக்கணக்காக சிரமப்பட்டு ஒரு சிறு வீட்டைக் கட்ட இருபது இலட்சம் ரூபாயை சேகரிக்கும் போது அதிலிருந்து ஆறு இலட்சம் ரூபாயை வரி என்ற பெயரில் பிடுங்குவது அநியாயமும் அடாவடித்தனமும் ஆகும். ஒரு வீடு கட்டுவதற்காக இருபது இலட்ச ரூபாய் வைத்திருப்பது என்பது தற்கால விலைவாசிப்படி பார்த்தால் பெரிய தொகை அல்ல.

அதனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வரியிலிருந்து தப்பிப்பதற்காக தந்திரங்கள் கையாளப்படுகின்றன. வரியின் அளவு அளவுக்கதிகமாக இருப்பதால் அதை செலுத்தாமல் இருக்க தந்திரத்தை கையாள்வது நியாயம் தான் என்பது தான் மக்களின் கருத்தாக உள்ளது.

தேவை வருமானவரி சீர்திருத்தம்.

நாட்டின் பொது தேவைக்காக வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள், ஆனால் அந்த வரியின் அளவு அளவுக்கு அதிகமானதாக இருப்பதால் தான் எல்லோருமே வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறார்கள். ஆகவே, இப்போதுள்ள வருமான வரியின் அளவை நன்றாக குறைக்க வேண்டும், அவ்வாறு குறைப்பது எல்லோரும் மனப்பூர்வமாக வரியை செலுத்துகிற அளவிற்கு இருக்க வேண்டும்.

சரியான அளவு.

இப்போதிருக்கும் வருமான வரியின் அளவை வெகுவாகக் குறைத்து ஒரு சதவிகிதமாக ஆக்கிவிட வேண்டும். ஒருவரிடம் எவ்வளவு தொகை இருந்தாலும் ஒரு சதவீதம் தான் வருமான வரி என்றிருந்தால் எல்லோருமே தங்களின் வருமான வரியை சரியாக செலுத்திவிடுவார்கள்.

இப்போதுள்ள வரியின் அளவுப்படி ஒருவரிடம் ஐந்து லட்சம் இருந்தால் ஐம்பதாயிரம் வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரித் தொகை மிக அதிகமான தொகையாகும். அதனால் தான் ஐந்து லட்சம் வைத்திருக்கும் யாரும் வரி செலுத்துவதில்லை. அப்படி யாராவது செலுத்துகிறார்கள் என்றால் அரசாங்கத்திற்கு தெரிந்துவிட்டது என்ற நிர்பந்த சூழ்நிலையில் தான் செலுத்துகிறார்கள்.

ஆகவே ஒருவருடம் ஐந்து இலட்சத்திற்கு மேல் எத்தனைக் கோடி இருந்தாலும் அதற்கான வருமான வரி “ஒரு சதவீதம்” என்று சீர்திருத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் எல்லோருமே அல்லது பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக தங்களின் வருமானவரியை செலுத்திவிடுவார்கள். அரசாங்கத்திற்கு வரவேண்டியது சரியாக வந்து சேர்ந்து விடும்.

வரியின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று கருதினால் அதிகபட்சமாக இரண்டரை சதவீதம் ஆக்கலாம். இந்த இரண்டரை சதவீதம் என்ற அளவு இஸ்லாமிய மார்க்கத்தில் ஸகாத் கொடுக்க வேண்டிய அளவாகும். ஸகாத் என்பது செல்வந்தர்கள் ஏழை எளியோருக்காக கொடுக்க வேண்டிய கடமையான தர்மம் ஆகும். இஸ்லாமிய அரசுகள் செல்வந்தர்களிடம் ஸகாத்தை வசூலித்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றன.

மிகப் பெரும்பாலானவர்கள் வரி எய்ப்பில் ஈடுபடாமல் முறையாக வரி செலுத்துவதற்கு ஏதுவான ஒரு அளவை அறிமுகப்படுத்துவதற்காகவே ஸகாத்தின் சதவீத அளவை குறிப்பிட்டுள்ளோம். இதுபோன்ற குறைந்த அளவிலான வரி விதிப்பின் மூலமே எல்லோரிடமிருந்தும் அல்லது பெரும்பாலானவர்களிடமிருந்து வருமான வரியை வசூலிக்க முடியும்.

இதைச் செய்யாமல் இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை போல எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் புதிய நோட்டுகள் கறுப்புப் பணங்களாக தொடரத்தான் செய்யும். அல்லது இது போன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்படாமல் தங்களின் செல்வத்தை பாதுகாப்பதற்கான வேலைகளை செய்து கொள்வார்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்.

இறுதியாக மீண்டும் கூறுகிறோம், அளவுக்கு மீறிய வரி விதித்துவிட்டு அந்த அநியாய வரியை கட்டாதவர்களை கறுப்புப் பணம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டுவது குற்றமாகும். வருமான வரியில் சீர்திருத்தம் செய்து நியாயமான அளவுக்கு கொண்டுவாருங்கள். அப்படிச் செய்தால் எல்லோரும் அல்லது பெரும்பாலானவர்கள் வரி காட்டுவார்கள். அதன் மூலம் நாடு நலமும் வளமும் பெறும்!

அரசு, மக்கள் அனைவருக்குமான இறைவனின் அறிவுரை:
“உங்களின் பொருட்ச்செல்வங்களும் உங்களின் மக்கட்செல்வங்களும் (உங்களுக்குச்) சோதனை தான். இறைவன் அவனிடம் தான் மகத்தான கூலி இருக்கிறது.” (அல்குர்ஆன் 64:15)