கேள்வி – 3

கேள்வி: நான் பணிபுரியும் நகைக் கடையில் TEMPLE JEWELLERY எனப்படும் ‘சிலைகள்’ வடித்த சில ஆபரணங்களும் உள்ளன.  அதனை முடிந்த வரை ‘நான்’ விற்பனை செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மாற்று  மத சக ஊழியர்கள் இல்லாத போது, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கேட்டால் அவற்றை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? – மாசுக் ஹனிபா – தி.நகர், சென்னை – 17.

பதில்: ஒரு பொருள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டால் அதன் கிராமும் தடை செய்யப்பட்டதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் யூதர்கள் மீது கொழுப்பை தடை செய்தான். அப்போது அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினர் மீது ஒன்றை சாப்பிடுவதை தடை செய்தால் அதன் கிரயத்தையும் தடைசெய்து விடுகிறான்.” (அபூ தாவூத் 3490)

இங்கு, சாப்பிடும் பொருள் பற்றி கூறப்பட்டாலும் சிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொதுவான பொருட்களுக்கும் பொருந்தும். புகாரியில் இடம்பெறும் நபிமொழி (2236) இதனை விளக்குகிறது. அது:

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை தடை செய்துள்ளனர்! என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு  அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது, மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர். எனவே அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், கூடாது! அது விலக்கப்பட்டது! என்று கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யுதர்களுக்கு கொழுப்பை ஹராமாக்கியபோது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்.’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தடை செய்துள்ளதினால் சிலை, சிற்பங்களாக உள்ள ஆபரணங்களை விற்பனை செய்வது கூடாது. இதனை தங்களின் முதலாளியிடம் தெரிவித்து அவற்றை வியாபாரம் செய்வதை நிறுத்தச் சொல்லவும்.

நீங்களும் எந்தச் சூழ்நிலையிலும் அவற்றை வியாபாரம் செய்வதை தவிர்க்கவும்.

<<முந்தய கேள்வி (கேள்வி-2) | அடுத்த கேள்வி (கேள்வி-4)>>