திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்

“அவன்தான் கர்ப்பக்கோளறைகளில் தான் நாடியபடி உங்களை வடிவமைக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கிறான்.” அல்குர்ஆன் 3:6

திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்

அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சரியா? சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா?

ஒருவரை மட்டம்தட்டி பேச அவரை நோக்கி ‘ஒன்பது’ என்று கூறப்படுவதைக் கேட்கிறோம். அலிகள் எனப்படும் அரவாணிகளை ஜாடையாகக் குறிப்பதே ஒன்பது எனும் வார்த்தை! அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும்  சரியா? சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா?

அரவாணி என்பவர் யார்?

ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உடைய அல்லது இரண்டுமே இல்லாமல் சிறுநீர் கழிப்பதற்கென ஒரு துவாரத்தை மட்டும் உடைய ஒருவரே அரவாணி என குறிப்பிடப்படுகிறார். (நூல்: முஅஜமு லுகத்தில் ஃபுகஹா)

இந்நிலையில் உள்ள ஒருவரை சிறு பிராயத்தில் ஆண் என்றோ, பெண் என்றோ முடிவு செய்ய முடியாது. பருவ வயதை அடைந்த பின் முடிவு செய்ய இயலும். அதாவது ஒரு அரவாணிக்கு பருவ வயதை அடைந்த பின் ஆணுறுப்பில் இருந்து விந்து வெளிப்பட்டால் அல்லது மீசை தாடி போன்றவை முளைத்தால் ஆண் என்று கருதப்பட வேண்டும். பருவ வயதை அடைந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அல்லது மார்பு பெரிதானால் பெண் என முடிவு செய்யப்பட வேண்டும்.

இதன் பின் எந்தப் பாலினமாக முடிவு செய்யப்பட்டாரோ அதற்கு மாற்றமாக உள்ள மர்ம உறுப்பு அறுவை சிக்கிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும். அல்லது சரி செய்யப்பட வேண்டும். உடலிலுள்ள ஊனத்தை மருத்துவத்தின் மூலம் சரி செய்வது ஆகுமானது என்ற அடிப்படையில் இதுவும் ஆகுமானதே. இவ்வாறு அறுவை சிகிச்சை நடைபெறும் செய்தியையே ஆண் பெண்ணாக மாறினார் என்றும் பெண் ஆணாக மாறினார்  என்று அவ்வப்போது செய்தித் தாள்களில் நாம் பார்க்கிறோம்.

திருநங்கை என்பவர் யார்?

தெளிவாக ஆணுறுப்பு மட்டும் உள்ள ஒருவரிடம் பெண்ணின் தன்மை இருந்தால் அவரே திருநங்கை என்று அழைக்கப்படுகிறார். அதாவது இத்தகையவர் பருவ வயதை அடைந்த பின்பும் – அவருடைய முயற்சியின்றி நடை, பாவனை, பேச்சு போன்றவை பெண்ணைப் போன்றிருக்கும்.

நாம் இதுவரை பார்த்தவர்களில் இந்த வகையினரே சமூகத்தில் அதிகமாக உள்ளனர். ஹார்மோன் சுரப்பிலுள்ள வித்தியாசமான நிலையே இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் என்பதால் இவர்களை குற்றவாளிகள் போன்று பார்க்கக் கூடாது. இவர்கள் விஷயத்தில் நல்ல தீர்வு கண்டு வழிகாட்ட வேண்டும்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்துகள் மூலமோ அல்லது கவுன்சிலிங்  மூலமோ, அவரிடம் உள்ள பெண் தன்மையை மாற்ற முடியுமானால் மாற்ற வேண்டும். அதற்க்கு இயலாவிட்டால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணாக மாற்றிக்கொள்ளலாம்.

அணுகுமுறையில் மாற்றம் தேவை

திருநங்கையர் விஷயத்தில் சமூகத்தின் கண்ணோட்டமும் அணுகுமுறையும் தவறாக உள்ளது. அதன் காரணமாக அவர்களின் வாழ்வும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. தீயவர்கள் அவர்களை அருவருப்பான செயல்களுக்கு பயன்படுத்துவதாக அறிய முடிகிறது. அவர்களும் தாங்கள் தாழ்ந்த நிலையில் தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து செயல்படுகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் ரயில்களிலும், பேருந்துகளிலும், கடை வீதிகளிலும், அவர்கள் குழுவாக வந்து மக்களிடம் யாசித்துப் பிழைப்பதைக் காண முடிகிறது. இது ஒரு அவலம், இதை மாற்ற வேண்டும்!

ஒருவர் திருநங்கையாக வளர்கிறார் என்றால் அவரை பெற்றோரும் சுற்றத்தாரும் மட்டம் தட்டவோ ஒதுக்கவோ கூடாது. மாறாக மேற்கண்ட வழிகளைப் பயன்படுத்தி அவர் ஆணாகவோ பெண்ணாகவோ வாழ்வதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

அவர்களும் கூட முறையான தொழில் செய்தும் வேலை செய்தும் தங்களுக்கான வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டு கண்ணியமாக  வாழ முடியும் என்பதை மனதில் படும்படி எடுத்துச் சொல்லி மாற்றம் செய்ய வேண்டும்.

திருநங்கையரில் சிலர் தங்களைத் தாழ்த்திக் கொள்ளாமல் தங்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்தி உழைத்து மதிப்புடன் வாழ்ந்து வருவது நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

அத்தகைய நல்ல மாற்றத்தைக் கொண்டுவர இயலும், அல்லா கூறுகிறான்:

“நிச்சயமாக நாம் ஆதமின் சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். மேலும் கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம்.” அல்குர்ஆன் 17:70

ஆகவே திருநங்கையரின் வாழ்வை சிறக்கச் செய்ய அரசும் சமூக ஆர்வலர்களும் உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்!

கண்டனத்திற்குரியவர்கள்:

சிலர் தாங்களாக வலிந்து பெண்ணின் தன்மைகளை தங்களிடம் ஏற்ப்படுத்திக் கொள்வார்கள். இது மிகப்பெரிய தவறாகும்.

பெண்களைப் போல் நடந்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப்போல் நடந்துகொள்ளும் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (புகாரி) என நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இத்தகையவர்கள்  கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரியவர்கள்.