கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Sep 09, 2014 Viewers: 2597


கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4

சாட்சி

எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கொடுக்கல் வாங்கலுக்கு இது மிக அவசியம், இந்த அடிப்படையில் கடன் கொடுக்கல் வாங்கலின் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது பற்றி உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால் சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஆடவர் ஒருவரையும் பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 2:282

கடன் கொடுக்கல் வாங்கலை எழுதிக் கொண்டால் எழுத்திலுள்ளதை வலுப்படுத்த சாட்சிகள் தேவை. எழுதிக் கொள்ளாவிட்டால் சாட்சிகள் இருப்பது மிக முக்கியமாகும். சாட்சிகள் நீதி நேர்மை மிக்கவர்களாக இருக்க வேண்டும். விவாகரத்துக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சாட்சிகளின் தன்மையை குறிப்பிடும் போது
உங்களில் நியாயமுடைய இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 65:2.
என்று அல்லாஹ் கூறுகிறான்.

இரண்டு ஆண்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும், அவ்வாறு இரண்டு ஆண்கள் இல்லாத சூழ்நிலையில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்க வேண்டும்.

ஒரு ஆணின் இடத்தில் ஏன் இரண்டு பெண்கள் என்பதற்கும் அல்லாஹ் அதே தொடரில் காரணம் கூறுகிறான்.

“(பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் இருவரில் மற்றொருத்தி நினைவூட்டும் பொருட்டேயாகும்.”

பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக கூடுதல் குறைவாக பேசிவிடலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.

சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது என்றும் அல்லாஹுதஆலா தொடர்ந்து கூறுகிறான்.

இதற்கு, இந்த கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளாய் இருங்கள் என்று கூப்பிடும்போது அதை ஏற்று அதற்க்கு சாட்சியாக இருக்க வரவேண்டும் என்ற கருத்தும் வருகிறது. அல்லது கொடுக்கல் வாங்கல் முன்பு நடந்த போது அங்கிருந்து அதை நன்றாக அறிந்த சாட்சியாக இருந்தால், பின்னாளில் பிரச்சினை என வரும்போது தான் அறிந்து வைத்துள்ள விவரங்களை சாட்சியமாக வழங்க வேண்டும் என்ற கருத்தும் வருகிறது.

குறிப்பாக நடந்து முடிந்த கடன் ஒப்பந்தத்திற்கு சாட்சியாக இருந்துவிட்டால் பிறகு அந்த சாட்சியம் தேவைப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கூப்பிட்டால் இவர் சென்று சாட்சியம் வழங்குவது அவசியம்.

சாட்சிகள் வைத்துக் கொள்வது எந்த அளவு முக்கியமென்றால்நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான். பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் முக்கிய வியாபாரத்திற்கு சாட்சிகள் இருக்க வேண்டிய தேவையிருக்கிறது.

அடுத்து, சாட்சிகள் தங்கள் சாட்சியை சுதந்திரமாகச் சொல்வதற்கு உரிமை கொடுக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு சாதகமாக பேசவேண்டுமென்று கூறி அவர்களுக்கு இடையூறு செய்வது கூடாது. இது பற்றி அதே வசனத்தில் எழுதுபவனுக்கும் சாட்சிக்கும் எவ்வித இடையூறும் அளிக்கப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான்.

அத்துடன் சாட்சியமளிக்கத் தேவை ஏற்ப்படும்போது அல்லது சாட்சியம் அளிக்கும்போது எதையும் மறைக்கக் கூடாதுசாட்சியத்தை மறைக்காதீர்கள். எவன் அதை மறைக்கிறானோ நிச்சயமாக அவனுடைய இதயம் பாவத்திற்குள்ளாகிறது.” அல்குர்ஆன் 2:283

அடமானம்

கடன் கொடுப்பவர் தன் பொருள் திரும்பக் கிடைக்க உத்தரவாதம் வேண்டும் என்பதற்காக கடன் பெறுபவரிடமிருந்து அடமானமாக ஏதேனும் பொருளை வாங்கிக் கொள்ளலாம். கடன் வாங்கியவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் போனால் இந்தப் பொருள் மூலம் தன் உரிமையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இது பற்றி அல்லாஹ் கூறுவது:
நீங்கள் பயணத்தில் இருந்து (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் (கடன் கொடுத்தவன்) அடமானப் பொருளை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவன் தன்னிடமுள்ள அமானிதத்தை நிறைவேற்றட்டும், அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சட்டும்.” அல்குர்ஆன் 2:283

இங்கு அல்லாஹ் பிரயாணத்தின் போது அடமானம் பெற்றுக் கொள்வது பற்றி பேசுவதால் பிரயாணத்தில் இருக்கும்போது மட்டும்தான் அடமானப் பொருள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதக் கூடாது. பிரயாணத்தில் எழுத்தரை தேடுவது சிரமம் என்பதால் அப்போதைய கடன்களுக்குத் தான் பெரும்பாலும் அடமானம் தேவைப்படும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எனவே உள்ளூரில் இருக்கும்போதும் அடமானம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நபி(ஸல்) அவர்களின் வழிமுறையும் ஆதாரமாக உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடம் குறிப்பிட்ட தவணையில் (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கினார்கள் (அதற்காக) அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இரும்புக் கவசத்தை அடமானமாகப் பெற்றார்!” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 2252.

தன் குடும்பத்தினருக்காக வாங்கிய முப்பதுஸாஉகோதுமைக்காக ஒரு யூதரிடம் தனது கவச ஆடையை அடமானம் வைத்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: நஸஈ 4651

அடமானப் பொருளை பயன்படுத்துதல்

அடமானமாகப் பெற்றப் பொருளை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் கடன் கொடுத்ததை வைத்து கூடுதல் பலன் அடைந்ததாக ஆகும்.

ஆனால் அடமானமாகப் பெற்ற பொருள் கால்நடையாக இருந்தால் அதைப் பராமரிப்பதற்கு ஈடாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடமானம் வைக்கப்பட்டதாக இருந்தால் பிராணியின் முதுகில் வாகனிக்கலாம், பால் தரும் பிராணி அடமானம் வைக்கப்பட்டிருந்தால் பாலை அருந்தலாம். வாகனிப்பவர், பால் அருந்துபவர் மீதே அப்பிராணிக்காக செலவு செய்வது கடமையாகும்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: திர்மிதி 1254, அபூதாவூத் 3528.

மறைமுக வட்டி

கடன் வாங்கியவர், தான் கடன் வாங்கியதன் காரணத்தால் கடன் கொடுத்தவருக்கு ஏதேனும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது ஒரு விதத்தில் வட்டியாகத்தான் ஆகும். அப்படி நடப்பதை தவிர்க்க வேண்டும்.

தேநீர் வாங்கிக் கொடுப்பது உட்பட அவர்களுக்குள் முன்பு அவ்வாறான பழக்கம் இல்லாதிருந்தால் இந்த வகையில் தான் சேரும்.

அடமானம் வைக்கப்பட்ட கால்நடைக்கு பராமரிப்பு செலவு செய்வதால் அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு எனக் கூறும் மேற்கண்ட நபிமொழி, நாம் இப்போது பேசும் கூடுதல் பயன்பெறுதல் கூடாது என்று உணர்த்துகிறது. அதை கீழ்வரும் செய்தியும் விளக்குகிறது.

நான் மதீனாவிற்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்) ‘நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேரீச்சம் பழத்தையும் உண்ணத்தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகைதந்த என் வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமேஎன்று கேட்டார்கள். பிறகு, ‘நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து, அவர் ஒரு வைக்கோல் போரையோ வாற்கோதுமை மூட்டயையோ கால்நடைத் தீவன மூட்டயையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்.’ என்று கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூ புர்தா ஆமிர்(ரஹ்), நூல்: புகாரி 3814.

ஆனால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது தானாக முன்வந்து (முன்பே பேசப்படாமல்) தான் பெற்றப் பொருளை விடச் சிறந்ததையோ அல்லது சற்று கூடுதலாகவோ கொடுப்பது தவறல்ல. இதற்க்கு நபி( ஸல்) அவர்களின் நடைமுறையே ஆதாரமாக உள்ளது. அது:

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதை திருப்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) ‘அவருக்கு அதை கொடுத்துவிடுங்கள்என்றார்கள்.அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தான் தோழர்கள் கண்டார்கள். ‘அதையே கொடுத்துவிடுங்கள்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர்எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள். அல்லாஹுவும் உங்களுக்கு நிறைவாகத் தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2305.

 

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil