சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Oct 14, 2018 Viewers: 2003


சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2

சலஃப் என்ற வார்த்தைக்கு ‘முன்னோர்’ என்பது பொருள். இது ‘அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹ்’ நல்ல முன்னோர் என்பதின் சுருக்கமாக பயன்படுத்தப்படுகிறது. ‘சலஃபி’ என்ற வார்த்தைக்கு முன்னோரைச் சார்ந்தவர் என்பது பொருளாகும். அதாவது நல்ல முன்னோரின் வழியில் நடப்பவர் என்பது இதன் கருத்தாகும்.

மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகளை நல்ல முன்னோர் எவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பவரையும் அந்த நல்ல முன்னோர் குர்ஆனையும் ஹதீஸையும் எந்த முறையில் அணுகினார்களோ அதே முறையில் அணுகக் கூடியவரையும் குறிப்பிடவே ‘சலஃபி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
சுய கருத்து, மனோ இச்சை, தான் சார்ந்த கூட்டத்தின் கருத்து இவற்றையெல்லாம் விட குர்ஆனுக்கும் ஹதீஸிக்கும் முன்னுரிமை வழங்கி இரண்டையும் ஏற்று நடப்பதே நல்ல முன்னோர் குர்ஆனையும் ஹதீஸையும் அணுகிய முறையாகும்.
மேலும் அல்லாஹ் மற்றும் அவனது பண்புகள் விதி உள்ளிட்ட அடிப்படை நம்பிக்கைகளிலேயே சுயகருத்துக்களை புகுத்தியதால் வழிகேடுகள் தோன்றின. இந்த வழிகேடுகளுக்கு அப்பார்பட்டு தூய்மையான நம்பிக்கைகளை கொண்டிருந்த சஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉதாபிஈன்கள் ஆகியோரின் வழிமுறையை குறிப்பிடுவதற்க்கு ‘சலஃப்’ வழிமுறை என்ற விளக்கம் பயன்படுத்தப்படுகிறது.
சலஃப், சலஃபி குறித்த இந்த விளக்கங்களையும் கூடுதல் விவரங்களையும் இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அத்துடன் சலஃப் வழிமுறையில் நடப்பதை குறை கூறுபவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் அக்கட்டுரையில் பதில்களையும் பதிவு செய்திருந்தோம்.

அதே போன்று சலஃப் வழிமுறையே பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலர் இந்த நல்ல வழிமுறை குறித்து தவறான புரிதலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் தவறான புரிதலையும் தவறான நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தி திருத்துவதற்காக இந்த இரண்டாம் பாகத்தை எழுதுகிறோம் அல்லாஹ் நல்லுதவி செய்யட்டும்!

‘சலஃபுஸ் ஸாலிஹ்’ எனும் நல்ல முன்னோரின் வழிமுறையில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் பலருடைய தவறான கருத்து அரசியல் ஈடுபடுவது கூடாது என்பதாகும். குடியரசு முறையில் ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மையானராக வாழும் நாடுகளிலும் கூட அரசியலில் ஈடுபடுவதையே இத்தகையவர்கள் குறை காண்கிறார்கள். இவர்களாக சலஃப் வழிமுறை என்பதற்க்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டதால் இந்த நிலை.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகான வேண்டும் அவர்களின் பொதுவான தேவைகளை நிறைவேற்ற வேண்டும் அவர்களை நிர்வாகிக்க வேண்டும். அதற்க்கு அரசியலை பயன்படுத்த முடியுமென்றால் பயன்படுத்த வேண்டும்.

அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் நம்முடைய சலஃபுக்களிலே முதன்மையானவர்கள். (ஒரு உதாரணத்துக்கு) அவர்கள் இருவரும் இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் இருந்து கொண்டிருந்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் ஒதுங்கி இருப்பார்களா? ஒதுங்கி இருக்க மாட்டார்கள்!

நமது இந்தியா போன்ற நாடுகளின் சூழ்நிலையில் அவ்வாறு அரசியலில் ஈடுபடும்போது மார்க்கரீதியாக ஏற்படும் சங்கடங்களை இயன்ற அளவு சமாளிக்க வேண்டும். இது போன்ற நிலையில் நாம் எப்படிச் செயல் பட வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: “உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”

( அல் குர்ஆன் 64 :16)

இந்த வசனத்தின் கருத்து வாழ்க்கையில் மார்க்கம் காட்டிய வழிமுறைகளை அப்படியே எடுத்து நடக்க இயலாத சூழ்நிலைகள் உண்டு அப்போது எந்த அளவுக்கு மார்க்கத்தை பின்பற்ற முடியுமோ அந்த அளவுக்கு பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

இது நம் நாட்டுச் சூழ்நிலையில் அரசியலில் ஈடுபடும் போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். ஆனால் சலஃப் வழிமுறையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் பலர் இந்தத் தெளிவில்லாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து இத்தகையவர்களின் இன்னொரு தவறு சலஃப் எனும் நல்ல முன்னோர் வழி நடப்பது என்றாலே “இக்வானுல் முஸ்லிமீன்” போன்ற இயக்கத்தினரை கடுமையாக எதிர்ப்பதும் அவர்களுடன் முழுமையான விரோதம் பாராட்டுவதும் என்று புரிந்து வைத்திருப்பது.

இவர்களின் இந்த தவறான போக்குக்கு அடையாளம் இஸ்லாமிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் இக்வான்களை பற்றி ‘காரிஜிய்யாக்கள்’ என்பது போன்ற மோசமான பட்டப்பெயர்களால் பழிக்கிறார்கள். ( காரிஜிய்யாக்கள் என்போர் மிக மோசமான வழி கெட்ட கூட்டத்தினர் ) அதே சமயத்தில் ஃபிர்அவ்ன் தனம் கொண்ட மார்க்கத்தை அறவே மதிக்காத கொடியவர்களாக இக்வான்களின் எதிரிகளாக உள்ள ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் இது போன்ற கடுமையான வார்த்தைகளால் குறை கூறுவதில்லை. அவர்களுடன் விரோதம் பாராட்டுவதில்லை.

இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரிடம் தவறான கருத்துகள் உள்ளன என்றாலும் நல்ல முன்னோரின் வழிமுறைக்கு எதிரானவர்கள் என்றாலே இவர்கள்தான் என்கிற பிரச்சாரம் சரியில்லை.

எகிப்து போன்ற நாடுகளில் ஏற்ப்பட்ட குழப்பங்களுக்கு மூல காரணம் அங்கிருக்கும் கொடிய ஆட்சியாளர்கள் தான்.

ஆக சலஃப் வழிமுறையில் செல்வதாக சொல்லிக் கொண்டு இக்வானுல் முஸ்லிமீன் போன்றவர்களை எதிர்ப்பதும் அவர்களுடன் பகைமை பாராட்டுவதுமே அதற்க்கான அடையாளம் என்கிற மனோநிலையில் இருக்கும் சகோதரர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து இத்தகைய சகோதரர்களின் மற்றொரு தவறான வழிமுறை தாங்கள் நேசிக்கும் உலமாக்களின் கருத்துக்களுக்கும் அல்லது அவர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை சரி காண்பதற்காக பிடிவாதம் பிடிப்பது அந்த உலமாக்களின் கருத்துக்களுக்கும் மாற்றுக்கருத்து கொண்ட உலமாக்களை வெறுப்பது குறைபேசுவது போன்ற செயல்பாடு.

தங்களின் வழிகாட்டியாக இருக்கும் உலமாக்கள் அல்லாத வேறு உலமாக்களை தாழ்வாகக் கருதும் போக்கும் இத்தகையவர்களிடம் உண்டு.

இது மட்டுமின்றி ‘சலஃபி’ எனும் பெயரை பயன்படுத்துவோரில் சிலர் அரபு நாட்டில் அணிவது போன்ற ‘தவ்ப்’ எனும் கால்வரை நீளும் சட்டைதான் அணிய வேண்டும். என்பது போன்ற தவறான நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளார்கள். இது போல் பேன்ட் அணிந்து தொழுபவரைப் பின்பற்றி தொழக் கூடாது என்பது போன்ற தவறான சட்டங்களையும் அவர்களில் சிலர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
பிரபலமான மூத்த உலமாக்களிடம் பாடம் படித்த உலமாக்கள் சிலரின் அறிமுகம் கிடைத்தால் இந்த உலமாக்களே சிறந்தவர்கள் என்று எண்ணுவதும் பிரபலமாகாத மூத்த உலமாக்களிடம் பாடம் படித்த உலமாக்கள் நல்ல அறிஞர்களாக இருந்தாலும் குறைத்து மதிப்பிடுவதும் இவர்களில் சிலருடைய போக்கு!
சிலர் சில இயக்கங்களை எதிர்ப்பதையும் சில கருத்துக்களை பேசுவதையும் தங்களின் ‘சலஃப்’ பற்றுக்கு அடையாளமாக காட்டிக் கொள்கிறார்கள். சலஃப், சலஃபி எனும் வார்த்தைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் சலஃபி கட்சி என்று ஒன்று இருப்பதாக அறிந்தோ அறியாமலோ சித்தரிக்கிறார்கள்.
இத்தகைய போக்கை சலஃப் வழிமுறையில் செல்லும் உலமாக்கள் அங்கீக்கரிப்பதில்லை. சலஃபுஸ் ஸாலிஹ் எனும் நல்ல முன்னோரின் வழி நடக்க விரும்புபவர் அது எவ்வாறு என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
நமது இந்த கட்டுரையின் இரண்டு பாகத்திலும் அதற்க்கான சரியான விளக்கத்தை பதிவு செய்துள்ளோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனுடைய நேரான வழியில் நடப்பதற்க்கு நமக்கு நல்லுதவி செய்யட்டும்!