ஆய்வுகள் | ஹதீஸ் by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA On Nov 21, 2021 Viewers: 579 0
ஹதீஸ் எப்படி புரிவது?
ஹதீஸ் - 4
தொழுகையை முறிக்கும் மூன்று
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்)
தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை
போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது
இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது தொழுகையை முறித்துவிடும்
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு
நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை
விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள்
என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு
அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
(முஸ்லிம் 882)
இந்த ஹதீஸின் கருத்தை கீழ்காணும் ஹதீசும் கூறுகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண்
(முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள)
சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 883)
மேற்கண்ட இரண்டு
ஹதீஸ்களும் தொழக்கூடிய ஒருவர் தனக்கு முன்னால் தடுப்பு எதுவும் வைக்காமல் தொழுதால்
பெண்ணோ அல்லது நாயோ கழுதையோ அவருக்கு முன்னால் கடந்து சென்றால் அவரது தொழுகை முறிந்து
விடும் என்ற கருத்தை தெரிவிக்கின்றன. அதாவது இவ்வாறு கடந்து சென்றால் தொழுபவர் தனது
தொழுகையை நிறுத்திவிட்டு மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழ வேண்டும் என்பது கருத்து.
இந்தக் கருத்தை லாஹிரியா
வழிமுறையை சேர்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். ஹன்பலி அறிஞர்கள், கருப்பு நாய் குறுக்கே செல்வதால்
மட்டும் இவ்வாறு தொழுகை முறியும் என்கின்றனர்.
(நூல்: அல்பிக்ஹுல் இஸ்லாமி
வ அதில்லதுஹு )
பொதுவாக தொழக்கூடியவர் தனக்கு
முன்னால் சுத்ரா எனும் தடுப்பை வைத்துக் கொள்வது மார்க்கத்தில் காட்டித் தரப்பட்டுள்ள
ஒரு வழிமுறையாகும். ஆனால் அவ்வாறு சுத்ரா வைத்தோ அல்லது வைக்காமலோ தொழக்கூடியவருக்கு
முன்னால் எதுவும் கடந்து செல்வதால் தொழுபவரின் தொழுகைக்கு பாதிப்பு ஏற்படும் என்று
சுத்ரா வைப்பது பற்றி பேசும் ஹதீஸ்களில் சொல்லப்படவில்லை.
அத்துடன் இவ்வாறு குறுக்கே செல்வதால் தொழுகை முறியும் என்று புரிவது தவறு என்று உணர்த்தும்
ஹதீசும் உண்டு. அது,
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில்
நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும்
என்பது பற்றி பேசப்பட்டது. அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும்
நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்
கொண்டிருக்க அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால்
நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த
விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
(புகாரி 514,
முஸ்லிம் 887)
இந்த இரு வகை ஹதீஸ்களையும்
ஒன்றிணைத்துப் புரியும் விதத்தில் இமாம் நவவி
(ரஹ்) அவர்கள் கூறும் விளக்கம்:
(மூன்று கடந்து செல்வதால் தொழுகை முறியும் என்று
கூறும் ஹதீஸ் விஷயத்தில்) இமாம்கள் மாலிக், அபு ஹனிஃபா, ஷாஃபீ ஆகியோரும் மற்றும் முற்கால, பிற்கால அறிஞர்களில் பலரும்
“இம்மூன்றில் ஒன்றோ அல்லது
வேறு எதுவுமோ கடந்து செல்வதால் தொழுகை முறியாது” என்று கூறுகிறார்கள். மேலும் தொழுகை முறியும் என்பதின்
கருத்து, “இவை கடந்து செல்லும்போது இவற்றில்
கவனம் செல்வதால் தொழுகையில் குறைவு ஏற்படும். தொழுகையே செல்லாமல் போய்விடும் என்பது
இதன் கருத்து அல்ல” என்றும் இவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
(ஷரஹுன்னவவி அலா ஸஹீஹ் முஸ்லிம்).
ஆக இவ்வாறு புரிவதால் ஹதீஸ்களுக்குள் முரண்பாடில்லாமல் விளங்கலாம்
- மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA