அரபியில்தான் குத்பாவா?

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA.,Mphil On Nov 27, 2021 Viewers: 1052


அரபியில்தான்  குத்பாவா?

அரபியில்தான்

குத்பாவா?

                வெள்ளிக்கிழமை ஜுமுஆ கடமையில் முக்கிய அம்சமாக குத்பா எனும் பிரசங்கமும் உள்ளது. தொழுகைக்கு முன்னர் நிகழ்த்தப்படும் இந்த குத்பா மக்களுக்கு மார்க்க வழிகாட்டுதலை எடுத்துச் சொல்வதற்கு முக்கிய வழியாக இருக்கிறது.

                நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்திய குத்பா பற்றி கூறப்படுவதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர¢ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.

(முஸ்லிம் 1564 )

                நபியவர்கள் குத்பாவில் குர¢ஆன் வசனங்களை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள், மார்க்க விசயங்களை நினைவூட்டியிருக்கிறார்கள். மக்களுக்கு குர¢ஆனின் செய்தியை புரிய வைப்பதற்கும் அவர்களுக்கு மார்க்க விஷயங்களை நினைவூட்டுவதற்கும் அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே குத்பாவில் பேச வேண்டும். இதன்படி நமது இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் அந்தந்தப் பகுதி மக்களின் மொழி யிலேயே குத்பா எனும் பிரசங்கம் நடைபெறுகிறது.

                ஆனால் சில பகுதிகளில் அரபி மொழியை அறவே புரியாத மக்களுக்கும் அரபியில்தான் குத்பா செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்துகொண்டிருக்கிறது.

                இந்த நடைமுறை இருக்கும் பகுதிகளில் அரபியில் குத்பா செய்வதற்கு முன்னர் மின்பருக்கு கீழே நின்று அந்தப்பகுதி மொழியில் குத்பா (பிரசங்கம்) செய்யப்படுகிறது. இந்த முறையில் தமிழ்நாட்டில் மின்பருக்குக் கீழே தமிழில் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாறு செயல்படும் இமாம்களில் பலர் மின்பருக்குக் கீழே பேசிய தலைப்பை விட்டு விட்டு வேறு தலைப்பில் மின்பரில் ஏறி அரபியில் பேசுகிறார்கள். வேறு சில இமாம்கள் மின்பருக்குக் கீழே பேசியதில் சொன்ன ஒன்றிரண்டு குர¢ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மின்பர் மேல் நின்று - இறைப்புகழ், ஸலவாத்துடன் - அரபியில் சொல்லிவிட்டு இறங்கி விடுகிறார்கள். இந்த இரு தரப்ப¤னரின் மின்பர் குத்பா பொது மக்களுக்கு புரிவதில்லை.

                இந்த இரு வகையினரும் ஜுமுஆ குத்பாவை சடங்கு, சம்பிரதாயமாக ஆக்கியிருப்பது வேடிக்கையாகவும் அதே நேரத்தில் வேதனையாகவும் உள்ளது.

                கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு புரியாவிட்டாலும் அரபியில் குத்பா நிகழ்த்துவது தவறல்லவா? என்ற நியாயமான  ஆட்சேபனைக்கு இவர்கள் சொல்லும் தவறான பதில்:

                இதுதான் பாரம்பரியமான நடைமுறை, குத்பா என்பது ஒரு வணக்கம் அதை நபி(ஸல்) நிகழ்த்திய மொழியிலேயே நிகழ்த்த வேண்டும்.

                இவ்வாறு இவர்கள் இரண்டு காரணங்களை கூறுகிறார்கள். இவர்களின் இரண்டு காரணங்களும் தவறானவை என்பதற்கான ஆதாரங்களை பார்ப்போம்.

பாரம்பரியமான நடைமுறை

     உண்மையில் பாரம்பரியமான மார்க்கச் சட்ட நூல்களில் அரபி மொழியல்லாத வேறு மொழிகளிலும் குத்பா நிகழ்த்தலாம் என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.

     இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்களின் கருத்துப்படி  அரபியல்லாத மொழியில் ஜுமுஆ குத்பா செய்யலாம். ஆனால் அவர்களின் மானவர்களான அபூ யூசுஃப் (ரஹ்), முஹம்மது (ரஹ்) ஆகியோரின் கருத்துப்படி அது கூடாது.

_ பார்க்க: ரத்துல் முஹ்த்தார் பாகம்: 2, பக்: 147 (பதிப்பு: அல்மக்தபா அஷ்ஷாமிலா)

                இதேபோல் ஹனஃபி மத்ஹபின் பழைய நூல்களின் சாராம்ஸமாக எழுதப்பட்டுள்ள 'பிக்ஹுல் இபாதாத் அலல் மத்ஹபில் ஹணஃபி' என்ற நூலில் ஜுமுஆவின் ஆறு நிபந்தனைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் இறுதியாக, “ஆறாவது நிபந்தனை குத்பா. அதை அரபியல்லாத மொழியில் நிகழ்த்துவதும் சரிதான்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. _

பக்: 112, (பதிப்பு: அல்மக்தபா அஷ்ஷாமிலா)

      அடுத்து, 'அல்மஜ்மூஉ ஷரஹுல் முஹத்தப்' எனும் ஷாஃபி மத்ஹபின் முக்கிய நூலில் ஜுமுஆவுக்கு அரபியில் குத்பா செய்வது நிபந்தனை என்று ஒரு கூற்றும் அது நிபந்தனையல்ல விரும்பத்தக்கது என்று ஒரு கூற்றும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (நிபந்தனை என்ற கூற்றே மிகச் சரியானது என்று நூலாசிரியர் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்கள்). _

பாகம் 4, பக்: 522. (பதிப்பு: அல்மக்தபா அஷ்ஷாமிலா).

                மேலும் 'அல்ஃபிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லதுஹு' என்ற நூலில், “குத்பா செய்பவருக்கு அரபி தெரிந்திருந்தாலும் அவர் அரபியல்லாத மொழியில் குத்பா செய்வதை ஹனஃபி அறிஞர்கள் ஆகுமானது என்கின்றனர். மக்கள் அரபியராக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும் ஆகுமானதே என்று கூறுகின்றனர்என்று எழுதப்பட்டுள்ளது.

பாகம்: 2, பக்: 1304. (பதிப்பு: அல்மக்தபா அஷ்ஷாமிலா)

                இப்படியெல்லாம் பாரம்பர்ய மார்க்க சட்ட நூல்களிலும் அவற்றிலிருந்து எடுத்து எழுதப்பட்ட பிற்கால நூல்களிலும் ஜுமுஆ குத்பா அரபியல்லாத மொழியில் நிகழ்த்தப்படுவது ஆகுமானது என்ற கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தும் அது அறவே ஆகாது என்று தற்காலத்தில் சிலர் சாதிக்கிறார்கள்.

                பலரும் அது ஆகாது என்றுதானே சொல்கிறார்கள் என்று கேள்வி எழுப்பலாம். ஹனஃபி அறிஞர்கள் பொதுவாகவே ஆகுமானது என்ற நிலைப்பாட்டில் இருப்பதை மேற்கண்ட அல்ஃபிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லதுஹு நூலின் பதிவு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. (ஆரம்ப காலத்தில் கருத்து வேறுபாடு இருந்திருந்தாலும் கூட!).

                அத்துடன் பலர் ஒன்றை கூடாதென்றும் சிலர் அதை கூடும் என்றும் சொல்லும்போது சிலர் சொல்வதுதான் சரியானது எனும்போது சரியானதை ஏற்பதுதான் முறையாகும்.

                இந்த அடிப்படையில் குத்பா என்பது பிரசங்கமாகும். அதாவது மக்களுக்கு அறிவுரையும் உபதேசமும் செய்வது. மக்களுக்கு புரியும் மொழியில் அறிவுரையும் உபதேசமும் செய்தால்தான் அது பிரசங்கமாக ஆகும். இல்லாவிட்டால் பிரசங்கமாக ஆகாது. இந்த ரீதியில் அரபியல்லாத மொழியில் ஜுமுஆ குத்பா நிகழ்த்துவது ஆகுமானது என்பதே சரியான கருத்து.

அடுத்து, குத்பா அரபியில்தான் நிகழ்த்தப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் கூறும் இன்னொரு காரணம் : குத்பா என்பது ஒரு வணக்கம். அந்த வணக்கத்தை நபி (ஸல்) அவர்கள் அரபி மொழியில்தான் செய்தார்கள். அதனால் நாமும் அதை அரபியில்தான் செய்ய வேண்டும்

                குத்பா என்ற பிரசங்கம் மக்களுக்கு அறிவுரையும் உபதேசமும் செய்வதாகும். அது ஒரு வணக்கம் என்று வைத்துக் கொண்டால் மக்களுக்கு அறிவுரையும் உபதேசமும் நிறைவேறினால்தான் அந்த வணக்கம் நிறைவேறும். அதாவது தமிழ் மக்களுக்கு தமிழிலும் ஆங்கில மக்களுக்கு ஆங்கிலத்திலும் பிரசங்கம் நடந்தால்தான் அந்த குத்பா பிரசங்கம் என்ற வணக்கம் நடந்ததாக ஆகும். ஆனால் அரபியில் எழுதப்பட்ட குத்பா வாசகங்களை மின்பர் மீது நின்று படிக்கக் கூடிய பலருக்கும் அவர்கள் படிப்பது அவர்களுக்கே புரிவதில்லை.

                குத்பா ஒரு வணக்கம் என்று வைத்துக் கொண்டால் அதை தமிழில் நிகழ்த்துவது மூலமாகவும் வணக்கமாக ஆகும் என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் துஆவே வணக்கமாகும்என்றார்கள். (அபூ தாவூத், திர்மிதீ). இப்போது தமிழ் பேசும் ஒரு மனிதர், தான் ஆரம்பிக்க இருக்கும் தொழில் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்றும் அதில் அதிகமான லாபம் கிடைக்க வேண்டும் என்றும் தனது மொழியில் துஆ செய்தார் என்றால் அது நபியின் கூற்றுப்படி துஆவாக ஆகுமா? ஆகாதா? துஆவாக ஆகுமென்றுதான் எல்லோரும் சொல்வோம்.

                இதே போல்தான் நபியவர்கள், பிரசங்கம் (குத்பா) என்ற வணக்கத்தை காட்டித்தந்தார்கள். இப்போது தமிழ் பேசும் ஒருவர் தமிழ் பேசும் மக்களுக்கு ஜூமுஆ தொழுகைக்கு முன் தமிழில் குத்பா (பிரசங்கம்) செய்தால் குத்பா என்ற வணக்கம் நிறைவேறிவிடும். அல்ஹம்து லில்லாஹ்.

                ஆக இதுவரை நாம் பார்த்த ஆதாரங்கள் மூலம் அரபியல்லாத மொழியில் ஜுமுஆ குத்பா செய்யக் கூடாது என்று சொல்லப்படுவது தவறான கூற்று என்பது தெளிவாகிவிட்டது.

                கூடுதல் தகவல் தமிழகத்தின் பழமையான முஸ்லிம் ஊரான கீழக்கரையில் ஜூமுஆ குத்பா மின்பர் மீது தமிழில்தான் நிகழ்த்தப்படுகிறது. பல நூறாண்டுகளாக இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று அங்குள்ள இமாம் ஒருவர் கூறுகிறார். எங்கள் ஊர் தொண்டியில் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்பு வரை இந்த நடைமுறை இருந்துகொண்டிருந்தது. மேலும் பல பகுதிகளில் இந்த நடைமுறை ரசூல்(ஸல்) காலம் தொட்டு இருந்து கொண்டிருக்கிறது.

                ஜுமுஆ குத்பாவை அரபியில்தான் செய்ய வேண்டும் என்ற தவறான கருத்தை விட்டொழித்து அந்தந்த பகுதி மொழியில் மின்பரில் நின்று குத்பா செய்வதை நடைமுறைபடுத்த அறிஞர்கள் முன்வர வேண்டும்.


- மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA.,Mphil