கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Jun 14, 2014 Viewers: 2350


கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2

எழுதி வைத்தல்

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! ஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல்செய்து கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.”  அல்குர்ஆன் 2:282

கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பல சட்டங்களையும் முறைகளையும் விளக்கும் இந்த வசனத்தில் அதை எழுதி வைத்துக் கொள்வதை ஒரு முதன்மையான சட்டமாக அல்லாஹு குறிப்பிடுகிறான்.

கடன் கொடுக்கல் வாங்கலின் ஒப்பந்தம் எதுவும் பேச்சின் அடிப்படையில் மட்டும் இருந்தால் சச்சரவுகளும் சிக்கல்களும் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கடன் வாங்கியவர், பின்பு தான் வாங்கியதையே மறுக்கலாம் அல்லது தான் வாங்கியதை விட குறைந்த தொகை வாங்கியதாகக் கூறலாம் அல்லது வாங்கும்போது சொல்லிய தவணையை மாற்றலாம். இதே போல் கொடுத்தவரும் மாற்றிப் பேசலாம். அல்லது கொடுக்கும் போது பேசிக் கொண்ட தவணைக்கு முன்பே திருப்பிக் கேட்கலாம்.

இதுபோல் பல்வேறு பிரட்சனைகள் ஏற்ப்படலாம். எழுதிக் கொள்வதன் மூலமாக இவ்வாறான பிரச்சனைகளும் சச்சரவுகளும் ஏற்ப்படுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.

கொடுப்பவரும் வாங்குபவரும் நல்லவர்களாக இருந்தால் கூட மறதியின் காரணமாக மாற்றிப் பேச வாய்ப்புள்ளது. அவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வு ஏற்ப்படுவதை எழுத்து தடுக்கிறது.

அல்லாஹ் கடனை எழுதிக் கொள்ளச் சொல்வதானால் விவரமாகவும் முழுமையாகவும் எழுதிக் கொள்ள வேண்டும். கடனின் அளவு, திருப்பிக் கொடுக்க வேண்டிய காலம், பல தவணைகள் என்றால் அது பற்றிய விவரம், இது போன்ற அனைத்து விவரங்களும் எழுதப்பட வேண்டும்.

பிற்காலத்தில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இந்தப் பத்திரமே தீர்ப்பளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மட்டுமின்றி இருவருக்கும் சச்சரவு ஏற்ப்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டால் நீதிபதிக்கு தெளிவான ஆதாரமாகவும் அவர் சரியான தீர்ப்பளிப்பதற்கு வழிகாட்டுவதாகவும் அந்தப் பத்திரம் இருக்க வேண்டும்.

எழுதிக் கொள்வது முக்கியமானது என்பதை வலியுறுத்த இந்த வசனத்தின் பிற்பகுதியிலும் எழுதுங்கள் என்று அல்லாஹ் உத்தரவிடுகிறான். அது:

தவிர (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள், இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும்.சாட்சியத்திற்கு உறுதியுண்டாகுவதாகவும் இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்ப்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்.” அல்குர்ஆன் 2:282

இங்கு சிறிய தொகையையும் கூட எழுதி வைத்துக் கொள்ளுமாறு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

எழுதிக் கொள்ள வேண்டியதன் காரணங்களையும் இங்கு விவரிக்கிறான்.

மிகவும் நீதமான செயல் என்பது ஒரு காரணம். எத்தனையோ விஷயங்களை மனிதன் எழுதி வைத்துக் கொள்ளும்போது கடன் கொடுத்து உதவியவர் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்காக எழுதிவைப்பது தான் நீதி.

அடுத்து சாட்சியத்திற்கு உறுதியை ஏற்ப்படுத்தும் என்பது இன்னொரு காரணம். மனிதர்கள் சொல்லும் சாட்சியை சரிபார்த்துக் கொள்வதற்கு இந்தப் பத்திரம் உதவுகிறது. மட்டுமின்றி இதுவே ஒரு தனி சாட்சியைப் போலவும் இருக்கும்.

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்கு எழுத்து பேருதவியாக இருக்கிறது என்பது மற்றொரு முக்கியக் காரணம்.

எழுதி வைக்காமல் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு சந்தேகம் ஏற்ப்படுவது என்பது பலருக்கும் ஏற்ப்படும் அனுபவம்.

குறிப்பாக தொகை சிறியதாக இருந்தால் கொடுத்தோமா கொடுக்கவில்லையா என்கிற சந்தேகம் ஏற்ப்படும், அல்லது பல தவணைகளில் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இருதரப்பில் யாரிடமும் சந்தேகம் ஏற்ப்பட அதக வாய்ப்புள்ளது.

ஆகவே தான் அல்லாஹுதஆலா கடனை எழுதிவைத்துக் கொள்வதை வலியுறுத்துகிறான்.

இங்கு சிறிய தொகையாக இருந்தாலும் கூட அல்லாஹ் எழுதிக் கொள்ளச் சொல்கிறான். சிறு தொகையையும் கூட இந்த வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடும் முறையில் எழுதிக் கொண்டிருப்பது நடைமுறைப் படுத்த மிகச் சிரமமானது.  ஆனால் நினைவூட்டலுக்காக இருதரப்பாரும் தனித் தனியாக எழுதி வைத்துக் கொள்வது சிறந்தது.

எழுத்தர்:

கடன் ஒப்பந்தத்தை எழுதுவதற்கு மூன்றாம் நபர் ஒருவரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனத்தில் அல்லாஹு கூறுகிறான்:

“... எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும், எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது, (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்கு கற்றுக்கொடுத்தபடி அவன் எழுதட்டும்.”

இந்த வசனத்தின் வாசக அமைப்பை கவனிக்கும்போது மூன்றாம் நபர் ஒருவரைத் தான் எழுதச் சொல்ல வேண்டும் என்பதும், கடன் கொடுக்கல் வான்களில் ஈடுபடுபவர்களில் ஒருவர் எழுதுவது முறையல்ல என்பதும் தெரிகிறது.

அத்துடன் பத்திரங்கள், ஒப்பந்தங்கள் எழுதுவதற்கென்றே இருக்கக் கூடிய எழுத்தாளர்களை வைத்துதான் எழுத வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய ஓன்று. ஒருவேளை அப்படிப் பட்டவர்கள் அமையாவிட்டால் பொதுவாக எழுதத் தெரிந்த ஒருவரை வைத்து எழுதிக் கொள்ளலாம்.

அத்துடன் எழுத்தர் நீதி, நேர்மை உடையவராக இருக்க வேண்டும். நேர்மையில்லாத ஒருவர் ஒப்பந்தம் எழுதும்போதும் சரி அல்லது பிற்காலத்திலும் தனக்கு வேண்டப்பட்டவருக்கு சாதகமாக இன்னொரு தரப்புக்கு அந்நியாயம் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில்நீதியுடன்என்று கூறுகிறான்.

பொதுவாகவே இந்த எழுத்தர் வேலையில் அப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது. இருந்தால் அவர்களை அணுகக் கூடாது என்பது மட்டுமன்றி அவர்களை அந்த வேலை செய்வதற்கு விடக் கூடாது.

பத்திர வாசகத்தைச் சொல்பவர்:

அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:

யார் மீது (திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே பத்திரத்தின் வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும் அவன் வாங்கியதில் எதையும் குறைத்துவிடக் கூடாது.” அல்குர்ஆன் 2:282

கடன் ஒப்பந்தத்தை எழுதிக் கொள்ளும்படி வழிகாட்டிய அல்லாஹ் எழுத வேண்டிய வாசகத்தை கடன் வாங்குபவரே சொல்லவேண்டுமென அறிவுறுத்துகிறான். வாங்குபவர் தன் வாயினாலே இவ்வளவு தொகை வாங்குகிறேன் என்றும் இத்தனை நாளில் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்றும் கூறிவிடுவதால் பத்திரத்தில் எழுதப்படும் விஷயத்திற்கு கூடுதல் வலு சேர்ந்துவிடுகிறது. வாங்கிய தொகையை குறிப்பிட்ட தினத்தில் கொடுப்பதற்கு கூடுதல் நிர்பந்தமும் ஏற்ப்பட்டுவிடுகிறது.

இதற்க்கு மாற்றமாக கடன் கொடுப்பவரோ அல்லது வேறு ஒருவரோ பத்திர வாசகத்தைச் சொல்லி எழுதப்பட்ட பின் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்க தாமதப் படுத்திவிட்டு இந்தத் தவணை நீங்கலாக சொல்லி எழுதிக் கொண்டது நான் சொல்லவில்லை என்று பேச வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட தேவையில்லாத சட்டங்களைத் தவிர்க்க சரியான முறையை அல்லாஹ் இங்கு கற்றுத் தருகிறான்.

அதோடு கடன் வாங்குபவருக்குத் தான் தன்னால் எப்போது திருப்பிக் கொடுக்க முடியும் என்பது நன்றாகத் தெரியும். அவர் வாசகங்களைக் கூறுவதே சரியானது.

எனவே முதலில், எழுத வேண்டியதை இருதரப்பினரும் பேசிக்கொண்டு இருவருக்கும் உடன்ப்பாடானதை கடன் வாங்குபவரே எழுத்தரிடம் கூற வேண்டும்.

இதோடு தொடர்புடைய இன்னொரு விஷயம் பத்திர வாசகத்தைச் சொல்ல இயலாத நிலையில் கடன் பெறுபவர் இருந்தால் என்ன செய்வது என்பது. இதற்க்கான விளக்கத்தை அல்லாஹ் தருகிறான்:

யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனனாகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்.” அல்குர்ஆன் 2:282

இங்கு கடன் ஒப்பந்த வாசகத்தை தாமாகச் சொல்ல இயலாத மூன்று வகையினரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஒருவகை, “அறிவு குறைந்தவன்அதாவது பணம் கொடுக்கல் வாங்கலில் விவரமில்லாதவர். இந்த நிலை சிறு பிராயத்தின் காரணமாகவும் இருக்கலாம்.அல்லது பெரியவராக இருந்தாலும் காசு பணத்தைக் கையாளத் தெரியாததின் காரணமாகவும் இருக்கலாம்.

இப்படி பெரியவர்களாயிருந்தாலும் வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கலில் விவரமில்லாதவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு ஹதீஸ் உள்ளது அது:

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் அவர் விவரம் குறைந்தவராக இருந்தார். எனவே அவரது குடும்பத்தார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இவர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதைத் தடை செய்யுங்கள் என்று சொன்னார்கள். எனவே நபியவர்கள் அவரை அழைத்து வியாபார கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதிலிருந்து அவருக்கு தடை விதித்தார்கள். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதரே! வியாபாரத்தில் ஈடுபடாமல் இருக்க எனக்கு பொறுமை இல்லை என்றார். அப்போது, நீ வியாபாரம் செய்வதை விடமாட்டாய் என்றால் வியாபாரத்தின் போதுஏமாற்றம் இருக்கக் கூடாதுஎன்று சொல்லிக்கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில் இப்படிச் சொலிக் கொள்வதன் மூலமாக தான் அந்த வியாபாரத்தில் ஏமாற்றப்பட்டது தெரிந்தால் மூன்று நாட்களுக்குள் அவ்வியாபாரத்தை ரத்து செய்ய உரிமை கிடைக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்ததாக உள்ளது.

நூல்கள்: அபூதாவூத் 3503, திர்மிதி 1250, இப்னுமாஜா 2355

கொடுக்கல் வாங்கலில் விவரம் குறைந்தவர்கள் பற்றிய ஒரு தகவலுக்காக மட்டுமே இந்த ஹதீஸை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

கடன் பத்திர வாசகத்தை தாமாகச் சொல்ல இயலாத இன்னொரு வகைபலவீனன்அதாவது முதுமையில் அதிகம் தளர்ச்சி அடைந்தவர், மனநோய் பாதிப்புக்கு ஆளானவர் போன்றவர்கள்.

மூன்றாவது வகை, ‘வாசகத்தைக் கூறவே இயலாதவர்அதாவது ஊமையாக இருக்கலாம் அல்லது அங்கு வரமுடியாத சூழலில் இருக்கலாம்.

இம்மூன்று வகையினர் பெயரிலும் கடன் வாங்கும்போது அவர்களின் பொறுப்பாளரே பத்திர வாசகத்தைக் கூற வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி எழலாம். இதுபோன்ற பலவீனமான நிலையில் உள்ளவர் பெயரில் ஏன் கடன் வாங்க வேண்டும்? இப்படிப்பட்டவர்களுக்காக யார் கடன் கொடுக்க முன்வருவார்?

இப்படிப்பட்டவர்களுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேபோல் இவர்களுக்கு தயக்கமின்றி கடன் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு.

உதாரணத்திற்கு ஒரு சிறுவனுக்கு வாரிசுரிமை அடிப்படையில் ஒரு நிறுவனமும் சில சொத்துக்களும் கிடைத்து அவை அவன் பெயரில் இருக்கிறது.

அப்போது அவனது நிறுவனத்திற்கு கடன் தேவைப்பட்டால் அவன் சார்பில் அவனது பொறுப்பாளர் பிறரிடம் கடன் கேட்கலாம். அந்த நிறுவனத்தில் நஷ்டம் ஏற்ப்பட்டால் கூட அவனது வேறு சொத்திலிருந்து தான் கொடுக்கும் கடனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்தவர்கள் கடன் கொடுக்க முன்வருவதற்கு வாய்ப்புள்ளது.

இதுபோல் இம்மூன்று வகையினருக்கும் ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு கடன் வாங்கும் நிலை ஏற்ப்படலாம். அப்போது அவர்களின் பொறுப்பாளர்கள் கடன் பத்திர வாசகத்தைச் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் இவ்வசனத்தில் எழுதிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை வார்த்தையில் கூறியிருப்பதால் எழுதிக் கொள்வது கடமை என்கின்றனர் சில அறிஞர்கள். கட்டளை வார்த்தையில் அமைந்திருந்தாலும் எழுதிக் கொள்வது நல்லது என்ற அடிப்படையில் ஆர்வமூட்டும் விதத்தில் சொல்லப்பட்டது தான் என்பது வேறு அறிஞர்களின் கருத்து.

நபி(ஸல்) அவர்களின் நடைமுறை மற்றும் நபித்தோழர்கள் காலத்திலிருந்து இன்று வரையுள்ள முஸ்லிம்களின் நடைமுறையையும் வைத்துப் பார்க்கும் போது எழுதுவது கடமையல்ல என்பதையும் எழுதிக்கொண்டால் மிகவும் நலமாக அமையும் என்பதற்கான உத்தரவு தான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து இப்னு கஸீர் உள்ளிட்ட பிரபல குர்ஆன் விளக்கவுரைகளில் பேசப்பட்டுள்ளது.

அல்லாமா அஷ்ஷன்கைத்தீ (ரஹ்) அவர்கள் இந்த வசனத்தின் விளக்கத்தில் மேற்கண்ட கருத்து வேறுபாடுகளையும் ஆதாரங்களையும் கூறியபின் எழுதுகிறார்கள்:

இதுவரை நாம் எடுத்தெழுதியவற்றில், சாட்சியை ஏற்ப்படுத்துவதும் எழுதிவைப்பதும் ஆர்வமூட்டப்பட்டது தான்; இப்னு ஜரீரும் வேறு சிலரும் கூறுவது போல் அவசியமான கடமை இல்லை என்பதற்கு தெளிவான ஆதாரமுள்ளது.”

நூல்: தஃபஸீர் அள்வாஉல் பயான்.

ஆகவே கடனை எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவு பல நன்மைகளைக் கருத்தில் கொண்டு ஆர்வமூட்டப்பட்ட விரும்பத்தக்க செயல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

 

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil