நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்)

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Dec 03, 2022 Viewers: 516


நல்லோரும் செய்யும் தவறுகள் - 6

மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் 

பண்பாட்டிலும் செயல்பாட்டிலும் நல்லவர்களாக இருப்பவர்களில் சிலர், குறிப்பிடத்தக்க தவறுகளை செய்கிறார்கள். அப்படிபட்ட தவறுகளை இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். 

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த தலைப்புகள்: வீட்டோடு மாப்பிள்ளை, பெண்கள் ஆடை - கவனம் தேவை, மார்க்க விஷயத்தில் சச்சரவு, பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர், பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?.

இந்த மாத தொடரில் மனைவியரிடம் அவசியமின்றி கடுமை காட்டும் கணவர்மார்கள் குறித்து பார்ப்போம். 

அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய, நபிவழியை அக்கறையுடன் பேணி நடக்கக் கூடிய சிலரும் கூட மனைவிமாரிடம் தேவையில்லாமல் இறுக்கத்துடனும் கடுமையுடனும் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தும்கூட தவறான புரிதல் காரணமாகவே இவ்வாறு நடக்கிறார்கள். 

       அதாவது திரு குர்ஆனில் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று சொல்லப்படுவதை தவறான புரிதலால் தவறான முறையில் செயல் படுத்துவதாக தோன்றுகிறது. அந்த வசனம் : 

       ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாவர் ஏனெனில் அவர்களில் ஒருவரை விட ஒருவரை மேன்மைப் படுத்தியிருப்பதாலும் அவர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக) செலவு செய்வதாலுமாகும். (அல்குர்ஆன் 4:34)        இந்த வசனத்தில் ஆண்களுக்கு இயற்கையாகவே  பெண்களை விட கூடுதல் சிறப்பு வழங்கப்பட்டிருப்பது, பெண்களின் தேவைகளுக்காக தங்கள் செல்வத்தை செலவழிப்பது ஆகிய இரண்டு காரணங்களால் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 

       மனைவிக்கு தானே நிர்வாகி, தானே அவளுக்காக செலவு செய்பவன் என்பதால், தான் கட்டளையிட வேண்டியவன் அவளை அடக்கி வைத்திருக்க வேண்டியவன் அவள் எந்நிலையிலும் தனக்கு மாற்றுக் கருத்துச் சொல்லாமல் அடங்கி நடக்க வேண்டியவள் என்ற மனோ நிலையிலேயே உறவாடுவதால் இப்படிப் பட்டவர்கள் தங்களின் மனைவியருடன் இறு க்கத்துடனும் கடுமையுடனும் நடந்து கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹு தஆலா ஆண்கள் நிர்வாகிகள் என்றால் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் சொல்லவில்லை. வேறு எப்படி? 

இன்னும் (மனைவியராகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல் குர்ஆன் 4:19)  

மனைவியரிடம் வெறுக்கத்தக்க விஷயம் எதுவும் இருந்தாலும் வேறு நன்மையான பல விஷயங்கள் இருக்கும் என்பதை நினைவூட்டி அவர்களிடம் நல்ல முறையில்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் வலியுறுத்துகிறது. 

மனைவி வெறுப்பேற்றும் விதமாக நடக்கும்போது கூட கனிவுடன் நடக்கும்படி இறை வசனம் வழிகாட்டுகிறது. இப்படி இருக்கும் போது சாதாரண நிலையிலேயே கடுமையாக நடந்து கொள்வது முறையாகுமா? 

இப்படிப்பட்டவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கணவன் தான் மனைவிக்கு நிர்வாகி என்றாலும் தான் ஒரு எஜமானைப் போல நடந்து கொள்ளக் கூடாது. தன் வாழ்க்கை இணையர் என்ற உணர்வுடன் தோழியைப் போல் நடத்த வேண்டும். 

இதற்கு நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் முன்மாதிரி உள்ளது. பிரயானத்தின் போது நபி (ஸல்) அவர்களின் மனைவி சஃபிய்யா (ரலி) அவர்களுக்கு ஒட்டகத்தில் ஏறி அமருவது சிரமமாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஒட்டகத்தின் அருகே அமர்ந்து தம் முழங்காலை வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முழங்காலின் மீது தம் காலை வைத்து சஃபிய்யா (ரலி) (ஒட்டகத்தில்) ஏறினார்கள். (நூல்: புகாரி 2893)

மதிப்புக்குரிய ஒருவரின் முலங்கால் மீது கால் வைத்து யாரும் இப்படி ஏற முடியாது. அவர் நபியாக இருந்தால் அறவே முடியாது. ஆனால் அதுவே மனைவி என்றால் அது ஒரு குறை அல்ல.     

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஓர் ஆண்மகன் தன் மனைவியிடம் கௌரவம் பார்க்கவே கூடாது என்று தெரிகிறது.

கௌரவம் பார்க்கும் போதுதான் மனைவி கூறும் மாற்றுக் கருத்தை கூட சகித்துக்கொள்ள முடியாத மனோ நிலை ஏற்படும். 

மாற்றுக் கருத்து சொல்லக் கூடாதா?

மனைவி, தான் சொல்வதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். மாற்றுக்கருத்தோ ஆலோசனையோ சொல்லக்கூடாது என்ற மனோபாவத்துடன் பல கணவன்மார்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஆலோசனையோ மாற்றுக் கருத்தோ சொல்லிவிடக் கூடாது என்பதற்க்காகவே எப்போதும் கடுமையாகவும் இறுக்கத்துடனும் நடந்து கொள்கிறார்கள். 

இவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் கூட நபியவர்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

  உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்காவில் இருந்தபோது) பெண்கள் மீது கடுமை மிகைத்தவர்களாகேவ இருந்துவந்தோம். (எங்கைள எதிர்த்துப் பேசாத அளவிற்கு அவர்கைள அடக்கிவைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, அங்கு ஒரு சமுதாயதைக் கண்டோம். அங்கு ஆண்கைளப் பெண்கள் மிகைக்கக்கூடியவர்களாக இருந்தனர். இதை எங்களுடைய பெண்களும் அப்பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினர். எனது வீடு (மதீனாவின்) மேட்டுப் பகுதி கிராமங்களில் பனூ உமய்யா பின் ஜைஸத் குலத்தாரிைடேய இருந்தது. (ஒரு நாள்) நான் என் மனைவி மீது கோபப்பட்டேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவள், "நான் உங்கைள எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (நபிகளாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவு வரை பேசுவதில்லை'' என்று கூறினார். உடேன நான் அங்கிருந்து புறப்பட்டு (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசுகிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா "ஆம்' என்று பதிலளித்தார். நான் "உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவு வரை கோபமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா "ஆம்' என்றார். நான், "அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமைடந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமைடந்துவிடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார். (எனவே)அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கைள நீ எதிர்த்துப் பேசாதே! அவர்களிடம் (அதிகமாக உன் தேவைகள்) எதையும் கேட்டுக்கொண்டிராதே! உனக்கு (அவசியத் தேவைவெயனத்) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் நடந்துகொள்வைதப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல நடந்துகொள்ளத் துணிந்து) விடாதே!'' என்று நான் (என் மகளுக்கு அறிவுரை) கூறினேன். பிறகு நபியிடம் சென்று  "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் பெண்கைள அடக்கிவைத்திருந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்த போது, ஆண்கள் மீது பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரை (அன்சாரிகைள)க் கண்டோம். எங்கள் பெண்களும் அப்பெண்கைளப் பார்த்து (ஆண்கைள எதிர்த்துப் பேசும் பழக்கத்தைக்) கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு நாள் என் மனைவி மீது கோபம் கொண்டேன். அவர் அப்போது என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் எதிர்த்துப் பேசிய(தை நான் விரும்பவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், "நான் உங்கைள எதிர்த்துப் பேசுவதை வெறுக்கிறர்கேள! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் துணைவியரும்கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தானே செய்கின்றனர். அவர்களில் ஒருவர் நபியவர்களுடன் கோபித்துக்கொண்டு அன்றைய தினத்தில் இரவு வரை பேசுவதில்லை'' என்று கூறினார். நான் "அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமைடந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். அவர்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமைடந்து விடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார் என்று சொன்னேன்'' என்று கூறினேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, "உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமான வராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வைதக் கண்டு) நீ ஏமாந்துவிடாதே!'' என்று கூறியைதச் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னைகத்தார்கள்.  (முஸ்லிம்:2948,)

      இந்த ஹதீஸின் படி நபித்தோழர்களின் மனைவியர் தங்களின் கணவர்மார்களிடம் மாற்றுக் கருத்து கூறியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி நபியின் மனைவியரும் கூட நபியிடம் மாற்றுக்கருத்து கூறியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. 

     ஆனால் நம்மில் பலரும் தங்களின் மனைவியர் தங்களிடம் மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது, தங்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நினைப்பினாலேயே மனைவியரோடு தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

       நபி (ஸல்) அவர்களுக்கே அவர்களின் துணைவியர் ஆலோசனை கூறிய சம்பவம் ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

      நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பின் மக்காவுக்கு சென்று உம்ரா செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. அதனால் நபியவர்கள் தம் தோழர்களை நோக்கி, குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து  கொள்ளுங்கள் என்றார்கள். இவ்வாறு மூன்று முறை நபியவர்கள் உத்தரவிட்டும் யாரும் எழுந்து செல்லாத காரணத்தால் தம் துணைவி உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று விஷயத்தை சொன்னார்கள். அப்போது உம்மு சலமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து முடியை களைந்து கொள்ளுங்கள். யாருடனும் ஒரு  வார்த்தையும் பேசாதீர்கள் என்று ஆலோசனை கூறினார்கள். 

நபியவர்கள் அவ்வாறு செய்ததை பார்த்த நபித்தோழர்களும் அதனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (புகாரி 2731) 

      அல்லாஹ்வின் தூதரே தம் மனைவியின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டுள்ளார்கள் எனும்போது மற்றவர்கள் முடியாது என்று சொல்ல முடியுமா?