நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2)

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Dec 03, 2022 Viewers: 547


நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2)

கடந்த இதழில் இதே தலைப்பில் மனைவியரிடம் எஜமானர்கள்போல் நடந்து கொள்வது; மனைவி தனக்கு மாற்று கருத்து சொல்லவே கூடாது என்று எண்ணுவது; மனைவியின் ஆலோசனையை கேட்க மறுப்பது ஆகியவை சில கணவர்மார்கள் செய்யும் தவறுகள் என்பதைப் பார்த்தோம்.

இதேபோல் இன்னும் சில தவறுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று மனைவியின் சிரமமான வேலைகளில் கணவன் ஒத்தாசை செய்யாமலிருப்பது. மனைவி சமையலறையில் வேலையில் இருக்கும்போது தொட்டிலில் தூங்கும் குழந்தை விழித்து அழுதால் கணவன் தொட்டிலை ஆட்டிவிட வேண்டும். அல்லது பிள்ளையை தூக்கி அமைதிப்படுத்த வேண்டும்.

இதில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வாய்ப்பிருந்தும் எதுவும் செய்யாமல் எனக்கென்னவென்று சும்மா இருந்தால் இதுவும் ஒரு குற்றம்தான்!
தான் இப்படி வேலையில் இருக்கும்போதுகூட கணவர் உதவி செய்யாமல் இருக்கிறாரே என்று மனைவி வேதனைப்படமாட்டாளா?

நபியின் நடைமுறை

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி, ஒத்தாசை செய்வார்கள்.

அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை -அதாவது தம் குடும்பத்தாருக்கான பணிகளை- செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள். (புகாரி - 676)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்பை ஆட்சி செய்துகொண்டிருந்த நிலையில்தான் மேற்கண்டவாறு நடந்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எரிந்து விழுதல்

சிறிய அளவிலான குற்றங்குறைகள் நிகழ்வது மனித இயல்பு. அதையெல்லாம் அனுசரித்துச் சென்றால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

உணவில் உப்பு கூடி விடுவது, அல்லது, குறைந்து விடுவது போன்ற குறைகளுக்காகக் கூட மனைவியைக் கடுமையாய்த் திட்டும் கணவன்மார்கள் நிறைய இருக்கிறார்கள்.
மனைவி தனக்கு எப்போதும் பயப்பட வேண்டும் என்ற தவறான சிந்தனையினால் எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் கணவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மனைவியிடம் தவறுதலாக ஏற்படும் குறைகள், பிள்ளைகள் செய்யும் தவறுகள் போன்றவற்றுக்காக மனைவிமீது அனலை கக்குவார்கள்.
சில கணவன்மார்கள் தாம் தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் கோபதாபங்களை வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் நிம்மதியைக் கெடுத்துக்கொள்வதுடன் மனைவி மக்களின் நிம்மதியையும் கெடுத்து விடுவார்கள்.

"அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித் தளமாக ஏற்படுத்தியுள்ளான்" (அல்குர்ஆன் 16:80) என்று கூறி அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ள அமைதியை தங்களின் தவறான போக்கினால் கெடுத்துக்கொள்கிறார்கள்.

அதிகமாக எரிந்துவிழுபவர்கள் என்றால், அதிகமாக குறை கூறுபவர்கள் என்பதுதான் அதன் அர்த்தம். இவ்வாறு குறைகூறிக்கொண்டே இருப்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறுவது: "குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்" (அல்குர்ஆன் 104:1) இவ்வாறு அல்லாஹ்வின் கடும் எச்சரிக்கைக்கு தகுதியானவர்களாக இந்த எரிந்து விழும் கணவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

அதிகமான கட்டுப்பாடுகள்

சில நல்ல கணவன்மார்களும் செய்யும் தவறுகளில், மனைவியரிடம் காட்டும் அதிகப்படியான கட்டுப்பாடுகளும் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன.
மனைவி, தனது தாய்-தந்தைக்கு உதவி ஒத்தாசை செய்வதையும் அவள் தன் சொந்த பந்தங்களோடு உறவாடுவதையும் சில கணவன்மார்கள் தடுக்கிறார்கள்.

மனைவியானவள் தன் வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டு தாராளமாக தனது பெற்றோருக்கும் சொந்த பந்தங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.
தகுந்த காரணமின்றி இவ்வாறு தடை செய்தால் ரத்த உறவை அரவணைப்பதை தடுத்த குற்றம் ஏற்படும். அத்துடன் மனைவியை மன வேதனைக்கு உள்ளாக்கிய குறையும் சேரும்!

இந்த விஷயத்தை ஒரு உதாரணத்துக்காகத்தான் குறிப்பிடுகிறேன்.
எந்த விஷயமானாலும் மனைவி தனக்கு அனுமதிக்கப்பட்டதை செய்ய வேண்டும் என்று விரும்பும்போது கணவன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் மனோபாவத்துடன் -நியாயமான காரணமின்றி- தடுக்க முனைவது பெரிய குறையாகும்.

பெண்ணைப் பொறுத்தவரை அவள் வீட்டில் தொழுவதே சிறப்பு என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்றால் தடுக்க வேண்டாம் என்றும் ஆண்களுக்கு கூறியது போன்ற வழிகாட்டலை நினைவில் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்

பெண்கள் பள்ளிவாசல்களுக்கு செல்வதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடுகளே அவர்களுக்கு சிறந்தது. (அபூதாவூத்)

பெண்கள் அந்நிய ஆணின் பார்வையில் இருந்தும் அவசியமற்ற தொடர்புகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். இது நம் சத்திய மார்க்கம் நமக்கு கற்றுத் தந்துள்ள சிறப்பான வழிமுறை.

இதைப் பின்பற்றும் எண்ணத்தில் மனைவிமீது அளவுக்கதிகமான கெடுபிடிகள் செய்வது சில கணவன்மார்களின் குறையாக உள்ளது. மனைவி நிற்பது, நடப்பது, பேசுவது ஆகிய எல்லா நிலையிலும் அவசியம் என்று குறைகூறி வெறுப்பேற்றுவது முறையல்ல.

நடைமுறையிலும், உடைமுறையிலும் மார்க்கத்தின் வழி காட்டுதலில் மனைவி பேணுகிறார் என்றால் அல்ஹம்துலில்லாஹ். குறைகள் காணப்பட்டால் தெளிவாகப் பேசி சரி செய்ய வேண்டும்.

இதற்கு மாற்றமாக மனைவியின் ஒவ்வொரு நிலையிலும் சந்தேகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்துவது குடும்பத்தின் நிம்மதியை குலைத்துவிடும்!

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டோரே சந்தேகமான பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். (பிறர் குறைகளை) துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்! (49:12)

இதுபோன்ற திருக்குர்ஆன் வழிகாட்டுதலை பேணி நடக்க வேண்டும்.

மனைவியின் கோபம்

தனக்கு அடங்கி நடப்பது மட்டுமே மனைவியின் கடமை என்ற ஒரே மனநிலையில் இருக்கும் சில கணவர்கள் அவள் தனது கோபத்தையோ ஆட்சேபணையையோ தன்னிடம் வெளிப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த நினைப்பு தவறானது.

அகில மக்களின் தலைவரும் வழிகாட்டியுமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமே அவர்களின் துணைவி கோபத்தை வெளிப்படுத்திய நிகழ்வை எல்லாம் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘இல்லை; முஹம்மதுடைய அதிபதிமீது சத்தியமாக என்று கூறுவாய்! என்மீது கோபமாய் இருந்தால், ‘இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக என்று கூறுவாய் என்று சொன்னார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன். (தங்கள்மீதன்று)என்று கூறினேன். (புகாரி - 5228)

இந்த ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதான கோபத்தை அவர்களின் துணைவியர் பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நபியவர்களும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும்போது மற்றவர்கள் மறுக்க முடியுமா?

ஆக மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் நல்ல கணவர்களும்கூட குடும்ப வாழ்வில் சில தவறுகளைச் செய்கிறார்கள். அதில் திருத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதியுள்ளேன்.

என்னால் இயன்றவரை உங்களின் சீர்திருத்தத்தைத் தவிர வேறெதையும் நான் நாடவில்லை. மேலும் நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை. அவனிடமே பொறுப்பு கொடுத்து இருக்கிறேன்; மேலும் அவனிடமே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)