நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8

ஆய்வுகள் | ஹதீஸ் by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Jan 11, 2023 Viewers: 341


நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8

ஹதீஸ் எப்படி புரிவது ? -8 - அபூ அக்மல்

நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ்,

                அப்துல்லாஹ் பின் உமர்(லி) அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மின்பரில்) ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்மேடன்'' என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள், மக்களும் எறிந்துவிட்டனர்.

                (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மோதிரத்தை) தம் வலக் கையில் அணிந்து கொண்டார்கள் என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்.

                (நூல் : புகாரி 5876 முஸ்லிம்) இந்த ஹதீஸில் எழக்கூடிய ஒரு

கேள்வி : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மஅசூம் - பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் - எனும் போது எப்படி அவர்கள் தங்க மோதிரம் அணிந்திருப்பார்கள்? இதுதான் அந்தக் கேள்வி .

                இதற்கான பதில் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம்செய்து அதை அணிந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து நபித்தோழர்களும் தங்க மோதிரம் செய்து அணிந்துள்ளார்கள் என்பது இந்த ஹதீஸின் செய்தி. அப்படியானால் இதற்கு முன்பு வரை ஆண்களும் தங்கம் அணியலாம் என்கிற அனுமதி மார்க்கத்தில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. இந்த ஹதீஸில் சொல்லப்படும் நிகழ்வுகளுக்குப் பிறகுதான் ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்ற தடை மார்க்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நபி(ஸல்) அவர்கள் தடை செய்யப்பட்ட ஒரு தவறை செய்தார்கள் என்ற நிலை ஏற்படாது.

                ஆண்களுக்கும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தங்கம் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதை உணர்த்தும் வேறு ஹதீஸ் ஆதாரங்களும் உள்ளன.

                அவற்றில் ஒன்று : அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது இடது கரத்தில் பட்டுத் துணியையும் தமது வலது கரத்தில் தங்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அவ்விரண்டுடனும் தம்மிரு கைகளை உயர்த்திக் காட்டி, "நிச்சயமாக இவையிரண்டும் என் சமுதாயத்திலுள்ள ஆண்களுக்கு தடை செய்யப்பட்டதாகவும் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் உள்ளன'' என்று கூறினார்கள். (இப்னு மாஜா 3595 - ஷாமிலா பதிப்பு - இதன் கருத்து அபூ தாவூத், திர்மிதி, நஸாயி உள்ளிட்ட நூல்களிலும் இடம் பெறுகிறது.)

                அபூமூஸா(ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் என் சமுதாயத்தின் பெண்களுக்கு பட்டையும் தங்கத்தையும் ஆகுமாக்கியிருக்கிறான். அவற்றை என் சமுதாயத்தின் ஆண்களுக்கு தடை செய்துவிட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நஸாயி 5265 - ஷாமிலா பதிப்பு - இதன் கருத்து திர்மிதி, அஹ்மத் உள்ளிட்ட நூல்களிலும் இடம்பெறுகிறது.)

                இந்த இரண்டு ஹதீஸ்களையும் அப்துல்லா பின் உமர்(ரலி) அறிவித்துள்ள முதல் ஹதீசுடன் இணைத்துப் பார்க்கும் போது இஸ்லாத்தின் துவக்கத்தில் தடை செய்யப்படாமல் இருந்த தங்கம் பிற்காலத்தில் ஆண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இதன்படியும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்யப்பட்ட ஒரு பாவத்தை செய்யவில்லை என்பது உறுதியாகிறது.       

                அடுத்து, நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் அணிந்துவிட்டு அதை எறிந்ததாகவும் ஒரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு :

                அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்தாக இப்னு ஷிஹாப் ஜீஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறுவது : ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) தம் மோதிரத்தை (கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் மோதிரங்களை (கழற்றி) எறிந்து விட்டார்கள். (நூல் : புகாரி 5868, முஸ்-ம் 4250)

                இந்த ஹதீஸ் குறித்து அல் காளீ இயாள் கூறுவது : தங்க மோதிரம் என்று சொல்ல வேண்டியதை வெள்ளி மோதிரம் என்று அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் கவனக் குறைவாக கூறிவிட்டார் என்று அனைத்து ஹதீஸ் கலை அறிஞர்களும் கூறியுள்ளனர். இப்னு ஷிஹாப் தவிர்த்த மற்றவர்களின் அறிவிப்புகளில் நபியவர்கள் வெள்ளி மோதிரத்தை தொடர்ந்து அணிந்திருந்ததாகத்தான் உள்ளது. கழற்றி எறிந்ததாக இல்லை. முஸ்லிம் நூலின் மற்ற அறிவிப்புக்களில் உள்ளது போல் நபியவர்கள் தங்க மோதிரத்தைத் தான் கழற்றி எறிந்தார்கள். (நூல் : ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்)

                மேலும் இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் கவனக் குறைவினால் நபியவர்கள் வெள்ளி மோதிரத்தை கழற்றி எறிந்ததாக கூறியிருக்கிறார் என்பதை இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

                பார்க்க : தஹ்தீபுஸ் சுனன். அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை சரியாக புரிந்து கொள்ளவும் முறையாக செயல்படுத்தவும் வல்ல அல்லாஹ் நமக்கு நல்லுதவி செய்வானாக.