இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Jan 11, 2023 Viewers: 325


இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)  மகத்தான வழிகாட்டிகள் - 5

மகத்தான வழிகாட்டிகள் - 5

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)

                இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் நான்கு பெரும் இமாம்களில் இறுதியானவர் அவர்களின் முழுப்பெயர் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல் அஷ்ஷய்பானி என்பதாகும். இவர்களின் கூற்றுகளும் கருத்துகளுமே ஹன்பலி மத்ஹப் என்று சொல்லப்படுகிறது .

                இமாம் அவர்கள் ஹிஜ்ரி 164 வது வருடம் பக்தாத் நகரில் பிறந்தார்கள். பாக்தாத் நகரம் அக்காலத்தில் இஸ்லாமிய உலகின் முதன்மையான பெருநகரமாக இருந்தது.

                இமாமவர்கள் சிறுவராக இருக்கும்போதே அவர்களின் தந்தை மரணம் அடைந்து விட்டார்கள். எனவே இமாமவர்களின் தாயார் அவர்களை பராமரித்து வளர்த்து வந்தார்.

                கல்வி : இமாமவர்கள் பிறந்து வளர்ந்த பக்தாத் நகரம் அக்காலத்தில் எல்லா வகை கல்விகளுக்கும் முக்கிய கேந்திரமாக விளங்கியது குறிப்பாக ஹதீஸ் (நபி மொழி) ஃபிக்ஹ் (மார்க்க சட்டம்) உள்ளிட்ட இஸ்லாமிய கல்வி பயில தேடி வரப்படும் நகரமாக இருந்தது. இவ்விரு துறைகளின் அறிஞர்களும் ஆசிரியர்களும்

                ஃபிக்ஹில் துவக்கம் : இமாம் அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தபோது துவக்கமாக ஃபிக்ஹ் கல்வி பயின்றார்கள். இமாம் அபூ ஹனிஃபா அவர்களின் பிரபலமான மாணவர் அபூ யூசுஃப் அவர்களிடம் இக்கல்வியை பயின்றார்கள். ஆனால் நீண்ட காலம் அவர்களுடன் இருக்கவில்லை. குறிப்பிட்ட காலம் வரை அவர்களுடன் இருந்தார்கள். அவர்களின் நாட்டம் ஹதீஸ் கல்வியை நோக்கியே சென்றது.

                ஹதீஸ் கல்வியில் : ஹிஜ்ரி 179வது வருடம் இமாமவர்களின் 16வது வயதில் அக்காலத்தில் ஹதீஸ் கலையில் மிகச் சிறந்த அறிஞராக இருந்த ஹூஷைம் பின் பஷீர் அவர்களிடம் ஹதீஸ் கல்வி பயின்றார்கள். ஹுஷைம் அவர்களின் மரணம் வரை ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அவர்களுடன் இருந்தார்கள்.

                அதே காலகட்டத்தில் உமைர் பின் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி போன்ற ஹதீஸ் அறிஞர்களின் கல்வி சபையிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.

                இளமையில் ஹதீஸ் கல்வியைத் தேடுவதில் ஆர்வத்துடன் சிரமமெடுத்துக் கொண்டு ஈடுபட்டார்கள்.

                கல்வி தேடி பயணம் : இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கல்வியைக் கற்பதற்காக ஹிஜ்ரி 186வது வருடத்தில் முதலாவது பயணம் மேற்கொண்டார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பகுதி என்று ஹதீஸ்  ஆசிரியர்கள் பயின்றார்கள்.

                ஈராக்கின் பல பகுதிகள் ஹிஜாஸ்  (மக்கா மதினாவை உள்ளடக்கிய பகுதி), எமன் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று கல்வி கற்றார்கள். ஹிஜ்ரி 187 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காக சென்றதோடு மக்காவில்  ஆசிரியராக இருந்த இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்களிடம் ஹதீஸ் கல்வியும் பெற்றார்கள். அத்துடன் அவர்களிடம் ஃபிக்ஹ் கல்வியையும் கற்றார்கள். இவ்வாறு பல வேறு பயணங்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான நபிமொழிகளை சேகரித்து வைத்திருந்தார்கள்.

                ஆசிரியா முஃப்தி : இமாம் அவர்கள் இளவயதிலேயே தேர்த்த அறிஞர் என்ற நிலையை அடைந்திருந்தாலும் பாடம் நடத்தும் ஆசிரியராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது தான் ஆசிரியராக மஸ்ஜிதில் அமர்ந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள். மக்களுக்கு மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் பணியும் செய்யலானார்கள்.

                மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களும், பொதுமக்களும் நிறைந்திருக்கும் கல்வி சபையாக இமாமவர்களின் சபை திகழ்ந்தது.

                அவர்களின் கல்வி சபை கம்பீரமும். அமைதியும் கொண்ட சபையாக இருக்கும். சலசலப்பு, கேலிப் பேச்சு உள்ளிட்டவை அறவே இருக்காது என்று கூறப்படுகிறது .

                இருவகை பாடங்கள் : இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்களின் கல்வி சபையில் இரண்டு பாடங்கள் நடத்தப்படும். ஒன்று ஹதீஸ், அதாவது அக்கால முறைப்படி அறிவிப்பாளர் தொடருடன் மாணவர்களுக்கு ஹதீஸை சொல்ல மாணவர்கள் அப்படியே பதிவு செய்து கொள்வார்கள்.

                மற்றொரு பாடம் ஃபிக்ஹ் எனும் மார்க்கச் சட்டங்கள் பற்றிய பாடம். அதாவது மாணவர்களும் பொதுமக்களும் கேட்கம் கேள்விகளுக்கு இமாம் வழங்கும் மார்க்கத் தீர்ப்புகள். ஆதாரங்கள் வாயிலாக அவர்கள் எடுத்துச் சொல்லும் சட்டங்கள்.

                இமாமவர்கள் ஹதீஸ் அறிஞராக இருந்ததுடன் மார்க்கச் சட்ட மேதையாகவும் இருந்ததால் அவர்கள் கூறிய சட்டங்களும் அவர்களின் மாணவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னர் அவை ஹன்பலி மதஹப் சட்டங்கள் ஆயின.

                சோதனைகள் : அல்லாஹ்வின் மார்க்கக் கல்வியை பரப்பும் சேவையில் சிறப்பான முறையில் ஈடுபட்டிருந்த இமாமவர்களின் வாழ்க்கையில் கடும் சோதனைகள் ஏற்பட்டன. அதாவது அக்காலத்தில் வளர்ந்து கொண்டிருந்த முஃதஸிலா கூட்டத்தினர் திருக்குர்ஆன் படைக்கப்பட்டது என்ற தவறான கருத்தை பரப்பிக் கொண்டிருந்தனர். அப்போதைய கலீஃபா அல்மஅமூன் என்பவரும் அந்த தவறான கருத்தை கொண்டவராக இருந்தார்.

                குர்ஆன் படைக்கப்பட்டது என்ற தவறான கருத்தை மக்கள் மீது திணிக்கும் வேலையில் ஈடுபட்டார் கலிஃபா மஅமூன் அதன்படி பெரிய மார்க்க அறிஞர்களை கூட்டி இந்த கருத்தை ஏற்குமாறு தனது ஆட்கள் மூலம் நிர்ப்பந்தித்தார். பலரும் கொடுமைகளுக்கு பயந்து வாயளவில் இந்த கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் மிகச் சிலர் மட்டுமே ஏற்க மறுத்தனர்.

                அவர்களில் மிக முக்கியமானவராக இருந்த இமாம் அஹ்மத் விலங்கிடப்பட்டு கலீஃபாவிடம் அழைத்து வரப்பட்ட நிலையில் கலீஃபா மஅமூன் மரணமடைந்தார்.

                ஆனாலும் அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த முஅத்தஸியின் ஆட்சியின் இந்த கொள்கையை ஏற்குமாறு வற்புறுத்தி இமாமவர்களுக்கு தொடர்ச்சியாக சாட்டையடி கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். உடலெல்லாம் புண்ணாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். ஆனாலும் இமாமவர்கள் தமது சத்திய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை.

                முஅத்தஸிமுக்கு பின் ஆட்சிக்கு வந்த அல் வாஸிக் என்ற கலீஃபாவும் அதே தவறான கொள்கை கொண்டவர் தான். ஆனால் இமாமவர்கள் தண்டனைகளை தாங்கிக் கொண்டு கொள்கை உறுதியோடு இருப்பதால் மக்கள் மத்தியில் அவர்களின் மதிப்பு உயர்வதை கண்டதனால் சிறை தண்டனையோ, சாட்டையடியையோ கொடுக்காமல் வீட்டுச் சிறையில் வைத்தார். பாடம் நடத்தக் கூடாது என்றும், மக்களை சந்திக்க கூடாது என்றும் தடை விதித்தார்.

                இவ்வாறு ஏறத்தாழ் 14 ஆண்டுகள் கடந்த நிலையில் ஹிஜ்ரி 232 ஆம் ஆண்டு முத்தவக்கில் கலிஃபாவானார். இவர் நல்லவராகவும் அஹ்லுஸ்ஸுன்னாவின் சத்தியக் கொள்கை கொண்டவராகவும்  இருந்ததாக இமாமவர்கள் தண்டனையில் இருந்து விடுவித்து கண்ணியப்படுத்தினார்.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

                 (நபியே!) நீர் உம்முடைய முகத்தை மார்க்கத்தின்பால் (முற்றிலும்) "திருப்பியவராக நிலைநிறுத்தி விடுவீராக! அல்லாஹ் மனிதர்களை (ந்த மார்க்கத்) தில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை, இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.

                (விசுவாசிகளே!) அவன் பக்கமே திரும்பியவர்களாக (இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் நிலைத்திருங்கள்), இன்னும் அவனை பயந்து கொள்ளுங்கள், தொழுகையையும் நிறைவேற்றுங்கள், மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

                தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரிந்து, (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் (நீங்கள் ஆகிவிட வேண்டாம் அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு பிரிவோரும் தங்களிடமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக இருக்கின்றனர்.''

                (அல்குர்ஆன் : 30 : 30 - 32)

                - மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil