ஆய்வுகள் | மற்றவை by முஹம்மது சுபைர் முஹம்மதி ஃபிர்தௌஸி On Jul 24, 2023 Viewers: 139 0
நற்குணமும் நபியும்
வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03
- முஹம்மது சுபைர் முஹம்மதி ஃபிர்தௌஸி
யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குவீர்கள்?..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போற்றத்தக்க குணங்களில் உள்ள ஒரு உயரிய பண்பு, அவர்கள் சாதாரண பொது மனிதரின் மானம், மரியாதை கண்ணியத்தை காத்து நடப்பார்கள். அதை காப்பார்கள், மற்றவர்களுக்கு அதை தருவார்கள். சக தோழர் போன்றும் நடந்து கொள்வார்கள்.
பணம், புகழ், அழகு, பதவி இவற்றைப் பார்த்து அன்பு கொள்ளும் இக்காலகட்டத்தில் இவை எதுவுமே இல்லாத ஒரு சாதாரண கிராமவாசியை முஹம்மது நபி (ஸல்) எந்த அளவு நேசித்தார்கள் என்பது இன்றைய உலகிற்கு ஒரு முன் மாதிரியாகும். அவ்வாறான கலப்பற்ற நேசம் நம்மில் ஏற்படும் போது இப்பொழுது இருக்கும் மனப்பிரச்சனைகள் நீங்கிவிடும். அவ்வாறே இன்றுள்ள நபர்கள் மற்ற நபர்களை நேசித்தால் உலகத்தில் ஏற்படும் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும்.
நபி (ஸல்) அவர்கள் தன் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள், என்பதை இச்சம்பவத்தின் மூலம் அறியும் போது நம்மையறியாமல் என்ன ஒரு சிறந்த முன்மாதிரி! என்று எண்ண தோன்றுகிறது...
மதினாவில் புகழ்பெற்ற கோத்திரமான கத்ஃபான் கோத்திரத்தில் அல்அஷ்ஜா கிளையை சேர்ந்தவர் ஜாஹிர் இப்னு ஹிஜாம் அல்அஷ்ஜயி (ரலி). இந்த கிளையினர் பழங்காலத்திலிருந்து மதினா நகரை ஒட்டியிருந்த சுற்று புறங்களில் வசித்து வந்தார்கள்.
ஜாஹிர் இப்னு ஹிஜாம் அல்அஷ்ஜயி (ரலி) அவர்கள் மிகவும் ஏழையான எளிமையான நபராக இருந்தார். இவர் அந்த சமூகத்தில் ஒரு சாதாரண மனிதர். இவருக்கு என்று எந்த ஒரு சிறப்பும் கிடையாது. நிறத்திலும் தோற்றத்திலும் அழகு என்று எதுவும் அவரிடத்தில் இல்லை. ஆனால் அவரை உயர்த்தும் ஒரு சிறந்த பண்பு அவரிடத்தில் இருந்தது.
அது என்னவெனில், அவர் அல்லாஹ்வின் தூதரை அளவுக்கு அதிகமாக நேசித்து வந்தார், அளவுக்கு மீறி அன்பு வைத்து இருந்தார். அந்த நேசத்தின் காரணமாக எப்பொழுதெல்லாம் மதினா நகரத்திற்கு வியாபரம் செய்ய சென்றாலும் சரி, அல்லது மற்ற காரணத்திற்காக சென்றாலும் சரி, அவ்வாறு செல்லும் போது அவரின் கிராமத்தில் கிடைக்கும் சிறந்த பொருள்களை எல்லாம் அல்லாஹ்வின் தூதருக்காக கொண்டு செல்வார். உயர்ந்த காய்கறிகள், பழங்கள், தேன், சத்துமாவு மற்றும் கிராமத்தில் தயார் செய்யப்படும் பிற உணவு பொருட்களை எல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்வார். நபி (ஸல்) அவர்களும் நகரத்தில் கிடைக்கும் சிறந்த பொருட்களை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து அனுப்புவார்கள்.
எந்த அளவு அவர்களின் நேசம் இருந்ததென்றால் ஒரு நாள் ஜாஹிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தந்த கௌரவம் அந்தஸ்து கண்ணியம் அனேகமாக எந்த ஒரு நபித் தோழர்களுக்கும் கிடைத்திராத ஒன்று.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜாஹிர் (ரலி) என்னுடைய கிராமத்து தோழர், நான் அவருடைய நகரத்து தோழர் என்று கூறியுள்ளார்கள்.
எவ்வளவு சிறப்பான வார்த்தைகள் இது. எந்தளவுக்கு அவருடைய நேசத்தை மதித்துள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். சற்று ஹதீஸின் வாசகங்களை கவனியுங்கள். நபி அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக ஒவ்வொரு நகரத்து வாசிக்கும் ஒரு கிராம வாசி நண்பராக இருப்பார். மேலும் நிச்சயமாக முஹம்மதின் குடும்பத்தாருக்கு ஜாஹிர் இப்னு ஹிஜாம் (ரலி) அவர்கள் ஆவார்.
இத்தோடு முடியவில்லை, அவர்களின் அன்பின் மொழிகளும், பரஸ்பரமும், இணக்கமும், அன்பை வெளிப்படுத்தும் வாசகங்களும், தருணங்களும், அவர்கள் மத்தியில் இருந்த இங்கீதமும், இதன் காரணமாக தான் அவர்கள் மத்தியில் அந்த அன்பு தொடர்ந்தது, நீடித்தது. இதற்கான சான்று தான் கீழ் வரும் இந்த சம்பவம்.
ஒரு நாள் ஜாஹிர் (ரலி) அவர்கள் தன்னுடைய பொருட்களை கொண்டுவந்து மதினாவின் சந்தை அல்மனாகஹ்வில் விற்றுக்கொண்டிருந்தார்.
அச்சமயம் சந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தருகிறார். ஜாஹிரை (ரலி) அங்கு பார்த்துவிடுகிறார்கள். ஜாஹிர் (ரலி) நபி (ஸல்) அவர்களை பார்க்காதவாறு ஜாஹிர் (ரலி) அவர்களின் முதுகு பின் வழியாக மெதுவாக வந்து அவரின் கண்களை தன் கை விரல்களால் இறுக்கமாக மூடிக் கொள்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
சகோதரர்களே! மேலும் படிப்பதற்கு முன் சற்று சிந்தியுங்கள்... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடத்தையும் குணமும் ஒழுக்கமும் எந்த அளவுக்கு உயர்ந்ததாகவும் உயர்வாகவும் மேலாகவும் இருக்கிறது என்று.
ஜாஹிர் (ரலி) அவர்கள் ஒரு சாதாரண பொதுவான சராசரியான மனிதர். அவருடைய மிக சிறந்த குணம், சிறப்பு தகுதி, தன்மை அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நேசித்தார். அவ்வாறே இவரின் மிக சிறந்த பெரிய சிறப்பும் மதிப்பும் அந்தஸ்தும் எதுவெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரை நேசித்தார்கள். அவர் மீது அளவில்லா அன்பு கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒரு சொல் இவ்வாறுள்ளது.
அபுதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள், உங்களில் நலிந்த மக்களிடையே என்னைத் தேடுங்கள். ஏனெனில், உங்களில் நலிந்தவர்களால்தான் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்பெறுகிறீர்கள். பகைவர்களுக்கெதிராக உதவியும் வழங்கப்பெறுகிறீர்கள் என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அல்பானி ரஹ் அவர்கள் இதை ஸஹீஹ் என்று கூறிவுள்ளார்கள்.
நூல் திர்மிதி பாகம் 2 பக்கம் 996 ஹதீஸ் எண் 1624 ரஹ்மத் பதிப்பகம்.
மேலும் இது அஹமது, அபீதாவூத் நூல்களிலும் வந்துள்ளது.
ஜாஹிர் (ரலி) அவர்களுக்கு தன் பின்னால் இருப்பது யார்? என்று தெரியவில்லை. அவருக்கு சில நொடிகள் பதற்றம் ஏற்பட்டது. அவரோ யார் இது? யார் இது? என்று கேட்டுக் கொண்டே நபி (ஸல்) அவர்களின் கையின் ஸ்பரிசத்தையும் நறுமணத்தையும் உணர ஆரம்பித்தார்.
அதுவும் மெல்லிய பட்டாடை போன்ற ஸ்பரிசம் கொண்டது, ரோஜா பூவை விட அதிக நறுமணத்தை கொண்ட நறுமணம். அவரின் கண்களை மூடிக் கொண்டு அவரை தழுவுவதும், இவ்வாறு தன் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவது நபி (ஸல்) அவர்கள் தான் என்பதை மெதுவாக உணர்ந்து அறிந்து கொள்கிறார்.
அடையாளம் கண்ட அவர். இது ஒரு கிடைக்காத பாக்கியம், ஒரு நல்ல அருமையான வாய்ப்பு என்று உணர்ந்த அவர் தன் முதுகை நபிகளாரின் மார்பின் மீது இறுக சாய்ந்துக் கொண்டு, தன் முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்போடு தழுவுகிறார். மேலும் உலகின் அதிபதியல்லவா?! என்னை பற்றிருக்கிறார் என ஆர்ப்பரிக்கும் அன்பும், உள்ளத்தில் உச்சபச்ச மகிழ்ச்சியிலும், அளவு கடந்த அன்பும் பாசமும் அவரது உள்ளம் திளைத்திருந்தது.
அப்போது நபி (ஸல்) யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குகிறீர்கள்? யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குகிறீர்கள்? என்று மக்களைப் பார்த்து கேட்டார்கள். அதற்கு ஜாஹிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே இந்த கருப்பு நிற கிராமவாசியை யார் அடிமையாக வாங்குவார்கள்? அப்படி வாங்கினாலும் அது நஷ்டமான வியாபாரம் அல்லவா? என்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: ஜாஹிரே! நீங்கள் மக்கள் முன் வேண்டுமானால் மதிபற்றவராக இருக்கலாம், ஆனால் அல்லாஹ்வின் முன் உங்கள் மதிப்பு மிகவும் உயர்ந்தது. ஏனென்றால் நீங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரயும் நேசிக்கிறீர்கள். அதனால் அல்லாஹ்விடத்தில் உங்கள் மதிப்பும் கண்ணியமும் மிகவும் பெரியது என்று பதில் கூறுகிறார்கள்.
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 13/107, ஷர்ஹுஸ் ஸுன்னாஹ் 13/181, ஜம்வுல் வஸாயில் ஃபி ஷர்ஹிஷ் ஷமாயில் 2/29.
படிப்பினைகள்:
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தை பின்பற்றவும் அதை எடுத்து சொல்லவும் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறோம். அதை எதிர்த்து நாமும் பல வகைகளில் போராடி வருகிறோம். ஆனால் மேடைப் பேச்சுகளில் பரவிய மார்க்கம் அல்ல, இஸ்லாம் வெறும் மேடை பேச்சுகளால் மட்டுமே இஸ்லாத்தை பரப்பி விட முடியாது. இதை நம் தூதர் அவர்களும் நமக்கு காட்டி தரவில்லை.
இஸ்லாம் என்பது வாய்ச்சொல் மார்க்கம் அல்ல. அது ஒரு வாழ்வியல் மாற்றம் என்பதை நம் தூதர் அவர்களின் வாழ்வு நமக்கு அப்பட்டமாக காட்டுகிறது. இன்று மேடை போட்டு பேச துடிக்கும் நம் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தை வாழ்வியலில் பிரதிபலிக்க மறந்து விட்டது.
நாம் ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கை பரந்து விரிய வேண்டுமென்றால் அது அங்குள்ள எளியவர்களிடம் போய் இருக்க வேண்டும். அந்த கொள்கையை எளியவர்கள் பற்றி பிடித்தால் அதன் பின் எவராலும் அந்த கொள்கையை அழிக்க முடியாது. காரணம் அவர்களின் வீரியம் ஆச்சரியமிக்கதாக இருக்கும்.
கொஞ்சம் உங்கள் மனதிற்குள் மீட்டிப் பாருங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் நினைவலைகளை.. மக்காவை விட்டு யார் தப்பித்து வந்தாலும் அவர்களை உடனே திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றும் மதினாவை விட்டு வருபவர்களை தாங்கள் திருப்பி அனுப்ப மாட்டோம் என்றும் அநீதமாக ஒரு விதிமுறையை கூறினார்கள் மக்கத்துக் காஃபிர்கள்.
வெளிப்படையாக அநீதமாக தோன்றினாலும், அதில் உற்று கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஒருவர் இஸ்லாத்தை நோக்கி ஒரு முறை வந்து விட்டால் அவரால் இஸ்லாத்தை விட்டு கண்டிப்பாக செல்ல முடியாது. காரணம் இஸ்லாமிய வாழ்வியலும் முஹம்மது நபியின் வழிமுறையும் அவ்வளவு பெரிய ஈர்ப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தி இருந்தது.
ஒரு கொள்கையில் ஒருவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவும் அவர்களை கொள்கையில் கட்டி போடுவதற்கும் உணர்வு ரீதியான அணுகுமுறையே மிகவும் சிறந்ததாக இருக்கும். அண்ணல் நபி அவர்கள் மனிதர்களின் உணர்வுகளை கையாள தெரிந்தவர்கள்.
ஒரு முஸ்லிம் தன் ஒவ்வொறு அசைவிலும் பிறறை ஈர்க்கும் படி நடந்து கொள்ளும் போது நம் செயலால் நாமும் பலரை இஸ்லாத்தில் ஏற்க செய்ய முடியும்.
ஏற்றத்தாழ்வு பார்க்காமல் காட்டும் தூய அன்பும் எவரும் தம்மிடம் எளிமையாக நெருங்கும்படி நடந்து கொள்ளும் இந்த தலைவரின் நடைமுறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.
மேற்கண்ட சம்பவத்தின் மூலம், மனிதர்களின் உணர்வுகளை தன் அழகிய எளிமையான ஆர்ப்பாட்டம் இல்லாத குணத்தின் மூலம் எவ்வாறு கட்டி போட்டார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அழகு, பணம், பதவி குடும்பப் பெருமை இவையெல்லாம் தான் ஒரு மனிதனை மதிக்கத்தக்கவனாக ஆக்கும் என்று பெருமிதம் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில், ஒரு சாதாரண கிராமவாசியை கண்ணியத்திற்குரியவராக மதித்ததன் மூலம் இஸ்லாத்தில் உயர்வுக்கு உரியவர் யார் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அழகாக பிரதிபலிக்க செய்தார்கள்.
***