கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Sep 14, 2014 Viewers: 2292


கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

ஹவாலா

ஹவாலா எனும் வார்த்தைக்கு திருப்புதல் என்பது பொருள். ஒருவர் தான் வாங்கியக் கடனை இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பொறுப்பை திருப்பி விடுவதற்கு மார்க்கத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

யாரிடம் அந்த பொறுப்பு புதிதாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அப்பொறுப்பை ஏற்கிற அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2287, 2288.

கடன் பெற்றவர் ஏதோ ஒரு காரணத்தினால் இவ்வாறு சொல்லும்போது கடன் கொடுத்தவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை புதிதாக பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு அதை திருப்பிக் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டால், கடன் பெற்றவரே திருப்பிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பகுதியில் பெற்றத் தொகையை இன்னொரு பகுதியில் இன்னொருவரால் திருப்பிக் கொடுக்கும் முறைக்கு தற்காலத்தில் ஹவாலா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஹதீஸ் நூல்களிலும், ஃபிக்ஹ் நூல்களிலும் இடம்பெறும் கடன் தொடர்பான ஹவாலாவும் இதுவும் ஒரு விதத்தில் ஒத்திருப்பதால் இவ்வாறு அதே வார்த்தையை பயன்படுத்துகின்றனர்..

கஃபாலா

கஃபாலா என்றால் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும். எந்த ஒரு உடன்படிக்கை, பேச்சுவார்த்தையிலும் பொறுப்பை நிறைவேற்றக் கடமைப் பட்டவருக்காக ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது மார்க்க அங்கீகாரம் பெற்ற செயல்தான்.

முற்காலத்தில் இரண்டு நல்ல மனிதர்கள் செய்துகொண்ட கடன் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் பொது:

“.. கடன் கேட்கப்பட்டவர்சாட்சிகளை எனக்குக் கொண்டுவா! அவர்களை சாட்சியாக வைத்துத் தருகிறேன்என்றார். கடன் கேட்டவர், ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்க்கு கடன் கேட்டவர்பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர்நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறினார்என சொல்லிக்காட்டினார்கள். (நபிமொழி சுருக்கம்) நூல்: புகாரி 2291

இதன் மூலம் கடனுக்குப் பொறுப்பாளரை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது புரிகிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், “கடனில் பொறுப்பேற்றுக் கொள்வது பற்றிய பாடம்எனும் தலைப்புக்குக் கீழேயே மேற்கண்ட நபிமொழியைப் பதிவுசெய்துள்ளார்.

பொறுப்பேற்பவர், கடன் பெறுபவர் தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பார் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும், ஒருவேளை அவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், தானே கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டும்.

கடன் அடித்தப் பின்பே சொத்து பிரித்தல்:

ஒருவர் மீது கடன் இருக்கும் நிலையில் மரணமடைந்துவிட்டால், அவருடைய சொத்தைப் பிரிப்பதற்கு முன்பே கடனை அடைத்துவிட வேண்டும்!

ஒருவர் விட்டுச் சென்ற சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை விவரித்துவிட்டு“(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றியப் பின்னர் தான்என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் 4:11

கடன் வாங்கியவர் அதை அடைப்பதற்கு எந்த சொத்தையும் விட்டுச் செல்லாமல் மரணித்துவிட்டால் அதை அடைப்பது அவரது வாரிசுதாரர்களின் பொறுப்பு.

ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துவிட்டு அதை நிறைவேற்றுவதற்குள் மரணித்துவிட்ட தன் தாய்க்காக தான் ஹஜ்ஜு செய்யலாமா? என்று கேள்வி கேட்ட பெண்ணிடம்ஆம் அவர் சார்பாக ஹஜ் செய்என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், “உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று கேட்டார்கள், அந்தப் பெண்ஆம்என்று பதிலளித்தார். நபி(ஸல்) “அப்படியென்றால் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டியதை நிறைவேற்றுங்கள், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன் என்று சொன்னார்கள். நூல்: புகாரி 7315.

வாரிசுதாரர்கள் அவ்வாறு நிறைவேற்றுகிற நிலையில் இல்லாவிட்டால் அல்லது வாரிசுதாரர்களே இல்லாவிட்டாலும் எந்த முஸ்லிமும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டபோது,  “அவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்குஇல்லைஎன்று பதிலளிக்கப்பட்டது. அடுத்துஅவர் மீது கடன் உள்ளதா?” என்று கேட்டதற்குஆம்என்று சொல்லப்பட்டது. உடனே நபியவர்கள்உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்என்றார்கள். அப்போது அபூகதாதா(ரலி), “அவர் கடனுக்கு நான் பொறுப்பு, நீங்கள் தொழுகை நடத்துங்கள்என்றதும் நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்: புகாரி 2289

பொதுவாக கடன் வாங்காமல் இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நிம்மதியைத் தரும். இயன்றவரை கடன் வாகுவதைத் தவிர்க்க வேண்டும்!

கடன் வாங்கிவிட்டால் அதை எளிதாக நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனை:
அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபாள்லிக அம்மன் ஸிவாக்க

(பொருள்: இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!) நூல்: திர்மிதி 3563

கடனிலிருந்து பாதுகாவல் தேடி நபி(ஸல்) அவர்கள் செய்த துஆ:
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத்தய்னி வகலபத்திர் ரிஜால்.”

(பொருள்: இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.) நூல்: புகாரி 2893

கடன் கொடுக்கல் வாங்கலில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறையை பின்பற்றிச் செயல்பட வேண்டும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல்லுதவி செய்வானாக! ஆமீன்!

முற்றும்.

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil