ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Sep 11, 2014 Viewers: 2282 0
தற்கொலை தீர்வாகுமா?
வாழ்க்கையில், தோல்விகள், சோதனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், அவமானங்கள் என்று ஏதேனும் ஏற்படும் பொது அதற்குத் தீர்வாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.
தெய்வநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் இல்லாதிருப்பது அல்லது இவ்விரு நம்பிக்கையிலும் பலவீனம் இருப்பதுதான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம்.
எந்த கடுமையான சிரமத்துக்காகவும் தற்கொலையைத் தேர்வு செய்யக் கூடாது. ஆனால் இன்று மிகச் சிறிய சோதனையைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் தற்கொலையை நாடும் நிலை பரவி வருகிறது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரில் சிலர் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்துகொள்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பள்ளிக்கூடத் தேர்வில் தோல்வியடைவது ஒன்றும் அத்தனைப் பெரிய தோல்வி அல்ல. ஆனாலும் இதற்கு பெரியவர்கள் தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தோல்வி, அவமானம் என்று வரும்போது சில பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதை அறியும் சிறுவர்கள் தமக்கும் தோல்வி, அவமானம் என்று வந்தால் தற்கொலை செய்து கொள்வது தமக்குத் தீர்வைத் தரும் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். இது பெரிய அவலம்!
செப்டம்பர் 10 தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகங்களில் வெளிவரும் தற்கொலைப் பற்றிய செய்திகள் மூலமாகவே தற்கொலைச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அதாவது தற்கொலை குறித்த செய்தியை வெளியிடும் ஊடகங்கள் தற்கொலை நடந்த முறை பற்றி விரிவாக விளக்கக் கூடாது. அத்துடன் தற்கொலை செய்துகொள்வது தவறு என்பதையும் அச்செய்தியுடன் குறிப்பிட வேண்டும்.
உலக அளவில் நடக்கும் தற்கொலை குறித்த புள்ளி விவரத்தையும் உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகத்திலேயே மிக அதிகமாக கயானாவில் ஒரு லட்சம் பேரில் 44.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்ற நாடுகள்: ஒரு லட்சம் பேரில் – வடகொரியா(38.5), தென்கொரியா(28.9), இலங்கை(28.8), லிதுவேனியா(28.2), நேபாளம், தான்சானியா (24.9), புரூண்டி(23.1), இந்தியா(21.1), தெற்கு சூடான் (19.8), ரஷியா, உகாண்டா(19.5), ஹங்கேரி (19.1), ஜப்பான் (18.5) பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் அதிகம் தற்கொலை நடைபெறக்கூடிய நாடுகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் நம் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக தற்கொலைகள் நடக்கின்றன என்பது இன்னொரு முக்கியத் தகவலாகும்.
எத்தனையோ பெரும் சோதனைகளையும் அனுபவித்தவர்கள் சகிப்புத்தன்மை, நிதானம் ஆகியவற்றால் பின்பு நல்வாழ்வு வாழ்கிறார்கள். தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இறைவழிகாட்டுதல்
எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கு விதித்தது தான் நடக்கிறது. அவன் விதிக்கு அப்பாற்பட்டு எதுவும் நடக்காது என்பதை உறுதியாக நம்பி, மேற்கண்ட இறைவசனத்தில் கூறப்பட்டதை தனக்குள் சொல்லிக் கொண்டு அதில் உறுதியாகவும் இருக்கும் ஒருவரை எவ்வளவு பெரிய சோதனையும் மனம் தளரச் செய்துவிடாது. தற்கொலை எண்ணமும் தோன்றாது.
அதே போல், எல்லா நிலையிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். நமது முயற்சியும் உழைப்பும் நமது நாட்டம் நிறைவேறுவதற்காக நாம் செய்யும் வெளிப்படையான செயல்பாடாகும். ஆனால் அதன் முடிவை நான் ஏற்பேன் என்ற முடிவோடு இருப்பதே ‘தவக்குல்’ எனும் அல்லாஹ்வை சார்ந்திருக்கும் தன்மை. இதுவும் எத்தனை பெரிய சோதனையையும் தாங்கிக் கொள்ளும் வலிமையை மனிதருக்குத் தருகிறது. மேற்கண்ட வசனத்தின் இறுதியில், “இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்களாக!” என்று அல்லாஹ் கூறுகிறான். இக்கருத்தில் பல்வேறு இறைவசனங்கள் உள்ளன.
ஆகவே இறைவன் மீதும் அவனது விதி மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்து வாழ்வதும், தற்கொலை நரகில் சேர்க்கும் பெரும்பாவம் என்பதை உணர்ந்து வாழ்வதும், தற்கொலைகள் நடைபெறாமல் தடுக்க காரணமாக அமையும்!