ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 23, 2014 Viewers: 2117 0
என்னருமை தலித் சகோதரரே!
மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் நமது இந்தியாவின் மீது போர் தொடுத்து ஆதிக்கம் செய்தார்கள். அப்போது அவர்களால் அடிமைகளாக்கப்பட்டவர்கள் தான் தலித்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளான பின்பும் இந்த தலித்களுக்கு ஏற்பட்ட இழிவுகளும் இன்னல்களும் நீங்கவில்லை.
இந்த நாகரீக யுகத்திலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவதும் மட்டம் தட்டப்படுவதும் பிற ஜாதியினரால் தாக்கி துன்புறுத்தப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவர் வன்னிய இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ததைக் காரணமாக வைத்து தலித்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இதற்க்கு உதாரணமாகச் சொல்லலாம்.
தங்களின் மதம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறியதும் பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்ததும் தவறு என்றாலும் அந்த இளைஞர் சார்ந்துள்ள சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியது அட்டூழியமாகும். இந்த அட்டூழியத்தை துணிச்சலாக நடத்துவதற்கான காரணம் ஏற்க்கனவே தலித்கள் பற்றி பிற ஜாதிக்காரர்களிடம் இருக்கக் கூடிய இளக்காரமான பார்வை! இந்தப் பார்வை இருக்கும் வரை வெவ்வேறு காரணங்களை வைத்து இது போன்ற அட்டூழியங்கள் தொடரத்தான் செய்யும்.
இச்சமயத்தில் தலித் சகோதரர்களுக்கு குறிப்பாக தலித்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு சில நன்மையான விஷயங்களை முன்வைக்கிறோம். உங்களுக்கு ஆட்சியாளர்களாலும் அரசியல்வாதிகளாலும் அநீதமிழைக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளால் அநீதமிழைக்கப்படுகிறது பிற ஜாதி மக்களால் அநியாயம் செய்யப்படுகிறது. செய்தி ஊடகங்களால் அநீதமிழைக்கப்படுகிறது.
இவ்வாறு பல தரப்பிலிருந்தும் பலவிதமாக அநீதமிழைக்கப்படும் போது அதைப்பற்றி அப்போது மட்டும் தான் சிந்திக்கிறோம். அதற்கெதிராக மட்டும் போராடுகிறோம். இதனால் ஒரு தரப்பின் அநீதத்துக்கு தீர்வு காணும்போது அல்லது தீர்வுகாண முயற்சிக்கும் போது இன்னொரு தரப்பிலிருந்து இன்னொரு அநீதம் வருகிறது. இவ்வாறு அநீதங்கள் அணிவகுத்து வருகின்றன.
ஆனால் எல்லாத் தரப்பினரின் எல்லா அநீதங்களிலிருந்தும் விடுபடுவதற்கான அடிப்படையான வழிமுறைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. அத்தகைய அடிப்படைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம்.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டு என்ற மிகத் தவறான நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. அதாவது சூத்திரர்களாகிய நீங்கள் கடவுளின் பாதத்திலிருந்து உருவானவர்கள், ஏனைய பிரிவினர்கள் கடவுளின் மேற்பகுதியிலுள்ள மற்ற உறுப்புகளிலிருந்து உருவானவர்கள் என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த நம்பிக்கை புகுத்தப்பட்டுள்ளது.
இந்த தவறான நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால் நீங்கள் உங்களுக்கெதிரான அநீதங்களுக்கு எதிராக போராடுவதற்கு அர்த்தமில்லை. ஏனென்றால் உங்களுக்கு எதிராக மற்ற ஜாதியினர் நடத்தும் அநீதமெல்லாம் நீங்கள் மட்டமானவர்கள் என்ற நம்பிக்கையின் விளைவாக நடத்தப்படுவதே. இந்நிலையில் நீங்களும் உங்களைப் பற்றி பிறப்பின் குறைவு கொண்டவர்கள், தாழ்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் நீங்களும் தவறான பாதையில் உள்ளீர்கள் என்பது தான் பொருள்.
சரியான நம்பிக்கை என்னவெனில் எல்லாம் வல்ல இறைவன் துவக்கமாக ஓர் ஆண் ஒரு பெண் வழியாகவே மனித இனத்தைப் பெருகச் செய்தான். மனிதர்கள் எந்த இனமாக இருந்தாலும் எந்த குலமாக இருந்தாலும் எந்த கோத்திரமாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஆதி தாய் தகப்பன் அந்த இருவர் தான்.
இப்படித் தான் பழங்கால இறைவேதங்களிலும் இறுதி இறைவேதமான திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடயவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)
நீங்கள் இந்த உண்மையை நம்பிக்கைக் கொண்டு உங்கள் மக்களிடமும் பிற மக்களிடமும் பிர்ச்சாரமும் செய்ய வேண்டும். இதற்கு மாறாக பழைய தவறான நம்பிக்கையை விட்டுவைப்பீர்கள் என்றால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இழிவை அனுபவித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல இன்னொரு மூவாயிரம் ஆண்டுகளானாலும் இதே இழிவை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்!
2. நாம் கௌரவமானவர்கள் என்ற உணர்வு வேண்டும்; கௌரவமானவர்களாக இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு நாமும் சமம் என்ற உணர்வுடன் நாம் கௌரவமானவர்கள் என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். உண்மையில் கௌரவமானவர்களாக இருக்க வேண்டுமென்றால் கீழ்த்தரமான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
கீழ்த்தரமான செயல்பாடுகள், கீழ்த்தரமான பேச்சுக்கள், அற்ப காரணங்களுக்காக ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது, மது குடித்துவிட்டு தெருவில் சச்சரவு செய்துகொள்வது போன்றவை ஒரு கூட்டத்திடம் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அந்த கூட்டம் கீழ்த்தரமான கூட்டம் தான்.
தமது ஜாதிக்காரர்கள் கூட்டமாக சேர்ந்துவிட்டால் பிற ஜாதிக்காரர்களை வம்புக்கிழுப்பது, தமது ஜாதிக் கட்சியினருடன் சென்று பிற சமூகத்தவர் வியாபார நிறுவனங்களில் அடாவடித்தனம் செய்வது, இவையெல்லாம் அநாகரீகமான செயல். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து உயர்வதை விரும்பக் கூடிய சமூகத்திடம் இந்த அநாகரீகச் செயல்கள் இருக்கக் கூடாது.
ஆனால் இத்தகைய தாழ்த்தும் செயல்பாடுகள் உங்கள் சமூகத்தவரிடம் அதிகம், சொல்லப்போனால் உங்கள் மதத்துக் காரர்கள் உங்களை தீண்டத் தகாதவர்களாக நடத்தும்போது உங்களை மரியாதையுடன் நடத்துபவர்கள் முஸ்லிம்கள். ஆனால் பல ஊர்களில் அந்த முஸ்லிம்களிடமே வீண் வம்பு செய்து கலவரங்களை உண்டுபண்ணியவர் உங்கள் ஜாதியினர்.
கவனத்தில் கொள்ளுங்கள்! இத்தகைய தாழ்ந்த நடவடிக்கைகளை நீங்கள் கைவிடாத வரை தாழ்த்தப்படுவதிளிருந்து உங்களால் விடுபட முடியாது.
3. அடிமைத்தனத்திலிருந்து உண்மையாக விடுபட வேண்டும்.
சட்டம், தலித்துகளாகிய உங்களுக்கு சமத்துவத்தை வழங்கியுள்ளது. பழைய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் உங்களின் பிற்போக்குத் தனத்தினால் ஆதிக்க வெறிபிடித்த ஜாதிக்காரர்களுக்கு அடிமைகளாகவே இருந்து கொண்டிருக்கிரீர்கள்.
அவர்கள் ஆட்டுவிக்கிறபடி ஆடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆரியர் உள்ளிட்ட ஆதிக்க வெறி ஜாதியினர் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உங்களைத் தூண்டிவிட்டால் சிந்திக்காமல் சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள். உதாரணமாகச் சொல்வதென்றால் கோயம்புத்தூரில் 1997ம் வருடம் நவம்பர் மாதத்தில் முஸ்லிம்கள் மீது கொடுமையான தாக்குதலையும், சூறையாடலையும் உங்களை வைத்துத் தான் நடத்தியிருக்கிறார்கள் ஆதிக்க வெறியர்கள்.
உண்மையில் அதுபோன்ற சந்தர்பத்தில் நீங்கள் முஸ்லிம்களுக்குத் துணையாகத்தான் நின்றிருக்க வேண்டும். ஏனென்றால், ஆதிக்க வெறி ஜாதியினர் உங்கள் மீது செய்துகொண்டிருந்த அட்டூழியங்களைக் குறைத்திருப்பதற்குக் காரணம் நீங்களும் முஸ்லிம்களாக ஆகிவிடுவீர்களோ என்ற பயத்தினால் தான்.
சற்று யோசித்துப் பாருங்கள், எந்த ஆதிக்க வெறி ஜாதியினரின் தூண்டுதலால் முஸ்லிம்கள் மீது தாக்குதலையும், சூறையாடலையும் நடத்திநீர்களோ அதே ஜாதியினரோடு ஒரு கட்டத்தில் நீங்கள் மோதிக் கொண்டு தாக்குதலும், சூறையாடலும் நடத்தும்போது, ‘இந்த பறப்பயலுகளே இப்படித்தான்’ என்று அந்த ஜாதிக்காரர்கள் பேசுவார்கள்.
ஆதிக்க வெறியர்கள் தூண்டிவிட்டால் பலவீனப் பட்ட மக்கள் மீது தாக்குதலும், சூறையாடலும் நடத்தும் கூட்டம் தாழ்ந்த அடிமைக் கூட்டம் தான். இந்நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக அனுபவித்த இழிவு இன்னொரு முப்பதாயிரம் ஆண்டுகளானாலும் மாறப் போவதில்லை!
4. “நான் தலித்” என்ற ஆயுதத்தை கீழே போட வேண்டும்.
தலித் மக்களை வழிநடத்தக் கூடியவர்கள் எதற்க்கெடுத்தாலும் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துகள் என்று புலம்புவதைக் கைவிட வேண்டும். மற்றவர்களுக்குச் சமமாக வாழ்வதற்கும், முன்னேறுவதற்கும் நல்லெண்ணம் கொண்டவர்களால் வழி ஏற்ப்படுத்தித் தரப்பட்டுவிட்டது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் இட ஒதுக்கீடு போன்ற வாய்ப்பு பறிக்கப் படலாம், அப்போது மற்றவர்களுடன் போட்டி போட்டு திறமையுடன் முன்னேறும் தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதனால் தாழ்வைக் குறிக்கும் பெயர்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
5. எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிமைப்படுதல் வேண்டும்.
நான் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே அடிமை. அவனை மட்டுமே வணங்கி வழிபடுவேன். என்ற சரியான நிலைபாட்டை எடுக்கும் மனிதன் சுயமரியாதை உடையவனாக இருப்பான். மற்றவர்களும் என்னைப்போல் இறைவனின் அடிமைகளே என்ற உணர்வுள்ளவன் தாழ்ந்து போகமாட்டான்.
இறைவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்பதை ஏற்று அதன்படிச் செயல்படுவதே மனிதனின் முதன்மையான கடமை. இதனையே வேதங்களெல்லாம் வலியுறுத்தியுள்ளன. இதனையே இறைவன் தனது இறுதி வேதமாகிய குர்ஆனிலும் கூறுகிறான்.
“நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான். மேலும், நானே உங்கள் இறைவன்; ஆகவே என்னையே நீங்கள் வணங்குங்கள்.” - திருக்குர்ஆன் 21:92
இந்த அம்சத்தை நாம் இறுதியாகச் சொல்லியிருந்தாலும் இதுவே முதன்மையானது. இங்கு நாம் எழுதியிருப்பதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மையிலேயே உயர்வடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான். ஏற்பீர்களா? என்னருமை தலித் சகோதரர்களே!
-M.
அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil