ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Feb 28, 2015 Viewers: 1909 0
மீலாதும் மவ்லிதும்
ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் “மீலாதுன் நபி” என்கிற பெயரில் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்மாதத்தின் முதல் பன்னிரண்டு நாட்களும் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடல்கள் என்கிற பெயரில்: "சுப்ஹான மவ்லிது” என்ற பாடல் தொகுப்பு பாடப்படுகிறது.
முதலில் மீலாதுன்நபி குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம்.
நபி பிறந்த நாள் விழா கொண்டாடுபவர்கள்: "இது நபியின் பிறந்த நாள். அல்லாஹ்வின் தூதர் பிறந்ததற்கு அந்த நாளில் நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். இதை நன்மையாகவும் கருதுகிறார்கள்.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பிறந்தது எந்த மாதம் என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது. நபி பிறந்தது ஸஃபர் மாதத்தில் ரஜபில், ரபீஉல் அவ்வலில், ரமளானில் என்று அறிஞர்களுக்குள் பலவிதமான கூற்றுகள் உள்ளன.
அது போல் ரபீஉல் அவ்வல் மாதம் தான் என்று சொல்வோர்களுக்குள்ளும் அது எந்த நாள் என்பதில் பல கூற்றுகள் உள்ளன. ரபீஉல் அவ்வல் இரண்டு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு என்று வெவ்வேறு நாட்கள் அறிஞர்களால் கூறப்பட்டுள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி). ஜுபைர் பின் முத்இம் (ரலி) ஆகிய நபிதோளர்களின் கூற்றுப்படி ரபீஉல் அவ்வல் எட்டாம் நாளாகும்.
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அவர்களுக்குப்பின் தாபியீன்களும், தபஉத்தாபியீன்களும் மீலாது கொண்டாடியதில்லை என்பதால் தான் நபி பிறந்த நாள் எது என்பதில் கருத்து வேறுபாடு வந்துள்ளது.
மீலாது கொண்டாட்டத்தை ஆதரிப்பவர்களும் கூட ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இர்பல் எனும் பகுதி அரசராயிருந்த “அல்முலஃப்பர்” என்பவர் தான் இந்த விழாவை துவக்கமாக செய்தார் என்கின்றனர். மோசமான ஷியா கொள்கை கொண்ட ஃபாத்திமிய்யா கலீபாக்கள் (ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டு வாக்கில்) நடைமுறைபடுத்தியதாகவும் செய்திகள் உண்டு.
எப்படியிருந்தாலும் நபி (ஸல்) அவர்களோடும் நபித்தோழர்களோடும் தொடர்பில்லாத விழா இது என்பது நன்றாகத் தெரிகிறது.
அப்படியிருந்தும் இது நல்ல காரியம்தான் என்கின்றனர். பரவலாக இந்த விழாவைக் கொண்டாடுகிறீர்கள் உங்கள் கொண்டாட்டங்களைப் பார்த்து விட்டு மாற்று மத ஆட்சியாளர்கள் கூட இந்த விழாவுக்கு விடுமுறை கொடுத்து விட்டார்கள்? இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நல்ல காரியத்தை எப்படி நபித்தோழர்கள் செய்யாமல் விட்டார்கள். இது நன்மை என்றால் இதை அவர்கள் செய்வதற்கான சூழ்நிலை இருந்தது. அப்படி இருந்தும் அவர்கள் செய்யவில்லை என்றால் இது போன்ற செயல்களை பித்அத்தாக பார்த்திருக்கிறார்கள் என்பது தான் அர்த்தம். புதிதாகத் தோன்றகூடிய சிறிய செயலைக் கூட நபித்தோழர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிரார்கள்..
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத கூட்டு திக்ரு செய்தவர்களை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள். அவ்வாறு செய்தவர்களை நோக்கி “நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் மார்கத்தை விட மிக நேர்வழியான ஒரு மார்கத்தில் இருக்கின்றீர்கள். அல்லது வழிகேட்டின் வாசலை திறக்கின்றீர்கள்” என்று கோபத்துடன் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நீண்ட இந்த செய்தியில் தொடர்ந்தும் அந்த மக்களை கண்டித்ததாக உள்ளது. பார்க்க : ஸீனனுத்தாரிமீ (204)
இது போன்ற செய்தி முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் (5409, 5410) இப்னு வழ்ழாஹ் அவர்களின் “அல்பிதஉ” (9) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
மார்க்க அறிஞர்களின் தடை:
இந்த மீலாது பித்அத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கூடாது என்று கூறுபவர்களை பழிசொற்களை கூறி இப்படி தடை செய்யும் கருத்து புதிதாக தோன்றியது போல் சித்தரிக்கிறார்கள் பித்அத்துக்காரர்கள். ஆனால் இவர்களே மதிக்கும் மத்ஹபு அறிஞர்கள் முற்காலத்தில் இந்த பித்அத்தை கண்டித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
இதோ மாலிக் மத்ஹபைச் சேர்ந்த இமாம் அபூ ஹஃப்ஸ் தாஜூதீன் அல்ஃபாகிஹானி (இறப்பு 734 ஹி) அவர்கள் நபி பிறந்த நாள் விசேஷம் தொடர்பாக வழங்கியுள்ள ஃபத்வாவை பாருங்கள்!
“இந்த மவ்லிதுக்கு (நபி பிறந்த தின விசேசத்துக்கு) (அல்லாஹ்வின்) வேதத்திலும் சுன்னாவிலும் ஒரு அடிப்படை ஆதாரத்தையும் நான் அறியவில்லை. எவர்கள் மார்கத்தில் வழிகாட்டிகளாக இருக்கின்றார்களோ அத்தகைய உம்மத்தின் உலமாக்கள் எவர் ஒருவரும் இதை செய்ததாக அறிவிக்கப்படவுமில்லை. அந்த உலமாக்கள் தங்களுக்கு முன்பிருந்தவர்களின் அடிச்சுவடுகளை பற்றிப்பிடிதவர்களாக இருந்தார்கள். மாறாக இது ஒரு பித்அத் (புதிதாக உண்டாக்கப்பட்டது) ஆகும். இதை வீணர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது மனோ இச்சையாகும் இதன் மூலம் சாப்பாட்டு பிரியர்கள் தங்களின் தேவையை நிறைவு செய்து கொள்கிறார்கள்”.
இவ்வாறு கூறும் இமாம் அல்ஃபாகிஹானி அவர்கள், இது ஏன் கூடாது என்பதற்கான விளக்கத்தையும் தொடர்ந்து கூறுகிறார்கள். அவர்களின் அந்த ஃபத்வா முழுமையாக “அல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித்” என்ற பெயரில் சிற்றேடாக உள்ளது.
இந்த ஃபத்வாவை எழுதுவதற்கு முன் இமாம் அவர்கள், “மவ்லித் தொடர்பாக நல்லோர் பலர் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறித்தான் ஆரம்பிக்கிறார்கள். அக்காலத்தில் இந்த காரியத்தை சிலர் செய்து கொண்டிருந்தாலும் நல்லவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு இது கூடாத செயலாக தோன்றியுள்ளது என்பது தெரியவருகிறது.
இமாம் அல்ஃபாகிஹானி மட்டுமின்றி அல்லாமா இப்னுல் ஹாஜ், இப்னு தைமிய்யா, ஷவ்கானி உள்ளிட்ட பல முற்கால அறிஞர்களும் மீலாது வைபவம் நடத்துவதை தடுத்துள்ளார்கள். வேறு பல அறிஞர்கள் இதை சரி கண்டுள்ளார்கள் என்று பித்அத் பிரியர்கள் வாதிக்கலாம்.
ஒரு காரியத்தை சில அறிஞர்கள் ஆகுமென்றும் வேறு சில அறிஞர்கள் ஆகாதென்றும் கூறும் போது எந்தக் கருத்து குர்ஆனுக்கும் நபிவழிக்கும் ஒத்ததாக இருகின்றதோ அதை எடுத்துக் கொள்வதுதான் உண்மை இறை நம்பிக்கையாளர்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் பார்த்தால் இந்த மீலாது கொண்டாட்டம் கூடாது என்ற கருத்தே குர்ஆன், நபி வழிக்கு உடன்பட்டதாக உள்ளது.
மவ்லிது பாடல்களின் தவறுகள்:
மீலாதுவை சரி கண்ட சில முற்கால அறிஞர்களுக்கு இப்போது தமிழகத்தில் பாடப்பட்டு கொண்டிருக்கும் சுப்ஹான மவ்லிது பாடல்கள் கிடைத்திருந்தால் அவற்றை கடுமையாக எதிர்த்திருப்பார்கள். ஏனென்றால் மார்கத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கைக்கே விரோதமான பாடல் அடிகள் பல அதில் உள்ளன. உதாரணத்திற்கு சிலவற்றை காண்போம்:
சுப்ஹான மவ்லிதின் ஐந்தாவது பைத்தில் ஓர் அடி “பஸத்து கஃப்ப ஃபாக்கத்தீ வன்னதமி – அர்ஜுஜசீல பழ்லிகும் வல்கரமி”,
பொருள்: “என் வறுமை, என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்து விட்டேன். ஆகவே யான், தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத் தன்மையை எதிர்பார்கிறேன்”.
இந்த அடியில் வறுமையை நீக்க நபியின் அருட்கொடையை வேண்டி நபியிடம் கைவிரிப்பதைப் பார்க்கிறோம். இது அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதை நபியிடம் கேட்கும் இணைவைப்பு வாசகங்களாகும்.
இது குர்ஆனுடன் எப்படி மோதுகிறது? அல்லாஹ் கூறுகிறான்: "நிச்சயமாக உம்முடைய இறைவன், தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்." - அல்குர்ஆன் 17:30, 31
இது போன்ற பல இறைவசனங்களுக்கு இந்த மவ்லிது பாடல் அடி முரண்படுவதை பார்க்கலாம்.
அதற்கடுத்த அடி :
“முஸ்தஷ்ஃபிஅன் நஸீல ஹாதல் ஹரமி- ஃபலாஹிளூணீ பிதவாமில் மததி”
பொருள்: "மதீனவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையை தேடியவனாக தங்கள் முன் நிற்கின்றேன். எனவே நிரந்தரமான நல்லுதவி செய்வதன் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக!”
இந்த அடி “உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்” என்ற (அல்குர்ஆன் : 1:4) வசனத்துக்கும் இந்த கருத்தை கொண்ட பல்வேறு வசனங்களுக்கும் முரணாக உள்ளது. (உதாரணத்திற்கு பார்க்க : அல்குர்ஆன் 35:2, 3).
அதற்கடுத்த அடி :
“கத் ஃபுக்துமுல் கலக பிஹுஸ்னில் குலுகி ஃபஅன்ஜிதுல்மிஸ்கீன கப்லல் கரகி”
பொருள்: அழகிய நற்குணங்களின் மூலமாக தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட்டு மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான், கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையை காப்பாற்றுங்கள்!”.
அல்லாஹ் கூறுவதை கவனியுங்கள் : (நபியே) நீர் கூறுவீராக ! அல்லாஹ் நாடியதை தவிர எனக்கு எவ்வித தீமையோ, நன்மையோ எனக்கே செய்து கொள்ள நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. (அல்குர்ஆன் 10:49).
மற்றொரு வசனம் : “(நபியே) நீர் கூறுவீராக ! நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற மாட்டேன்”. - அல்குர்ஆன் 72:21.
இந்த வசனங்களுக்கும் இந்த கருத்திலமைந்த பல வசனங்களுக்கும் மேற்கண்ட மவ்லிது அடி முரண்படுகிறது.
இவை போன்று மவ்லிதில் உள்ள வேறு பல அடிகளும் இஸ்லாத்திற்கு முரணாக அமைந்துள்ளன. அவற்றின் பொருளை அறியும் பொது இஸ்லாத்தைப் பற்றி குறைந்த அளவு தெரிந்த ஒருவரும் கூட அவற்றில் தவறு உள்ளதை புரிந்து தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்விடமே பிரார்த்திக்கவேண்டும் அல்லாஹ் அல்லாதவர்களிடம் – அது நபியாகவே இருந்தாலும் – பிரார்த்திப்பது இணைவைத்தலாகும். இதன்படி மவ்லிதின் இந்த அடிகளையும் அங்கீகரித்து படிப்பதும் பாடுவதும் இணைவைத்தலாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : "எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிகின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை தடுத்து விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமகாரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை." - அல்குர்ஆன் 5:72.
ஆகவே பித்அத்தான மீலாதையும், இணை வைப்பதாகவும் பித்அத்தாகவும் உள்ள மவ்லிது பாடல்களையும் விட்டொழிக்க வேண்டும் ! அல்லாஹ் நல்லுதவி செய்வானாக !
(இங்கு இடம் பெற்றுள்ள மவ்லிது அடிகளின் பொருள், மவ்லிது ஆதரவலர்களால் வெளியிடப்பட்டுள்ள “சுந்தர தமிழில் ஸுப்ஹான மவ்லிது” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.)
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil