அகீதா | வழிதவறிய கூட்டங்கள் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Apr 06, 2015 Viewers: 2405 0
தக்லீதின் எதார்த்தங்கள்!
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீது மற்றும் நபி வழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூ )
தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருகின்றனர்.ஆனாலும் இவ்வாறு நேர்வழி பெற்றபின் பலர் தடம் மாறி சென்று கொண்டிருக்கின்றனர்.இது கவலையுடன் நோக்கப் படவேண்டிய விஷயம்.
நாம் இங்கு குறிப்பிடுவது மார்கத்தை கற்பிக்கும் அறிஞர்கள் விசயத்தில் வெறித்தனத்துடன் நடந்து கொள்ளும் பெயர்தாங்கி சலபி களைத்தான். இவர்களிடம் அறிஞர்கள் நடத்தும் மார்க்க வகுப்புகளுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டால் , "மூத்த உலமாக்களிடம் பாடம் படித்த ஆலிம் பாடம் நடத்தினால் வருகிறோம். இல்லாவிட்டால் வரமாட்டோம் " என்கிறார்கள்.
குர் ஆன் ஹதீஸ் வழிநடக்கும் அறிஞர்களிடம் இருந்து கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் இது தான் உண்மையாக அல்லாஹ்வின் மார்க்க கல்வியை தேடும் உண்மை முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
இதற்கு மாற்றமாக தடம் புரண்டு விட்ட இவர்களின் தவறான போக்குக்கு மறுப்பை இவர்களே மதிக்கும் மூத்த உலமாக்களின் நடை முறையிலிருந்தே கொடுக்கலாம்.
மூத்த உலமாக்கள் ,ஷெய்க் அல்பானி அவர்களே மதிக்கிறார்கள். அவர்களின் கல்விக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஷெய்க் அல்பானி அவர்கள் மூத்த உலமாக்கள் என்ற பெயருடன் இருந்தவர்களிடம் உட்க்கார்ந்து பாடம் படித்ததில்லை. இதனால் ஷெய்க் அல்பானி அவர்களின் தரம் குறையவில்லை அல்லவா?
இன்னொரு விதத்திலும் இந்த மூடத்தனத்திற்கு நாம் பதிலளிக்கலாம். அறிஞர்களில் பிராலமானவர்கள் மூத்த உலமாக்கள் என்று குறிப்பிப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மூத்த உலமாக்களை விட கல்வியில் சிறந்த ஓர் அறிஞர் பிரபலமாகவில்லை. அதனால் மூத்த ஆலிம் என்று சொல்லப்படவில்லை. இத்தகைய கல்வியில் மிகச்சிறந்த ஆனால் பிரபலமாகாத ஆலிமிடம் பாடம் பயின்ற நல்ல அறிஞர் ஒருவர் பாடம் நடத்தினால் அவரிடம் பாடம் படிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு என்ன நியாயம் உள்ளது ? பிரபலமாகாத சிறந்த அறிஞரிடம் பாடம் படித்ததுதான் இந்த ஆலிம் செய்த பாவமா ?
அதே போல் மூத்த உலமாக்கள் என்று அறியப்படும் பலர் தாங்கள் கல்வி கற்கும் காலத்தில் சாதாரண ஆலிம்களிடம் கல்வி கற்றவர்களாக தான் இருக்கிறார்கள். இது இவர்கள் மக்களுக்கு கற்பிக்கும் பெரிய அறிஞர்களாக ஆவதற்கு தடையாக இருக்கவில்லை. இப்படி தடம் மாறி செல்வோரின் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். ஒரு ஆலிமின் பயானிலோ பாடத்திலோ ஈர்ப்பு ஏற்ப்பட்டுவிட்டால் மார்க்க விசயத்தை தெரிந்து கொள்ள உதவிய அறிஞரை நேசிப்பது எனபதை தாண்டி அவர்மீது பித்து பிடித்தவர்களாக ஆகி விடுகின்றனர். பையத் செய்து முரீதாக இருப்பது கண்மூடித்தனமான தக்லீது போன்ற வழிகேடுகளை அந்த வார்த்தைகளை சொல்லாமல் நடைமுறைப் படுத்துபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் செயல் பாட்டைப் பாருங்கள் ! இவர்கள் ஒரு ஆலிமிடம் சில விசயங்களை தெரிந்து கொண்டுவிட்டால் அவர் மீது பித்து பிடித்து மற்ற எல்லா ஆலிம்களையும் அவரை விட தாழ்ந்தவர்களாக தான் பார்கிறார்கள்.
மற்ற ஆலிம்களிடம் பாடம் படிக்கவும் மார்கத்தை தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. இவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மற்ற ஆலிம்களெல்லாம் மார்க்கத்தைப் போதிக்க அத்தனை தகுதியானவர்கள் அல்ல என்றோ அல்லது இன்ன ஆலிமிடம் நாம் பாடம் படித்ததால் மற்ற ஆலிம்களிடம் நாம் படிக்க செல்வது நமக்கு தகுதி குறைவு என்றோ இவர்கள் எண்ணுவதாக தோன்றுகிறது
மலேசியாவில் இருக்கும் இவர்களின் இமாம் (நாட்டு பெயர் ஒரு உதாரணத்திற்கு தான் ) இந்தியா வரும்போது தான் பாடம் படிப்பார்கள். அவரை விட சிறந்த கல்வியாளர்கள் அல்லது அவருக்கு நிகரானவர்கள் பலர் இங்கிருந்தாலும் இவர்களிடம் மார்கத்தை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இங்குள்ள ஆலிம்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் வாய்ப்பும் இருந்தும் கூட இவர்கள் அலட்சியம் செய்து புறக்கணிக்கிறார்கள் என்றால் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது ?
இவர்கள் ஒரு பிரச்சனைக்கு மார்க்க தீர்வு தெரிய வேண்டும் என்றால் மலேசியாவுக்கு போன் போட்டு தங்களுக்கு பித்து ஏற்ப்பட்டுள்ள ஆலிம்களிடம் கேட்பார்கள். ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள அவரை விட பெரிய அறிஞர் இடமோ அல்லது அவருக்கு நிகரான அறிஞரிடமோ கேட்க மாட்டார்கள் . ஏனென்றால் தங்கள் இமாம்அளவு கல்வி உள்ளவர் இங்கிருப்பார் எனபதை இவர்களின் மனம் ஏற்க மறுக்கிறது .
இஸ்லாமிய உலகின் பெரிய உலமாக்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள உலமாக்களின் கல்வி சிறப்பை போற்றி சிறப்பிக்கின்றனர். இந்நிலையில் இந்த கத்துக் குட்டிகள் தங்களின் பித்துக்குழி தனமான போக்கினால் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இந்த போக்கு தான் கண்மூடித்தனமாக தக்லீது செய்யும் கூட்டங்களை உருவாக்கியது ! தவ்ஹீதின் எதார்தங்களை தெரிந்தவர்கள் தக்கிலீதின் எதார்த்தங்களை தெரியாமல் தடம் மாறலாமா.
ஒரு ஆலிமிடம் மார்கத்தை அறிந்து கொண்டோம் என்தால் அவரை நேசிப்பதும் மதிப்பதும் இயல்பானது. மார்க்க அங்கீகாரம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற ஆலிம்களெல்லாம் அவரை விட மட்டம் தான் என்ற மனோ நிலையில் இருப்பதும் அவருக்கு தவறே வராது என்பது போன்ற கருத்தை கொண்டிருப்பதும் தவறான போக்கு. எந்த சிக்கலான கேள்விக்கும் பிரச்சனைக்கும் அவர் சொலவது தான் தீர்வு மற்றவர்கள் தீர்வு சொல்ல தகுதி அற்றவர்கள் என்ற எண்ணத்துடன் நடப்பது மார்கத்திற்கு முரணான வழிகேடு.
தங்களின் கல்வியினாலும் திறமையினாலும் ஏற்ப்பட்ட பெருமையில் வழி கெடுப்பவர்களாக மாறிய ஆலிம்கள் அப்படி மாறியதற்கு அவர்களின் தவறான போக்கு ஒரு காரணம் என்றால் அவர்களுக்கு அமைந்த இது போன்ற ரசிக குழுமங்கள் மற்றொரு காரணம்.!
குர்ஆனையும் ஹதீசையும் நல்ல முன்னோரின் வழி நின்று பின்பற்றுவதாகக் தங்களை பற்றி கருதிக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற தவறான போக்குகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
“என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தை தவிர வேறு எதையும் நான் நாடவில்லை; நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டு அல்லாது வேறு இல்லை அவனிடமே பொறுப்பு கொடுத்திருக்கிறேன். மேலும் அவனிடமே மீளுகிறேன்.” அல்குர் ஆன் 11:88
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil