குர்ஆன் | விளக்கம் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 02, 2015 Viewers: 1833 0
குர்ஆனால் வழிகெடுவார்களா? - அல்குர்ஆன் 2:26 விளக்கவுரை
அல்லாஹு தஆலா கூறுகிறான்: "நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் நிராகரிப்பாளர்களோ, இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான். இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான், ஆனால் தீயவர்களைத் தவிர வேறு யாரையும்) அவன் அதன் மூலம் வழிகேட்டில் விடுவதில்லை." (அல்குர்ஆன் 2:26)
இந்த வசனத்தில், குர்ஆனில் கூறப்படும் உதாரணத்தின் மூலமாக பலரை அல்லாஹ் வழிகேட்டில் விடுவதாகவும் கூறுகிறான். பொதுவாக குர்ஆன் நேர்வழிதான் காட்டும். அப்படிதான் அல்லாஹு தஆலா பல இடங்களில் குறிப்பிடுகிறான். "நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்வழியை காட்டுகிறது." (அல்குர்ஆன் 17:9) என்ற வசனம் அத்தகைய வசனங்களில் ஒன்று.
நேர்வழிக் காட்டக் கூடிய குர்ஆன் மூலம் எப்படி அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான்? ஒருவருக்கு நல்வழி கிடைக்கும் போது வேண்டுமென்றே புறக்கணித்து அதை ஏற்காமல் முரண்டு பிடித்தால் அல்லாஹு தஆலா அவர் தேர்வு செய்த வழிகேட்டிலேயே விட்டு விடுகிறான். அதனால் தான் இந்த 2:26 வசனத்தின் இறுதியில் "தீயவர்களைத் தவிர (வேறுயாரையும்) அவன் அதன் மூலம் வழிகேட்டில் விடுவதில்லை என்று கூறியுள்ளான்.
சத்தியமும் நன்மையும் குர்ஆனில் சொல்லப்படும்போது ஏற்கின்ற நல்ல தன்மை இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக அந்த குர்ஆனையே அலட்சியம் செய்து கிண்டலும் செய்தால் அவரிடத்திலுள்ள தீய தன்மைதான் அதிகரிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்: "ஏதேனும் ஒர் அத்தியாயம் இறக்கப்பட்டால், "இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது? "என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர். யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை அது (மெய்யாகவே) அதிகப்படுத்தி விட்டது. இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
ஆனால் எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ அர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது. அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்." (அல்குர்ஆன் 9:124,125)
அவர்களிடமுள்ள அசுத்தம் என்பது இறைநிராகரிப்பு ஆகும். திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் சத்தியத்தை விளக்கிய வண்ணம் இறங்குகிறது. ஆனால் ஒவ்வொன்றாக இவர் நிராகரித்துக் கொண்டே இருக்கிறார். அவர் ஒவ்வொரு முறை நிராகரிக்கும் போதும் நிராகரிப்பு என்ற அசுத்தக் கொள்கை அவரிடம் அதிகமாகும்.
இது போன்றவர்களுக்கு குர்ஆன் மூலம் நஷ்டமும் அதிகமாகிறது. "நாம் நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் இறக்கி வைத்தோம் ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ நஷ்டத்தை தவிர வேறு எதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்குர்ஆன் 17:82)
இது போன்ற நிலையைத்தான் திருக்குர்ஆனின் 41:17 வசனமும் குறிப்பிடுகிறது: இந்த வசனத்தில் கூறப்படுவது: "ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியை காண்பித்தோம். ஆயினும் அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (பாவத்)தின் காரணமாக இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
ஆக திருக்குர்ஆன் நேர்வழி காட்டக்கூடியதுதான்! என்றாலும் அதன் வசனங்களையும் அத்தியாயங்களையும் திமிர் பிடித்து மனமுரண்பாடாக மறுத்தால் அத்தகையவரிடம் வழிகேடு அதிகரிக்கும். கூடுதல் நஷ்டத்திற்கும் ஆளாக நேரிடும்.
இந்த கருத்தையே 2:26 வசனத்தில் அல்லாஹு தஆலா நமக்கு உணர்த்துகிறான்.
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil