குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 !

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Jan 23, 2019 Viewers: 2061


குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 !


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்….

குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள்…!

நமது இந்தியாவில் முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுக்களை பல நல்ல மக்களும் சரியானவை என்று நம்புகிறார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் எதிரிகளால் கடுமையாக தாக்கப்படும் போது பிற மதத்தை சேர்ந்த நல்ல மக்களும் முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்கு முன்வருவதில்லை.எனவே குற்றம் சாட்டுபவர்களும் அதனை நம்பக்கூடியவர்களும் தெளிவு பெறுவதற்காக குற்றச்சாட்டுக்களுக்கான பதிலையும் சரியான விளக்கத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்.

குற்றச்சாட்டு : 1 
முஸ்லிம்கள் நம் இந்திய தேசத்தின் தாய் மதமான இந்து மதத்தை விட்டு விட்டு அந்நிய தேச மதமான இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்

பதில் : 1 
இந்த குற்றச்சாட்டுதான் முஸ்லிம்களின் எதிரிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்களிலேயே முதன்மையானது. இதற்கு அந்த எதிரிகள் தெளிவு பெற்றுவிட்டால் முஸ்லிம்களோடு விரோதம் கொள்ள மாட்டார்கள்.

இக்குற்றச்சாட்டுக்கு முஸ்லிம்கள் தரப்பு பதில் மற்றும் விளக்கம்
உண்மையில் முஸ்லிம்கள்தான் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையை ஏற்று நடப்பவர்கள். இந்துக்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் இந்து மதத்தில் இடைச்செருகல் செய்யப்பட்ட தவறான கொள்கையை பின்பற்றுகிறார்கள்.

அதாவது இந்து மதத்தின் உண்மையான இறைநம்பிக்கைதெய்வம் எனபது எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே. அவனை மட்டுமே வணங்க வேண்டும்என்பதே. இதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கையும்

இந்து மதத்தில் வேத நூல்களிலும் புனித நூல்களிலும் ஒரே இறைவன்தான் இருக்கிறான். அவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப் பட்டுள்ளது.

உதாரணத்துக்கு சில
மானோ ஹிம்ஜுஜ நிதாயஹ் ப்ருதிவ்யா
யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான
யவிசர் பஷ்ச்சந்தரா  ப்ருஹதீர் ஜஜான
கஸ்மை தேவாய ஹவிஷ விதமே
(
ரிக்வேதம்  10:121:9)
 
பொருள் : எவர் பூமியை உண்டாக்கினாரோ, அதுபோல் உண்மையை நியாயமாக்கி  வைத்து கொண்டு இருக்கும்  எவர்  தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ,எவர் நீரையும் பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ அந்த படைப்பாலனே நம்மை பரிபாளிகின்றான்.அதனால் அவனை மட்டுமே வழிபடுக!

ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே நன் நா நாங்தே கின்ஜான்” 
_
பிரம்ம சூத்திரம் 
பொருள் : இறைவன் ஒருவனே. இருவனில்லை. இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை.

சிலை உள்ளிட்ட எதையும் வணங்கக் கூடாது என்பதை பகவத் கீதை (7:20) இவ்வாறு கூறுகிறது: “எவரொருவர் பரம் பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்

இதே போன்றே திரு குர்ஆனில் ஏகனாகிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டுமென்று அதிகமான வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு திருக்குர்ஆனின் 112 வது அத்தியாயம்: “கூறுவீராக! இறைவன் ஒருவன். இறைவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெற்றெடுக்கவும் இல்லை; (எவராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை” 

மதத்தின் முக்கிய அம்சம் இறைவணக்கம் தான். அந்த விசயத்தில் இந்து மத வேதங்களின் கருத்தும் முஸ்லிம்களின் நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. அதனால் முஸ்லிம்கள் அந்நிய மதத்தை பின்பற்றுவதாக குற்றம் சாட்டுவது தவறு.

இப்போது, இந்து மத புனித புத்தகங்களில் பல தெய்வ வணக்கத்தை ஆமோதிக்கும் வசனங்களும் உள்ளன என்று கூறி மறுப்பு தெரிவிக்கலாம் சிலர்

இதற்கு நமது பதில், இந்து புனித நூல்களிலும் இந்துக்களிடமும் இப்போது இருக்கும் பலதெய்வ வழிபாடு இடை செருகலாக வந்ததுதான் என்பதே. இதற்கு நாம் பல ஆதாரங்களை காட்ட முடியும். ஆதாரங்கள்

1 _ ஓரிறை கொள்கை இந்து புனித நூல்கள் மட்டுமின்றி திருக்குர்ஆன், பைபிள் உள்ளிட்ட பிற வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, பைபிள் பழைய ஏற்ப்பாடு : இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (உபாகமம் 6 : 4 )

எல்லா வேதங்களும் ஓரிறை கொள்கையை ஒப்புக்கொண்ட பின்பு அப்படி ஒப்புக்கொண்ட வேதங்களில் சிலதில் அதற்கு முரணான கருத்தும் பதிவாகி இருந்தால் அந்த முரண்பட்ட கருத்துதான் இடைச்செருகல் எனபது தெளிவான விஷயம்.

2 _ இந்து மத புனித சட்ட நூலான மனுஸ்மிருதியில், சூத்திரர்கள் கீழ்ஜாதி என்றும் அவர்களுக்கு குற்றவியல் தண்டனையில் கடுமையான தண்டனைகளும் சொல்லப்பட்டுள்ளது

இந்துக்கள் எல்லோரும் (அல்லது பெரும்பாலானோர்) இந்த ஜாதி பாகுபாட்டை எதிர்கிறீர்கள். அப்படியானால் இந்து மத சட்ட புனித நூலிலேயே இடைச்செருகல்கள் உள்ளன என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இதே போல்தான் ஓரிறை கொள்கையிலும் உங்களிடம் இடைச்செருகல் ஏற்ப்பட்டுள்ளது.

3 _ இந்துக்களால் இந்தியாவில் தெய்வமென்று வணங்கப்படுபவை உலகத்தின் மிக பெரும்பாலான பகுதிகளில் அறியப்படவில்லை. உண்மையில் கடவுள்கள் என்றிருந்தால் அறியப்பட்டிருக்கும்

4 _ உலகின் வேறு பகுதிகளில் கடவுள்களாக நம்பப்படுபவர்களை (உதாரணத்துக்கு இயேசு நாதரை) இந்துக்கள் கடவுள்களாக ஏற்றுக்கொள்வதில்லை

இதற்குக்காரணம், மனிதர்கள் கடவுளாக ஆக முடியாது என்று இவர்களின் மனசாட்சி கூறுகிறது. எனவே இந்தியாவில் கடவுள்களாக பூஜிக்கப்படுபவர்கள்(மனிதர்களோ பிற படைப்புக்களோ) உங்களின் மனசாட்சிப்படியே கடவுள்கள் அல்ல.

5 _ “ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்ற முழக்கம் இந்துக்களே தங்களின் புனித நூலிலிருந்து (திருமந்திரம்) எடுத்துக்கூறும் கொள்கைதான்

ஒருவனே என்று அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பல தெய்வ நம்பிக்கை தவறு என்பதை தெளிவு படுத்துவதற்குத்தான். இதை ஏற்றுக் கொண்டதால்தான் இந்த வாசகத்தை வழிவழியாக சொல்லி வருகிறார்கள். எனவே இப்போது விட்டொழிக்க வேண்டியது இடைச்செருகலாக வந்த பல தெய்வ நம்பிக்கையைத்தான்.

6 _ “எல்லாம் வல்ல இறைவன்எனபது இந்துக்கள் சொல்லும் வாசகம். இறைவன்கள் என்று பன்மையாக சொல்லவில்லை

அந்த ஒரு இறைவனே ஆக்கவும் அழிக்கவும் செய்வதுடன் கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றையும் இன்னபிறவற்றையும் கொடுக்கவும் செய்கிறான் என்ற நம்பிக்கை இதில் வெளிப்படுகிறது. அதனால் அவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்ற கொள்கை இந்துக்களிடம் உள்ளது எனபது தெளிவாகிறது.

இதன்படி பார்த்தால் இந்தியாவின் பூர்வீகமான, உண்மையான இறைநம்பிக்கையை கைவிட்டு இடைசெறுகலாக வந்த அசத்தியமான நம்பிக்கையை கைக்கொண்டவர்கள் நீங்கள்தான்

எனவே மனிதர்களையும் மற்ற பொருட்களையும் எல்லாம் வல்ல இறைவனுக்கு இணையாக ஆக்கியதால் நீங்கள் மிகப்பெரும் குற்றவாளிகளாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த குற்றத்துக்கு நரக தண்டனை இருக்கிறது என்று இறைவன் தன் இறுதி வேதமான திருக்குர்ஆனில் எச்சரிக்கிறான். படியுங்கள்: எவன் இறைவனுக்கு இணை கற்ப்பிக்கிறானோ அவனுக்கு இறைவன் சொர்க்கத்தை தடை செய்துவிட்டான். அவன் ஒதுங்குமிடம் நரகமாகும். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (எவரும்) இல்லை. (திருக்குர்ஆன் 5 : 72 )

உங்களால் வணங்கப்படுபவர்கள் முற்காலத்தில் நல்லடியார்களாக வாழ்ந்திருக்கலாம். அதற்காக அவர்களை வணங்குவது கூடாது. ஏனென்றால் அவர்களும் இறைவனின் அடிமைகள்தான். அவர்கள் நல்லவர்களாக வாழ்ந்திருந்தால் தங்களை பிறர் வணங்குவதை விரும்பியிருக்க மாட்டார்கள். மறு உலகில் உங்களின் இந்த பாவச்செயலை அவர்கள் ஏற்க மாட்டார்கள். இறைவன் திருகுர்ஆனில் கூறுவது

(இறைவனாகிய) அவனைத் தவிர்த்து நீங்கள் எவர்களை பிரார்த்தித்து அழைக்கிறீர்களோ அவர்கள் ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவர்களை நீங்கள் அழைத்த போதிலும் உங்களது அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். (ஒருவேளை) அவர்கள் செவியேற்ற போதிலும் உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். மறுமையில் நீங்கள் (அவர்களை) இணை வைத்ததையும் நிராகரித்து விடுவார்கள். (35 : 13, 14)

ஆக இந்தியாவின் பூர்வீக மத நம்பிக்கையை மாற்றியதன் மூலம் நீங்கள்தான் குற்றவாளிகள். அப்படியிருக்கையில் முஸ்லிம்களாகிய எங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தவறு
இந்தியாவின் பூர்வீகமான கடவுள் நம்பிக்கையை கொண்டவர்களுக்குத்தான் இந்தியாவின் மீது அதிக உரிமை

இருக்கிறது என்று சொன்னால் அந்த அதிக உரிமை எங்களுக்கு உரியதே தவிர உங்களுக்கல்ல! (தொடரும் இறைவன் நாடினால் _ குற்றச்சாட்டுகளும் பதில்களும்)

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil