சட்டங்கள் | வணக்க வழிபாடுகள் by பஷீர் பிர்தவ்ஸி On Apr 06, 2020 Viewers: 3588 0
“உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த்த தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும். இன்னும் அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.” அல்குர்ஆன் 3:140
இத்தகைய நிலைகளை அல்லாஹ் மனிதனை சோதிப்பதற்காக மாறிமாறி வரச் செய்கிறான். வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு போன்றதுதான் நமது நம்பிக்கையும். அதிலும் ஏற்றத்தாழ்வு நிகழ்வது வாடிக்கைதான். எல்லா காலத்திலும் நேரத்திலும் சீரான ஈமானுடன் இருப்பது மனிதனுக்கு இயலாத காரியம். எனவே தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
“ஆடை இற்றுப் போய்விடுவதைப் போன்று உங்களின் உள்ளங்களில் இருக்கும் ஈமானும் இற்றுப் போய்விடும். எனவே உங்களின் உள்ளங்களில் இருக்கும் ஈமானை புதுப்பிப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள்.” அறிவிப்பாளர்: அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்தத்ரகுல் ஹாகிம் 5.
நமது ஈமானை புதுப்பித்துக் கொள்வதற்காக நமக்கு வழங்கப்பட்ட மிகச் சரியான வாய்ப்பு தான் ரமலான் என்பது.
நாம் நமது ஈமானையும் அமலையும் சீராக்கிக் கொள்வதற்காகத் தான் அல்லாஹ், சுவனத்தின் வாசலை திறந்து வைத்து நரகத்தின் வாசலை மூடி விடுகிறான். இன்னும் மனிதனின் எதிரியும் அவனது அமல்களை பாழாக்கக் கூடியவனுமான ஷைத்தானுக்கு விலங்கிடுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமலான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டுவிடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். நூல்: ஸஹீஹுல் புகாரி 3277.
இத்தகைய அழகான வாய்ப்புகள் ஒருங்கப் பெற்றிருப்பதால் நமது ஈமானை மெருகேற்ற ரமழான் மிகச் சிறந்த காலகட்டமாக உள்ளது. அதே போன்று, ரமலானில் நாம் நிறைவேற்றக் கூடிய அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் ஈமானுடன் அந்த அமல்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காக மார்க்கம் நிபந்தனை விதித்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: ஸஹீஹுல் புகாரி 37
“நம்பிக்கைக் கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.” என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். நூல்: ஸஹீஹுல் புகாரி 38
ரமலானில் நாம் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்காக பகல் பொழுதில் நோன்பு நோற்கிறோம். அல்லாஹ்வின் மன்னிப்பை பெறுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இரவு வணக்கங்களில் மூழ்கிவிடுகிறோம். இன்னும் அவனது நேரான வழியை தெளிவுபடுத்தக் கூடிய சங்கைமிக்க வேதத்தை இரவிலும் பகலிலும் படித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு வேண்டி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கொடுக்கிறோம். இவ்வாறு நாம் நம்முடைய ஈமானை வலுப்படுத்தி, வரக்கூடிய காலத்திற்காக தயார் ஆக வேண்டும். அதற்காக இந்த ரமலானை ஈமானோடு எதிர்கொண்டு உரமூட்டுவோம்.