ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Apr 12, 2020 Viewers: 1824 0
” அந்நியரை பின்பற்றுகிறீர்கள் “
இந்த தொடரின் முதல்
பகுதியில் இந்த இந்திய நாட்டின் பூர்வீக மதத்தை விட்டு விட்டு வெளிநாட்டில்
தோன்றிய மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும்
குற்றச்சாட்டுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்த்தோம்.இந்த இரண்டாம்
பகுதியில் நம்மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டையும் அதற்கான மறுப்பையும்
விளக்கத்தையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம்கள்மீது
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மற்றொன்று “முஸ்லிம்கள்
அந்நிய இனமாகிய அரபு இனத்தைச் சேர்ந்த மத வழிகாட்டியை (முஹம்மத் நபி(ஸல்) அவர்களை)
பின்பற்றுகிறார்கள்” என்பதாகும்.
இந்த குற்றச்சாட்டுக்கு
பதிலளிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த குற்றச்சாட்டை
சுமத்துபவர்களுக்கு இந்த குற்றச்சாட்டை சொல்ல தகுதி இல்லை. ஏனென்றால் அவர்களே
அந்நிய தேசத்து இனத்தை சேர்ந்தவர்களைத்தான் மத வழிகாட்டிகளாக வைத்திருக்கிறார்கள்.
அதாவது இந்துக்கள் எல்லாம்
ஆரியர்களை தான் தங்களின் மத வழிகாட்டிகளாக, குருக்களாக, கடவுளிடம் தங்களுக்காக
பிரார்த்தித்து வாங்கித்தரும் இடைத்தரகர்களாக
வைத்திருக்கிறார்கள். ஆரியர்கள் மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள்
அங்கிருந்து படையெடுத்து வந்து நம் நாட்டின் மீது போர்தொடுத்து நம் மக்களை அடிமை
படுத்தியவர்கள்.
அப்படிப்பட்டவர்களை
வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்து அன்னிய வழிகாட்டியை பின்பற்றுவதாக
சொல்வது உங்களின் முரண்பாட்டுக்கு பெரிய ஆதாரமாகும்.
இப்போது உங்களின் தவறான
குற்றச்சாட்டுக்கு சரியான பதிலை தருகிறோம் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
முஹம்மது (ஸல்) அவர்கள் ,”எல்லாம் வல்ல இறைவன்
ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் சிலைகள் உட்பட இறைவனால் படைக்கப்பட்ட எதனையும்
வணங்கக் கூடாது” என்றும் “இவ்வாறு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது
மனிதர்களால் மதத்தில் இடைசெருகலாக ஏற்பட்ட பெரும்பாவம்” என்றும் மக்களுக்கு
போதித்தார்.
நபியவர்களின் போதனையை
கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் அறிவை பயன்படுதி சிந்திக்கும்போது அவர்கள் போதித்த
கொள்கை சத்தியமானது என்பதை அறிந்து கொள்கிறோம்.
அத்துடன் நம் இந்திய தேசத்தின் பூர்வீக மத நம்பிக்கையும்
எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதுதான். இந்தக் கொள்கை நம்
நாட்டின் பழைய வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. (இதற்கான ஆதாரங்கள் இந்த தொடரின்
முதல் பகுதியில் எழுதப்பட்டுள்ளன.)
முஹம்மது (ஸல்) அவர்களின்
போதனை சத்தியமானது, நம்நாட்டின் வேதங்களில்
சொல்லப்பட்ட கருத்து இதுதான் என்பதை தெரிந்தும்அவர்கள் அரபு காரர் என்று காரணம்
கூறி ஏற்க மறுப்பது பெரும் தவறாகும். சொற்ப கால உலக ஆதாயத்துக்கு பயன்படக்கூடிய
புதிய கண்டுபிடிப்புகளை அந்நிய இனத்துக்காரர்கள் கண்டுபிடித்து தந்தால் எடுத்துக்
கொள்கிறோம்.
உண்மையையும்
நன்மையையும் அந்நிய இனத்துக்காரர் சொன்னால் எடுத்துக் கொள்ளக் கூடாதா? எடுத்துக் கொள்ளக் கூடாது என்றால் அந்நிய
ஆரியர் மொழியான சமஸ்கிருதத்தில் உள்ள மத வழிகாட்டு நூல்களையும் எடுத்துக்கொள்ளக்
கூடாதுதானே (இந்த நூல்கள் இடைச் செயல்களுக்கும் ஆளாகியுள்ளன ).
முஹம்மது (ஸல்) அவர்கள்
தனக்கு இறைவனிடமிருந்து வேதம் அறிவிக்கப்படுகிறது. அந்த இறைச் செய்தியை மக்களிடம்
சேர்க்கும் பணியை செய்வதால், தான் ஒரு இறைதூதர் என்று
சொன்னார். அதோடு தனக்கு முன்னர் மனித சமுதாயத்தில் தன்னை போல் பல தூதர்கள்
இருந்திருக்கிறார்கள் அவர்களின் பாதையில்தான் நானும் செல்கிறேன் என்றார். இதை
ஏற்று நம்பிக்கை கொள்வது இந்து மதத்துக்கோ பிற மதங்களுக்கோ எதிரான நம்பிக்கை அல்ல.
இந்து மதத்தில் உள்ள
வேதங்களை இறைவனே நேரடியாக பூமிக்கு இறங்கி வந்து மக்களைக் கூட்டி வைத்து கொடுத்து
விட்டு போனதாக நீங்களும் நம்பவில்லை. இறைவனால் ஒரு நல்ல அடியாருக்கு
அறிவிக்கப்பட்டு அந்த ஒருவர் தான்மக்களிடம் சேர்த்தார் என்பது தான் நீங்களும்
கொண்டுள்ள நம்பிக்கை
இந்தியாவில் மட்டும்தான்
கடவுள் வேதத்தை இறக்குவானா? அதுவும் சமஸ்கிருத
மொழியில் மட்டும் தான் கொடுப்பானா?
நீங்கள்
சொல்லும் எல்லாம் வல்ல இறைவன் இந்தியாவை மட்டும்தான் படைத்தானா? மற்ற பகுதிகளையும் பிற மொழிகளையும் அவன்
படைக்கவில்லையா? அல்லது அவன் தன்
படைப்புகளுக்கு அநியாயம் செய்பவனா?
இல்லை! நீங்கள்தான் அநியாய
சிந்தனையுடன் இருக்கிறீர்கள் அதனால்தான் மொழியையும் பிரதேசத்தையும் காரணம் காட்டி
உண்மையை ஏற்க மறுக்கிறீர்கள்.
இறை வேதம் கொடுக்கப்பட்டு உலக மக்கள் அனைவரையும் வழிநடத்த
வரும் இறுதி தீர்க்கதரிசி பற்றி பழைய வேதங்கள் பலவற்றிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்து மத நூல்களிலும் முன்னறிவிப்பு உள்ளது. அந்த முன்னறிவிப்பு எல்லாம் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கே பொருந்துகின்றன.
உதாரணத்துக்கு
பவிஷ்ய புராணத்தில் முஹம்மது (ஸல் ) அவர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது : –
ஒரு அந்நிய பாஷையை சார்ந்தவர் தனது சீடர்களோடு வருவார், அவர் பெயர் முஹம்தம், அவர் பாலை வனப் பகுதியை சேர்ந்தவர், விருத்தசேதனம் செய்து இருப்பார் தலையில்
குடுமி இருக்காது ,முகத்தில் தாடி இருக்கும் , சப்தமிட்டு ( தொழுகைக்கு ) அழைப்பார் சைவம்
மற்றும் அசைவம் உண்பார்.
இங்கு சொல்லப்படும் எல்லா அடையாளங்களும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துவதை பார்க்கிறோம்.
அதேபோல் இந்து மதத்தில்
இறுதி அவதாரமாக கல்கி என்பவர் வருவார் என்ற நம்பிக்கை உண்டு கடவுள் மனிதராக
அவதாரம் எடுப்பதில்லை மனிதர்களில் சிறந்த ஒருவரையே இறைவன் தேர்வு செய்து
வழிகாட்டியாக ஆக்குகிறான் இந்த கல்கி பற்றிய விவரங்கள் இந்துக்களிடம் உள்ள பாகவத
புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அதில், அவர் ‘ சம்பாலா
‘ எனும் நகரில் தோன்றுவார்
என குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு ‘
சாந்தி
‘ நகரம் என்பது பொருள்.
நபியவர்கள் பிறந்த மக்கா நகருக்கு அமைதி நகரம் என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
மேலும் அதில் கல்கியின் தந்தை பெயர் ‘ விஷ்ணுயாஸ்
‘ -கடவுளின் அடிமை என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.நபியின் தந்தை பெயர் அப்துல்லாஹ் இறைவனின் அடிமை என்பதாகும்
அத்துடன் கல்கி பிறக்கும் குடும்பத்தின் தலைவர் அனைத்தும் அறிந்தவராக இருப்பார்
என்று கூறப்பட்டுள்ளது நபிகள் நாயகம் பிறந்த அந்த குடும்பத்தின் தலைவர் அவர்களின்
பாட்டனார் பெரிய அறிவாளியாகவும் ஊர் தலைவராகவும் இருந்தார்.
பாகவத புராணத்தில்
கூறப்படும் கல்கியின் அடையாளங்கள் எல்லாம் முஹம்மது நபிக்கு அப்படியே
பொருந்துகிறது. இந்த ரீதியில் பார்க்கும்போது இந்துமதத்தின் வழிகாட்டுதல் படி
முஹம்மது (ஸல் ) அவர்களை இறைவனின் தூதர் என்று ஏற்றே ஆகவேண்டும். இந்து மத
அறிஞர்கள் பலரும் இக்கருத்தைக் கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் ‘ பண்டித் வைத் பிரகாஷ்’ . இவர்” பிரபஞ்ச
இறை தூதின் வழிகாட்டி” எனும் நூலில் இந்து
மதத்தில் கல்கி அவதாரம் என்று சொல்லப்படுபவர் முஹம்மது நபி தான் என்று
நிறுவியிருக்கிறார். ( சமவுரிமை, டிசம்பர் -2016 )
இந்து
மதத்தின் வேதங்களை கற்றறிந்த பிராமணர்கள் இந்தக்கருத்தை சொல்கிறார்கள். அவர்களில்
சிலர் இஸ்லாத்தை ஏற்றுமிருக்கிரார்கள்.
முஹம்மது நபியவர்கள் தான்
அகில மக்களுக்கெல்லாம் இறைத்தூதராக வந்திருப்பதாக கூறியதோடு மக்களிடம் தனது
கொள்கையை கொண்டு சேர்க்கவும் செய்தார்கள். அதனால்தான் உலகம் முழுவதும் அவர்களின்
மார்க்கம் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தியாவில் இந்துக்களாக வாழ்ந்து
கொண்டிருந்த நாங்களும் கடவுளின் இறுதித் தூதரின் போதனையை ஏற்று
முஸ்லிம்களாகியிருக்கிறோம்.
இன்று
அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனும் அவர்கள் கூறிய போதனைகளும் தான் மற்ற எல்லா
வேதங்களை விடவும் மற்றவர்களின் போதனைகளை விடவும் உயிரோட்டத்துடன் பின்பற்றப்பட்டு
கொண்டிருக்கின்றன.
ஆக முஹம்மது (ஸல் )
அவர்கள் போதித்த மார்க்கம் உண்மையானது, நன்மையானது.
அவர்கள் தான் இறுதி இறைதூதர் என இந்து மத நூல்களிலும் முன்னறிவிப்புச்
செய்யப்பட்டவர். இதை நன்றாக தெரிந்து கொண்டே ஏற்க மறுப்பது தான் குற்றம். இந்தக்
குற்றத்தை நீங்கள் செய்து கொண்டு இறைவனின் பாதையில் சரியாக செல்லும் எங்களை நோக்கி
குற்றச்சாட்டுகளை வைப்பது நியாயமா ?
தொடரும் இன்ஷா அல்லாஹ்……