உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Aug 20, 2017 Viewers: 2751


உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1

உள்ளங்களை வெல்வோம்!

நாம் ஒவ்வொருவரும் பிறர் நம்மை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விருப்பம் சரியானதே! நம்மை நேசிப்பவர்கள் இருப்பது நமக்கு நன்மையானதாகும். நான் நன்மை என்று கூறுவது உலக நன்மை, மறுமை நன்மை இரண்டையும்தான்.உலக நன்மை என்பது தேவைகளை நிறைவேற்றித் தருவது, நெருக்கடிகளின் போது துணை நிற்பது. மறுமை நன்மை என்பது நாம் மறக்கும் இறைக்கடமைகளை நினவூட்டுவது, மார்க்கத்தை நிலைநாட்டுவதில் ஒத்துழைப்பது, நாம் வாழும் போதும் மரணித்த பின்பும் நமக்காக அவர்கள் பிரார்த்திப்பது.

நம்மீது பிரியம் கொண்டவர்களால் நமக்கு ஈருலக நன்மையும் கிடைக்கிறது எனும் போது அவர்களின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாயிருக்கிறதோ அவ்வளக்கவ்வளவு பலனும் அதிகமாகும். அப்படியானால் நம்மை விரும்பக்கூடியவர்கள் நூறு பேர் இருப்பதை விட இரு நூறு பேர் இருந்தால் பலன் இரு மடங்கு, இருநூறு பேர் இருப்பதை விட இரண்டாயிரம் பேர் இருந்தால் பலன் பத்து மடங்கு! இவ்வுலக மறுவுலக நன்மைகளை நாம் அதிகமாக அடைவதற்கு காரணமாக அமையும் நேசிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது அவசியம்தானே!மனிதர்கள் நம்முடன் விருப்பத்துடன் சேர்ந்திருப்பது அல்லாஹ்வின் ஓர் அருள். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்!
அல்லாஹ்வின் அருளால் நீர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர்; நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும்  இருந்திருப்பீரானால் அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். (அல் குர்ஆன் 3:159)

ஆகவே நாம் அதிகமான மக்களின் அன்பை பெற வேண்டும். மனிதர்களின் அன்பைப் பெற அவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களைக் கவர வேண்டும்! மனங்களைக் கவர்வதற்கான வழிகள் எவை? அவற்றைத்தான் இத்தொடரில் பார்க்கப் போகிறோம் இன்ஷா அல்லாஹ்

புன்னகை!

மனங்களை கொள்ளையடிக்க முதன்மையான சாதனம் புன்னகை! ஒருவரைப் பார்த்து புன்னகைப்பதன் மூலம் அவருக்கு நாம் சொல்லும் செய்தி உன்னை சந்திப்பதில் நான் மகிழ்ச்சிடைகிறேன்; உன்னை மதிக்கிறேன். இதைத் தெரிவிப்பதால் அவருக்கு நாம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறோம். மகிழ்ச்சியை கொடுப்பதும் தர்மம் தான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உன் சகோதரனின் முகத்தை நோக்கி நீ புன்னகைப்பது தர்மமாகும். (திர்மதி 1956)

எதையும் இழக்காமல் தர்மத்தின் நன்மையை அடைந்து விடுகிறோம். அத்துடன் நம் புன்னகையை பெற்றவரின் பிரியத்தையும் அடைகிறோம். இந்த இரண்டு நன்மைகளும் நமக்கு தேவையானதல்லவா?

புன்னகை அரசர்

எல்லா நன்மைகளுக்கும் முன்மாதிரியான இறைத்தூதர் அவர்கள் புன்னகையால் மனங்களை ஈர்க்கும் நன்னடத்தைக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்கள். நபித்தோழர் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் இஸ்லாத்தை

தழுவியதில் இருந்து (நான் நபியவர்களை சந்திக்க அனுமதி கேட்ட எந்த சமயத்திலும்) என்னை தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தை பார்த்ததில்லை. புகாரி 6089

இச்செய்தி நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் பிற்காலத்தில் ஜரீர் (ரழி) அவர்களால் சொல்லிக்காட்டப்படுகிறது. அப்படியானால் நபியின் புன்னகையின் தாக்கம் எந்தளவிற்கு இருந்துள்ளது என்பதை புரிய முடிகிறதல்லவா?

ஜரீர் (ரழி) அவர்களிடம் மட்டுமல்ல பொதுவாகவே நபியவர்கள் எல்லோரிடமும் எப்போதும் புன்னகை பூத்தவர்களாகவே காட்சி தருவார்கள். இதோ அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் சொல்வதைக் கேட்போம்:

இறைத் தூதர் (ஸல்) அவர்களை விட மிக அதிகமாக புன்னகைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. திர்மிதி 3641

மனித மனங்களில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்,  தன்னோடு தொடர்பு கொண்டவர்கள் அனைவரின் கருத்துக்களையும் ஈர்த்தவர் நபிகள் நாயகம்(ஸல்). அவர்களின் நடைமுறை நடைமுறை எதுவோ அதுதானே நமது வழிமுறையாகவும் இருக்க வேண்டும்.

பிறரை சந்திக்கும் போது முகமலர்ச்சியுடன் சந்திக்க வேண்டும். தெரிந்தவர் ஒருவரை பாதையில் எதிர்கொள்ளும்போது முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் கடந்து செல்வது நல்ல பண்பல்ல. நம்மைப் பார்க்கும் ஒருவர் முகத்தில் எந்த மாற்றத்தையும் வெளிப்படுத்தாமல் உம்மென்று போனால் நமக்கு அது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இப்படித்தான் நம் விஷயத்தில் பிறரது

நிலையும்!இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு நல்ல காரியமும் தர்மமாகும். உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும், உன் வாளியில் உள்ளதை உன் சகோதரனின் பாத்திரத்தில் ஊற்றுவதும் நல்ல காரியத்தில் உள்ளவையாகும். (திர்மிதி 1970)

எந்த செலவும் சிரமமும் இல்லாமல் செய்யும் நல்ல காரியத்தை செய்யாமலிருப்பது பெரும் குறையல்லவா? உங்களின் மலர்ந்த முகம் பிறருக்கு மகிழ்ச்சியூட்டும்; வெறுமை முகம் வெறுப்பூட்டும். நீங்கள் எதை ஊட்ட விரும்புகிறீர்கள்?

பேரறிஞர் லுக்மான் (அலை) அவர்களின் தத்துவத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: என்னருமை மகனே! உன் முகம்  மலர்ச்சியானதாயிருக்கட்டும்; உன் வார்த்தை நல்லதாயிருக்கட்டும். கொடை எதுவும் கொடுக்காமலேயே மக்களுக்கு மிகப் பிரியமானவனாக ஆவாய். (நூல் : ரவ்ளத்துல் உகலாஃ நுஸ்றதுல் ஃபுளலாஃ)

புன்னகையையும் முக மலர்ச்சியையும் கொண்டவருக்கு என்ன கிடைக்கும்? கடுகடுப்பாயிருப்பவருக்கு என்ன கிடைக்கும்? இதனை ஓர் அரபுக் கவிதை அடி இப்படிக் கூறுகிறது:
முக மலர்ச்சிக்காரர் தனது முக மலர்ச்சியின் நன்மையினால் சிக்கப்படுவார்.

கடுகடுப்பு கொண்டவர் பிறரின் வெறுப்பினை இழக்கவே மாட்டார்!
நூல் : ரவ்ளத்துல் உகலாஃ

நாம் எப்படி இருக்க வேண்டும் நேசிக்கப்படுபவராகத்தானே?

கோபத்திலும் புன்னகை

கோபம் ஏற்பட்டால் முகத்தில் கடுமைதான் வெளிப்படும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கோபப்படுகிற நேரத்திலும் புன்னகையுடன் கோபத்தை காட்டியிருக்கிறார்கள். நபியுடன் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளச் செல்லாத கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் நபியவர்களை சந்திக்கச் சென்ற போது நபியவர்களின் முகம் எவ்வாறிருந்தது என்பதை கஅப் (ரழி) அவர்களே இவ்வாறு கூறுகிறார்கள்:

நபியவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போன்று புன்னகைத்தார்கள்.

(புகாரி 4418)

நபி (ஸல்) அவர்கள் தன் தோழர் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அப்போதும் கூட அவர்களின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. அது அந்தத் தோழரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் பலகாலம் கழித்தும் கூட அப்போது நடைபெற்ற பல சோதனையான நிகழ்வுகளை விரிவாக சொல்லிக் காட்டும் கஅப் (ரழி) அவர்கள் நபியின் இந்த கோபப் புன்னகை யையும் மறக்காமல் கூறுகிறார்கள். (இந்த சம்பவத்தை புகாரியில் முழுமையாக படிக்கவும்.) புன்னகை மூலம் நாம் மனங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறோம். இந்த தாக்கத்துக்குள்ளான மனங்கள் நம்மை நேசிக்கின்றன. மக்களின் நேசம் ஓர் இறையருள்.

மனங்களைக் கவரத் தேவை பொன் நகை அல்ல!, புன்னகையே!

சரி! அதுக்காக ரொம்ப பல்லைக் காட்டாதீர்கள்.

நேசம் தோடரும்[ ‘சமூக நீதி முரசு ஆகஸ்ட்.2017 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ]

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil