ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Jan 09, 2014 Viewers: 2516 0
பரக்கத்தை இழந்த ரஹ்மத்...!
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் தமிழில் வெளிவராதது தமிழ் மக்களுக்கு - குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது.
அல்லாஹுவின் கிருபையால் முஸ்தஃபா-தமீம் ஆகிய இரு சகோதரர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளை மூலம், ஹதீஸ் நூல்களில் முதன்மையான புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்கள் தமிழில் வெளிவந்தன.
இன்று ஒரு பாமர முஸ்லிம் கூட மார்க்கத்தின் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டு இது புகாரியில் இருக்கிறது என்று கூறுகிற நிலை ஏற்ப்பட்டிருக்கிறது. இது இந்நிறுவனத்தால் கிடைத்த மிகப் பெரிய பலன். இதற்காக தமிழ் முஸ்லிம் சமூகம் இந்நிறுவனத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
ஆனாலும் இந்நிறுவனத்தின் இப்போதைய நிலை நம்மை வருத்தமடையச் செய்கிறது. ஏனெனில் இவர்களின் இப்பணியில் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களின் தமிழாக்கம் வெளிவந்த காலகட்டத்துடன் ஒப்பிட்டால் சுனனுத்திர்மிதியின் முழுமையான தமிழாக்கமும், முக்தஸர் தஃப்சீர் இப்னு கஸீரின் முழுமையான தமிழாக்கமும் வெளிவந்திருக்க வேண்டும், வெளிவரவில்லை!. என்ன ஆயிற்று?
இளையவர் தமீம் அவர்கள், ரஹ்மத் பப்ளிகேஷன் என்ற பெயரில் இதே நற்பணிக்காக தனி நிறுவனம் ஆரம்பித்தார்கள். மார்க்கக் கல்வி ஆர்வலர்களிடத்தில் இனி நிறைய ஹதீஸ் நூல்களை தமிழில் படிக்கலாம் என்ற ஆவல் ஏற்ப்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் சுனன் நசயீ தமிழாக்கத்தின் முதல் பாகமும் முஸ்னது அஹ்மத் தமிழாக்கத்தின் முதல் பாகமும் இந்த நிறுவனத்தின் மூலம் வெளிவந்தன.
ஆனால் அடுத்த பாகங்களைக் காணோம். உண்மை என்னவெனில் இந்நிறுவனம் ஆரம்பித்து இத்தனை வருடத்தில் சுனனுன் நசயீயின் தமிழாக்கம் முழுமையாக வெளிவந்திருக்க வேண்டும். முஸ்னது அஹ்மதின் ஐந்து பாகங்களாவது வெளிவந்திருக்க வேண்டும். வெளிவரவில்லை!. என்ன பிரச்சனை?
இச்சிறந்த பணியில் தொய்வு ஏற்ப்பட்டதற்க்கு முக்கிய காரணம் ஒரு பணி நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பணியை இடையில் ஆரம்பித்து கலந்து செய்வது. உதாரணத்திற்கு, திர்மிதி மொழிபெயர்ப்புப் பணி நடந்து கொண்டிருக்கும் போது முன்னர் வெளிவந்த புகாரியை சரிபார்த்து அடிக்குறிப்பு எழுதும் பணியை நுளைத்ததைக் குறிப்பிடலாம். (இது ரஹ்மத் பதிப்பகத்தில் நடந்தது) அதுபோல் நசயீ பணி நடந்து கொண்டிருக்கும் போது அஹ்மத் பணியை எடுத்துக்கொண்டதையும் குறிப்பிடலாம். (இது ரஹ்மத் பப்ளிகேஷனில் நடந்தது).
மொழிபெயர்ப்பு மேலாய்வாளர் என்ற பொறுப்பில் சம அந்தஸ்தில் இருவரை நியமிப்பது, மற்ற நிறுவனத்திற்கு வெறுப்பேற்றும் விதத்தில் அங்கிருப்பவரை இங்கே இழுப்பது போன்ற நிர்வாக குளறுபடியின் அடையாளங்கள்.
அதுபோல் நிறுவனத்தின் மூலம் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நூலை விரைந்து வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு நிறுவனத்திற்கு வெளியே வேறு நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்ச்சியில் இறங்குவது. அதனால் இரண்டுமே சரியான நேரத்தில் வெளிவராமல் தாமதமாகிக் கொண்டிருப்பது நிதர்சனம்.
இக்குறைகள் போல் வேறு குறைகளும் இருக்கலாம்.
ஆகவே, குறைகளைச் சரி செய்யுங்கள், முறையாகத் திட்டமிடுங்கள். ஒவ்வொரு நூலும் (அல்லது பாகமும்) வெளிவரவேண்டிய கால அளவை முன்கூட்டியே வரையருங்கள்! அல்லாஹு நர்ப்பயனை பரக்கத்தாக வழங்குவான் - இன்ஷா அல்லாஹ்!
நாம் எழுதியிருப்பது குறை கூறுவதற்க்கல்ல. நற்ப்பணி நிறைவாக நடைபெற வேண்டுமென்பதற்காகவே! அல்லாஹு போதுமானவன்.
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil