ஆய்வுகள் | ஹதீஸ் by அபூ அக்மல் On Feb 21, 2021 Viewers: 2114 0
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபசகுனம் என்பது பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான்!
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) நூல்: புகாரீ (5093), முஸ்லிம் (4478).
இந்த ஹதீஸை படிக்கும் போது வேறு நபிமொழிகளில் அபசகுனம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதற்கு (புகாரி 5776, முஸ்லிம் 4473) மாற்றமாக உள்ளதே என்ற கேள்வி எழுகின்றது. அத்துடன் மூடநம்பிக்கையை அங்கீகரிக்கும் விதத்தில் இருப்பதாக ஐயமும் ஏற்படுகிறது. இந்த ஹதீஸின் செய்தியை சார்ந்து வரக்கூடிய ஹதீஸ்களையும் நாம் இணைத்துப் பார்க்கும் போது இந்த ஹதீஸின் கருத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
முதலில் ஒரு அடிப்படையான விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் மார்க்கத்தில் சகுனம், பீடை என்பன போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவ்வாறான நம்பிக்கைகள் கூடாது. தொற்று நோய் கிடையாது, பறவை சகுணம் ஏதும் கிடையாது, ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது. இது நபிமொழி (புகாரி 5757, முஸ்லிம் 4465)
இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த நபிமொழியில் பறவை சகுனம் என்று மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் அரபு மூலத்தில் இடம்பெறும் தியரா என்ற சொல்லும் அதிலிருந்து உருவாகும் வார்த்தைகளும் துர்ச்சகுனம், அபசகுனம் என்ற கருத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு திருக்குர்ஆனின் 36:18, 19 வசனங்களையும் மற்றும் 7:31, 27:47 ஆகிய வசனங்களையும் பார்வையிடவும்.
மேலும், துர்ச்சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
(அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா)
இப்படியிருக்கையில் அபசகுனம் மூன்றில் இருப்பதாக சொல்லும் ஹதீஸை எவ்வாறு புரிவது?
பொதுவாக துர்ச்சகுனம் என்று கூறப்படுவது மனிதருக்கு தீங்கையும், பாதிப்பையும் உள்ளடக்கி இருப்பதாகும். அதற்கு மனிதர் அறிந்துகொள்ளக்கூடிய வெளிப்படையான காரணம் எதுவும் இருக்காது. பூனை குறுக்கே சென்றால் காரியம் கைகூடாது என்று நம்புவது, விதவைப் பெண் எதிரில் வந்தால் காரியம் நலமாக நடக்காது என்று நம்புவது போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இதுபோன்ற மூடநம்பிக்கையாக அமைந்துள்ள சகுனத்திற்கு ஒப்பான துர்ச்சகுனம் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் கூறவில்லை. மாறாக இந்த ஹதீஸில் சொல்லப்படும் மூன்றினாலும் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும் தொடர்ந்து தொல்லையாக இருந்து கொண்டிருப்பதால் நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
முதலாவதாக பெண் என்று மனைவி பற்றி கூறப்படுகிறது. மனைவி பிள்ளை பெற்றெடுக்கும் பாக்கியம் இல்லாதவளாகவும் அடாவடியாகப் பேசுபவளாகவும் சந்தேகம் ஏற்படும்படியாக நடந்து கொள்பவளாகவும் இருப்பது அவளிடம் உள்ள அபசகுனம். வீடு நெருக்கடியானதாக இருப்பதும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கெட்டவர்களாக இருப்பதும் அவர்களால் தொல்லை ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் அதிலுள்ள துர்ச் சகுனமாகும். குதிரை ஏறிச் செல்ல முடியாதபடி முரண்டு பிடிப்பது அதன் துர்ச்சகுனமாகும். சில அறிவிப்புகளில் குதிரை என்பற்கு பதிலாக வாகனம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி இக்காலத்தில் ஏறிச் செல்வதற்கு சிரமமாக இருப்பதும் அடிக்கடி பழுதாவதும் அதன் துர்ச்சகுனம் என்று கூறலாம்.
இதுபோன்ற விளக்கத்தை இமாம் நவவீ(ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிம் நூலின் விரிவுரையிலும் இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் தமது “மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா” நூலிலும் கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீஸுக்கு வேறு விதமாகவும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்த விளக்கமே மிகச் சரியான விளக்கமாகும்.
இந்த விளக்கம் சரிதான் என்பதை இதுபோன்ற செய்தியை கொண்ட வேறு ஹதீஸ்கள் மூலம் நாம் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அபசகுனம் எதிலேனும் இதுக்குமானால் வீட்டிலும், மனைவியிலும், குதிரையிலும் தான் இருக்கும்.
(புகாரி, 5094, முஸ்லிம் 4481, 4482, 4483)
இந்த ஹதீஸின் வாசகத்தை நாம் கவனிக்க வேண்டும். அபசகுனம் உண்டு என்றால் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அது இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட வேண்டும். இரண்டுமில்லாமல் நபியவர்கள் “இருக்குமானால்” என்று சொல்வதன் மூலம் ஒரு செய்தியை உணர்த்துகிறார்கள். அதாவது, அடிப்படையில் அபசகுனம் என்பது கிடையாது. அதே நேரத்தில் குறிப்பிட்ட இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றினால் இடையூறு இருக்குமென்றால் அது தொடர்ந்து நீடித்து தொல்லையாக இருந்து கொண்டிருக்கும். வெளிப்படையாக காரணம் தெரியும் கெடுதிக்கும் சகுனம், பீடை என்று சொல்லலாம் என்றால் இந்த மூன்றுக்கும் சொல்லலாம் என்பதே இந்த நபிமொழியின் செய்தி.
ஆக அபசகுனம் மூன்றில் உள்ளது என்பதற்கு நாம் கூறிய விளக்கம் சரி என்பதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. இந்த விளக்கம் சரி என்பதை தெளிவாக விளக்கும் மற்றொரு ஹதீஸை காணலாம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் சௌபாக்கியம் மூன்று. மனிதனின் துர்ப்பாக்கியம் மூன்று. மனிதனின் சௌபாக்கியம் நல்ல மனைவி, நல்ல இருப்பிடம், நல்ல வாகனம். மனிதனின் துர்ப்பாக்கியம் தீங்கான மனைவி, தீங்கான இருப்பிடம், தீங்கான வாகனம்.
அறிவிப்பாளர்: சஅத் பின் அபீ வக்காஸ்(ரலி)
நூல்: அஹ்மத் (1368)
நாம் விளக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள அதே மூன்று விஷயங்கள் தான் இந்த ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. நல்லதாக இருந்தால் சௌபாக்கியம். தீங்காகக இருந்தால் துர்ப்பாக்கியம். நல்லதாயிருப்பதையும் தீங்கானதாக இருப்பதையும் வெளிப்படையான காரணங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தீங்கானதாக இருந்தால் மனிதனுக்கு தொடர் துன்பமாக இருக்கும். அப்போது துர்ப்பாக்கியம் என்பதை துர்ச்சகுனம் அபசகுனம் என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
இந்த விளக்கம் சரி என்பதை வலுப்படுத்தும் மற்றொரு ஆதாரம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியது: துர்ச்சகுனம் இல்லை. சில சமயம் மூன்றிலே பாக்கியம் இருக்கும். அவை: மனைவி, குதிரை, வீடு!
(இப்னு மாஜா 1983)
அல்லாஹ்வே நன்கறிந்தவன்...