நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்)

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA, On Nov 21, 2021 Viewers: 989


நல்லவர்கள்தான். ஆனாலும் தவறு செய்கிறார்கள். தாம் செய்யும் தவறையும் உணர்வதில்லை. இவ்வாறான தவறுகள் குறித்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.

      இம்மாதத் தொடரில் சில நல்லவர்கள் தமது பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்காமலிருக்கும் தவறு குறித்து பார்ப்போம்.

                அல்லாஹ் குர்ஆனில், முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6) என்று கூறுகிறான்.

                இந்த வசனத்தில் ஒரு முஸ்லிம், தவறுகளிலிருந்து விலகி தன்னை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொண்டால் மட்டும் போதாது என்பது வலியுறுத்தப்படுகிறது. தவறுகளை விட்டு, தான் விலகியிருப்பது போல் தனது குடும்பத்தாரையும் விலகியிருக்கும்படிச் செய்ய வேண்டும்.

                இந்த வழிகாட்டுதலை முஸ்லிம்களாகிய நம்மில் எத்தனை பேர் செயல்படுத்துகிறோம்? என்ற கேள்வியை முன்வைத்தால் குறைவானவர்களே என்ற பதில்தான் கிடைக்கிறது.

                குடும்பத்தாரை நரகத்திலிருந்து காப்பாற்றுவது என்பதன் கருத்து என்ன?

                குடும்பத்தினருக்கென்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் மார்க்க அறிவைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். குறிப்பாக பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் அமர்ந்து குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ள கொள்கை விவரங்கள் ஏவல் விலக்கல்கள் பற்றி படித்து விளக்கங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

                பிள்ளைகள் குர்ஆன் மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்றாலும் வீட்டில் பெற்றோர் இந்த நடைமுறையையும் செயல்படுத்த வேண்டும். பொதுவாக சிறுவர் சிறுமியர் பதிமூன்று பதினான்கு வயதைத் தாண்டி குர்ஆன் மதரஸாவுக்குச் செல்வதில்லை.

அதன் பிறகும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மார்க்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவர்கள் பண்படுத்தப்படுவதற்கான தேவையும் உள்ளது. பெற்றவர்கள்தான் இதற்கெல்லாம் பொறுப்பாளிகள்.

                இந்த பொறுப்பு குறித்து பெற்றோர் பலர் கவனமில்லாமல் இருப்பதால் பல வாலிப வயது ஆண்களும் பெண்களும் மார்க்கத்துக்கு முரணான பாதையில் சென்று கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிலும் மார்க்க சேவை செய்யும் சிலரின் பிள்ளைகளும் கூட இப்படி இருக்கிறார்கள் என்பது கூடுதல் கவலைக்குரிய விஷயம்.

மலேசியா முதல் தமிழ்நாடு வரை!

                சமீபத்தில் சமூக ஊடகங்களில் வந்த ஒரு வீடியோவும் அதுபற்றிய செய்தியும் இந்த அவல நிலையை விளக்கும் ஒரு ஆதாரமாக இருக்கிறது. அந்த வீடியோவில் வரும் சினிமா பற்றிய பேட்டியில் ஒரு இளம் பெண் பதிலளிக்கிறார்.

                சமீபத்தில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தை சினிமா தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து மலேசியாவிலிருந்து வந்ததாக சொல்கிறார். (மலேசியாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லையாம்) சென்னையிலுள்ள ஒரு சிறு தியேட்டரை தனக்காகவும் தன் உறவினர்களுக்காகவும் புக்கிங் செய்து அவர்கள் மட்டுமே பார்த்ததாகவும் சொல்கிறார்.

   சினிமாவில் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. அதை பார்ப்பதே ஒரு தவறாக இருக்கும் போது அதற்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரம் செலவழித்து பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு?

      அது மட்டுமல்ல. அந்த தியேட்டருக்குள் நுழைந்ததும் படம் ஆரம்பிப்பதற்கு முன் அவரும் அவர் குடும்பத்தவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்ததாகவும் பூரிப்புடன் சொல்லிக்காட்டுகிறார்.

      இதையெல்லாம் விட பெரிய கொடுமை பேட்டி எடுப்பவர், அந்தப் படத்தின் கதா நாயகன் நடிகரை நேரில் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், முதலில் காலில் விழுந்து விடுவேன் என்று பதிலளிக்கிறார். என்ன அவலம் பாருங்கள். முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு மார்க்கத்தை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றிருக்கிறார்.

     இந்த வீடியோவுடன், இந்தப் பெண் முன்னால் ஹஜ் கமிட்டி தலைவரின் மகள் என்ற செய்தியும் சேர்ந்து வந்திருக்கிறது. இதுதான் நம்மை கூடுதலாக வருந்தச் செய்கிறது.

     இந்தப் பெண் சினிமா பைத்தியமாகவும் ஒரு நடிகரின் பித்து பிடித்த ரசிகையாகவும் இருப்பது அந்த நடிகரின் சினிமாவை தியேட்டரில் பார்க்கும் நோக்கத்தில் பல்லாயிரம் ரூபாயை செலவழித்து நாடுவிட்டு நாடு வருவது சினிமா தியேட்டரில் டான்ஸ் ஆடுவது இவற்றையெல்லாம் மார்க்கத்துக்கு முரணான காரியங்கள் என்று கண்டித்து விட்டு விடலாம்.

      ஆனால், தான் ரசிக்கும் அந்த நடிகரின் காலில் விழுவேன் என்று சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா? நம் மார்க்கத்தின் உயர்ந்த கொள்கைக்கே எதிரான செயலாயிற்றே!

      தாய், தந்தையர் காலிலோ எல்லா மனிதர்களுக்கும் தலைவரான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலிலோ கூட விழக்கூடாது என்று கடுமையாக தடுக்கப்பட்ட இணைவைத்தலுக்கு நிகரான ஒரு பாவத்தை ஒரு சினிமா நடிகனுக்குச் செய்வேன் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய கேடு?

     இந்தப் பெண்ணின் பேச்சு, செயல்பாடுகள் மூலம் இவர் நம் சத்திய மார்க்கத்தின் நல்ல நடைமுறைகளையும் கற்றுக் கொள்ளவில்லை, உயர்ந்த கொள்கைகளையும் தெரிந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

      ஆனால் இந்த மங்கையின் தந்தை சிறிது காலத்துக்கு முன்பு வரை ஹஜ் கமிட்டியின் தலைவராக இருந்தவர். ஹஜ் கமிட்டியின் தலைமை பொறுப்புக்கு ஒருவர் வருகிறார் என்றால் மார்க்கப் பற்றும் நல்ல காரியங்களில் ஆர்வமுள்ளவராகவும் தான் இருப்பார். இப்படிப்பட்டவரின் பிள்ளை இந்த நிலையில் இருக்கின்றது. இவர் மட்டும்தான் என்றில்லை, இவர்போன்ற பல நல்லவர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

       பிள்ளைகளை சத்திய இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். மார்க்கக் கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டாலும் பெற்றோரும் பிள்ளைகள் படித்ததை சரிபார்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.

       இக்காலத்தில் பெரும்பாலும் பதினான்கு வயதுக்குமேல் குர்ஆன் மதரஸா சென்று படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது.

     அதனால் மார்க்கக் கல்வியை கூடுதலாக கற்றுக் கொள்வதற்கு வீட்டில் மார்க¢கக் கல்வி சபை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் வளர்ந்து பெரியவராகும் போது தேவைப்படும் மார்க்க அறிவை கற்றுக்கொள்ள முடியும். இந்த கல்வி சபையில் பெற்றவர்களும் பங்கெடுக்க வேண்டும்.

     திருக்குர்ஆன் விளக்கம், ஹதீஸ் விளக்கம், இஸ்லாமிய கொள்கை மற்றும் சட்டத்திட்டங்கள் கொண்ட புத்தகங்கள் படிக்கப்பட வேண்டும். பெற்றவர்களுக்கு மார்க்கம் தெரியாவிட்டால் கூட பிள்ளைகள் படிப்பதை வைத்தாவது தெரிந்து கொள்ள வேண்டும்.      

      நம¢மைச் சுற்றி நடக்கும் மார்க்கத்துக்கு எதிரான காரியங்கள், சினிமா மற்றும் டிவிக்களில் பரப்பப்படும் சீர்கேடுகள் பற்றியெல்லாம் பிள்ளைகளிடம் தெளிவாகப் பேசி எச்சரிக்க வேண்டும்.

      இதற்கெல்லாம் பெற்றோர் நேரம் ஒதிக்கியே ஆக வேண்டும். குறிப்பாக தகப்பன்மார்கள் அவ்வப்போதாவது இதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். பொருட்செல்வம் முக்கியமென்றால் பிள்ளச் செல்வம் மிக முக்கியமானதல்லவா?

     என்னால் இயன்றவரை சீர்திருத்தத்தைத் தவிர்த்து வேறெதையும் நான் நாடவில்லை.

                        (அல்குர்ஆன் 11:88)


-மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA,