கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.?

கேள்வி & பதில் | by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA On Nov 21, 2021 Viewers: 534


கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில்நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.

                மறுமை நாளில் மக்களை எழுப்பி விசாரணை செய்யப்பட்ட பின்னர்தானே சொர்க்கம்நரகம் செல்வது நடைபெறும்! அவ்வாறிருக்க இந்த வசனத்தில் ஏன் இவ்வாறு கூறப்படுகிறது?

அ.காஜா நஜிமுத்தீன்,

8வது தெருஏர்வாடிநெல்லை.

                பதில்: பொதுவாக மறுமை நாளில் கேள்வி கணக்கு முடிந்த பிறகுதான் மனிதர்கள் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்ல முடியும். இது அநேக திருக்குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள விஷயம்தான்! ஆனாலும் அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டு மரணமடைந்தவர்களுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அதாவது அவர்களின் உயிர்கள் பறவைகளுக்குள் செலுத்தப்பட்டு சொர்க்கத்தில் வசித்து வருகின்றன.

இது குறித்த ஹதீஸ்

                மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடம், "(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்உணவளிக்கப் பெறுகின்றனர்" (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

                அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

                அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, "நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளதுநாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!" என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, "இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்" என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போதுஅவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3834.

    இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளபடி அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் மரணமடைந்தும் பறவையின் உடல் வாயிலாக சொர்க்கத்தில் வாழும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்பது தெரிகிறது.

     தாங்கள் குறிப்பிடும் திருக்குர்ஆனின் 36:26,27 வசனங்களில் கூறப்படும் நல்ல மனிதர் அக்காலத்தில் அனுப்பப்பட்டிருந்த இறைத்தூதர்களின் அழைப்பை ஏற்க வேண்டும் என்று தனது சமுதாயத்தவரிடம் பிரச்சாரம் செய்தார். அதனால் கொலை செய்யப்பட்டு மரணமடைந்ததும் சொர்க்கம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

                அவர் கொலை செய்யப்பட்டு மரணமடைந்தார் என்ற தகவல் இப்னு கஸீர் உள்ளிட்ட பல்வேறு திருக்குர்ஆன் விரிவுரைகளில் கூறப்பட்டுள்ளது