ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA.,Mphil On Nov 27, 2021 Viewers: 1388 0
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
சத்திய இஸ்லாத்துக்காக சேவை ஆற்றிய மகத்தான இமாம்களில் குறிப்பிடத்தக்கவர் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள். அன்னாரின் இயற்பெயர் அந்நுஃமான் பின் சாபித் என்பதாகும். ஈராக்கில் உள்ள பிரபலமான கூஃபா நகரத்தில் ஹிஜ்ரீ 80ம் ஆண்டு பிறந்தார்கள்.
இமாம் அவர்கள் தமது சிறுவயதில் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் உள்ளிட்ட ஒரு சில நபித்தோழர்களை சந்தித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அன்னார்தான் நான்கு பெரும் இமாம்களில் மூத்தவர்.
இமாம் அவர்கள் தமது இளவயதில் இஸ்லாமிய கல்விகளில் மார்க்க நம்பிக்கை தொடர்பான கல்வியை கற்பதில் ஈடுபட்டார்கள். பின்னர் மார்க்க சட்டம் தொடர்பான (ஃபிக்ஹ்)கல்வியில் ஈடுபாடு ஏற்பட்டு அக்காலத்தில் சிறந்த மார்க்க சட்ட அறிஞராக இருந்த ஹம்மாத் பின் அபீ சுலைமான் அவர்களிடம் மாணவராக சேர்ந்து கல்வி கற்றார்.
ஹம்மாத் பின் அபீ சுலைமான் அவர்களிடம் இமாம் அவர்கள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கல்வி பயின்று உள்ளார்கள். இடையில் பிற மார்க்க சட்ட அறிஞர்களிடமும், ஹதீஸ்கலை அறிஞர்களிடமும் சென்று மார்க்க கல்வியை கற்று வருவார்கள்.அவர்கள் காலத்தில் வாழ்ந்த தாபியீன்களைச் தேடிச் சென்று சந்தித்து கல்வி பெற்றுள்ளார்கள்.
ஆசிரியர் ஹம்மாத் அவர்கள் மரணம் அடைந்த பின் தமது ஆசிரியர் கல்வி கற்பித்த அதே இடத்தில் அமர்ந்து இமாம் அபூஹனிஃபா பாடம் நடத்தினார்கள்.தாம் கல்வி பயின்ற அதே கூஃபா நகர மஸ்ஜிதில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதுடன் மக்களுக்கு மார்க்க தீர்ப்புகள் வழங்கி வழி காட்டினார்கள்.
இமாமவர்கள் சிறுவயதிலிருந்தே தனது தந்தையுடன் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.கல்வி கற்றுக் கொண்டிருந்த போதும் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும் இந்த வியாபாரத்தை தொடர்ந்து செய்து வந்தார்கள்.
அவர்களின் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பெரும் பகுதியை கல்விப் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் மார்க்க பணிகளில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்துக்காக பங்கிட்டு கொடுத்து உதவி செய்து வந்தார்கள்.
போராட்டங்கள்:
கூஃபாவின் ஆளுநராக இருந்த யசீத் பின் உமர் என்பவர் இமாம் அபூஹனிஃபா அவர்களுக்கு முக்கிய பதவி கொடுக்க முன்வந்தார். அதாவது எந்த உத்தரவாக இருந்தாலும் அது இமாமவர்கள் வாயிலாகவே வெளிவர வேண்டும்.. அதில் அவர்கள்தான் சீலிட்டு வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த பதவி. ஆனால் இமாம் அவர்கள் அந்த பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதிகாரத்தில் இருப்பவர்களின் அநீதிக்கும் தவறுகளுக்கும் ஒத்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்ற பேணுதல் காரணமாக இவ்வாறு ஏற்காமல் தவிர்த்தார்கள். ஆனாலும் ஆளுநரின் உத்தரவை ஏற்காத காரணத்தால் இமாம் அவர்களுக்கு சாட்டையடி தண்டனையாக கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி தொடர்ச்சியாக பல நாட்கள் இமாம் அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. அதனால் தண்டனை நிறுத்தப்பட்டது.
இதன் பின்பு இமாம் அவர்கள் கூஃபாவில் இருந்தால் மீண்டும் தொல்லை ஏற்படும் என்பதால் மக்காவுக்கு தப்பி ஓடினார்கள். இது நடந்தது உமையாக்களின் ஆட்சி காலத்தில்.. மக்காவில் சிலகாலம் கல்வியை தேடுவதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டார்கள்.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்பாஸிய ஆட்சி ஏற்பட்ட போது மீண்டும் கூஃபாவிற்கு திரும்பி வந்து தமது மார்க்க கல்வியை பரப்பும் பணியைத் தொடர்ந்தார்கள் இந்த ஆட்சியில் இமாம் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
அப்போதைய கலீபா அபூ ஜஃபர் அல் மன்சூர் அமைத்த பக்தாத் நகரத்தை உருவாக்குவதில் இமாம் அவர்களும் முக்கிய பங்காற்றினார். பின்பு பக்தாதில் தன் கல்விப் பணியை ஆரம்பித்தார்கள்.
ஆனாலும் கலீபா அபூ ஜஃபர் இமாம் அவர்கள் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என சொன்னபோது இமாம் அவர்கள் அதனை ஏற்கவில்லை.அதனால் இமாம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறைத்தண்டனையுடன் சாட்டை அடியும் கொடுக்கப் பட்டது என்றும் சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறிது காலத்திலேயே இமாமவர்கள் மரணமடைந்தார்கள். சிறையிலேயே மரணம் அடைந்தார்கள் என்றும் சிறையில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பிய பின் மரணம் அடைந்தார்கள் என்றும் இருவேறு விதமாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.ஹிஜ்ரி 150ஆம் ஆண்டு பக்தாத் நகரத்தில் மரணமடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்!
இமாம் அபூ ஹனீஃபாவின் உயர் தன்மைகள்:
இமாம் அவர்கள் தலைசிறந்த மார்க்க அறிஞராக இருந்ததுடன் பல்வேறு திறமைகள் கொண்ட ஆளுமையாக திகழ்ந்தார்கள். சிறப்பான பேச்சாற்றலும் விவாத திறமையும் கொண்டவராக இருந்தார்கள்.
இமாம் ஷாபிஈ அவர்கள் இமாம் மாலிக் அவர்களிடம் 'நீங்கள் அபூஹனீஃபாவை சந்தித்து உரையாடி இருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம் சந்தித்திருக்கிறேன் அவர் கல்லால் ஆன இந்த தூணை பார்த்து இது தங்கத்தால் ஆனது என்று கூறினால் அதற்கான ஆதாரத்தை நிலைநாட்டி விடுவார்' என்று பதிலளித்தார்கள்.
அத்துடன் இமாம் அபூஹனீஃபா அவர்கள் அதிகமாக வணக்க வழிபாட்டில் ஈடுபடுபவர்களாகவும், பேணுதல் உள்ளவராகவும், பணிவும், தயாள குணமும் கொண்டவராகவும் திகழ்ந்தார்கள்.
"கல்வி, பேணுதல், உலக பற்றின்மை, மறுமைக்கு முன்னுரிமையளித்தல் ஆகியவற்றில் யாரும் அடைய முடியாத இடத்தில் அபூஹனிஃபா இருக்கிறார்கள்"என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்கள்.
சிறப்புக்குரிய இமாம் அவர்கள் கூறியுள்ள சில சட்டங்கள் ஹதீஸ் ஆதாரங்களுக்கு மாற்றமாக இருப்பது உண்மை. மனிதர்கள் என்றால் குறைகளும் இருக்கும்.
அல்லாஹ்வின் மார்க்கச் சட்டத்தை அறிந்துகொள்வதற்காக நல்ல எண்ணத்துடன் ஆய்வுசெய்து தவறுதலாக தவறான முடிவை சொல்லி விட்டால் கூட அல்லாஹ்விடம் ஒரு கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
(அல்குர்ஆன் : 59:10)