அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம்

அகீதா | அஹ்லுஸுன்னாஹ் by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA.,Mphil On Nov 27, 2021 Viewers: 1478


அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்

வழிமுறையை பின்பற்றுவோம்

                நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் காலத்திற்குப் பின்னர் சத்திய இஸ்லாத்தின் வழியிலிருந்து தடம் புரண்டு வழிகெட்ட கூட்டத்தினர் பலர் உருவானார்கள். அப்போது நேர்வழி நடக்கும் நன்மக்களை அடையாளப் படுத்துவதற்காக பயன்படுத்தப் பட்ட வாசகம்தான் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்பது.

    நபி வழியையும் கூட்டமைப்பையும் உடையவர்கள் என்பது இந்த வாசகத்தின் கருத்து. பிற்காலத்தில் இந்த நல்ல பெயரை தங்களுக்குத் தாங்களே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நல்ல முன்னோர் எந்த சிறந்த கொள்கையையும் நடைமுறையையும் குறிப்பதற்காக இந்த பெயரை பயன்படுத்தினார்கள் என்பதை அறியவில்லை.

    அதனால் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கைகளையும் வழிமுறைகளையும் தங்களிடம் வைத்துக் கொண்டு நாங்களும் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை கொண்டவர்களை எதிர்க்கவும் செய்கிறார்கள்.

       இப்படிபட்ட தவறான புரிதல் கொண்டவர்கள் உண்மையை அறிந்து தங்களின் தவறை திருத்திக் கொண்டு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்காக முற்கால அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களில் இருந்து ஆதாரங்களை இங்கு பதிவு செய்கிறோம்.

     அல்லாமா இப்னு ஹஜர் அல் ஹைத்தமி அவர்கள் 'அஸ்ஸாவாஜிர் அன் இக்திராஃபில் கபாயிர்' (பெரும்பாவங்கள் செய்வது பற்றி எச்சரிக்கைகள்) என்ற தமது நூலில்  நானூறுக்கும் மேற்பட்ட பெரும் பாவங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.

    அந்த நூலில் ஓரிடத்தில் அவர்கள் எழுதியிருப்பதுதொண்ணூற்று மூன்று முதல் தொண்ணூற்று எட்டு வரையிலான (ஆறு) பெரும் பாவங்கள் - கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொள்வது, அவற்றில் விளக்கேற்றுவது, அவற்றை வணங்கப்படுபவையாக ஆக்குவது, அவற்றை சுற்றி வலம் வருவது, அவற்றை தடவுவது, அவற்றை நோக்கி தொழுவதுஇவ்வாறு எழுதிவிட்டு இவற்றுக்கான ஆதாரங்களையும் பதிவு செய்துள்ளார்கள்

     அத்துடன் அவர்கள் தொடர்ந்து எழுதுவது: நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பின்னர் எனது கப்ரை வணங்கப்படக் கூடியதாக ஆக்கிவிடாதீர்கள்என்று கூறியிருப்பதின் கருத்து, மற்ற மக்கள் (அதாவது பிற மதத்தவர்) ஸஜ்தா செய்வது  போன்ற காரியத்தின் மூலம் தங்களால் வணங்கப்படுபவற்றை மகத்துவப் படுத்துவது போன்று கப்ரை மகத்துவப் படுத்தாதீர்கள் என்பதாகும்

       மேலும் இமாம் அவர்கள் தொடர்ந்து எழுதுவதாவது: ஹன்பலி அறிஞர்களில் ஒருவர் கூறுகிறார்: ஒருவர் பரகத் (அருள் வளம்) கிடைக்கும் என்று நம்பி கப்ருக்கருகில் தொழுவதற்கு நாடுவது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எதிராக செயல்படும் காரியமும் அல்லாஹ் அறிவிக்காத ஒரு மார்க்கத்தை புதிதாக உருவாக்கும் காரியமும் ஆகும். ஏனென்றால் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஏகோபித்த கருத்துப் படியும் இது கூடாத காரியமாகும். கப்ருகளுக்கு அருகில் தொழுவது, கப்ருகளை தொழுமிடங்களாக ஆக்கிக்கொள்வது, அவற்றின் மீது மஸ்ஜிதுகளை கட்டிக்கொள்வது ஆகிய செயல்பாடுகளே தடை செய்யப்பட்ட காரியங்களிலும் இணைவைப்பு ஏற்பட காரணமாக உள்ளவற்றிலும் மிகப்பெரியதாக இருக்கின்றது

     மேலும் இமாம் அவர்கள் எழுதுகிறார்கள்: கப்ருகள் மீது மஸ்ஜிதுகள் கட்டுவது வெறுப்புக்குரியது என்று சில அறிஞர்கள் கூறுவதாக சொல்லப்படுவதை சாதாரணமாக வெறுப்புக்குரியது என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தக் காரியத்தை செய்பவர் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது மிக அதிகமான அறிவிப்பாளர் தொடர்களில் அறிவிக்கப் பட்டிருக்கும் போது இது ஆகுமானது என்ற ரீதியில் அறிஞர்கள் பேசுவார்கள் என்று எண்ண முடியாது.

    மேலும் இவ்வாறு (கப்ருகள் மீது) கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதுகளையும் கப்ருகள் மீது கட்டப்பட்டுள்ள குப்பாக்களையும் விரைந்து இடிப்பது கடமையாகும். இவை (நபியவர்களின் காலத்தில் இஸ்லாத்திற்கு தீங்கிழைப்பதற்காக கட்டப்பட்ட) மஸ்ஜிதுல் ளிராரை விட மிக தீங்கானவையாகும். ஏனென்றால் இவை அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்து அடித்தளமிடப்பட்டுள்ளன. இதனை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள். மட்டுமின்றி தரையிலிருந்து உயர்த்திக் கட்டப்பட்டுள்ள கப்ருகளை இடிக்கும் படியும் கட்டளையிட்டுள்ளார்கள்.

     அத்துடன் கப்ருக்கு வைக்கப்பட்டுள்ள எல்லாவிதமான விளக்குகளையும் அகற்றுவது அவசியமாகும். கப்ருக்கு விளக்கை வக்ஃப் செய்வதோ விளக்கு வைப்பதாக நேர்ச்சை செய்வதோ ஆகாத செயலாகும்

      இவ்வாறு அல்லாமா இப்னு ஹஜர் அல்ஹைத்தமி அவர்கள் தமது கருத்துக்களையும் பிற அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்கள். (பார்க்க: மேற்கண்ட நூல் பாகம்: 1, பக்: 244 - -246, பதிப்பு: அஷ்ஷாமிலா).

    அஹ்லுஸ்சுன்னத்தா?

        அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் பெரிய அறிஞர்களில் ஒருவரான அல் ஹைத்தமி அவர்கள் கப்ருக்கருகில் தொழுவது தடை செய்யப்பட்ட பாவங்களில் மிகப்பெரியதாக இருப்பதாகவும் இணை வைத்தல் ஏற்படக் காரணமாக இருப்பவற்றில் மிகப் பெரியதாக இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள். இப்படியிருக்கையில் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களுக்கு நேர்ச்சை செய்தல் அவர்களின் கப்ருகளை நோக்கி துஆ செய்தல் போன்ற காரியங்கள் மூலம் நேரடி இணைவைத்தலில் ஈடுபடுபவர்கள் எப்படி அஹ்லுஸ் சுன்னத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியும்?

ஆகவே உண்மையிலேயே அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் வழிமுறைப்படி நடக்க வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த இமாம்களின் வழிமுறையை தெரிந்து செயல்படுவதற்கு முன்வர வேண்டும்!.


-  மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA.,Mphil