ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5

ஆய்வுகள் | ஹதீஸ் by அபூஅக்மல் On Dec 27, 2021 Viewers: 670


இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: உமர்(ரலி) அவர்கள் மரணக் காயமுற்றிருந்தபோது,  “சகோதரரே! நண்பரே!எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார்... அப்போது உமர்(ரலி) 'உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?' எனக் கேட்டார்.

(புகாரி 1287)

                குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.  (புகாரி 1286)

                இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது புரிவதற்கு சற்று சிரமமாகத் தோன்றும். உயிரோடு உள்ளவர்கள் அழுவதின் காரணமாக மரணித்தவர் வேதனை செய்யப்படுவார் என்றால் ஒருவர் செய்த தவறுக்கு இன்னொருவர் தண்டிக்கப்படுவார் என்ற கருத்து வருகிறது.

                இதன் காரணமாகவே அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த செய்தி நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க முடியாது என்ற கருத்தை கூறினார்கள்.. அது குறித்த ஹதீஸ்:

                இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்கள்:

                உமர் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன்பு கூறிய (புகாரி 1287 ஹதீஸின்) செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமருக்கு கிருபை செய்வானாக! அல்லாஹ் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக முஃமினை அல்லாஹ் வேதனை செய்வான் என கூறவில்லை! மாறாக குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தால் காஃபிருக்கு வேதனை அதிகமாகப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறி "ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது" திருக்குர்ஆன் 6:164 என்ற குர்ஆன் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே! என்றும் கூறினார்கள்.   (புகாரி 1288)

                ஆயிஷா(ரலி) அவர்களின் இந்தக் கூற்று பற்றி இமாம் குர்துபி அவர்கள் கூறுவது:

                ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த ஹதீஸை மறுப்பதும் இதை அறிவிப்பவர் தவறுதலாகச் சொல்லிவிட்டார் என்றோ அல்லது மறந்துவிட்டார் என்றோ அல்லது நபியிடம் ஒரு பகுதியை கேட்டு ஒரு பகுதியை கேட்கவில்லை என்றோ சொல்வதும் பாரதூரமானதாகும். ஏனெனில் இந்த செய்தியை பல நபித்தோழர்கள் உறுதியாக அறிவித்திருக்கிறார்கள். இந்த செய்தியை சரியான விதத்தில் புரிந்து கொள்ள சாத்தியம் இருக்கும் போது இதை மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. (ஃபத்ஹுல் பாரீ)

எப்படி புரிவது?

                அப்படியானால் மார்க்கத்தின் மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாமல் எவ்வாறு புரிந்துகொள்வது? இந்த ஐயத்துக்கு பல அறிஞர்கள் கீழ் வருமாறு விளக்கம் கூறுகிறார்கள். அந்த விளக்கம்:

                மரணித்தவர், தான் வாழும் காலத்தில் சப்தமிட்டு ஒப்பாரி வைத்து அழும் நடைமுறை உள்ளவராகவும், அதை விரும்பக்கூடியவராகவும் இருந்தால் அவருக்காக அவ்வாறு அழப்படும் போது அவர் வேதனை செய்யப்படுவார். அறியாமை கால மக்களிடம் மரணித்தவருக்காக அழும்போது ஒப்பாரி வைப்பதும், கன்னங்களில் அடித்துக் கொள்வதும், சட்டைகளை கிழித்துக் கொள்வதும் நடைமுறையில் இருந்தது. இது போன்ற செயலை விரும்பக்கூடியவருக்குத் தான் இவ்வாறு வேதனை செய்யப்படும்.

                தான் மரணித்ததும் தனக்காக மற்றவர்கள் ஒப்பாரிவைத்து அழ வேண்டும் என்று வஸிய்யத் (மரண சாசனம்) செய்யும் நடைமுறையும் அக்காலத்தில் இருந்துள்ளது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

                இந்த ஹதீஸ்களில் வெறுமனே 'அழுவது' என்று மட்டும் கூறப்பட்டிருந்தாலும் சப்தமிட்டு, ஒப்பாரி வைத்து அழும் அழுகை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்களே தமக்கு நெருக்கமானவர்களின் மரணத்தின்போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்.

(பார்க்க: புகாரி 1285, 1303, 1342)

                இந்த ஹதீஸ்களை மேற்கண்ட விளக்கத்தின் படியே புரிய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இமாம் புகாரி அவர்கள் இந்த ஹதீஸ்களை பதிவு செய்வதற்கு முன் பாடத்தலைப்பில் கீழ்வருமாறு பதிவு செய்கிறார்கள்.

"பாடம்-நபியின் கூற்று:   குடும்பத்தினரின் சில அழுகை காரணமாக மரணித்தவர் வேதனை செய்யப்படுவார்-அதாவது ஒப்பாரி வைப்பது மரணித்தவரின் வழிமுறையாக இருந்தால்!..... மேலும் ஒப்பாரி இல்லாத அழுகை அனுமதிக்கப்படும்

                இவ்வாறு இந்த ஹதீஸ்களை எப்படி புரிய வேண்டும் என்ற விளக்கத்தை இமாம் புகாரி அவர்கள் பாடத்தின் தலைப்பில் பதிவு செய்கிறார்கள்.

                இந்த ஹதீஸ்களுக்கு இன்னொரு விதமாகவும் விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது இந்த ஹதீஸ்களில் உயிர் உள்ளவர்களின் அழுகையின் காரணமாக மரணித்தவர் வேதனை செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. வேதனை செய்யப்படுவார் என்ற கருத்தை குறிப்பிட யுஅத்தபு என்ற அரபு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வேதனைக்குள்ளாக்கப்படுவார் என்றும் கருத்து சொல்லலாம். இதன்படி மரணித்தவருக்கு நெருக்கமானவர்கள் அழுவதை மரணித்தவர் உணரும்போது அதனால் வேதனைக்குள்ளாவார். எப்படி மனிதன் விரும்பத்தகாத காரியங்களால் வேதனைக்குள்ளாகிறானோ அப்படித்தான் இதுவும். உதாரணமாக அதிர்ச்சிகரமான சப்தங்களை கேட்பதால், விரும்பாத வார்த்தைகளை செவியேற்பதால், மோசமான வாடைகளை நுகர்வதால் மனிதன் வேதனைப்படுகிறான். இதுபோன்றே தன் மரணத்தினால் தன்னை சார்ந்தவர்கள் அழும்போது அவர்களின் அழுகையை மரணித்தவர் உணரும் போது அது அவருக்கு வேதனையாக இருக்கும்.

     இந்த விளக்கம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களால் கூறப்பட்டுள்ளது.

(மஜ்மூஉ ஃபதாவா இப்னி தைமியா).

      இந்தக் கருத்தை உணர்த்தும் ஹதீஸும் உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

                ஒருவர் மரணித்ததும் அவருக்காக அழுபவர் மலையே! தலைவரே! என்றும் மற்றும் இதுபோன்ற வார்த்தைகளையும் கூறி அழுதால் மரணித்தவருக்கு இரண்டு வானவர்கள் சாட்டப்படுவார்கள். அவர்களிருவரும் அவரை குத்திவிட்டு 'இப்படித்தான் நீ இருந்தாயோ!' என்று கூறுவார்கள்.                  (நூல் :திர்மிதி)

                அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை சரியாக விளங்கி செயல்பட அல்லாஹ் நமக்கு நல்லுதவி செய்வானாக!