தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ்

ஆய்வுகள் | ஹதீஸ் by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Feb 03, 2023 Viewers: 437


தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ்


  புகாரி - பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ  இடப் பக்கமோ திரும்பி அமர்வதும் திரும்பிச் செல்வதும் 

      அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்தபின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கமே திரும்ப வேண்டும் என்று கருதுவோரை அவர்கள் கண்டிப்பார்கள்.

             ஹதீஸ்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வலப் பக்கம் திரும்புவதே கடமையாகும் என்று எண்ணுவதன் மூலம் உங்களில் யாரும் தமது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்துவிட வேண்டாம். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் அவர்கள் தமது இடப் பக்கமும் திரும்புவார்கள். (நூல்: புகாரி 852)

       அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில்,  சிலரிடம் அப்போது ஏற்பட்டிருந்த ஒரு தவறான எண்ணத்தை கண்டிக்கிறார்கள். ஜமாஅத்தில் சேர்ந்து மஅமூமாகவோ அல்லது தனியாகவோ தொழுது முடித்து எழுந்து செல்லும்போது தனது வலது கை பக்கம்தான் முதலில் திரும்ப வேண்டும் என்று நினைத்து செயல்பட்டார்கள். அதாவது தாம் வெளியேற வேண்டிய வாசல் தனது இடது கை பக்கத்தில் இருந்தாலும் கூட முதலில் வலது பக்கத்தில் திரும்பிவிட்டுத்தான், தான் செல்ல வேண்டிய இடது பக்கம் போக வேண்டும் என்று கருதினார்கள். 

            இது தவறு என்பதை சுட்டிக்காட்டியதோடு நபி ஸல் அவர்கள் அதிகமாக இடப்பக்கம் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த செய்தி கூடுதல் அழுத்தத்துடனும் காரணத்துடனும் அஹ்மத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது: “நபி (ஸல்) தொழுகைலிருந்து திரும்பிச் செல்வது மிக அதிகமாக (தம்) வீடுகளை நோக்கி இடது புறமாகவே இருந்தது” (ஹதீஸ்: 3872) இதுவும் இப்னு மஸஊத் (ரலி) கூறியதுதான்.

         இந்த விஷயத்தை, நாம் மேலே கண்ட புகாரியின் பாடத்தலைப்பில் இடம்பெறும் அனஸ் (ரலி) தொடர்பான செய்தியும் வலுப்படுத்துகிறது. இந்த செய்தியில் தொழுது முடித்த பின் வலது பக்கம்தான் திரும்ப வேண்டுமென்று கருதுபவர்களை கண்டிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

      அதாவது ஒருவர் தொழுது முடித்ததும், தான் பேச வேண்டிய நபர் தனக்கு இடது பக்கத்தில் இருந்தாலும் வலது பக்கமாக திரும்பி அப்படியே (வட்டமடிக்கும் விதமாக சுற்றி) இடது பக்கமாக பார்க்க வேண்டும் என்று நினைத்தார்கள் சிலர். இல்லாத ஒரு காரியத்தை வலிந்து செய்ததை அனஸ் (ரலி) கண்டித்தார்கள். 

     தொழுது முடித்ததும் முதலில் வலது பக்கம் தான் திரும்ப வேண்டும் என அப்போது சிலர் கருதியதை அனஸ் ரலி அவர்கள் குறை கூறியதாக வரக்கூடிய மற்றொரு செய்தி: 

      கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுவது- ஒரு மனிதர் தன் தொழுகையில் கழுதை சுற்றுவது போன்று சுற்றுவதை அனஸ் (ரலி) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா – 3113)

        தொழுது முடித்த ஒருவர் தனது இடது புறத்தில் உள்ளவரிடம் பேச வேண்டியது இருந்தாலும் முதலில் வலது பக்கம் திரும்பித்தான் இடது பக்கம் செல்ல வேண்டும் என்ற தவறான எண்ணப்படி சுற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதைத்தான் அனஸ் (ரலி) வெறுத்துள்ளார்கள். 

       இந்த செய்தி மேற்கண்ட நூலில் “ ஒருவர் சலாம் கொடுத்துவிட்டால் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பிச் செல்வார் “ என்ற தலைப்பின் கீழ் இடம்பெறுகிறது.

        புகாரி நூலின் தலைப்பில் இடம்பெறும் வாசகம் இந்த தெளிவான செய்தியில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அது:  

           பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும் திரும்பிச் செல்வதும்

         இந்த தலைப்பில் அடைப்புக்குறிக்குள் இடம்பெறும் ‘இமாம்’ என்ற சொல் மூலத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லாத ஒன்றாகும். இது மொழிபெயர்ப்பாளர்களால் ஏற்பட்ட தவறாகும். 

        தலைப்புக்குக் கீழே இடம்பெறும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஹதீசையும் அனஸ் (ரலி) அவர்கள் குறித்த செய்தியையும் படிக்கும் போது தனியாகவோ ஜமாஅத்திலோ தொழக்கூடியவர்களை குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

        இமாமை பொறுத்த வரை அவர் தொழுகையை முடித்தவுடன் எழுந்து செல்ல விரும்பினால் அவர் நாடக்கூடிய எந்த புறமாகவும் செல்லலாம். தொழுகையை முடித்த பிறகு உட்கார்ந்திருக்க வேண்டுமென்று விரும்பினால் மஅமூம்களை முன்னோக்கி உட்கார வேண்டும். இதுவே நபிவழியாகும்.

         இமாம் புகாரி அவர்கள், “சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கி திரும்புவார்” என்று இது தொடர்பான பாடத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்கள்.

      இந்த தலைப்புக்குக் கீழே இமாம் அவர்கள் பதிவு செய்யும் ஹதீஸ்: 

      நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நேராக நோக்கி திரும்புவார்கள் (புகாரி 845) 

       என சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். 

            இதன் படி நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி அமர்வார்கள் என்பதை புரியலாம். இப்படித்தான் புகாரியின் விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளது. 

       இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீசுக்குக் கீழே – தமது பத்ஹுல் பாரீ நூலில் – எழுதுவது:

       

 “ தொழுகைக்குப் பின் மக்களை தமது முகத்தால் முன்னோக்கி இருப்பது நபி (ஸல்) அவர்களின் வழமையாக இருந்தது என்பதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது “ 

      மேலும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் எழுதுவது: 

               தொழுகைக்குப் பின் மக்களை முன்னோக்கி இருப்பதுதான் நபியின் தொடர்ச்சியான நடைமுறை என்பது இந்த (புகாரி 845) ஹதீஸில் தெளிவாக உள்ளது. (பார்க்க: இப்னு ஹஜர் அவர்களின் பத்ஹுல் பாரீ ஹதீஸ் 845 விளக்கம்.) 

      ஆக இதுவரை நாம் பார்த்த விவரங்களின்படி நமக்கு கிடைக்கும் முடிவுகள்: 

(அ) தனியாகவோ மஅமூமாகவோ தொழுது முடித்தவர் தான் செல்ல வேண்டிய எந்த புறமாகவும் திரும்பிச் செல்லலாம். முதலில் வலது புறமாக திரும்பிக் கொள்ள வேண்டும் என்ற முறை மார்க்கத்தில் காட்டித் தரப்படவில்லை. 

(ஆ) இது விஷயத்தில் நபித்தோழர்கள் காலத்தில் சிலரிடம் ஏற்பட்டிருந்த தவறான எண்ணத்தை நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். 

(இ) தொழுகை நடத்திய இமாம் சலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி அமர வேண்டும். இதுவே நபிவழி. 

        நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை சரியாக அறிந்து செயல்பட வல்ல அல்லாஹ் நமக்கு நல்லுதவி செய்வானாக.