ரமளானின் கடைசி பத்து நாட்கள்

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.,MA.,Mphil On Apr 06, 2023 Viewers: 318


ரமளானின்  கடைசி பத்து நாட்கள்

சிறப்புக்குரிய ரமளானின் இறுதிப் பத்து நாட்களை அடைந்து விட்டோம். ரமளான் மாதத்தின் எல்லா நாட்களும் சிறப்புக்குரியவை என்றாலும் அதன் பிந்திய பத்து நாட்கள் கூடுதல் சிறப்புமிக்கவை. 

     இந்த பத்து நாட்களில் ஒரு நாளின் இரவு லைலத்துல் கத்ர் (எனும் கண்ணியமிக்க) இரவாக அமைந்திருப்பதே இந்த கூடுதல் சிறப்புக்கு காரணமாகும். 

    இந்த கண்ணியமிக்க இரவு குறித்து திருகுரானில் ஒரு முழு அத்தியாயம் இடம் பெறுகிறது. அது: (97: 1 – 5)

    இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளபடியும் வேறு ஆதாரங்களின் படியும் இந்த இரவுக்கு பல சிறப்புக்கள் உள்ளன. அவை: 

அ. இந்த இரவில்தான் மனிதகுல வழிகாட்டியான திருகுர்ஆன் இறக்கப்பட்டது.

ஆ. இந்த இரவில்தான் ஒவ்வொரு முக்கியமான விஷயமும் பிரிக்கப்படுகின்றது. (அல் குர்ஆன் 44:4) அதாவது அந்த வருடத்தில் நடக்கவிருப்பவை எல்லாம் லவ்ஹுல் மக்ஃபூலிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. 

இ. இந்த இரவு பாக்கியம் மிக்க இரவாகும். (44: 3) 

ஈ. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்ததாகும். அதாவது 83 வருடங்கள் 4 மாதங்களை விட சிறந்தது. 

உ. வானவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் இந்த இரவில் இறங்குகிறார்கள். நன்மைகளோடும் பாக்கியங்களோடும்தான் வானவர்கள் இறங்குவார்கள். 

ஊ. இந்த இரவு பஜ்ரு உதயமாகும் வரை சாந்தி மயமானதாக இருக்கும். 

எ. இந்த இரவில் இறை நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

       இவ்வாறு அதிகமான சிறப்புக்களை கொண்ட லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து நாட்களின் அனைத்து இரவுகளிலும் முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

     இது குறித்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து நாட்களில் பிற நாட்கள் எதிலும் ஈடுபடாத அளவு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். (முஸ்லிம்)  

    இன்னொரு ஹதீஸில், ரமளானின் பிந்திய பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் தமது கீழாடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள் (வணக்க வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட தயார் ஆவார்கள்), இரவை உயிர்ப்பிப்பார்கள் (அதாவது இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபடுவார்கள்), தமது குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (புகாரி, முஸ்லிம்). 

      இரவை வணக்க வழிபாடு மூலம் உயிர்ப்பித்தல் என்பதில் தொழுகை மட்டுமின்றி குரான் ஓதுவது, திக்ர் செய்வது, பிரார்த்தனை செய்வது, தர்மம் செய்வது, பாவமன்னிப்பு தேடுவதில் ஈடுபடுவது உள்ளிட்ட நற்செயல்களும் உள்ளடங்கும். 

   இஅதிகாப்: 

      இந்த ரமளானின் பிந்திய பத்து நாட்களில் செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்ட வழிபாடுகளில் இயதிகாஃபும் ஒன்றாகும். “ நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இயதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இயதிகாஃப் இருந்தனர்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

       இயதிகாஃப் என்பது மக்களுடனான உலகத் தொடர்புகளை துண்டித்துக்கொண்டு பள்ளிவாசலில் தங்கியிருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகும். இந்த நாட்களில் இயதிகாஃப் இருப்பதால் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு பலன்களை அடைந்து கொள்ள முடியும். 

      இந்த சிறப்புக்குரிய பத்து நாட்களில் அதிகமான நற்செயல்கள் செய்திடவும் நிறைவான நற்கூலிகளை பெறவும் வல்ல அல்லாஹ் நமக்கு நல்லுதவி செய்வானாக!