ஆய்வுகள் | by மௌலவி அப்துர்ரஹ்மான் மன்பஈ On May 13, 2023 Viewers: 162 0
கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்
எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ
கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் கலவரம் செய்துள்ள செய்தி வீடியோ மற்றும் போட்டோவுடன் பரவியதை பார்த்தோம்.
பல இடங்களில் முஸ்லிம்களின் கடைகள், வீடுகளில் கொள்ளையடிப்பது, உடமைகளை சேதப்படுத்துவது, பள்ளிவாசல்களின் மேலே ஏறியும் கூடிநின்றும் கூச்சல் குழப்பம் செய்வது, பள்ளிவாசல்களை சேதப்படுத்துவது முஸ்லீம்களை தாக்குவது போன்ற பல்வேறு கொடுமைகளில் ஈடுபட்டனர்.
ஆனால் ராம நவமி என்பது என்ன? அதை இந்துக்கள் எவ்வாறு அனுசரிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்:
அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் 7ஆவது அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராம பிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை தான் ஸ்ரீ இராம நவமி என்று அறியப்படுகிறது.
சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் 10 நாட்களை முன் பத்து என்றும், பிறந்த தினத்திலிருந்து வரும் 10 நாட்களைப் பின் பத்து என்றும் 20 நாட்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ராமபிரானின் தீவிர பக்தர்கள், 10 நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தை படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.
இந்த ராம நவமி தினத்தில் ஒவ்வொரு ராமர் கோயில்களிலும் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் பூஜைகள் செய்யப்படும். அந்தப் பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபடுவது சிறப்பாகும். ஒருவேளை பூஜையில் கலந்து கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் பட்டாபிஷேக இராமர் படத்தை வைத்து துளசியால் ஆன மாலையை அணிவித்து பூஜை செய்ய வேண்டும். அதோடு, பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தால் நன்மைகள் பல உண்டாகும். மேலும், இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, இராமாயணம் படிப்பதோ சிறந்தது.
ஸ்ரீராமருக்கு பூஜை செய்த பிறகு நெய்வேத்திய பொருட்களை நம் குழந்தைகளுக்கு உண்ண கொடுக்க வேண்டும். ஸ்ரீ ராம நவமியன்று காலை முதல் உணவு உண்ணாமல் இருந்து ஸ்ரீ ராம நவமி விரதமிருந்து ஸ்ரீ ராம பிரானை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிடைக்கும். மேலும், குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு வரும்.
வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்க: tamil.samayam.com
ராம நவமி பற்றிய மேற்கண்ட விளக்கத்தில் இந்த பண்டிகையை இந்து மக்கள் கொண்டாடும் முறைகள் கூறப்படுகிறது.
ராமாயணம் படிப்பது, நெய்வேத்தியம் படைத்து வழிபடுவது, ராமர் கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து வழிபாடு செய்வது, ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்வது, விரதமிருந்து வழிபடுவது போன்ற காரியங்கள் மூலம் உண்மை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இதில் எதையும் செய்யாமல் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதிக்கு வந்து அவற்றை சேதப்படுத்துவது, முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துவது, முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட அட்டூலியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் யார்?
இவர்கள் மத நம்பிக்கையும் தெய்வ பக்தியும் இல்லாத கொடியவர்கள்.
இந்த வருட ராம நவமி நாளில் இவர்கள் நடத்திய கொடுமைகளில் மிகச்சிலவற்றை பார்க்கலாம்:
உத்திரப்பிரதேசத்தில், மதுரா ஜாமியா மஸ்ஜித் மீது ஏறி காவி கொடிகளை ஆட்டி மதவெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். வேறு சில பள்ளிவாசல்களுக்கு முன்பு கூட்டமாக கூடி இசை ஒலித்து ரகளைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில், ஹவுராவில் காவி கொடிகளுடன் ஊர்வலம் சென்று முஸ்லீம்களை குறி வைத்து வன்முறை வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளை உடைத்தும் வாகனங்களை சேதப்படுத்தியும் தீ வைத்து எரித்துமிருக்கிறார்கள்.
பீகாரில், மக்களை அச்சுறுத்தும் விதத்தில் வாள்களை தூக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தானை விரும்புவோர் அங்கு செல்ல இலவச டிக்கட் தருவோம் என்று கத்திக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த வெறியர்கள் தான் எப்போதும் பாகிஸ்தானைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் சென்றால் இந்துக்கள் உள்ளிட்ட எல்லா இந்தியர்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
ஹைதராபாத்தில், காந்திஜியை கொலை செய்த பயங்கரவாதி கோட்சேயின் படத்தை தூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். பயங்கரவாதியை கொண்டாடுவதின் மூலம் தாங்கள்தான் பயங்கரவாதிகள் என்பதை தெளிவு படுத்திவிட்டார்கள்.
குஜராத்தில், ஊர்வலம் செல்லும்போது வதோதரா என்ற பகுதியில் பள்ளிவாசல் மீது கற்களை வீசி தாக்கியிருக்கிறார்கள். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மத்திய பிரதேசத்தில், கடந்த வருட ராம நவமியின் போது வன்முறையில் ஈடுபட்டு முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசரால் இடித்த கார்கோன் பகுதியில் இப்போது இந்து ராஷ்ட்ரா பேனர் வைத்து பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
மகாராஷ்ட்ராவில், அவுரங்காபாத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் காவி கொடிகளுடன் ஊர்வலமாக சென்று முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கமிட்டிருக்கிறார்கள். வாகனங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள்.
நாம் இந்து மக்கள் இந்த ராம நவமியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை முதலில் பார்த்தோம். அடுத்து இந்த பண்டிகையை பயன்படுத்தி சங் பரிவார பயங்கரவாதிகள் நடத்தியுள்ள காட்டுமிராண்டித் தனங்களையும் பார்த்தோம்.
இந்தக் கொடியவர்களிடம் ராம பக்தியுமில்லை இந்து மத பற்றுமில்லை. தங்களை விட எண்ணிக்கையில் குறைவாகவும் பலவீனமாகவும் உள்ள மக்களை எந்தக் காரணமும் இல்லாமல் துன்புறுத்தி இன்பமடையும் அற்ப மிருகங்கள்.
தாம் நம்பும் தெய்வத்தை வணங்கி பண்டிகை கொண்டாடும் நாளில் சம்பந்தமே இல்லாமல் மற்ற மதத்து வழிபாட்டுத் தளத்தை தாக்குவது, சிறுபான்மை மக்களை தாக்குவது, சிறுபான்மையினர் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட அட்டூலியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த உலகத்தில் இப்படிப்பட்ட இழிந்த கூட்டத்தை வேறு எங்கும் பார்க்க முடிவதில்லை.
முன்னரும் கலவரங்கள் பல நடந்தன என்றாலும் பி ஜே பி என்ற பெயரில் ஆர். எஸ். எஸ். ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வடிவங்களும் மிக அதிகமாகியிருக்கின்றன.
இந்த கூட்டம் மதத்தின் நல்வழி, மனிதநேயம், நேர்மை எதையும் கடைபிடிக்காத கொடூர கூட்டம். ஆகவே இந்த தேசத்தின் நலனை விரும்பும் இந்து, முஸ்லிம், கிருத்துவர் உள்ளிட்ட அனைத்து மத மக்களும் ஒன்றிணைந்து இந்த கொடியவர்களிடமிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முன்வர வேண்டும்.