கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Sep 04, 2014 Viewers: 2676


கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3

தவணை

கடன் கொடுக்கல் வாங்கலில் தேவையென்று கருதினால் தவணை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

கொடுக்கல் வாங்கல் முறை பற்றிப் பேசும் திருக்குர்ஆனின் 2:282 வசனத்தில் துவக்கத்திலேயே, குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால்... என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தின் பிறப்பகுதியிலும் சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும் கூறுகிறான்.

தவணைக் குறிப்பிடும் போது திருப்பிக் கொடுக்கும் நாள் பற்றிய விவரத்தை தெளிவாக விளக்க வேண்டும். அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட தவணைகளில் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் எத்தனைத் தவணைகள் என்பதும் கடைசித் தவணை எப்போது என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்வதாக (ஒப்புக் கொண்டு அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள்ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால் அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும்!” என்றார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி 2240

மேலும் தெளிவற்ற முறையில் தவணை குறிப்பிடப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்கு தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! இந்த ஒட்டகம் குட்டிப் போட்டு அந்த குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!) என்று செய்யப்படும் வியாபாரமே இது!

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: புகாரி 2143

இழுத்தடிப்பது அநீதம்

தவணைக் குறிப்பிட்டு கடன் பெற்றிருந்தாலும் குறிப்பிடாமல் பெற்றிருந்தாலும் இயன்ற அளவு விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். நிர்பந்தமின்றி இழுத்தடிப்பது குற்றமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!” 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2287, 2288.

வசதியுள்ளவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப் படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: நாஸஈ 4690, அபூதாவூத் 3630.

கடன் பெறும்போது தவணையை ஏற்றுக்கொள்வது ஒரு வாக்குறுதியாகும், வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுவது ஒரு கடமை, அதை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தாலும் அதுவும் மறுமையில் விசாரிக்கப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்: “வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (அல்குர்ஆன் 17:34)

அல்லாஹ் பொறுப்பேற்கிறான்

வாங்கிய கடனை முறையாகவும் குறிப்பிட்ட தவணையிலும் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணமும் ஆர்வமும் உள்ளவருக்கு அவரது எண்ணம் நிறைவேற அல்லாஹ் பொறுப்பெற்றுக்கொள்கிறான்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக் காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர்சாட்சிகளை எனக்குக் கொண்டுவா! அவர்களை சாட்சியாக வைத்துத் தருகிறேன்என்றார். கடன் கேட்டவர்சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார்அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்க்கு கடன் கேட்டவர்பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர்  ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித்தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தமது வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினர்.எந்த வாகனமும் கிடைக்கவில்லை, உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன் அவர் பிணையாளி வேண்டுமென்றார், நான்அல்லாஹுவே பிணை நிற்கப் போதுமானவன்!’ என்றேன், அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக்கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார், ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்று கூறினேன், அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார். அவருக்குரிய(பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சிசெய்தும் கிடைக்கவில்லை என்பதெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!’ என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார், அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தய்ம் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படும் என்பதற்காக அதை  எடுத்தார். அதை பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது தான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!’ என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், “எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். கடன் வாங்கியவர்வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!” என்று கூறினார். கடன் கொடுத்தவர், “நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான். எனவே ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!” என்று கூறினார்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2291.

இந்த ஹதீஸில் வாங்கியக் கடனை பேசிய தவணையை தாண்டிவிடாமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நடந்துகொண்ட மனிதரின் நாட்டம் நிறைவேற அல்லாஹ் அற்ப்புதமான வழியில் உதவி செய்துள்ளான் என்ற தகவலை நபி(ஸல்) அவர்கள் நமக்குத் தெரிவிக்கிறார்கள்.

இதே விதத்தில் நமக்குக் கூட அல்லாஹ் உதவி செய்வானா?

ஒவ்வொருவருக்கும் இதே மாதிரியான அற்புத வழியில் அல்லாஹ் உதவி செய்வான் என்பதில்லை, ஆனால் அந்த நல்ல மனிதரிடம் இருந்த நல்லெண்ணம் நம்மிடமும் இருந்தால் ஏதேனும் ஒரு வழியில் குறிப்பிட்ட தவணையில் நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வான். அல்லது அந்த இக்கட்டிலிருந்து விடுபடுவதற்கு நல்வழி காட்டுவான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருளை) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான்.” 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2387.

 

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil