ஆய்வுகள் | மற்றவை by -திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான் On Aug 20, 2023 Viewers: 160 0
முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்
-திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்
கல்வியிலும் அரசுப் பணிகளிலும் பொருளாதாரத்திலும் நமது இந்தியாவில் பின்தங்கிய சமூகங்களில் எல்லாம் மிக பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையை மாற்றுவதற்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியில் முன்னேற்றம் அடைந்து விட்டால் மற்றவற்றிலும் முன்னேற்றம் அடைந்து விடலாம்.
இந்த முடிவின் அடிப்படையில் நம் சமுதாயத்தில் பலரும் பள்ளிக் கூடங்களையும் சிலர் கல்லூரிகளையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் பல கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
பின்தங்கியிருக்கும் இந்த சமுதாயம் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால் சமுதாயத்துக்கு தேவையான பலன் கிடைக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியதாக உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட பழைய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் முஸ்லிம்களுக்கும் மற்ற மக்களுக்கும் சிறப்பாக கல்வி சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிகச் சில நிறுவனங்கள் நோக்கத்திலிருந்து தடம் மாறியிருந்தாலும்.
பிற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்விக்கூடங்களில் அதிகமானவை தவறான ஆட்களின் கைகளில் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வகிப்பவர்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக பள்ளிக்கூடங்கள் நடத்துபவர்களில் அதிகமானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த பள்ளிக்கூடங்களில் படிப்புத் தரம் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. பிற சமுதாயத்தவர் நடத்தும் பள்ளிகளோடு ஒப்பிடும்போது மிகவும் கீழ்நிலையில் இருப்பதை காண்கிறோம்.
ஆனால் இந்த தரம் குறைந்த கல்விக் கூடங்களை நடத்தும் முஸ்லிம் உரிமையாளர்கள் மட்டும் லட்சாதிபதிகளாகவும் கோடீசுவரர்களாகவும் உயர்ந்து கொண்டிருப்பதை காண்கிறோம்.
பின்தங்கிய இந்த முஸ்லிம் சமுதாயத்தின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று இவர்களின் கல்விக்கூடங்களில் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் பிற சமுதாய கல்விக் கூடங்களின் பிள்ளைகளோடு ஒப்பிடும்போது பெரிய பின்னடைவு இருப்பது தெரிகிறது. (திறமையும் கூடுதல் ஆர்வமும் உள்ள மிக குறைந்த எண்ணிக்கயிலான பிள்ளைகளை தவிர.)
புறக்கணிப்பு ...
முஸ்லிம் கல்வி நிலையங்களில் குறிப்பாக பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக உள்ளது. அப்படி குறைந்த அளவில் உள்ள முஸ்லிம் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பும் முக்கியத்துவமும் இல்லை என்பதும் பல முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களின் குறைப்பாடாக உள்ளது. இது பல இடங்களில் சாதாரணமாக வெளிப்படையாக தெரிகிறது.
நம் சமுதாயத்தை சேர்ந்த கல்வியாளர்கள் முனைவர் பட்டம் பெற்று வந்தால் கூட நம்மவர்களின் கல்விக் கூடங்கள் பலவற்றில் உரிய மரியாதை கொடுத்து பள்ளி முதல்வர் போன்ற பொறுப்புக்கள் (அநேக இடங்களில்) வழங்கப் படுவதில்லை.
முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதியில் இஸ்லாமிய பெயரில் டிரஸ்ட் ஏற்படுத்திக் கொண்டு கல்விக் கூடத்துக்கு இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். பெரும்பாலான மாணவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் கல்விக்கூடத்தில் முதல்வர் உட்பட ஆசிரியர்களெல்லாம் மாற்று சமூகத்தவராக இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமல்லவா? கல்விச் சேவை செய்ய வரும் முஸ்லீம்களை ஊக்குவித்து முன்னேறச் செய்ய வேண்டுமல்லவா?
முஸ்லிம்களுக்கு கல்வி கற்பிக்கிறோம் என்று அவர்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளும் கல்விக்கூடங்களின் உரிமையாளர்கள் பலர் கல்விப் பணியில் ஆர்வமுள்ள முஸ்லிம்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதில்லை.
அரசு உதவி பெரும் சில பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் சிலர் தாம் கேட்கும் பணத்தை மாற்று மதத்துக்காரர் கொடுத்தால் தகுதியுள்ள முஸ்லிமை புறக்கணித்து விட்டு மாற்று மதத்தவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நியமனம் செய்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய துரோகம்?
கிழக்கு கடற்கரை சாலையில் புராதனமான முஸ்லிம் ஊரில் நடந்து கொண்டிருக்கும் கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் பணிக்கு அதிக பணம் கொடுப்பவரை நியமிக்கும் போக்கு உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் யார் என்பதை பொருட்படுத்துவதில்லையாம்.
இப்படி பண வெறி பிடித்து அலைவதால் தங்கள் முன்னோர் நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்து சிறப்பாக நடத்திய கல்லூரியை இப்போதுள்ளவர்கள் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது.
சில பழைய கல்லூரிகள் முஸ்லிம் சமூகத்திற்கு சிறப்பான முறையில் கல்வி சேவையாற்றிக் கொண்டிருப்பதையும் நாம் பாராட்டி நன்றி கூற வேண்டும்.
ஆக முஸ்லிம்களில் கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் – குறிப்பாக பள்ளிக் கூடங்கள் நடத்துபவர்கள் நம்முடைய சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மற்ற சமுதாயத்தவர் நடத்தும் கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுகிற அளவுக்கு கல்வித்தரத்தை உயர்த்த முய்ற்சிக்க வேண்டும்.
முஸ்லிம் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
பணம் அதிகம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் உயர்வையும் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
***