ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Feb 02, 2015 Viewers: 1654 0
ஒரு நடிகையின் வாக்குமூலம்!
அன்றைய தேதி வரை பானு எந்த சினிமா ஷூட்டிங்கையும் நேரில் பார்த்தது கிடையாது. அவளுடைய உலகமே பள்ளிக்கூடமும், டான்ஸ் வகுப்புகளும் தான்.
மறுநாள் தோழிகளுடன் தான் கேமராவுக்கு முன் நின்று வசனம் பேசியதை உற்சாகமாகச் சொன்னாள் பானு.
"பானு, நீ சினிமாவில் நடிசீன்னா ஆம்ப்ளைங்கள்லாம் உன்னை தொட்டுக் கட்டி புடிச்செல்லாம் நடிப்பாங்களே“ என்று ஒரு தோழி வெறுப்பேற்ற உற்சாகமாக இருந்த பானுவின் முகம் மாறுகிறது. அப்படி ஆம்பளைங்க தொட்டு நடிக்கனும்னு சொன்னா எனக்கு சினிமாவே வேண்டாம். எனக்கு டான்ஸ் தான் முக்கியம்” என்று உறுதியாக சொல்லிவிட்டு வந்த பானு இன்று பல மொழிகளில் நம்பர் ஒன் ஹீரோயின் – பானுப்ரியா!
"அப்படி சொன்ன நானா இப்படி மாறியிருக்கேன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு..."
மேற்கண்ட வார்த்தைகள் பிரபல நடிகை பானுப்ரியாவின் பேட்டியில் இடம்பெற்ற சிறு பகுதி. 14.01.1991
தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில் வெளி வந்தது . 08.02.2012 தேதியிட்ட அதே வார இதழில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்த நடிகை கூறியுள்ள வார்த்தைகளில் பொதுவாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு.
ஆம் அல்லாஹ்வின் எல்லா அடியார்களிடமும் நல்வழி நடக்க வேண்டும் என்ற உணர்வும் தீயவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்ற உணர்வும் உள்ளது. நடிகர் நடிகைகளாயிருந்தாலும் அப்படித்தான்.
ஆனால் ஷைத்தான்கள் உலக ஆசாபாசங்களைக் காட்டி வழி கெடுக்கிறார்கள். ஷைத்தான்கள் என்று சொல்லபபடுவோரில் கண்ணுக்கு தெரியாத படைப்பான ஷைத்தான்களுடன் மனித ஷைத்தான்களும் அடங்குவர். மனித ஷைத்தான்கள் குறித்து சில இடங்களில் குர் ஆனில் கூறப்பட்டுள்ளது .
மனித ஷைத்தான்கள் என்றால் எப்படி? மறைத்து தவறு செய்பவன் மனிதன். தான் செய்தது தவறு என எண்ணி வருந்தவும் திருந்தவும் வாய்ப்புள்ளவன். இவன் பாவம் செய்யும் மனிதன். ஆனால் தவறு செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்து பிறரையும் பாவம் செய்ய தூண்டுபவன், தவறுகளையும் பாவங்களையும் அசிங்கங்களையும் அழகு படுத்தி நாகரீகமாக காட்டுபவன் மனித ஷைத்தான். எவ்வளவு பெருத்துப் போயிருக்கிறார்கள் .இவர்கள் இக்காலக் கட்டத்தில்!
இருவகை ஷைத்தான்களும் எப்படி தங்கள் கொள்கையைப் பரப்புகிறார்கள் என்பதை இறைவன் கூறுவதைப் பாருங்கள்:
"இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கி இருந்தோம் . அவர்களில் சிலர் ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை மற்ற சிலரிடம் இரகசியமாக அறிவிக்கிறார்கள். (நபியே)உம்முடைய இறைவன் நாடி இருந்தால் அதனை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களையும் அவர்கள் இட்டுக் கட்டுபவற்றையும் விட்டு விடுவீராக! அல்குர்ஆன் – 6:112
இந்த ஷைத்தான்களின் அலங்கார ஏமாற்றுப் பேச்சில் பலர் மயங்குவர் என்பதனையும் அடுத்த வசனத்திலேயே இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
"(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை ) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும், அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவாறு ஷைத்தான்கள் மயக்கினர்)." அல்குர்ஆன்- 6:113
மறுமையை நம்பாதவர்கள் அல்லது மறுமையை நம்பினாலும் அது பற்றி தெளிவோ உறுதியோ இல்லாதவர்கள். இவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிப்பதே முடிவானது என்பதால் ஷைத்தான்கள் ஆர்வமூட்டும் பணம், புகழ் ஆகியவற்றுக்காக நியாயப் படி தீமையாக தெரிந்ததையும் ஆர்வத்துடன் செய்ய ரம்பித்து விடுகின்றனர. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்த நடிகையும்.
நடிகைகள் மனித ஷைத்தான்களின் அலங்காரப் பேச்சுக்கு இரையானாலும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பெயரை வைத்து சில வேளை அதிகாரத்துக்கும் வந்து விடுகின்றனர்.
ஆனால் பல அப்பாவிப் பெண்கள் லாபம் எதுவும் இல்லாமல் மனித ஷைத்தான்களின் தீய பிரசாரத்துக்குப் பலியாகி ஒழுக்கங்கெட்டு நடக்கிறார்கள். இது தான் நாம் அதிகம் கவலைப் படவேண்டிய விஷயம்.
ஓர் ஆண் தன்னை தவறாக பார்ப்பதையும் தவறாக தொடுவதையும் வெறுப்பது தான் சரியான பெண்களின் நிலை. ஆனால் பைக்கில் பின்னால் உட்கார்ந்து கொண்டு காதலனின் தொடையில் கை வைத்துக்கொண்டும் பின் னாலிருந்து கட்டிப் பிடித்துக் கொண்டும் பலரும் பார்க்கும் விதத்தில் செல்லும் இளம் பெண்களிடம் இயல்பாகவே இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட நடத்தை வந்ததா என்றால் இல்லை. இவர்களுக்கு இது தவறு என்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது.
அந்த உணர்வை ஒதுக்கி வைத்து விட்டு இப்படி ஒழுங்கீனமாக இவர்கள் நடந்து கொள்வதற்கு காரணம் மனித ஷைத்தான்களின் பிரச்சாரம் தான். சினிமாவிலுள்ள ஷைத்தான்கள் இந்த ஒழுக்கங்கெட்ட நடத்தையை நாயகன் நாயகியின் செயலாக தொடர்ந்து காட்டிக் கொண்டிருகிறார்கள். மீடியவிலுள்ள ஷைத்தான்களும் இதை ஊக்குவிக்கிறார்கள்.
இதே கரணம் தான் சாமானிய பெண்கள் பலரிடம் பரவியுள்ள ஒழுக்கமற்ற ஒரு செயல்.தங்களின் இளவயது விடலை பருவத்து பெண் பிள்ளைகளுக்கு அங்கத்தின் பாகங்களை தெளிவாக வர்ணிக்கும் டீ சர்ட்டுகளையும் இறுக்கமான பேண்டுகளையும் மாட்டி வெளியில் அனுப்பி விடுகிறார்கள் .
இப்படி செய்யும் பெண்களுக்கு தெரியாதா? இந்த ஆடை அன்னிய ஆடவரின் தவறான எண்ணத்தை தூண்டும் , இளைஞர்களை வழிகெடுக்கும் என்பது? தெரியத்தான் செய்யும். தெரிந்தும் செய்வதற்கு காரணம்? இது நாகரீகம் என்பது போல் ஷைத்தான்களால் செய்யப்படும் பிரச்சாரம்.
ஆக பெரிய நடிகையாக இருந்தாலும் சாமானிய பெண்களாக இருந்தாலும் ஒழுக்கம் கெட்ட செயல் என்று தெரிந்திருந்தும் அதை செய்வதற்கு காரணம் தவறான ஆட்களால் மனித ஷைத்தான்களால் செய்யபடும் தவறான பிரச்சாரம், தவறான சித்தரிப்பு.
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil