குர்ஆன் | விளக்கம் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Mar 17, 2015 Viewers: 1948 0
ஈமான் கொள்ள மாட்டார்களா? – அல்குர்ஆன் 2:6 விளக்கவுரை
إِنَّ
الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا
يُؤْمِنُونَ
நிச்சயமாக நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:6)
இந்த வசனம், நிராகரிப்பாளர்களை எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் இறைநம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்கிறது. ஆனால் நடைமுறையில் நிராகரித்த பலர் ஈமான் கொண்டுள்ளார்கள். அப்படி ஈமான் கொள்ளும் நிலை உள்ளது என்று திருக்குர்ஆனிலேயே வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, “நாம் எவர்களுக்கு (இதற்க்கு முன்பு) வேதம் வளங்கியுல்ளோமோ அவர்கள் இதனை நம்புகிறார்கள். மேலும் இவர்களிலும் இதை நம்புவோர் இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 29:47) என்ற வசனம் நிராகரிப்பவர்களில் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு நம்பிக்கைக் கொள்பவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தியைக் கூறுகிறது.
இதைப்போல், நிராகரித்தவர்கள் தான் நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என்ற செய்தியை அல்குர்ஆனின் 4:94 வசனமும் கூறுகிறது. இந்தக் கருத்தை வேறு பல வசனங்களும் கூறுகின்றன.
அப்படியானால் 2:6 வசனத்தில் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்படுவதை எப்படி எடுத்துக் கொள்வது?
இந்த வசனத்தில் கூறப்படுபவர்கள், அறவே ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ்வினால் முடிவு செய்யப்பட துர்பாக்கியசாலிகள். இத்தகையவர்கள் குறித்து கீழ்காணும் வசனங்களில் அல்லாஹ் கூறுவது:
“நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) பாவிகள் என்று உமது இறைவனின் வாக்கு உருதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்,
அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும். நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரை!” (அல்குர்ஆன் 10:96,97)
அப்படியானால் 2:6 வசனத்திலும்,10:96,97 வசனங்களிலும், சொல்லப்படுபவர்கள் விஷயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
இந்த வசனங்களிலும் இதுபோன்று வேறு வசனங்களிலும் சொல்லப்படக்கூடிய, இறுதிவரை அறவே ஈமான் கொள்ளாத மனிதர்கள் எவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாது. இது அல்லாஹ்வின் அறிவில் உள்ளதாகும்.
நம்மைப் பொறுத்தவரை ஒரு முறை சொல்லி ஏற்காவிட்டாலும் நாம் இறைநம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களின் நிலை குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “(நபியே!) இச்செய்தியை அவர்கள் நம்பிக்கைக் கொள்ளாவிட்டால் அவர்களுக்காக துக்கமடைந்து நீர் உம்மை மாய்த்துக் கொள்வீர் போலும்!” (அல்குர்ஆன் 18:6)
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது நம் கடமை. ஓரிறை நம்பிக்கை எனும் உயர்ந்த்த நன்மையை ஏவிக்கொண்டிருக்க வேண்டும். இணைவைப்பு எனும் முதல் பெரும்பாவத்தை தடுத்து கொண்டு இருக்க வேண்டும். இதுவே நமது பணி!