மதங்கள் | கிறிஸ்துவம் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Dec 24, 2013 Viewers: 2457 0
அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்…
இறையருள் நிறைக!
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவது. நலம், நலமே பெறுக!
ஈசா (இயேசு) அவர்களை அன்னை மரியம் அவர்கள் திருமண உறவின்றி இறைவனின் வார்த்தை மூலம் அற்புதமாக பெற்றெடுத்தார்கள் என்று நீங்களும் நாங்களும் நம்புகிறோம்.
இப்படி பல ஒற்றுமைகள் நமக்குள் இருந்தாலும் சில அடிப்படை நம்பிக்கைகளில் வித்தியாசம் இருக்கின்றது. அத்தகைய வித்தியாசப்படும் நம்பிக்கைகளில் முக்கியமானவற்றை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.
கடவுள் ஒருவனே, அவனுக்கு பிள்ளைகள் இல்லை!
வணக்கத்துக்குத் தகுதியானவன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் மட்டுமே. அவனைத் தவிர வேறு கடவுளுமில்லை அவனுக்கு மகனென்று எவனும் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கை. இந்த கொள்கை குறித்து தேவன் தன இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பேசுகிறான். அத்தகைய வசனங்களில் ஒன்றை கீழே தருகிறேன்.
“வேதமுடையவர்களே! உங்கள் மதத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். இறைவன் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும் ) கூறாதீர்கள். மர்யமின் மகனாகிய ஈசா என்னும் மஸீஹ் இறைவனின் தூதரும் மர்யமிடம் அவன் போட்டானே அந்த வார்த்தையும், அவனிடமிருந்து வந்த உயிருமாவார். எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள்! மூன்று (கடவுள்) என்று கூறாதீர்கள். (இதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். (அதுவே) உங்களுக்குச் சிறந்ததாகும். இறைவன் ஒரே கடவுள் தான். அவனுக்கு மகன் இருப்பதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும். கடவுளே பொறுப்பேற்க போதுமானவன்.” (திருக்குர்ஆன் அத்தியாயம் 4, வசனம் 171).
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில், ஏசு என்ற ஈசா தீர்க்கதரிசி அவர்களை, தனிச்சிறப்புடன் ‘ஆகட்டும்’ என்ற தன் வார்த்தை மூலம் தகப்பநின்றி தான் உருவாக்கிய உயிர் என்று இறைவன் தெளிவு படுத்துகிறான். அப்படியிருந்தாலும் அவர் மரியமின் மகன் தானே தவிர இறைவனின் மகன் அல்ல என்பதையும் விளக்குகிறான். அத்துடன் மூன்று கடவுள் என்பது கிடையாது, ஒரே கடவுள் தான் இருக்கிறான் என்றும் அவனுக்கு மகன் இருக்கும் குறையிலிருந்து தூய்மையானவன் என்றும் குறிப்பிடுகிறான்.
இயேசு தீர்க்கதரிசி அவர்கள் தகப்பநின்றி பிறந்ததனால் கடவுளின் குமாரர்தான் என்று கூறுவதற்கு மறுப்பாக திருக்குர்ஆனில் தேவன் கூறும் அழகிய விளக்கத்தைப் பாருங்கள்!
” நிச்சயமாக தேவனிடம் இயேசுவுக்கு உதாரணம் ஆதமைப் போலாகும். அவரை மண்ணினால் படைத்து ‘ஆகு’ என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகிவிட்டார்.” (திருக்குர்ஆன் 3:59)
ஆதம் தாய் தகப்பநின்றி இறைவனால் படைக்கப்பட்டவர். அதனால் அவர் இறைவனின் குமாரர் என்று நாம் சொல்வதில்லை. அதுபோலவே தகப்பனின்றி தாயின் வயற்றில் இறைவனால் படைக்கப்பட்டவர் தான் இயேசு.எனவே இவர்களையும் இறைவனின் குமாரர் என்று சொல்லக்கூடாது என்பது நமக்கு எல்லாம் வல்ல இறைவன் சொல்லித் தருவதாகும்.
ஆகவே இயேசு அவர்கள் கடவுளை மட்டுமே வணங்க வேண்டுமென ப்றேட்சாரம் செய்தே தீர்க்கதரிசியாவார்கள். அவர்களை வணங்குவது அவர்கள் போதித்த கொள்கைக்கே எதிரானது என்பது தான் இஸ்லாத்தின் கொள்கை.
மறு உலகத்தில் விசாரணைக்காக மனிதர்கள் தேவன் முன் நிறுத்தப்படும் பொது இயேசுவிற்கும் தேவனுக்கும் நடைபெறும் உரையாடல் பற்றி தேவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அது பின் வருமாறு;
“மர்யமின் மகன் ஈசாவே! கடவுலயன்றி என்னையும் என் தாயாரையும் கூட இருக் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள் என்று நீர் தான் மக்களுக்குக் கூறினீரா என கடவுள் கேட்கும்போது, நீ தூயவன் எனக்குத் தகுதியில்லாததை நான் சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதனை நீ அறிந்திருப்பாய்! எனக்குள் உள்ளதை நீ அறிவாய் உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிபவன் என்று அவர் கூறுவார்.
நீ எனக்கு கட்டளையிட்டபடி, எனது ரட்சகனும் உங்களது ரத்ச்சகனுமாகிய இறைவனையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் வர்களுடன் இருந்தபோது அவர்களைப் பார்ப்பவனாக இருந்தேன், நீ என்னைக் கைப்பற்றியப் போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக ஆனாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காநிப்பவனாயிருக்கிறாய்.
அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகளே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்றும் அவர் கூறுவார்.” (திருக்குர்ஆன் 5:
116-118)
இயேசு என்ற இறைத்தூதர் ஈசா அவர்களை பற்றி இஸ்லாத்தின் நம்பிக்கை என்ன என்பது குறித்து சுருக்கமாக விளக்கவே மேற்கண்ட விவரங்களை நான் எழுதியுள்ளேன்.
அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புகள், கடவுளின் நாட்டத்துடன் அவர்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் கொல்லப்படவோ சிலுவையில் அரயப்படவோ இல்லை என்பன போன்ற விவரங்களை திருக்குர்ஆனில் அத்தியாயம் 19 வசனம்
16-37, 5: 110-115, 4: 157-159 ஆகிய இடங்களில் படிக்கவும், வேறு பல இடங்களிலும் அவர்கள் பற்றிக கூறப்பட்டுள்ளது .
எல்லாம் வல்ல இறைவன் நம்மை அவனது சத்திய வழியில் நடத்துவானாக!