மதங்கள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Mar 16, 2014 Viewers: 2675 0
தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா
ஒருவர் இஸ்லாத்தை ஏற்ப்பதைக் குறித்து தலைப்பில் கண்டவாறு தாய்மாதம் திரும்பியதாக கூறுவது சரியே! ஏனெனில், மனித இனத்தின் ஆதி தாய் தந்தையான ஹவ்வா, ஆதம் ஆகியோர் ஓர் இறைவனை வணங்கி வழிபட்டவர்களே! அவர்களிருவர் மூலம் மனித சமுதாயம் பல்கிப் பெருகி, பின் மனித கற்பனையின் மூலம் பல தெய்வ நம்பிக்கை உலகத்தில் தோன்றியது.
பல தெய்வ வழிபாடு எனும் அசத்தியத்தை ஒழித்து உண்மையான ஒரே தெய்வத்தை வழிபடும் சத்தியக் கொள்கையை எடுத்துரைப்பதற்காக எல்லா சமுதாயத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தன் தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான். அந்த வரிசையில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள்.
இந்து மதம் உள்ளிட்ட பழைய மதங்களில் தற்காலத்தில் பல தெய்வ நம்பிக்கை இருந்துகொண்டிருந்தாலும் அம்மதங்களின் வேதங்களில் ஓரிறைக் கொள்கை ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
எனவே இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற சத்திய மார்க்கமான இஸ்லாத்தை ஒருவர் ஏற்ப்பது என்பது தனது தாய் மதத்திற்கு திரும்பியதாகவே கூறப்பட வேண்டும்!
யுவன் ஷங்கர் ராஜா – சினிமா இசையமைப்பாளர். இசைஞானி என்று வர்ணிக்கப்பட்டு, ஏறத்தாழ நாற்பது வருடங்களாக தமிழ் சினிமா இசையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இளையராஜாவின் மகன்.
யுவனின் குடும்பப் பின்னனி, அவரது செல்வாக்கு, அவரது துறை ஆகியவற்றைக் கவனித்தால் அவர் இஸ்லாத்தில் இணைவது அத்தனை எழிதானதல்ல.
அவர் இறை மார்க்கத்தில் இணைந்திருக்கிறார் என்றால், சில வருடங்களாகவே சத்திய இஸ்லாம் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது அவரே தெரிவித்திருக்கும் செய்தி. அப்படியானால், இஸ்லாத்தைக் குறித்து தெளிவாக அறிந்தபின் நிதானத்துடன் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
“தாடி வளர்த்துக்கொண்டு, ஐந்து வேளை தொழுகை, குர்ஆன் என்று முற்றிலும் மாறியிருக்கும் அவரை சற்று வியப்போடு பார்க்கிறது அவரது உறவினர் வட்டாரம்” என்று அவரது இப்போதைய நிலை குறித்து நாழிதளில் செய்தி வெளியாகியுள்ளது. (தி இந்து (தமிழ்) பிப்ரவரி 14, 2014 – இந்து டாக்கீஸ் பகுதி, பக்கம் 3)
இவர் போன்றவர் இஸ்லாத்தில் இணைந்திருப்பது பல தரப்பினருக்கும் பல தகவல்களை உணர்த்துகிறது. ஒவ்வொரு தரப்பினரையும் அவர்கள் உணரவேண்டியத்தையும் பார்ப்போம்.
முஸ்லிம்கள் குறிப்பாக அழைப்பாளர்கள்:
நாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லும்போது, இவர்களுக்குச் சொல்லலாம், இவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்று பாகுபடுத்தக் கூடாது. ஏனென்றால், பகட்டு உலகமாகிய சினிமா உலகில் செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இளைஞர் சத்திய மார்க்கத்தை ஏற்று முஸ்லிமாவார் என்று நாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.
ஆனால் அது நடந்திருக்கிறது. யாரோ ஒரு முஸ்லிம் எதோ ஒரு விதத்தில் இஸ்லாத்தின் செய்தியை இவரிடம் சேர்த்ததுதான் இதற்க்குக் காரணம் எனும்போது நாம் ஏன் சிலருக்குச் சொல்லத் தேவையில்லை என்று பிரிக்க வேண்டும்?
இஸ்லாத்தை நல்ல முறையில் எத்தி வைத்த பின்பும் அலட்சியம் செய்துக்கொண்டும் எதிர்ப்புக் காட்டிக்கொண்டும் இருந்தவர்களிடம் கூட நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டும் கவலைப்பட்டுக் கொண்டும் இருந்தார்கள். அல்லாஹு கூறுகிறான்:
“(நபியே!) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்.” [அல்குர்ஆன் 26:3]
நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஒரு கடமை என்பதை உணர்ந்திருக்கிறோம். அப்படியானால் நன்மையிலேயே முதல் நன்மை அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்ப்பது. தீமையிலேயே மிகப்பெரிய தீமை அல்லாஹுவிற்கு இணைவைப்பது.
அப்படியானால், இந்த முதல் நன்மையை எத்தி வைப்பதிலும் பெரும் தீமையை தடுப்பதிலும் இவரிடம் சொல்லலாம் இவரிடம் சொல்ல வேண்டாம் என நாம் என் பிரிக்க வேண்டும்?
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒருவரிடம் நாம் இஸ்லாத்தை எத்தி வைத்த பின் அவர் சரியான முடிவை எடுப்பதற்கு தாமதப்படுத்தினால், நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது. ஏனென்றால், யுவன் ஷங்கர் ராஜா சில வருடங்களாகவே இஸ்லாம் குறித்து ஆய்வு செய்துவிட்டு இப்போதுதான் இணைந்திருப்பதாகக் கூறியுள்ளார். இதற்க்கு முன் மர்ஹூம் பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களும்கூட ஏறத்தாழ பத்து வருடம் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்த பின்புதான் இஸ்லாத்தில் இணைந்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே நாம் ஒருவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய பின்பு அவர் அப்போது ஏற்க்காவிட்டால் கூட பல வருடங்கள் கழித்துக்கூட சத்திய மார்க்கத்தில் இணையலாம் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும்!
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள்:
இஸ்லாத்தைப் பற்றி அது வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று விமர்சிப்பவர்கள் உண்டு, அதுபோல் அத்தகைய விமர்சனங்களின் பாதிப்புக்கு ஆளானவர்கள் உண்டு.
யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றிருப்பது இந்த விமர்சனம் மிகத் தவறானது என்பதற்கான ஆதாரமாக உள்ளது. இவரை யாரும் நிர்பந்திக்கவில்லை, படித்து ஆய்வுசெய்து நிதானத்துடந்தான் இம்மார்க்கத்தில் இணைந்துள்ளார்.
அதேபோல் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்றும் பிற்போக்குத் தனமானது என்றும் விமர்சிக்கப்படுவதும் தவறாகும். அப்படியிருந்தால், கல்வியறிவும் செல்வமும் செல்வாக்கும் கொண்ட இவர் முஸ்லிமாகியிருக்க மாட்டார். இவர் மட்டுமல்ல இந்த நாட்டிலும், உலகத்தின் எல்லா பாகங்களிலும் இவர் போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் இணைந்துகொண்டு தான் இருக்கின்றனர்.
இஸ்லாத்தைக் குறித்த அத்தனை தவறான விமர்சனங்களையும் தாண்டி இத்தகையவர்கள் இம்மார்கத்தை ஏற்கிறார்கள் என்றால், அதற்க்குக் காரணம், உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இஸ்லாத்தை அணுகுகிறார்கள் என்பதே!
ஆகவே இஸ்லாத்தைக் குறித்து தவறான விமர்சனம் செய்பவர்கள், அல்லது அத்தகைய விமர்சனங்களை நம்புபவர்கள் எல்லோரையும், நீங்கள் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறையும் சத்தியத்தை அறியவேண்டும் என்ற ஆவலுடன் நிதானத்தோடு படியுங்கள் என்று அழைக்கிறோம்!
அறிந்தும் ஏற்க்க மறுப்பவர்கள்:
இஸ்லாம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு அதுதான் சத்தியமான மார்க்கம் என்று அறிந்து வைத்துள்ள பலர் அதில் தங்களை இணைத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருகிறார்கள். இவ்வுலக வாழ்வை விட மறுவுலகத்தில் அடையவேண்டிய சொர்க்கமே முக்கியமானது, இவ்வுலகில் ஏற்ப்படும் சிறு சங்கடத்துக்கும் சிரமத்துக்கும் பயந்து நிரந்தர மறுமை வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது.
சகோதரர் யுவன் ஷங்கர் ராஜாவின் சூழ்நிளைப்படி அவர் இஸ்லாத்தை ஏற்றதால் பல சங்கடங்களையும் சிரமங்களையும் எதிர்கொண்டிருப்பார். ஆனால், அவர் சத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே அவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.
“மறுமையே மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும்;” [அல்குர்ஆன் 87:17]
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அவர் போன்றோர்:
படைக்கப்பட்டவற்றை வணங்கும் அசத்தியப் பாதையிலிருந்து விலகி படைத்தவனை வணங்கும் சத்திய மார்க்கத்திற்கு வந்துள்ளீர்கள். இது அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருளாகும். அல்லாஹ் கூறுகிறான்:
“நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் உங்களுக்கு இறைநம்பிக்கையின் பால் வழி காட்டியதால் அல்லாஹ் தான் உங்களுக்கு உபகாரம் செய்திருக்கிறான்.” [அல்குர்ஆன் 49:17]
உங்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் இந்த அருட்கொடையை பிறருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். பூர்விக முஸ்லிம்களைவிட உங்களுக்கே இஸ்லாத்தின் அருமையும் பலதெய்வ வழிபாட்டின் இழிநிலையும் நன்றாகத் தெரியும். ஆகவே,
“எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து நற்செயலையும் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹுவுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்)?” [அல்குர்ஆன் 41:33]
என்ற இறைவசனத்தை நடைமுறைப் படுத்துபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்! நாங்களும்தான்! அல்லாஹ் நல்லுதவி செய்யட்டும்.
(குறிப்பு: யுவன் ஷங்கர் ராஜாவின் புதிய பெயர் இதுவரை அறிவிக்கப்படாததால் அவரது பழைய பெயரே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
[அல்-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் மார்ச் 2014 இதழில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil