இமாம் ஷாபிஈ (ரஹ்)

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Sep 27, 2022 Viewers: 798


இமாம் ஷாபிஈ (ரஹ்)

இமாம் ஷாபிஈ (ரஹ்)

-அப்துர்ரஹ்மான் மன்பஈ


சத்திய இஸ்லாத்தின் மார்க்க கல்விக்கு சேவையாற்றிய வழிகாட்டிகளில் முதன்மையானவர்களில் ஒருவர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்.

இமாம் ஷாஃபிஈ அவர்களின் முழு பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ அல் குரஷி என்பதாகும்.குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர். இமாமவர்களின் வம்சாவழி தொடரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வம்சாவளி தொடரும் நபியவர்களின் நான்காம் தலைமுறை பாட்டனாரான அப்து மனாஃப் என்பவருடன் சந்திக்கின்றது.

பிறப்பும் சிறுபிராயமும்:

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 150ஆம் வருடம் பலஸ்தீனில் உள்ள அஸ்கலான் என்ற நகரத்திற்கு அருகில் உள்ள 'கஸ்ஸா' என்ற சிற்றூரில் பிறந்தார்கள்.இமாம் அவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் போதே அவர்களின் தந்தை மரணம் அடைந்துவிட்டார். அதன் பின் இமாம் அவர்கள் தன் பூர்வீக நிலத்தில் தன் குலத்தோடு வளர்ந்து ஆளாக வேண்டும் என்பதற்காக அவர்களின் தாயார் மக்காவுக்கு கொண்டுவந்துவிட்டார். அப்போது இமாம் அவர்களுக்கு இரண்டு வயதாகி இருந்தது.

முஸ்லிம்களில் சிறப்புக்குரிய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சிறு பிராயத்தில் ஏழ்மை நிலையில் தான் இமாமவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருந்தும் ஏழு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்துவிட்டார்கள். தமது பத்தாம் வயதில் அக்காலத்தில் முதன்மையான ஹதீஸ் நூலாக இருந்த இமாம் மாலிக் அவர்களின் 'முவத்தா' நூலை மனனம் செய்து விட்டார்கள்.

கல்வி கற்றல்:

அந்த சிறு பிராயத்திலேயே மக்காவில் இருந்த அறிஞர்களின் கல்வி சபைகளில் அமர்ந்து ஹதீஸ் மற்றும் மார்க்க சட்டங்களை படிக்கலானார்கள்.அப்போது அவர்களுக்கு அரபு மொழி மற்றும் கவிதைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.அதனால் அக்காலத்தில் அரபு மொழியை சிறப்பாக பேசுபவர்கள் என்று சொல்லப்படும் குலத்தவரான 'ஹூதைல்' சமூகத்தின் பகுதிக்கு சென்று அவர்களுடன் வசித்தார்கள்.

அங்கு அரபு மொழி அறிவை கற்று கொண்டதுடன் பல கவிஞர்களின் கவிதைகளையும் படித்தார்கள். அத்துடன் தாமும் கவிதை பாடும் திறனைப் பெற்றார்கள்.

மீண்டும் மார்க்கக் கல்வி:

இதன்பின்பு மார்க்கக் கல்வி பயில்வதில் ஆர்வம் ஏற்பட்டு மக்காவுக்கு திரும்பி மீண்டும் மார்க்க கல்வியை ஆர்வத்துடன் பயின்றார்கள். அக்காலத்தில் மக்காவில் இருந்த ஹதீஸ்கலை அறிஞர்கள் மற்றும் மார்க்க சட்ட அறிஞர்கள் ஆகியோரிடம் கல்வி கற்றார்கள்.

பின்பு அக்காலத்தில் மதினாவில் மிகப் பெரிய அறிஞராக பிரபலமாக இருந்த இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்பதற்காக சென்றார்கள். இமாம் மாலிக் இடம் முவத்தாவை மனப்பாடமாக படித்துக் காட்டினார்கள். பின்பு தொடர்ந்து இமாம் மாலிக்கின் மரணம்வரை நீண்டகாலம் அவர்களிடம் கல்வி பயின்றார்கள்.

இமாம் மாலிக் அவர்களின் கூடுதல் அன்பையும் பாராட்டுதலையும் பெற்ற சிறந்த மாணவராக திகழ்ந்தார்கள். ஹிஜ்ரி 179 ஆம் வருடம் இமாம் மாலிக் மரணமடைந்த பின் தமது சொந்த ஊரான மக்காவுக்கு திரும்பி சென்றார்கள்.

அரசுப்பணியில்:

மதீனாவிலிருந்து மக்கா வந்தபின் இமாமவர்களுக்கு 'நஜ்ரான்' பகுதியில் அரசு பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.அந்தப் பணியில் அவர்கள் மிக நேர்மையாக நடந்து கொண்டதால் அவர்களுக்கு மேல் இருந்த அதிகாரம் படைத்தவர் அரசுக்கு எதிராக சதி செய்பவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இமாமவர்களையும் சேர்த்து கலீஃபாவிடம் அனுப்பிவைத்தார்.

அக்காலகட்டத்தில் அப்பாஸிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் ஹாரூன் அர்ரஷீத் கலீஃபாவாக இருந்தார். தலைநகர் பக்தாதில் கலீஃபாவுக்கு முன்னிலையில் இமாமவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.இமாமவர்கள் தன் தரப்பு ஆதாரத்தை சிறப்பான முறையில் எடுத்து வைத்ததாலும் அந்த சபையில் இருந்த காளி முஹம்மது பின் அல் ஹஸன் இமாம் ஷாஃபி அவர்கள் பற்றி முன்னர் அறிந்திருந்ததாலும் இமாமவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்பினார்கள்.அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த வேறு ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டதாக வரலாற்றில் கூறப்படுகிறது.

ஹனஃபி மதரஸாவில் ஷாஃபிஈ:

இந்த நிகழ்வுக்கு பிறகு இமாம் ஷாஃபி அவர்கள் இமாம் முஹம்மது பின் ஹஸன் அவர்களின் கல்வி சபையில் அமர்ந்து கல்வி கற்றார்கள்.அத்துடன் தாம் ஒரு அறிஞராகவும் இருந்ததால் ஆசிரியருடனும் தன்னுடன் கல்வி சபையில் பங்கெடுக்கும் மாணவர்களுடனும் விவாத பிரதிவாதங்களில் ஈடுபடுவார்கள்.

இமாம் முஹம்மது பின் ஹஸன் அவர்கள் இமாம் அபூஹனீஃபாவின் மாணவர். இமாம் அபூஹனிஃபா உள்ளிட்ட இராக்கிய அறிஞர்களுக்கும் இமாம் மாலிக் உள்ளிட்ட ஹஜாஸிய அறிஞர்களுக்கும் இடையில் குர்ஆன் ஹதீஸிலிருந்து மார்க்க சட்டங்களை எடுப்பதில் வித்தியாசமான வழிமுறை உள்ளது.

முன்னவர்கள் ஆய்வுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பின்னவர்கள் எல்லாவற்றிலும் ஆதாரங்களையே சார்ந்து இருப்பவர்கள். இதன் காரணமாகவே இராக்கிய அறிஞர்கள் மற்றும் அவர்களின் வழிமுறையை கொண்டவர்களுக்கு 'அஸ்ஹாபுர் ரஃயி' (ஆய்வு சார்ந்தவர்கள்) என்றும் ஹிஜாஸிய அறிஞர்கள் மற்றும் அவர்களின் வழிமுறையை கொண்டவர்களுக்கு 'அஸ்ஹாபுல் ஹதீஸ்' (ஹதீஸ் சார்ந்தவர்கள்) என்றும் கூறப்படுகிறது.


இமாம் முஹம்மது பின் ஹஸன் அவர்கள் தமது ஆசிரியரான இமாம் அபூஹனீபா அவர்கள் கூறிய சட்டங்கள் மற்றும் ஆதாரங்களை எல்லாம் தொகுத்து நூலாக்கியவர் ஆவார்.

இதன்படி இமாம் ஷாஃபி அவர்கள் ஹிஜாஸ் அறிஞர்களில் முக்கியமானவரான இமாம் மாலிக் அவர்களிடமும் கல்வி பயின்றுள்ளார்கள். இராக்கிய அறிஞர்களில் முக்கியமானவரான இமாம் முஹம்மது பின் ஹசனிடமும் பாடம் படித்துள்ளார்கள்.

இதனால் இரு தரப்பினரின் ஆதாரங்களையும் கருத்துக்களையும் ஆய்வு கண்ணோட்டத்தையும் பற்றி தெரிந்து கொண்டார்கள்.இமாம் அவர்களே தனிச்சிறப்பு கொண்ட கல்வி ஆளுமையாக இருந்ததால் இரு வழிமுறைகளில் எந்த ஒன்றையும் சார்ந்தவராக ஆகிவிடவில்லை.

சிலகாலம் பக்தாதில் இமாம் முஹம்மது பின் ஹசன் அவர்களுடன் இருந்த பின் தனது சொந்த ஊரான புனித மக்காவுக்கு திரும்பிச் சென்றார்கள்.

புனித பூமியின் ஆசிரியர்:

மக்காவுக்கு வந்த பின் புனித தலத்தில் பாடம் நடத்தும் ஆசிரியரானார்கள். அதிகமான மக்கள் அவர்களிடம் பாடம் பயின்றார்கள்.இமாமவர்கள் அவர்களுக்கு மூத்த இமாம்களின் மார்க்க சட்டங்களை படித்தவர்களாக இருந்தாலும் தாமே ஒரு சிறந்த அறிஞராக இருந்ததால் சட்டங்களில் எந்த வழிமுறையையும் சாராமல் குர்ஆன் ஹதீஸ் படியான ஆய்வின் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்புகளை வழங்குபவர்களாக இருந்தார்கள்.

இக்காலகட்டத்தில் இமாமவர்கள் தமக்கு முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் யோசிக்காதிருந்த குர்ஆன் ஹதீஸிலிருந்து சட்டங்கள் எடுக்கும் வழி முறைகளை உருவாக்கினார்கள். அது பற்றி பேசினார்கள்.

இமாம் அவர்கள் புனித மக்காவில் இருந்ததால் உலகத்தின் பல பாகங்களிலிருந்து வரக்கூடிய அறிஞர்களும் மாணவர்களும் இமாமவர்களை சந்தித்து செல்வார்கள். இமாமவர்களின் சிறப்பு எல்லா இடங்களிலும் பரவியது. இவ்வாறு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் புனித தலத்தில் கல்வி பணியாற்றிய இமாமவர்கள் பக்தாத் செல்ல திட்டமிட்டார்கள்.

மீண்டும் பக்தாதில்:

முன்னர் முஹம்மது பின் ஹஸன் என்ற பெரிய இமாமுடன் இணைந்திருந்த சிறிய அறிஞராக இருந்த இமாமவர்கள் இப்போது புகழ்பெற்ற புனித நகரின் அறிஞராக பக்தாதினுள் நுழைந்தார்கள்.

இது ஹிஜ்ரி 195 வது வருடம்.இமாம் அவர்கள் இப்படி மீண்டும் பக்தாதுக்கு வந்த காரணம் அங்குதான் 'ஃபுகஹா' எனும் மார்க்க சட்டம் பயின்ற அறிஞர்கள் அதிகமாக இருந்தார்கள். எப்போதும் சட்டங்கள் குறித்த ஆய்வுகளும், விவாதங்களும் நடந்து கொண்டிருக்கும். அத்துடன் அஸ்ஹாபுல் ஹதீஸ், அஸ்ஹாபுல் ரஃயி என்ற இரு வழிமுறை கொண்ட அறிஞர்களும் இருந்தனர்.

இத்தகைய கல்விச் சூழலில் மார்க்கக்கல்வி பணி செய்ய வேண்டுமென பக்தாத் வந்து சேர்ந்தார்கள். இமாமவர்களின் அபரிமிதமான ஞானம், தனித்துவம் வாய்ந்த பாடம் நடத்தும் திறன், கவரும் பேச்சாற்றல் உள்ளிட்டவற்றினால் அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஈர்க்கப்பட்டனர். அவர்களின் புகழ் பல பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.

இக்காலகட்டத்தில்தான் அவர்கள் 'அர்ரிஸாலா' எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார்கள். இந்நூல் உசூலுல் ஃபிக்ஹ் மற்றும் உசூலுல் ஹதீஸ் குறித்த நூலாகும். இந்த இரு துறை தொடர்பாக முதலாவது எழுதப்பட்ட நூல் இதுவேயாகும். இவ்விரு துறைகள் குறித்து பின்னர் எழுதப்பட்ட எல்லா நூல்களுக்கும் இதுவே முன்மாதிரியாகும். இந்நூலை மக்காவில் இருக்கும் போதே இமாம் அவர்கள் எழுதி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு சில வருடங்கள் பக்தாதில் கல்வி பணியாற்றிய இமாம் அவர்கள் ஹிஜ்ரி 199 ஆம் வருடம் எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இதற்கு காரணம் ஹிஜ்ரி 198 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அப்பாஸிய கலீபா அப்துல்லாஹ் அல்மஃமூன் என்பவர் வழிகெட்ட முஅத்தஸிலா கொள்கை கொண்டவராகவும் அவர்களின் பிரச்சாரங்களை ஊக்குவிப்பவராகவும் இருந்தார். அவர்களின் தவறான கருத்துக்களை கண்டிக்கும் அஹ்லுல்சுன்னாவை சேர்ந்த அறிஞர்களிடம் கடுமையாகவும் நடந்து வந்தார்.

அவருடைய தவறான போக்கை அனுசரித்துப் போக முடியாது என்ற நிலை.. அதேநேரத்தில் எகிப்தில் ஆளுநராக இருந்த அல் அப்பாஸ் பின் அப்துல்லாஹ் அவர்கள் இமாம் அவர்களை எகிப்துக்கு வரும்படி அழைத்தார். இந்த அல் அப்பாஸ் என்பவர் நபி(ஸல்) அவர்களின் முப்பாட்டனாரான ஹாஷிமின் வம்சத்தில் பிறந்தவர். இமாம் ஷாஃபி அவர்கள் ஹாஷிமின் சகோதரரான முத்தலிபின் வம்சத்தை சேர்ந்தவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இமாம் அவர்கள் எகிப்து சென்றார்கள்.

எகிப்தில் கல்விச் சேவை:

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 199 இல் எகிப்து வந்தார்கள். மார்க்க கல்வியை பரப்புவதிலும் மார்க்க சட்டங்கள் குறித்த ஆய்வுகளிலும் ஈடுபட்டார்கள். மார்க்க சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களிலும் ஈடுபடுவார்கள்.

அக்காலத்தில் எகிப்தில் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையை சார்ந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். இமாம் மாலிக் அவர்களின் கூற்றுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பதும் ஹதீசுக்கு குறைந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதுமான நிலை இருந்தது.

இந்த நிலையை மாற்றுவதற்காக இமாம் மாலிக் அவர்களும் மனிதர் என்ற அடிப்படையில் மார்க்க ஆதாரத்துக்கு மாற்றமாக தவறுதலாக சில விஷயங்களை கூறி இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்கள். இதனால் அங்கிருந்த பலருடைய கோபத்தையும், பகைமையையும் சம்பாதித்தார்கள். இமாம் மாலிக் அவர்கள் இமாம் அவர்களின் ஆசிரியர் என்ற போதிலும் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இவ்வாறு செய்தார்கள்.

எழுத்துப்பணி:

இக்காலகட்டத்தில் இமாமவர்கள் அதிகமாக நூல்கள் எழுதினார்கள். அவ்வாறு எழுதிய நூல்களில் முக்கியமானவை கிதாபுல் உம்மு, முஸ்னதுஷ் ஷாஃபிஈ, இக்திலாஃபுல் ஹதீஸ், அஹ்காமுல்குர்ஆன் உள்ளிட்ட பல நூல்கள் அவர்கள் முன்னர் பக்தாதில் எழுதிய 'அர்ரிஸாலா' நூலை சரிபார்த்து மீண்டும் ஒருமுறை எகிப்தில் வைத்தும் எழுதினார்கள்.

'கிதாபுல் உம்மு' எனும் நூல் மார்க்க சட்டங்களை கூறி அவற்றுக்கான ஆதாரங்களை குர்ஆன் ஹதீஸிலிருந்து கூறக்கூடிய நூல். இதற்கு முன் இந்த முறையில் இதுபோன்று விரிவான நூல் எழுதப்பட்டதில்லை.

இறப்பு:

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மார்க்க கல்வியை தேடுவதிலும் கற்றுக் கொடுப்பதிலும் செலவிட்ட இமாம் ஷாஃபிஈ அவர்கள் ஹிஜ்ரி 204 ஆம் வருடம் தமது 54வது வயதில் எகிப்தில் மரணமடைந்தார்கள். மரணிப்பதற்கு சில காலம் முன்பு அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இமாமவர்கள் அதிகமாக வணக்கத்தில் ஈடுபடுபவர்களாகவும் பேணுதல் உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

மார்க்க ஞானத்துடன் அரபு மொழி அறிவு கொண்டவர்களாகவும், கவிதை இயற்றுபவர்களாகவும், சிறந்த முறையில் விவாதம் புரிபவர்களாகவும் திகழ்ந்தார்கள். இந்த விதத்தில் பெரிய மார்க்க மேதைகளில் தனிச்சிறப்பு கொண்ட ஒருவராக இமாம் ஷாஃபிஈ அவர்கள் திகழ்கிறார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!