ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7

ஆய்வுகள் | ஹதீஸ் by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Nov 13, 2022 Viewers: 491


ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7

ஹதீஸ் எப்படி புரிவது? - 7

மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil 

 

ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படர தொடங்கி விட்டால் உங்கள் சிறுவர்களை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில் அப்போதுதான் (பூமியெங்கும்) ஷைத்தான்கள் பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும் (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைக் சொல் உன் தண்ணீர் பையை சுறுக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை.(அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையேனும் குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (புகாரி 3280, 3304)

இந்த ஹதீஸில் இரவு ஆரம்பம் ஆகும் போது ஷைத்தான்கள் பரவுவதாகவும் அதனால் சிறு பிள்ளைகளுக்கு தீங்கு ஏற்படலாம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. இங்கு ஜின்கள் குறித்தே ஷைதான்கள் என்று சொல்லப்படுகிறது. (திருக்குர்ஆனில் அல்லாஹ் ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடுகிறான் 38: 37)

பொதுவாக அந்தி நேரத்தில் இருள் பரவ ஆரம்பிக்கும் போது ஜின்கள் பரவும் என்ற விஷயத்தை இந்த ஹதீஸ் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த சமயத்தில் சிறு பிள்ளைகள் வெளியில் நடமாடிக் கொண்டிருந்தால் இந்த ஜின்களால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது என்பதால் பிள்ளைகளை வீட்டினுள் தடுத்து வைக்கும் படி நபியவர்கள் கூறுகிறார்கள்.

ஜின்களை பொறுத்த வரை நம்மால் அவர்களை பார்க்க இயலாது. அல்லாஹு தஆலா ஷத்தானை குறித்து, அவனும் அவன் கூட்டத்தாரும் நீங்கள் அவர்களை பார்க்க முடியாதவாறு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் (அல்குர்ஆன 7: 27) என்று கூறுகிறான். ஷைத்தானும் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்தான்.

ஜின்களால் மனிதர்களுக்கு தொல்லை ஏற்படும் நிலை உள்ளது என்பதை உணர்த்தும் வேறு சில ஹதீஸ்கள் உள்ளன.

அபு சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு இள வயது நபித்தோழர், தன் வீட்டில் படுக்கை விரிப்பில் சுருண்டு கிடந்த ஒரு பெரிய பாம்பை தன் ஈட்டியால் குத்தினார். பிறகு அரையிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தது. அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)

உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம். அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று கூறினோம். அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்பு கோருங்கள்என்று சொன்னார்கள். பிறகு மதீனாவில் சில ஜின்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் (பாம்பு வடிவத்தில்) நீங்கள் கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்கு தென்பட்டால் அதைக் கொன்று விடுங்கள். ஏனெனில் அது ஷைத்தான்தான் என்றார்கள். (ஹதீஸ் சுருக்கம் நூல்: முஸ்லிம் 4502)

      இந்த ஹதீஸ் மூலம் ஜின்களால் மனிதருக்கு தீங்கு ஏற்படலாம் என்பது தெரிகிறது.

       உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவது: நான் நபி ஸல் அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே என்னுடைய தொழுகைகளில் ஏதோ ஒன்று குறுக்கிடுகிறது நான் தொழுவது என்ன ( அதில் ஓதுவது, செய்வது என்ன) என்றே எனக்குத் தெரிவதில்லை என்று கூறினேன். அதற்கவர்கள் அது ஷைத்தானாகும் என்று சொல்லி, என்னிடம் நெருங்கி வா என்றார்கள். நான் அவர்களை நெருங்கி என் உள்ளங்கால்கள் மீது உட்கார்ந்தேன். அப்போதவர்கள் என் நெஞ்சில் அடித்து என் வாயில் துப்பியவாறு, அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு! என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்து விட்டு  பின்பு நீ சென்று உன் பணியில் சேர்ந்து கொள் என்றார்கள். இதன் பிறகு சத்தியமாக அவன் (ஷைத்தான்) என்னிடம் வந்ததாகவே நான் கருதவில்லை. (நூல்: இப்னு மாஜா 3548 - ஷாமிலா பதிப்பு )

        இவ்வாறு வெவ்வேறு விதங்களில் ஜின்னு ஷைத்தான்கள் மனிதருக்கு தீங்கிழைக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறோம்.

       இதன்படி இருள் படரத் தொடங்கும் அந்தி நேரத்தில் ஷைத்தான்கள் பரவிக் கொண்டிருக்கும் போது சிறு பிள்ளைகளும் வெளியில் நடமாடிக் கொண்டிருந்தால் அந்த ஷைத்தான்களால் தீங்கு ஏற்படலாம்.

        இங்கு சிறியவருக்கு மட்டும் ஏன் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழலாம். சிறு பிள்ளைகள் பலவீனமானவர்களாக இருப்பதால் ஜின்கள் சீக்கிரத்தில் இடையூறு செய்து விட வாய்ப்புண்டு. அத்துடன் பெரியவர்கள் பலர் பாதுகாப்பு தேடுவதற்கான சூறாக்கள், துஆக்களை ஓதியிருப்பார்கள். சிறியவர்கள் அப்படி ஓதியிருக்க மாட்டார்கள்.

      அத்துடன் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜின்கள் அந்தி நேரத்தில் பரவும் போது மனிதர்கள் வசிக்கும் எல்லா பகுதிக்கும் நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது. நிறைய பகுதிகளுக்கு வராமலும் இருக்கும். வருகிற பகுதியிலும் தீங்கு செய்து விட்டுத்தான் செல்லும் என்றும் சொல்ல முடியாது. யாருக்காவது எப்போதாவது தீங்கு ஏற்பட்டு விடலாம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்த ஹசன், ஹுசைன் (ரலி) ஆகிய இருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடி ஓதிய பிரார்த்தனையின் கருத்தும் இந்த ஹதீசுக்கு விளக்கமாக அமைந்திருக்கிறது. அது:

      “உயீதுக்குமா பிகலிமாத்தில்லாஹித் தாம்மா மின் குல்லி ஷைத்தானின் வஹாம்மா, வமின் குல்லி ஐனின் லாம்மா

பொருள்: அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தான் மற்றும் விஷ ஜந்துக்களை விட்டும் மேலும் தீங்கு ஏற்படுத்தும் ஒவ்வொரு கண்ணை விட்டும் உங்களிருவருக்கும் பாதுகாப்புத் தேடுகிறேன்.

    இவ்வாறு பிரார்த்தித்த பின்பு நபியவர்கள், “நமது தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) ஆகிய இருவருக்கும் இந்த வார்த்தைகளை கொண்டே பாதுகாவல் தேடுவார்கள்என்றும் கூறினார்கள்.

               (நூல்: திர்மிதீ 2060, இப்னு மாஜா - ஷாமிலா பதிப்பு)