கேள்வி:

கேள்வி-7: சூனியத்தை நம்புவது இணைவைப்பா? – நுஃமான், பேர்ணாம்பட்டு.

Answer by admin On April 14, 2020

பதில்:

பதில்: சூனியம் பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. அவ்விரண்டிலும் சொல்லப்பட்டுள்ளதின் படி சூனியத்தை நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வாறு நம்ப மறுப்பவன் குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதை நிராகரிப்பதால் காஃபிர் என்ற நிலைக்கு சென்று விடுவான். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். சமீப காலமாக சிலர், சூனியத்தை குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளபடி நம்புபவர்களை இணைவைப்பவர்கள் என்று சொல்வதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குர்ஆனில் சூரத்துல் பகராவில் 102 வது வசனத்தில் சூனியத்தை ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றும் அதைக் கற்றுச் செயல்படுவதால் காஃபிர் என்ற நிலைக்கு கொண்டு சென்று விடும் என்றும் அதைக் கற்றுக் கொள்பவர்களுக்கு அது இடையூறாகத்தான் அமையும் என்றும் அத்தகையவருக்கு மறுமை பாக்கியமே கிடையாது என்றும் அல்லாஹுதஆலா கூறிக்காட்டுகிறான். (அந்த வசனத்தை முழுமையாகப் படிக்கவும்).

அதற்கு விளக்கமாகவும் வலுப்படுத்துகிற விதத்திலும் அமைந்துள்ளது நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் ஹதீஸ்.

சூனியத்தை நம்புபவர்கள் இணைவைப்பவர்கள் என்று கூறுபவர்களிடம் உதாரணத்திற்காக,

இமாம் புகாரி சூனியத்தை நம்பியிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை குறிப்பிடும் ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்களே என்று கேட்டால் ஆம், புகாரியும் இணைவைத்து விட்டார்கள் ஆனால் தெரியாமல் செய்து விட்டார்கள் என்பார்கள் இவர்கள்.

இவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய ஹதீஸை அறிவித்தவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் இணைவைப்பு என்ற இஸ்லாத்தை விட்டே வெளியேறுகிற காரியத்தை செய்பவர்களாக இருக்கவில்லை. அப்படியிருந்தால் அத்தகையவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் எல்லாம் ஏற்கத்தக்கவையல்ல. இவர்கள் சொல்கிறபடி புகாரி இமாம் தனது நூலில் அறிவித்துள்ளவற்றையெல்லாம் ஏற்கக் கூடாது என்ற நிலை ஏற்படும். இதுவே இவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதற்கு பெரிய அடையாளமாகும்.

அதே போல் மக்கா, மதீனாவின் இமாம்களெல்லாம் சூனியத்தை நம்புகிறார்களே அதனால் அவர்கள் இணைவைத்து வருவதால் அவர்களைப் பின்பற்றி தொழுவது கூடாது தானே என்று கேட்டால் அந்த இமாம்களுக்கு எங்களின் பிரச்சாரம் எட்டவில்லை. அதனால் அவர்களைப் பின்பற்றி தொழலாம் என்கிறார்கள்.

இந்த பதில் கொடுமையாக இருப்பதுடன் மூடத்தனமாகவும் உள்ளது. மக்கா, மதீனாவின் இமாம்கள் சூனியத்தை நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதான் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் வழிகேடர்கள் என்ற கருத்தையும் கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த சூனிய நிராகரிப்பாளர்கள் மக்கா, மதீனா இமாம்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் தங்களின் வழிகேடு இன்னும் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.