ஆய்வுகள்

June 19, 2023

அரஃபா பேருரை!

அறபா பேருரை

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

"உபதேசம் செய்யுங்கள் அது முஃமின்களுக்கு பயன் தரும்" என்ற அல்லாஹ்வின் உபதேசத்தை முன் நிறுத்தி இந்த கட்டுரையை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கிறேன். அறபா பேருரை என்பது உலகம் அழிகின்ற வரை அனைத்து மக்களுக்கும் ஓர் உபதேசமாகவும், வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த அழகிய வழி காட்டியாகவும் அமைந்துள்ளது. இதை வாசிக்க கூடிய அனைவரும் இதில் சொல்லக் கூடிய நபியவர்களின் உபதேசத்தை உள்ளத்தில் பதித்து, வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் தனது முதலாவது ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக பல்லாயிரக்கணக்கான ஸஹாபாக்களுடன் மதீனாவில் இருந்து மக்காவை நோக்கி வருகின்றார்கள்.

ஹஜ்ஜுடைய கடமைகளில் மிக முக்கியமான கடமை தான் பிறை ஒன்பது அன்று அறபா மைதானத்தில் தங்குவதாகும். அதனால் தான் ஹஜ் என்பது

அறபாவில் தங்குவதாகும் என்று நபியவர்கள் கூறினார்கள்.

அந்த அறபா பெருவெளியில்   கூடியிருந்த அனைத்து ஸஹாபாக்களுக்கும் உருக்கமான பேருரையை நபியவர்கள் நிகழ்த்தினார்கள்.

வந்திருந்த அனைவரும் கண் கலங்க, நபியவர்களின் உபதேசத்தை உன்னிப்பாக கவனித்து உள்ளத்தில் பதித்தார்கள். நபியவர்கள் இதுவரை செய்த தஃவாவின் சுருக்கத்தை இரத்தின சுருக்கமாக அந்த இடத்தில் வைத்து உபதேசித்தார்கள்.

நபியவர்கள் அறபா பெருவெளியில் செய்த உபதேசங்களை ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்போம்.

புகாரியில்  1739, 1741ம் இலக்கத்திலும்,முஸ்லிமில் 2334ம் ஹதீஸ் இலக்கத்திலும் பதியப் பட்ட நீண்ட ஒரே ஹதீஸில் இவைகள் சொல்லப்பட்டிருந்தாலும், தெளிவுக்காக சிறு சிறு தலைப்புகளில் மேலதிக விளக்கங்களுடன் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வருகிறேன்.

"நபியவர்கள் அறபா பெருவெளியில் சூரியன் உச்சி சாய்ந்தவுடன் (உரானா) என்ற பள்ள  தாக்கின்  மத்திய பகுதிக்கு வந்து தனது "கஸ்வா" எனும் ஒட்டகத்தில் மேலிருந்த வண்ணம் கூடியிருந்தவர்களை பார்த்து தனது கம்பீரமான குரலில் அனைவருக்கும் கேட்கும் படி பேசினார்கள். அவர்களுடைய சப்தத்தை அனைவருக்கும் அல்லாஹ் கேட்க வைத்தான் அல்ஹம்து லில்லாஹ்.! நபியவர்களின் சொல் சுருக்கமாக இருந்தாலும், அதன் பொருள் ஆழமானதாகவும், விரிவான தாகவும் இருக்கும்.


உயிர்கள் புனிதமானது...

.......................................,....,.............

"உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்.

புனிதம் நிறைந்த நகரம் இந்த மக்கா நகரம், அது போல இந்த துல்ஹஜ் மாதம் புனிதம் நிறைந்த மாதமாகும். அது போல இன்றைய துல்ஹஜ்ஜின் ஒன்பதாவது நாளும் புனிதம் நிறைந்த நாளாகும். என்று இவைகளின் முக்கியத்துவத்தையும், கண்ணியத்தையும் முன் வைத்து தனது உபதேசத்தை ஆரம்பித்தார்கள்.

முதலாவது உங்கள் உயிர்கள் புனிதமானது என்பதை முன் நிறுத்தி யாரையும் மன நோகும் படி ஏசாதீர்கள், யாருடைய மனதையும் நோகடிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள், யாருடைய மானத்தையும் சீரழிக்காதீர்கள், யாருடைய இரத்தத்தையும் அநியாயமாக ஓட்டாதீர்கள், யாரையும் அநியாயமாக கொலை செய்யாதீர்கள், இவைகள் அனைத்தும் உங்களுக்கு புனிதமானவைகள் என்று ஸஹாபாக்களை முன் நிறுத்தி அனைத்துலக மக்களுக்கும் நல்வழியை நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

அடுத்ததாக உங்கள் உடைமைகளும் உங்களுக்கு புனிதமானது என்ற வகையில் பிறருடைய சொத்துக்களையோ, பிறருடைய பொருட்களையோ, பிறருக்கு சொந்தமான அனைத்தும் உங்களுக்கு புனிதமானது அவைகளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அநியாயம் செய்து விடாதீர்கள். என்று ஸஹாபாக்களை முன் நிறுத்தி அனைத்துலக மக்களுக்கும் நல்வழியை நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

அறியாமை ஒழிக்கப் படல்...

.........................................................

அந்த உரையில் தொடர்ந்து "அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்கு கீழ் புதைக்கப்பட்ட வைகளாகும். என்று நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள்.

ஒரே வரியில் அறியாமைக்கால தவறான நடவடிக்கை அத்தனையையும் குழி தோண்டி புதைக்கும் படி நபியவர்கள் கூறிகிறார்கள்.

அதாவது அறியாமைக் காலத்தில்  பெண் குழந்தைகளை புதைக்கும் அறியாமையை கண்டித்தார்கள். உலகம் அழிகின்ற வரை குழந்தைகளை கொல்லக் கூடாது, அது பெரிய அநியாயம், பெண் குழந்தைகள் மூலம் சுபச் செய்தி என்ற நற்செய்தியை உறுதிப் படுத்தினார்கள்.

மேலும் பெண்களை படிக்க வைக்க வேண்டும்.

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.

பெண்களுடன் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அழகிய முறையில் உபதேசத்தை உள்ளடக்கினார்கள்.

மேலும் சின்ன, சின்ன பிரச்சினைகளை காரணம் காட்டி உங்களுக்குள் முரண்பட்டு, நீங்களே மாறி, மாறி எதிரிகளாக இருக்க கூடாது என்று அழகிய முறையில் உபதேசத்தை உள்ளடக்கினார்கள்.

அறியாமை காலத்தில் என்ன,என்ன முடநம்பிக்கைகள் இருந்ததோ அவை அனைத்தையும் திரும்ப செய்யக் கூடாது என்று சுருக்கமாக கூறினார்கள்.


பழி வாங்கல் தடை...

.........................................................

அந்த உரையில் தொடர்ந்து "அறியாமை காலத்தில் நிகழ்ந்த விட்ட உயிர் கொலைக்கான பழிவாங்கல் அனைத்தும் (என் பாதங்களுக்கு கீழே) புதைக்கப்பட்ட வைகளாகும். என்று நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ  ஸஅத் குலத்தாரிடையே பால் குடிப் பாலகனாக இருந்து வந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்று விட்டனர். என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறியாமைக் காலத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு, இறுதியில் கொலையில் போய் முடிந்தது விடும். அந்த கொலைக்காக பழிவாங்கல் நடக்கும். இப்படியே மாறி, மாறி கொலை கலாச்சாரமாக வந்ததை தான் நபியவர்கள் வேண்டாம் விட்டு விடுங்கள் என்று  கூறிகிறார்கள்.  உயிர்களை அநியாயமாக கொலை செய்யாதீர்கள், கொலை வெறி வேண்டாம் என அழகிய வழி காட்டலை உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.


வட்டி தடை...

.........................................................

அந்த உரையில் தொடர்ந்து "அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்கு கீழே புதைக்கப் படுகிறது. (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்புக்கு வர வேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நபியவர்கள் கூறினார்கள்.

வட்டியிலே தனது தொழிலை கவனம் செலுத்திய மக்களிடம் இனிமேல் வட்டியை தொழிலாக எடுக்காதீர்கள். அது மக்களை கொஞ்சம், கொஞ்சமாக கொன்று விடும். அநியாயமாக பிறருடைய இரத்தத்தை உறிஞ்சி குடிக்காதீர்கள். எளியவரின் ஏழ்மையை பயன் படுத்தி வலியவர்கள் தவறான முறையில் ஆதாயம் தேட வேண்டாம். வட்டி என்பது மறைமுகமாக மக்களை கொல்லக் கூடியதாகும். ஹலாலான முறையில் அனைவரும் உழைத்து சாப்பிடுங்கள் என்று அழகிய  தூய்மையான பொருளாதார திட்டத்தை உலக மக்களுக்கு நபியவர்கள் வழி காட்டுகிறார்கள்.

பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்...

........................................................

பெண்கள் விசயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால் நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில், முறையான உணவும், உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும். என்று அந்த உரையில் நபியவர்கள் கூறினார்கள்.

இந்த இடத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் மாறி, மாறி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக அழகாக நபியவர்கள் உபதேசிக்கிறார்கள்.

முதலாவதாக ஆண்களைப் பார்த்து பெண்கள் ஓர் அமானிதமாகும். அமானிதமான பெண்களை இறுதி வரை கண்ணியமாக பாதுகாக்க வேண்டும். மனைவி என்பதற்காக அருவருப்பாக ஏசுவதோ, அடிப்பதோ கூடாது. பிறருக்கு முன்னால் கண்டிக்க கூடாது. முகத்தில் அறையக் கூடாது. போன்ற உபதேசங்களை கூறியதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் அணிவதற்கான ஆடைகளை வாங்கி கொடுங்கள். உணவுகளையும் கண்ணியமாக கொடுத்து விடுங்கள் என்று கணவன்மார்களுக்கு உபதேசமாக கூறினார்கள்.

அதேபோல மனைவிமார்களுக்கு கூறும்போது கணவன் விரும்பாத எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். கணவருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். கற்பை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை அழகிய முறையில் வளர்த்தெடுங்கள் போன்ற சிறந்த குடும்பத்திற்கான வழியை  உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.


குர்ஆனைப் பற்றி பிடியுங்கள்...

.........................................................

அந்த உரையில் தொடர்ந்து "உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாக பற்றிக் கொண்டால் நீங்கள் ஒரு போதும் வழிதவறவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும் என்று நபியவர்கள் கூறினார்கள்.

உலக பொதுமறையாகவும், மக்களுக்கு நேர் வழி காட்ட கூடியதுமான இந்த குர்ஆன் சொல்லக் கூடிய உபதேசங்களை நாளாந்தம் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த வேண்டும். ஷிர்க்கான விசயங்களையும், வழிகேடுகளையும் விட்டு ஒதுங்கி, ஹலால், ஹராம் பேணி நடக்க வேண்டும். குர்ஆனின் போதனையின் அடிப்படையில், நபியவர்கள் வழி காட்டிய பிரகாரம் அமல்களை செய்ய வேண்டும். சரியாக குர்ஆனில் சொல்லப் பட்ட உபதேசங்களையும், ஹதீஸ்களில் சொல்லப்பட்ட தகவல்களையும் எடுத்து நடந்தால் இரு உலகிலும் வெற்றி பெறலாம் என்பதை உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.


இறைவன் சாட்சி...

.........................................................

அதனை தொடர்ந்து (மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப் படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள் ? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் "நீங்கள் (இறைச் செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்.(சமுதாயத்தார் மீது) அக்கறையுடன் நடந்து கொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்" என்று கூறினர். உடனே நபியவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்து விட்டுப் பிறகு அதை மக்களை நோக்கி தாழ்த்தி இறைவா ! இதற்கு நீயே சாட்சி என்று மூன்று முறை கூறினார்கள்.

தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளை நான் சரியாக செய்தேனா என்பதை அந்த மக்களை வைத்து நபியவர்கள் உறுதிப் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த உலகத்தில் அனைவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்புகள் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்ற தகவலை தன்னை முதன்மைப் படுத்தி உலக மக்களுக்கு எச்சரிக்கையாக கூறுகிறார்கள்.

அவரவர்களின் பணிகளை அவரவர்களால் சரியாக செய்யப்பட்டதா என்பதை தன்னோடு இருக்கும் மக்களை வைத்து சோதித்து பார்க்க வேண்டும் என்பதையும் உலக மக்கள் அனைவருக்கும் நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

சண்டையிட்டு கொள்ளாதீர்கள்...

........................................................

அந்த உரையில் தொடர்ந்து நபியவர்கள் கூறினார்கள்.

எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விடவேண்டாம்!'' எனக் கூறினார்கள்.

அதாவது மார்க்க ரீதியாகவோ, அல்லது அரசியல் ரீதியாகவோ பிரச்சினைப் பட்டு சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். மாறி, மாறி வெட்டிக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். என்று சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டி இறுதி வரை சேர்ந்திருங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

எத்தி வையுங்கள்...

.........................................................

அந்த உரையில் தொடர்ந்து நபியவர்கள் கூறினார்கள்.

"இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்."

இங்கு தஃவாவின் முக்கியத்துவத்தை நபியவர்கள் முன் வைக்கிறார்கள். முதலாவது மார்க்கத்தை தேடி படிக்க வேண்டும். அதேபோல நல்லவற்றை ஏவி தீயவற்றை தடுக்கும் பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். படிக்க கூடிய நல்ல விசயங்களை மாறி, மாறி எத்தி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.சிந்தனைகள் காலத்திற்கு காலம் வித்தியாசமாக இருக்கும். எனவே எத்தி வைக்கப் படுபவர்கள் ஹதீஸ்களை புரிந்து கொள்வதிலும் திறமையாக செயல் படுவார்கள்  என்று உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

வெட்டிக் கொள்ளாதீர்கள்.

......................................................,...

தொடர்ந்து அந்த உரையில் நபியவர்கள் கூறினார்கள்.

..."உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ!'' அல்லது 'அந்தோ பரிதாபமே!'' கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

மார்க்க ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ, வேறு எந்த காரணத்திற்காகவும் மாறி, மாறி வெட்டிக் கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறக் கூடிய துர்பாக்கிய நிலைக்கு போய்விடாதீர்கள். விட்டுக் கொடுத்து, மன்னித்து, தாராள தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் என்று அழகிய முறையில் உலக மக்களுக்கு வழிக் காட்டுகிறார்கள்.

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை...?

........................................................

"இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

"நாங்கள் நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜத்துல் வதாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். (நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை) ஹஜ்ஜத்துல் வதா ('விடை பெறும் 'ஹஜ்) என்பதன் கருத்தென்ன என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, (பிற்காலத்தில் தோன்றும் பெரும் பொய்யனான) அல்மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ்(அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் (அவனைப் பற்றித் தத்தம் சமுதாயத்தாருக்கு) எச்சரித்தனர். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையே தான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனுடைய (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இதை மும்முறை கூறினார்கள் - உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். புகாரி- 4402

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கையான செய்திகள் பரவலாக வந்திருந்தாலும் அந்த அறபா உரையிலும் தஜ்ஜாலை நினைவுப் படுத்தி உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

இறையச்சமுடையவர் சிறந்தவர்...

.........................................................

அந்த உரையில் தொடர்ந்து நபியவர்கள் கூறினார்கள்.

..." அஜமியை விட  அறபி சிறந்தவர் கிடையாது.  அறபியை விட  அஜமி சிறந்தவர் கிடையாது.

கருப்பரை விட வெள்ளையர் சிறந்தவர் கிடையாது.  வெள்ளையரை விட கருப்பர் சிறந்தவர் கிடையாது. இறையச்சத்தை கொண்டே தவிர. (முஸ்னத் அஹ்மது)

மனித சமத்துவத்தை நபியவர்கள் ஸஹாபாக்களை முன் நிறுத்தி அனைத்துலக மக்களுக்கும் நபியவர்கள் கூறிகிறார்கள். நிறத்தை வைத்தோ, அழகை வைத்தோ, மொழியை வைத்தோ, ஊரை வைத்தோ ஒருவரை சிறந்தவர் என்று எடை போட முடியாது. மாறாக யாரிடத்தில் இறையச்சம் இருக்கின்றதோ அவரே அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் சிறந்தவராவார்.

தலைவருக்கு கட்டுப்படல்...

........................................................

அந்த உரையில் தொடர்ந்து நபியவர்கள் கூறினார்கள்.

''உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள்.''

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஆதாரம் புகாரி- 693,7142)

கட்டுக்கோப்பான சமுதாயத்திடத்தில் கட்டுப்படல் என்பது மிக முக்கியம் என்பதை நபியவர்கள் முதலாவதாக உணர்த்துகிறார்கள். அடுத்ததாக பொருப்புதாரியாக நியமிக்கப்படுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு கீழ் செயல் பட வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள். பிரிந்து, பிரிந்து ஒற்றுமையை இழந்து, பலவீனப்பட்டு, சின்னாபின்னமாகி விடக் கூடாது என்று எச்சரித்து உலக மக்களுக்கு நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள்.

இப்படி தேவையான உபதேசங்களை இரத்தின சுருக்கமாக கூடி இருந்த அனைத்து மக்களுக்கும் நபியவர்கள் உபதேசம் செய்தார்கள். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே !


அறபா நாளில் அருளப்பட்ட வசனம்...

.........................................................

அறபா நாளில் நபியவர்களுக்கு அருளப்பட்ட முக்கியமான வசனம். அதே நேரம் இந்த வசனம் அருளப்பட்ட உடன் சில நபித்தோழர்கள் இதற்கு பிறகு எங்களுக்கு தேவையான வஹி வராதோ என்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.


"தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்.

யூதர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்'' என்று கூறினர். உமர்(ரலி), 'அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள்;

''இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்'' எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.

( புகாரி - 4606 )

முஸ்தலிபாவிற்கு செல்லல்...

.........................................................

அறபா உரை முடிந்த பிறகு மாலை நேரம் சூரியன் மறைந்த பின்னர் உஸாமா (ரலி) அவர்களை கஸ்வா எனும் ஒட்டகத்தில் தமக்கு பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக் கொண்டு முஸ்தலிபாவை நோக்கி நபியவர்கள் பயணமானார்கள்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !

*****

Admin
637 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions