மதங்கள்

December 27, 2023

சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

சத்திய  சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

             - திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான் 


    கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பது போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். 

     இந்தப் பேச்சுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எதிர்ப்புக் குரல்களும் ஆதரவுக் குரல்களும் கிளம்பின. சனாதனம் பற்றிய வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

           நாம் தர்மத்தின் வழியில் நின்று சனாதன தர்மம்  குறித்த சர்ச்சைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

     சனாதன தர்மம் என்பதற்கு நிரந்தரமான அறம் என்பது பொருள். அதாவது நித்தியமாக (நிலையாக) இருந்து வரும் நற்செயல் என்பது இதன் விளக்கம். இந்த நற்செயல்கள் குறித்து விளக்குபவர்கள் கூறும் சிலவற்றை பார்ப்போம்: 

      உண்மை உரைத்தல், பெரியோரை மதித்தல், சுத்தம் பேணுதல், உணவு உண்ணுதல் – எந்த உணவுகளை உண்ணலாம் எவற்றை உண்ணக்கூடாது?, அகிம்சை, ஒழுக்கமான வாழ்க்கை. 

       மேற்கண்ட நற்செயல்கள் பற்றி இந்து வேதங்கள் மற்றும்  வழிகாட்டு நூல்களில் பேசப்பட்டுள்ளன. (பார்க்க: https://thedal.info)

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள நற்செயல்களெல்லாம் எல்லா மதங்களிலும் சொல்லப் பட்டவைதான். சனாதன தர்மத்தை எதிர்ப்பதாக கூறும் நாத்திகர்களும் கூட இந்த நற்செயல்களை செயல்படுத்த வேண்டுமென்றுதான் சொல்கிறார்கள். 

       அப்படியானால் ஹிந்து மக்களில் அதிகமானோரும், நாத்திக சிந்தனை கொண்டவர்களும் சனாதன தர்மத்தை எதிர்பபது ஏன்?

      எதிர்ப்பதற்கு காரணம், வர்ண பேதம்தான்! அதாவது ஹிந்துக்களை நான்கு தரத்தில் பிரித்தது. பிராமணர், சத்ரியர், வைஷ்யர், சூத்திரர் என்று பிரித்து பிராமணர் கடவுளின் தலையிலிருந்தும் சத்ரியர் அவனது புஜத்திலிருந்தும் வைஷ்யர் அவனது தொடையிலிருந்தும் சூத்திரர் அவனது பாதத்திலிருந்தும் பிறந்ததாகவும் புனைந்து அதை மத நம்பிக்கையாகவே ஆக்கியது. 

       ஒவ்வொரு வர்ணத்தைச் சார்ந்தவர்களுக்கும் தனித்தனி தொழில்களை குறிப்பிட்டு அவர்கள் அதைத்தான் செய்ய வேண்டுமென்று கூறுவது. அத்துடன் சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் அவர்கள் தங்களுக்கு மேலிருக்கும் மூன்று வர்ணக்காரகளுக்கும் அடிமைகள் என்று சொல்லி இந்திய மக்களில் ஒரு பெரும் கூட்டத்தை கொடுமைப் படுத்துவது உள்ளிட்ட வர்ணாசிரம நடைமுறைதான் எதிர்க்கப்படுகிறது. 

        பலவீனப்படுத்தப்பட்ட மக்களை கீழ்த்தரமாக நடத்துவதும் அவர்கள் கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தார்கள் என்பதும் மதத்தில் மனிதர்களாக புகுத்திக் கொண்ட இடைச்செருகலாகும். 

       மதத்தில் மனிதர்களாக இடைச்செருகல் செய்துள்ள நடைமுறைகள் உண்டு என்பதை நீங்களே உங்களின் செயல் பாடுகள் மற்றும் பேச்சுக்கள் மூலமாக ஏற்றுக்கொள்கிறீர்கள். உதாரணத்துக்கு கணவன் இறந்து விட்டால் அவன் உடல் எரிக்கப்படும் நெருப்பில் அவனுடைய மனைவியும் விழுந்து எரிந்து சாக வேண்டும் என்பதை புனிதமான காரியம் என்று நம்பி செயல்படுத்திக் கொண்டிருந்தீர்கள். 

       ஆனால் அதை சில காலத்துக்கு முன்பு விட்டு விட்டீர்கள். இப்போது உடன்கட்டை ஏறுதல் என்ற இந்த செயல் கொடுமையான பாவம் என்றுதான் சொல்கிறீர்கள். இதே போலத்தான் வர்ணாசிரமும். இந்த வர்ண பாகுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் மனிதர்களால் தூய்மையான மத நம்பிக்கைக்குள் இடைச் செருகல் செய்யப்பட்டது. 

       ஆகவே இடைச் செருகல் செய்யப்பட்டு நுழைந்த உடன் கட்டை ஏறும் நடைமுறையை எப்படி தூக்கி எறிந்தீர்களோ அதே போல் நான்கு வர்ண நம்பிக்கையையும் அதன் படியான செயல்பாட்டையும் சனாதன தர்மத்திலிருந்து எடுத்து எறிந்து விடுங்கள். 

      அதன் பின்பு ஹிந்துக்களும் நாத்திகர்களும் சனாதன தர்மத்தை எதிர்க்க மாட்டார்கள். உண்மை உரைத்தல், பெரியோரை மதித்தல், சுத்தம் பேணுதல் உள்ளிட்ட சனாதன தர்மம் கூறும் நல்லறங்களை எந்த மனிதரும் எதிர்க்க மாட்டார்.

        நான்கு வர்ண பேதங்கள் குறுமதி கொண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை நம்பிக்கை என்பதற்கான ஆதாரங்கள். 

(அ) உலக மதங்கள் அனைத்திலும் அடிப்படை நம்பிக்கைகள் ஒன்று பட்டிருக்கின்றன. அதாவது கடவுள் ஒருவன் இருக்கிறான், வானவர்கள், வேதங்கள், இறைவனிடமிருந்து வழிகாட்டுதல் பெற்ற தீர்க்கதரிசிகள், மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் உள்ளிட்ட நம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் உள்ளன. 

      ஆனால் நம் நாட்டில் ஆரிய மதத்தில் மட்டும்தான் இந்த வர்ண பேத நம்பிக்கை உள்ளது. அப்படியானால் இது இவர்களாக உருவாக்கியது என்பது தெரிகிறதல்லவா? 

(ஆ) ஆரியர்கள் நமது இந்தியா மீது படையெடுத்து வந்து இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பு சுதந்திரமான மக்களாகத்தான் இருந்தார்கள். ஆரியர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் போராடிய ஒரு கூட்டத்தை அடக்கி அடிமைகளாக்கி விட்டார்கள். 

      அதற்கு முன்னர் தாங்கள் ஆரியர்களுக்கு அடிமைகள் என்று  நம்பிக் கொண்டிருந்திருப்பார்களா? இல்லைதானே! 

(இ) பூர்வீக மக்களை அடிமைப் படுத்திய ஆரியர்கள் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி நான்கு வர்ணங்கள் என்றும் அதில் நான்காம் வர்ணத்துக்காரர்கள் அடிமைகள் என்றும் திரும்பத் திரும்ப கூறி இந்த தவறான நம்பிக்கையை திணித்து விட்டார்கள். 

(ஈ) தமிழின் புராதன நூல்களில் இடம்பெறும் ‘ஒன்றே குலம்’ என்பது போன்ற கொள்கை மூலக்கங்கள் வர்ண பாகுபாடு முற்காலத்திலிருந்தே நல்ல மக்களால் ஏற்கப்படாமல் இருந்துள்ளது என்பதை தெளிவு படுத்துகின்றன. 

      ஆக இந்து மதத்தின் பெயரில் சொல்லப்படும் சனாதன தர்மத்தில் பல நற்செயல்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நான்கு வர்ண பாகுபாடும் சேர்ந்துள்ளதால் இந்து மக்களில் அதிகமானோரை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. ஆகையால் இடைச் செறுகலாய் வந்தவற்றை விட்டொழிக்க வேண்டும்.

 சன்மார்க்க சனாதன தர்மம் 

            எல்லாம் வல்ல இறைவன் மனிதரை பூமிக்கு இறக்கிய ஆரம்ப காலத்திலேயே இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் என்று கட்டளையிட்டு நல்லறங்கள் செய்வதற்கான வழிகாட்டுதலையும் வழங்கினான். மனிதர்கள் பல்கிப் பெருகி பல பகுதிகளிலும் வாழ்ந்த போது ஒவ்வொரு பகுதிக்கும் இறைத் தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான். 

         அந்த வரிசையில் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதம் திரு குர்ஆன். இதுவே மனித சமுதாயம் முழுமைக்கும் வழங்கப்பட்ட இறுதி வேதமாகும். 

        இதில் இறைவணக்கம் குறித்தும் நிலையான நல்லறம் (சனாதன தர்மம்) குறித்தும் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய சில வசனங்களை பார்ப்போம்: 

       ஒருவனே தேவன்:

        மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையோர் ஆகலாம்  (திரு குர்ஆன் 2: 21) 

           ஒன்றே குலம்:  

       மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திரு குர்ஆன் 49: 13 )‌

நிலையான நல்லறம் (சனாதன தர்மம்):  

               வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

         அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி (தவறான முறையில்) நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

        நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்     (திரு குர்ஆன் 6: 151 – 153)

        இதுபோல் மனித குலத்துக்கு தேவையான சன்மார்க்க நித்தியமான நல்லறங்கள் (சனாதன தர்மங்கள்) திரு குர்ஆனில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.    

     வாருங்கள் அனைவரும் இறைவனின் இறுதி வேதம் திரு குர்ஆன் கூறும் சன்மார்க்க சனாதன தர்மத்தை பின்பற்றுவோம்.

Admin
501 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions