ஆய்வுகள்

December 09, 2023

நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

- இமாமுத்தீன் ஹஸனி


இறப்பு இயற்கையானது:
இன்று, சில முஸ்லிம்கள் மற்ற மதங்களில் இருப்பது போன்று தங்கள் உறவுகளில் இறந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், நினைவு அஞ்சலி போஸ்டர்கள் போன்றவற்றை தெருக்களில், சாலைகளின் சுவர்களில் போன்ற இடங்களில் ஒட்டுவதையும், பேனர்கள் வைப்பதையும் பார்க்க முடிகிறது.



அதுபோன்று, என்றோ இறந்து போனவர்களுக்கு இன்று நினைவு நாள் கொண்டாடுகிறார்கள். அதை துக்க நாளாக அனுசரிக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு என நூறாம் ஆண்டு என்று கூட பல அரசியல் தலைவர்களின் இறந்த நாளை இன்றும் நினைவு நாள் என்ற பெயரில் அவருக்கு சிலை வைத்து, அதற்கு மாலை அனுவித்து, மரியாதை செலுத்தி வருகிறார்கள்.



இதுபோன்ற சடங்குகளை நாம் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு உரசிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பிக்கை கொண்ட, மார்க்கத்தை படித்த ஒரு முஸ்லிம் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்.



உயிரோடு இருப்பவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதையே மார்க்கம் கூடாது என்று தடுத்திருக்கும்போது, எப்பொழுதோ இறந்தவர்களுக்காக இறந்த நாள் கொண்டாடப்படுவதைப் பற்றி என்ன சொல்வது? 



இஸ்லாமில் எந்த ஒரு மனிதருக்காகவும், தலைவனுக்காகவும் ஏன் எந்த ஒரு இறைத் தூதருக்கும் கூட இதுவரை பிறந்த நாள், இறந்த நாள், நினைவு நாள் என்று எந்த ஒரு நாளும் கொண்டாடப்பட்டதில்லை. அப்படி சிலர் செய்கிறார்கள் என்றால் அது மார்க்க அடிப்படையில் தவறானதாகும். 



முன் சென்ற நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் நமக்கு குர்ஆனில் கூறி இருக்கிறான். அதுபோன்று அநியாயம் செய்த மக்கள் அழிக்கப்பட்ட வரலாறையும் சேர்த்து கூறி இருக்கிறான். காரணம், நாம் அதன் மூலம் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக. 



அல்லாஹ் கூறுகிறான் :

நிறைவான அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 12:111)



அதுபோன்று, நபி (ஸல்) அவர்களும் முன் வாழ்ந்த மக்களின் சம்பவங்களை, அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்களை நமக்கு விவரித்துள்ளார்கள். அதைக் கொண்டு நாம் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நமக்கு விவரித்துள்ளார்களே தவிர, அவர்களின் இறந்த நாளை கொண்டாடுவதற்காக அல்லது துக்க நாளாக அனுஷ்டிப்பதற்காக அல்ல.



ஏனெனில், மனிதனுக்கு ஏற்படுகிற பிறப்பும் இறப்பும் இயற்கையானதாகும். பிறந்தால் இறப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். மனிதனைத் தவிர உள்ள மற்ற எந்த ஒரு உயிரினமும் இதை கண்டு கொள்வது கிடையாது. பெரிது படுத்துவது கிடையாது. 



ஏனெனில், பிறப்பும் இறப்பும் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவர் உலகத்தை விட்டுப் பிரியும் போது இன்னொருவர் அதில் நுழைகிறார். ஒருவருக்கு இரங்கல் செய்தி சொல்லப்படும் போது இன்னொருவருக்கு சுபச்செய்தி சொல்லப்படுகிறது. ஒருவர் மண்ணறைக்கு கொண்டு செல்லப்படும்போது இன்னொருவர் மாளிகைக்கு கொண்டு வரப்படுகிறார். ஒருவருக்கு பெயர் சூட்டப்படுகிறது; இன்னொருவருக்கு பெயர் மாற்றப்படுகிறது (ஜனாசா).



இருவருக்கும் உள்ள வித்தியாசம், ஒருவர் பிறக்கும் போது சிரிக்கிறோம்; இன்னொருவர் இறக்கும் போது அழுகிறோம். அதுவும் மூன்று நாள்கள் சென்று விட்டால் மரணித்தவரையும் மரணத்தையும் மறந்து விடுகிறோம். இதுதான் எதார்த்தம். 



இன்று, நம்மில் எத்தனையோ பேர் இளம் வயதில் விபத்தால், நெஞ்சு வழியால் திடீர் மரணம் அடைகிறார்கள். அந்த நிகழ்வை நாம் யோசித்தும் பார்த்திருக்க மாட்டோம். அவரின் இழப்பானது அவரது குடும்பத்தையும் அந்த ஊர் மக்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கும்.



ஆனால், பரிதாபம்! சில நாட்கள் சென்று விட்டால் மரணித்தவரையும் மறந்து விடுகிறோம்; மரண நிகழ்வையும் மறந்து விட்டு மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறோம். 



இப்படி இருக்கையில் அவர் இறந்த தினத்தை மட்டும் நினைவில் வைத்து அதில் சில சடங்குகளை, அனுஷ்டானங்களை மட்டும் செய்து விட்டால் அவரை நினைவு கூர்ந்தவர்களாக ஆகிவிடுவோமா? அல்லது நாம் செய்யக் கூடிய இந்த செயல்கள் அவரின் மண்ணறை வாழ்க்கைக்கு ஏதும் பலனளிக்குமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.



எதனால் அவர் மரணித்தார்? எப்படி மரணித்தார்? மரணத்திற்கான காரணம் என்ன? எந்த இடத்தில், எந்த நேரத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் மரணித்தார்? அவருக்கு ஏற்பட்டது போன்ற மரணம் எனக்கு ஏற்படாதா? அல்லது மரணமே எனக்கு நிகழாதா? அல்லது இந்த வயதில் தான் நான் மரணிப்பேன் என்று ஏதும் இறைவனிடத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோமா?



இதுபோன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுதான் அவரை நாம் உண்மையாக நினைவு கூறுகிறோம் என்பதற்கான அடையாளம். 



அவர், ஒருவேளை கெட்டவராக வாழ்ந்து இறந்திருந்தால் அதுபோன்ற வாழ்க்கையை நாம் வாழ்வதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். அவர் நல்லவராக இருந்தால் அதுபோன்ற வாழ்க்கையை நாமும் வாழ முயற்சி செய்ய வேண்டும்; அவரை ஒரு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 



அதுபோன்று, அவர்களின் மரணத்தையும் மரண நிகழ்வுகளையும் படிப்பினையாக வைத்து ஒவ்வொரு நாளும் அதன் மூலம் நல்லுணர்வு பெற வேண்டும். நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காலையில் எழும்போதும் இரவில் கண் மூடும் போதும் இதை சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை பார்க்கலாம்.



அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள். 

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) 

'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். நூல் : புகாரி-6416.



இறப்பு ஓர் பேரிழப்பு:


உண்மையில் மரணம் என்பது தாங்க முடியாத பேரிழப்பாகும். எதைக்கொண்டும் அதை ஈடுகட்ட முடியாது. இறப்புச் செய்தி என்பது அவரை சார்ந்தவர்களுக்கு கண்டிப்பாக மிகுந்த மனவேதனையை கொடுக்கும். அது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத துக்கமாகத்தான் இருக்கும். 



இருப்பினும் நாம் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பிக்கை கொண்டவர்கள். விதியை நம்பியவர்கள். மரணம் எப்போதும் யாருக்கும் வரும் என்பதை நம்பியவர்கள். உலகம் தற்காலிகமானது, மறுமைதான் நிரந்தரமானது என்பதை நம்பியவர்கள். நாம் மறுமைக்காக படைக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கையில் உலகில் வாழக்கூடியவர்கள். நம்முடைய உடலும் உயிரும் அல்லாஹ்விற்கு சொந்தமானது என்பதை நம்பியவர்கள்.



எனவே, நம்மில் ஒருவர் இறந்தால் அவருக்காக அழுகிறோம். அனுதாபம் தெரிவிக்கிறோம். அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுகிறோம். அவருடைய இறுதி கடமைகளை நிறைவேற்றுகிறோம். அவரை குளிப்பாட்டுவது, கஃபன் செய்வது, அவருக்காக தொழுகை நடத்தி துஆ செய்வது, அவரை நல்லடக்கம் செய்வது போன்ற நன்மையான காரியங்களில் ஈடுபடுகிறோம். 



இதுதான் மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்த அழகிய, அமைதியான, பண்பான வழிகாட்டுதல்கள் ஆகும்.



இதை விட்டுவிட்டு அவருக்காக ஒப்பாரி வைப்பது, நெஞ்சில் அடித்துக்கொள்வது, அவருக்கு மாலை போடுவது, அவர் இறந்த தினத்தில் அவருக்காக ஃபாத்திஹா ஓதுவது, நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டுவது, நினைவு நாள் என்ற பெயரில் சடங்குகள் செய்வது போன்ற மார்க்கத்திற்கு முரணான, வீண்விரயமான, பலனில்லாத செயல்களை நாம் செய்யக் கூடாது.



இப்படி செய்வதால் இறந்தவருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவது கிடையாது. இதுபோன்ற சடங்கான செயல்களை தவிர்த்து விட்டு அவருக்கு எது நன்மை தருமோ அந்த காரியங்களில் நாம் ஈடுபட வேண்டும்.



உதாரணமாக, அவருக்காக தர்மங்கள் செய்வது, அவர் சார்பாக ஹஜ் இன்னும் உம்ரா செய்வது, அவர் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட நோன்புகளை அவர் சார்பாக நிறைவேற்றுவது, அவருடைய கடனை அடைப்பது, அவருடைய பாவமன்னிப்பிற்காக துஆ செய்வது, குறிப்பாக அவருடைய நல்ல பிள்ளைகள் அவருக்காக துஆ செய்வது.



அவருடைய பாவமன்னிப்பிற்காகவும், கப்ர் -மண்ணறை வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும், கேள்வி கணக்கு எளிதாக்கப்படுவதற்காகவும், அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், சொர்க்கத்தில் அவருக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு சிறந்த பகரம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் துஆ செய்ய வேண்டும்.



இதுபோன்ற நல்ல காரியங்கள்தான் இறந்தவருக்கு பலன் தரும். அதுதான் நாம் அவருக்கு செய்யவேண்டிய அஞ்சலியும், மரியாதையும் கூட. இதுதான் உண்மையான நினைவு கூறுதலுமாகும்.



அல்லாஹ், நமக்கு நல்ல மரணத்தை தருவானாக! நல்லவர்களுடன் நம்மை சேர்ப்பானாக!



நான் முஸ்லிமாக இருக்கும் நிலையில் என்னை உயிர் கைப்பற்றிக்கொள்! இன்னும், நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு! (அல்குர்ஆன் 12:101)

***

Admin
666 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions