குர்ஆன்

November 14, 2023

குகை தோழர்களின் கதை

குகை தோழர்களின் கதை

-ஷைய்ஹ் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது!


ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே வழிபடுவதா?” என சிந்தித்தனர். இதன் முடிவாக சிலை வணக்கம் கூடாது என்பதை உணர்ந்தனர். உண்மையான மார்க்கத்தின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைத்தது.


சிலை வணக்கம் கூடாது என்ற கொள்கையில் உறுதிக்கொண்ட இளைஞர்கள் ஓரணியானார்கள். இவர்கள் வழிபாட்டைப் புறக்கணித்தது மன்னருக்கு எட்டியது. விசாரணையும் நடந்தது. அப்போது அந்த இளைஞர்கள் உறுதியாக நின்றனர். எம்மைப் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே! அவனைத் தவிர வேறு எவரையும், எதையும் நாம் வணங்க மாட்டோம் எனக் கூறினர். இந்த இளைஞர்கள் முக்கியப் பிரமுகர்களின் பிள்ளைகள். எனவே அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. நீங்கள் உங்கள் புதிய மதத்திலிருந்து மீண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர்.


அந்த இளைஞர்கள் ஒன்றுகூடி சிந்தித்தனர். இந்த ஊரில் உண்மையான மார்க்கத்துடன் இருந்தால் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ வேண்டுமென்றால் உண்மையான மார்க்கத்தை விட்டுவிட வேண்டும்… என்ன செய்வது? உயிரையும் விட முடியாது. உயிரினும் மேலான மார்க்கத்தையும் விட முடியாது. எனவே எமது ஊர், உறவுகள், உலக இன்பங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுவது என முடிவு செய்தனர்.


அவர்கள் விளையாடுவது போல் பாவனை செய்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஊர் எல்லையைத் தாண்டினர். அதன்பின் விரைவாக தமது பயணத்தைத் தொடர்ந்தனர். போகும் வழியில் அவர்களுடன் ஒரு நண்பரும் இணைந்து கொண்டார். அவருடன் அவரது நாயும் இணைந்து கொண்டது. நல்லவர்களுடன் இணைந்து கொண்டதால் அந்த நாய் பற்றியும் குர்ஆன் பேசுகிறது பாருங்கள்.


அவர்கள் தமது தியாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். ஊரில் செழிப்போடு வாழ்ந்தவர்கள் எங்கு செல்வது என்றே இலக்கு இல்லாமல் திரிகின்றனர். அவர்களின் ஒரே இலட்சியமாக உண்மை மார்க்கத்தோடு வாழ வேண்டும். உலக இன்பங்கள் அனைத்தையும் இழந்தாலும் இஸ்லாத்தை இழந்து விடக் கூடாது என்ற ஏக்கம்! சுவனமே அவர்களின் இலக்காக இருந்தது. வழியில் ஒரு குகை அவர்களுக்குத் தென்பட்டது. தாம் தங்குவதற்கு ஏற்ற இடம் என அதை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.


அந்த குகை அவர்களுக்குப் பாதுகாப்பானதாகப்பட்டது. உள்ளே இருளும் இல்லை, சூரியனின் சூடும் இல்லை. காற்றோட்டமும் இருந்தது. எனவே அந்தக் குகையைத் தாம் தங்குவதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தனர். நாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள் இன்று குகைக்குள் அனாதரவாக இருந்தனர். அவர்களுக்கு மார்க்கம்தான் பெரிதாகத் தெரிந்தது. அல்லாஹ்வின் அருளுக்காக அவனிடம் பிரார்த்தித்தனர். அல்லாஹ் ஆழ்ந்த உறக்கத்தை வழங்கி அவர்களுக்கு அருள் செய்தான்.


பயணத்தின் களைப்பால் அனைவரும் சற்று ஓய்வெடுப்பதற்காக உறங்கினர். ஒருநாள் இருநாள் அல்ல, ஒருமாதம் இருமாதங்கள் அல்ல, ஓரிரு வருடங்களும் அல்ல. 300 வருடங்கள் சூழ்ந்த உறக்கம்! பஞ்சு மெத்தையில் படுத்தாலும் ஒரே அமைப்பில் தொடர்ந்து படுத்தால் உடல் புண்ணாகி விடும். எனவே அல்லாஹ் அவர்களைப் புரண்டு புரண்டு படுக்கச் செய்தான். அவர்களின் நாய் கால்களை விரித்துக் கொண்டு காவல் காப்பது போல் உறங்கியது. அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், பார்த்தால் விழித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றும் விதத்தில் அவர்களது தோற்றம் இருந்தது. யாரும் பார்த்தால் பயப்படும் விதத்திலும் அவர்கள் காட்சி தந்தனர். இதுவெல்லாம் அவர்களைப் பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடுகளாகும்.


300 வருடங்கள் கழிந்தபின் அவர்கள் விழித்தனர். அவர்களின் உடலில் நீண்டகாலம் கழிந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கவில்லை. குகையில் இருந்தவர்களுக்கு வெளியில் ஏற்பட்ட மாற்றங்கள் தெரியாது.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தவர்கள், “நாம் எவ்வளவு நேரம் உறங்கி இருப்போம்?” என்று கேட்டுக் கொண்டனர். நேரம் பார்க்க கடிகாரமோ, நாள் பார்க்க நாட்காட்டியோ இல்லை அல்லவா? எனவே ஒருநாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி உறங்கி இருப்போம் என்று பேசிக் கொண்டனர். சரியாக தீர்மானிக்க முடியாத போது, “சரி சரி விடுங்கள். நாம் எவ்வளவு நேரம் உறங்கினோம் என்பது எங்கள் இறைவனுக்குத் தான் தெரியும்” என்று அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


உறங்கி எழுந்தவர்களுக்கு உணவு தேவைப்பட்டது. எனவே அவர்கள் கையில் எடுத்து வந்த பணத்தை ஒருவரிடம் கொடுத்து, “மிகக்கவனமாக வெளியில் சென்று உணவு வாங்கிவாருங்கள். இருப்பதில் நல்ல உணவை எடுத்து வாருங்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். மாட்டிக் கொண்டால் கொன்று விடுவார்கள் அல்லது பழைய மார்க்கத்திற்கே மாற்றி விடுவார்கள். அப்படி நடந்து விட்டால் நமது மறுவாழ்வு அழிந்து விடும். எனவே கவனமாகச் சென்று வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினர்.


அவரும் பணத்தை எடுத்துக் கொண்டு கவனமாக சந்தைக்குச் சென்றார். பொருட்களை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் காசைக் கொடுத்தார். கடைக்காரர் காசை ஆச்சர்யத்துடன் பார்த்தார். பணத்தைக் கொடுத்தவரையும் வித்தியாசமாகப் பார்த்தார்.


காசை வாங்கிய கடைக்காரர் அதையும் பொருள் வாங்க வந்த இளைஞரையும் மாறி மாறிப் பார்த்தார். பின்னர் மெதுவாக “உனக்கு புதையல் ஏதும் கிடைத்ததா?” என மெல்லிய தொனியில் கேட்டார். அந்த இளைஞர் “அப்படி ஒன்றும் இல்லை” என்று மறுத்தார். கடைக்காரர் விடவில்லை. “உனக்குப் புதையல் ஏதோ கிடைத்துள்ளது. உண்மையைச் சொல்லு” எனக் கேட்டபோது “இல்லை இல்லை நேற்றுத்தான் இதை நான் வீட்டில் இருந்து எடுத்து வந்தேன்” எனக் கூறவே கடைக்காரன் சத்தமாகச் சிரித்தான். “என்னை என்ன முட்டாள் என நினைத்தாயா?


இது 300 வருடங்களுக்கு முந்தைய காலத்து நாணயம். இதை நேற்றுத்தான் வீட்டில் இருந்து எடுத்து வந்தேன் என்கிறாயா?” என்ற தொனியில் அவன் கேள்விகளை அடுக்க, அங்கே மக்கள் கூடிவிட்டார்கள். இளைஞருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரகசியமாக எவருக்கும் தெரியாமல் உணவு வாங்க வந்தேன். இப்படி மாட்டிக் கொண்டேனே என்கிற கவலை அவருக்கு. ஈற்றில் அந்த இளைஞரை அரசரிடம் அழைத்துச் செல்வது என்று முடிவானது! எந்த அரசனிடமிருந்து தப்புவதற்காக ஊரைவிட்டு ஓடினோமோ அதே அரசனிடம் மீண்டும் மாட்டிக் கொள்வதா? என்ற கவலை அவருக்கு. அந்த இளைஞர் அந்த பிரதேசத்தின் அரசப் பொறுப்புதாரிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டார். தான் தப்பிவந்த மன்னனின் பொறுப்பாளரிடம் தான் தான் வந்திருப்பதாக இளைஞர் அஞ்சினார்.


ஆனால் அந்த அரசியல் பொறுப்புதாரி நல்லவராகவும் சிலை வணக்கத்தை எதிர்ப்பவராகவும் இருந்தார். இளைஞர் தனது கதையைக் கூறினார். தாங்கள் தப்பிவந்த மன்னர் கதையையும் கூறினார். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேக முடிச்சுகள் அவிழ ஆரம்பித்தன.அந்த இளைஞர் அரசர்கள் வந்திருந்தனர். இப்போது நாட்டில் சிலை வணக்கத்திற்கு எதிரான மனநிலை இருந்தது. முன்னூறு வருடத்திற்குள் மக்களின் மார்க்க நிலையும் மாறி இருந்தது. அந்த இளைஞர் 300 வருடங்கள் தூங்கியுள்ளார் என்பதை அறிந்த கவர்னரும் மக்களும் அவரைப் பெரிதும் மதித்தனர்.


குகையில் ஏனையவர்களையும் அழைத்துவர கவர்னரும் மக்களும் கூட்டமாக குகை நோக்கி வந்தனர். குகைக்கு அருகில் வந்த போது அந்த இளைஞர், “நாம் எல்லோரும் சென்றால் அவர்கள் பயந்து விடுவார்கள். முதலில் நான் போய் நடந்திருப்பது என்ன என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன். நீங்கள் இங்கேயே இருங்கள். பின்னர் நீங்கள் வரலாம்” என்று கூறினார். மக்கள் வெளியில் நின்றனர். இளைஞர் அவர்களிடம் சென்று நடந்தவற்றை விவரித்தார். உண்மை நிலையை அறிந்தவர்கள் மீண்டும் உறங்கினர். மீளாத உறக்கம். அவர்கள் மரணித்து விட்டனர்.அவர்களை விழிக்கச் செய்து அதை மக்களுக்கு அறிவிக்கவே அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்தான். இறந்தவர்களை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிக்கின்றான் என்பதை அந்த மக்களுக்கு அல்லாஹ் உணர்த்தினான். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததை அவதானித்த மக்கள் குகைக்கு வந்தனர். அவர்கள் அத்தனைப் பேரும் மரணித்திருந்தனர். அந்தக் குகையில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று சிலர் கூறினர். மற்றும் சிலர் இல்லை இல்லை இதில் ஒரு தொழுமிடத்தைக் கட்ட வேண்டும் என்றனர்.


நல்லவர்கள் மரணித்தால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பள்ளிகளாக ஆக்கும் தவறான நடத்தை மக்களிடம் இருந்தது. சிலை வணக்கத்திலிருந்து இப்படித்தான் கப்ர் வணக்கத்தின் பக்கம் மக்கள் நகர்த்தப்படுகின்றனர்.


இந்த சம்பவத்தை மிகக்கவனமாக 18ம் அத்தியாயத்தின் 9-22 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

***

Admin
384 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions