குர்ஆன்

November 28, 2023

மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!

மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 


மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும்...

முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார்.


மூஸா நபியும் நமக்கு அல்லாஹ் ‘வஹி’ எனும் வேத வெளிப்பாட்டை வழங்கியுள்ளான். நம்மைவிட வேறு யார்தான் அதிகம் அறிந்திருக்கப் போகின்றனர் என்ற எண்ணத்தில் “இல்லை நான்தான் அதிகம் அறிந்தவன் ” என்று கூறிவிட்டார். பெருமையும் ஆணவமும் அல்லாஹ்வுக்கே உரியன. அதில் எவருக்கும் அவன் பங்கு கொடுப்பதில்லை. எனவே அல்லாஹ்: மூஸாவே! உமக்கு நான் அறிவித்ததைத் தவிர வேறு எதுவும் உமக்குத் தெரியாது! எனது நல்லடியார் ஒருவர் உள்ளார் அவர் நீ அறியாத பலவற்றை அறிந்தவர்.


மூஸா : அந்த நல்லடியார் யார்? அவரை எங்கே காணமுடியும்? அவரிடம் சென்று நான் கற்க விரும்புகின்றேன்.


அல்லாஹ் : இரு கடல்கள் ஒன்றுசேரும் இடத்தில் நீ அவரைக் காணலாம்.


மூஸா : அந்த இடத்தை நான் எப்படிக் கண்டுகொள்ள முடியும்?


அல்லாஹ் : நீ உ ன் பயணத்தைத் தொடர்! அந்த இடத்தை இனங்காண உனக்கொரு அத்தாட்சியை (அற்புதத்தை) நாம் காட்டுவோம்.


இதன்பின் மூஸா அந்த நல்ல மனிதரைக் காண பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். மூஸாவுக்கு யூஸஃ இப்னு நூன் என்றொரு பணியாளர் இருந்தார். அவர் மூஸா நபியின் நம்பிக்கைக்கு உரியவராவார். நபியின் நட்பையும், அன்பையும் பெற்றவர் அவரிடம்.


மூஸா : யூஸஃ நான் ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். உனக்கு என் கூட வரமுடியுமா?


யூஸஃ : வருகிறேன். எங்கே?


மூஸா : போகும் இடம் தெரியாது. ஆனால் எமது பயணம் கடற்கரையை அண்டியதாக இருக்கும்.


யூஸஃ : எத்தனை நாள் பயணம்?


மூஸா : அதுவும் தெரியாது. இரு கடல்கள் ஒன்றுசேரும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.


யூஸஃ : இடத்தை எப்படி அறிந்துகொள்வீர்கள்?


மூஸா : அல்லாஹ் ஒரு அத்தாட்சியைக் காட்டுவான். அதன்மூலம் அறியலாம்.


மூஸாவும் அவர் பணியாளரும் பயணத்திற்குரிய சகல ஏற்பாடுகளையும் செய்தனர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துப் பயணத்தைத் துவங்கினர். நடந்தார்கள், நடந்தார்கள், நடந்துகொண்டே இருந்தார்கள்.


யூஸஃ : எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டுமோ…?


மூஸா : இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று தெரியாது. ஆனால், ஆண்டுகள் பல ஆனாலும் அந்த இடத்தை அடையாமல் நான்

ஓயமாட்டேன். இந்த உறுதியுடனே பயணத்தைத் தொடர்ந்தனர். ஒருநாள் பயணத்தை நடுவே ஒரு பாறாங்கல்லைக் கண்டு “நாம் இதில் சற்று

ஓய்வெடுத்துவிட்டுச் செல்வோம் என எண்ணி இருவரும் அமர்ந்தனர். நடந்துவந்த களைப்பினால் அசதியுடன் மூஸா நபி தூங்கி விட்டார்.


யூஸஃ தூக்கக் கலக்கத்துடன் இருக்கும்போது ஒரு அற்புதம் நடந்தது. உண்பதற்காக சமைத்த மீன் உயிர் பெற்று பாறையைத் தாண்டி கடல் நீரில் சுரங்கம் போல் பாதையை ஏற்படுத்திக் கொண்டு சென்றது.


யூஸஃவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. சமைத்த மீன் ஓடிவிட்டதே! என்ன ஆச்சரியமிது. உடனே இதை நபி மூஸாவிடம் கூறவேண்டும் என எண்ணினார். ஆனால், அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.நபியவர்கள் எழுந்ததும் உடனே இச்செய்தியைக் கூறவேண்டும் என எண்ணிக் கொண்டார். சற்று நேரத்தில் அவரும் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.


அதிசய மனிதர் ஹிழ்ர் நபியின் விசித்திர செயல்கள்


மூஸா நபியும் அவரது பணியாளரும் அயர்ந்து தூங்கினர். ஆழ்ந்த உறக்கம். இருவரும் விழித்ததும் மீண்டும் பயணத்தைத் தொடங்கத் தயாராகினர். மீன் உயிர் பெற்று கடலில் குதித்த அதிசயத்தை அவரது பணியாள் முற்றிலுமாக மறந்து விட்டார். இருவரும் நடந்தனர். நடந்து நடந்து களைத்து போன போது,


மூஸா நபி : இந்தப் பயணத்தில் ரொம்பவே களைத்துப் போய் விட்டோம். எமது பகல் உணவை எடு சாப்பிடுவோம்.


யூஸஃ : நபியே… நாம் ஓரிடத்தில் உறங்கினோம் அல்லவா… அந்த இடத்தில், சமைத்த மீன் உயிர் பெற்று கடலுக்குள் பாய்ந்து கடல் நீரில் சுரங்கம் போல் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு சென்று விட்டது. இந்த அதிசய சம்பவத்தை நீங்கள் கண் விழித்ததும் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஷைத்தான் எனக்கு மறதியை ஏற்படுத்தி விட்டான்.


ஹிள்ர் எனும் ஒரு நல்லடியார்:

மூஸா நபி: நாம் தேடிவந்த இடம் அதுதான். நாம் உரிய இடத்தைத் தாண்டி வந்துவிட்டோம் என்று

கூறி மீண்டும் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். அங்கே சென்ற போது ஹிள்ர் எனும் ஒரு நல்லடியாரை அங்கு கண்டனர்.


அவருக்கு அல்லாஹ் விசேஷமான அறிவையும் அருளையும் வழங்கி இருந்தான். அவரிடம் வந்த

மூஸா நபி : உங்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள். அதனால் நானும் உங்கள் கூடவே வர அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.


ஹிள்ர்: இல்லை இல்லை. நான் சில வேலைகளைச் செய்வேன். அவற்றை ஏன் செய்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்க என்னுடன் நீங்கள் வந்தால் உங்களால் பொறுமையாக இருக்க முடியாதே!


மூஸா நபி: இல்லை நான் இன்ஷாஅல்லாஹ் பொறுமையாக இருப்பேன். உங்கள் கட்டளையை மீறவே மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.


ஹிள்ர்: நீர் என்னைப் பின்பற்றி வருவதாக இருந்தால் ஒரு நிபந்தனை. நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்கக்கூடாது. நான் ஏன் அதைச் செய்தேன் என்று நானே கூறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு சம்மதமா?


கப்பலில் ஒரு துவாரம்:

கேள்வி கேட்பதில்லை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூஸா நபி ஹிள்ர் நபியுடன் நடந்தார். கடலோரமாக பயணித்த அவ்விருவரும் ஒரு கப்பலில் ஏறி பயணித்தனர். அப்போது தான் ஹிள்ர் நபி விசித்திரமான ஒரு வேலையைச் செய்வதை மூஸா நபி கண்டார். ஹிள்ர் நபி கப்பலில் ஒரு துவாரம் இட்டுக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மூஸா நபி அதிர்ச்சியுற்றார்.


மூஸா நபி: இந்தக் கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா பார்க்கிறீர்? நீர் வெறுக்கத்தக்க ஒரு வேலையைச் செய்கிறீர் என்று கடிந்து கொண்டார்.

இதை கேட்ட ஹிள்ர் நபி: என்னோடு வந்தால் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என்று சொன்னேன். கேட்டீரா? கேள்வி கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை மறந்து விட்டீரா?


மூஸா நபி: ஆம், மறந்து விட்டேன். அதற்காக என்னை குற்றம் பிடிக்காதீர். எனக்கு கடுமை காட்ட வேண்டாம். கொஞ்சம் விட்டுத் தாருங்கள்

என பணிந்து கேட்டுக் கொண்டார்.


சிறுவன் கொலை:

பின்னர் கப்பலில் இருந்து இறங்கி ஒரு பகுதியில் அவர்கள் நடந்து சென்றனர். அவர்கள் போகும் வழியில் இருந்த ஒரு சிறுவனைப் பிடித்து கழுத்தை நெரித்து ஹிள்ர் நபி அவனைக் கொலை செய்து விட்டார்கள். இதைக் கண்டு மூஸா நபி அதிர்ச்சி அடைந்தார்.


மூஸா நபி: எந்தக் குற்றமும் செய்யாமல் ஒரு பரிசுத்த ஆன்மாவைக் கொன்று விட்டீரே. இது மிகப்பெரிய கொடுமையல்லவா?


ஹிள்ர் நபி: உன்னால் என்னுடன் பொறுமையாக வரமுடியாது என்று நான் சொல்லவில்லையா?


மூஸா நபி: என்னால் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டு விட்டது. இதற்குப் பிறகு ஏதேனும் நான் கேட்டால் நீங்கள் என்னை விட்டுவிடலாம். இம்முறை மட்டும் மன்னிப்புத் தாருங்கள்.


இடிந்து விழும் நிலையில் சுவரை சரி செய்தல்:


ஹிள்ர் நபியும் இதற்கு உடன்பட்டார். இருவரும் தொடர்ந்து நடந்தனர். ஓர் ஊரை இருவரும் அடைந்தனர். அவர்களுக்கு பசி எடுத்தது. அந்தக் காலங்களில் சாப்பாட்டுக் கடைகள் இல்லாததால் ஒரு ஊருக்கு வெளியூர் மக்கள் வந்தால் ஊர் மக்கள் தான் உணவு கொடுக்க வேண்டும். இரு நபியும் உணவு கேட்டு அந்த மக்கள் உணவு வழங்க மறுத்து விட்டனர். அந்த ஊரில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஹிள்ர் நபி அதைச் சரி செய்தார்.

இதைக் கண்ட மூஸா நபி: இந்த மக்கள் நமக்கு உணவே தரவில்லை. விரும்பியிருந்தால் இதற்கு கூலி பெற்றிருக்கலாமே என்று கேட்டு விட்டார்.


ஹிள்ர் நபி: கேள்வி கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறிவிட்டீர். இதுதான் நாம் பிரிய வேண்டிய இடமாகும். நீங்கள் பொறுமையிழந்து கேள்வி கேட்ட மூன்று விஷயங்களுக்கான விளக்கத்தைக் கூறி விடுகின்றேன் என மெதுவாக சந்தேக முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்தார்.


மூஸா நபி மூன்றாம் முறையும் கேள்வி கேட்டு விட்டார். இனி அவர் ஹிள்ர் நபியுடன் பயணிக்க முடியாது. அவசரப்பட்டு அவர்கேட்ட மூன்று சம்பவங்கள் குறித்தும் ஹிள்ர் நபிவிளக்கம் கூற ஆரம்பித்தார்.


“நான் நாம் ஏறிவந்த கப்பலில் துளையிட்டேன். அது அந்தக்கப்பல் காரர்களுக்கு அநியாயம் செய்வதற்காக செய்தது அல்ல. இவர்கள் போகும்வழியில் ஒரு அநியாயக்கார அரசன் இருக்கிறான். எந்தக் குறையும் இல்லாத கப்பலைக் கண்டால் அதை அவன் அபகரித்துக்கொள்வான். நான் கப்பலில் துளையிட்டதால் அவன் அபகரிக்கமாட்டான் . இந்தக்கப்பல் கடல் தொழில்செய்யும் ஏழைக்குரியது. எனவே கப்பல் அபகரிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் கப்பலில் துளையிட்டேன்” என்று கூறினார்.


ஆம் “கண்ணால்காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதேமெய்” என்பார்கள் அல்லவா? ஹிள்ர் நபியின் செயலைப்பார்த்தால் கப்பல்காரருக்கு அநியாயம் செய்வதுபோல் தான் தெரிந்தது. ஆனால் அவர் செய்ததது கப்பல் சொந்தக்காரருக்கு உதவிதான். இப்படித்தான் உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்காக நன்மை செய்யும் போது உங்களுக்கு அது கெடுதியாகத் தெரியலாம்.


அடுத்து ஒரு சிறுவனை ஹிள்ர் நபி கொலை செய்தார் அல்லவா? இது ஒரு கொடிய செயலாகத்தான் தெரிந்தது. ஆனால் அதுபற்றி அவர் கூறும்போது “அந்த சிறுவனின் தாய் தந்தையர் இருவரும் நல்லவர்கள். இந்த சிறுவர் பெரியவனானால் அவர்களது பெற்றோருக்கு அநியாயம் செய்வான். அவர்களை இறைநிராகரிப்பில் ஈடுபடுமாறு நிர்பந்திப்பான். எனவே இவனைக் கொன்றுவிட்டு அவர்களுக்கு பெற்றோரை மதிக்கக்கூடியநல்ல குழந்தையை வழங்க அல்லாஹ் நாடினான். எனவேதான் அந்த சிறுவனைக்கொன்றேன்” என்றார். நாம் பெற்றோருடன் நல்ல முறையில் நடக்காவிட்டால் நமக்குப் பாதுகாப்பில்லை பார்த்தீர்களா?


“அடுத்து நான் சரி செய்த வீட்டுச்சுவர் இரண்டு அனாதை பிள்ளைகளுக்குறியது. அந்தப்பிள்ளைகளின் தந்தை ஸாலிஹானவராவார். அந்த சுவற்றில் இந்த அனாதைப்பிள்ளைகளுக்கான ஒரு புதையல் உண்டு. இப்போது இந்த சுவர் இடிந்து விழுந்தால் அந்த புதையலை யாரவது எடுத்துக்கொள்வார்கள். இப்போது அந்த அனாதைப்பிள்ளைகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்களாகி இந்தப்புதையலை எடுக்கவேண்டும். அதற்காகத்தான் உடைந்து விழ இருந்த சுவற்றை நான் சரி செய்தேன்” என்று விரிவாக விளக்கினார்கள். அத்துடன் இவற்றை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதிப்படி தான் செய்தேன் என்று கூறினார்.


மூஸாநபி, “நான்தான் இப்போது உலகில் உள்ளஅறிவாளி” என்று கூறியதற்காக அல்லாஹ் கற்றுக்கொடுத்த பாடம் இது.


நாமும் ஆணவம் கொள்ளக்கூடாது! பெருமை கொள்ளக்கூடாது! என்னைவிட அறிந்தவர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கல்விக்குக்கட்டுப்பாடு அவசியம். ஹிள்ர் நபி மூஸா நபிக்குக் கட்டுப்பாடு போட்டார்கள் அல்லவா? ஹிள்ர் நபியை விட மூஸா நபி அந்தஸ்த்திலும் பொறுப்பிலும் கூடியவராவார்.


இருப்பினும் அவரிடம் இவர் கற்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். எனவே அறிவு யாரிடம் இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

*****

Admin
468 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions