ஆய்வுகள்

November 02, 2015

சொர்கத்தில் துணைகள்

 சொர்கத்தில் துணைகள்!

இவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும்.

இதில் கிளப்பப்படும் ஐயங்களையும் தெளிவான விளக்கங்களையும் காண்போம்.

ஐயம் 1:ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு திருக்குர்ஆனின் 33:35 வசனத்தில் பல வித நன்மைகள் செய்யும் ஆண்கள், பெண்கள் என்று கூறிவிட்டு அவர்களனைவருக்கும் மன்னிப்பையும் மாபெரும் கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் என்று கூறப்படுகிறது. இதன்படி சொர்கத்தில் கொடுக்கப்படும் பரிசுகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு கொடுக்கப்படுவது போல் பெண்களுக்கும் கொடுக்கப்படும். அந்த வகையில் ஆண்களுக்கு ஹுருன் ஈன் எனும் சொர்கத்துப் பெண்கள் மனைவியராக்கப்படுவது போல் பெண்களுக்கும் அதுபோன்ற சொர்க்க ஆண்கள் கணவர்களாக்கப்படும் என்று புரிய முடிகிறது இது ஒர் ஐயம்.

இந்த ஐயத்தை வலுப்;படுத்தும் விதத்தில் 4:124 நல்லறம் செய்யும் ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

தெளிவு 1: இந்த ஐயத்திற்கான காரணம் மேற்கண்ட வசனங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறு. அல்லாஹ் மறுமையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி வழங்குவான் என்பதை இருவகையினருக்கும் சமமாக ஒன்று போல் வழங்குவான் என்று புரியக் கூடது.

இரு வகையினருக்கும் அவரவர் தன்மைக்கு தக்கவாறு நற்கூலி வழங்குவான். அது அவரவர் திருப்தி கொள்ளும் விதத்தில் அமையும், ஆகவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் பொதுவாக ஹுருன் ஈன்களைப் போன்ற சொர்கத்து ஆண்கள் சொர்க்கம் செல்லும் உலகப் பெண்களுக்கு மணமுடித்து வைக்கப்படுவார்கள் என்பது தவறாகும்.

இந்த விளக்கத்தக்கு ஆதாரமாக கீழ்காணும் நபிமொழி அமைந்துள்ளது.

" (சொர்க்கவாசிகளான) அவர்களின் ஒவ்வொருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள்"

நூல்கள்: புகாரி 3246, 3254, முஸ்லிம் 5062, திர்மிதி 2522, 2535, 2537, அஹ்மத் 7152, 7369 மற்றும் இப்னு ஹிப்பான், அல் பஸ்ஸார்

மேற்கண்ட தவறான ஐயத்துடன் இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டால் சொர்கத்தில் நுழையும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு கணவர்கள் என்று சொல்ல வேண்டியது வரும். அப்படி யாரும் சொல்வதில்லை சொல்லவும் முடியாது!

ஏனென்றால் சொர்கத்தில் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள இன்பங்களை நாடியபடி அனுபவிக்கலாம். ஆனால் அங்கே அருவருப்பான கேவலமான இன்பங்களெல்லாம் இல்லை. உதரணத்திற்கு தனக்கு திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட (மஹ்ரமான) உறவுப் பெண்ணுடன் சொர்க்கம் சென்று பாலுறவில் ஈடுபட வேண்டுமென்று நினைத்தால் அது கேவலம். அப்படியெல்லாம் அங்கு நடக்காது. அங்கு வைத்து அப்படி சிந்திக்கவும் வராது. அது போல் போதையுள்ள மது அங்கு இல்லை. இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம்.

ஆகவே நன்மை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்பதை ஒன்று போல் சமமாக என்று புரிவது தவறு. அவரவருக்கு தகுந்தவாறு அல்லாஹ் நற்கூலி வழங்குவான் 5:119 வசனத்திலும் வேறு பல வசனங்களிலும் சொல்லப்படுவது போல் அவரவருக்கு கொடுக்கப்படுவதை வைத்து நற்கூலி பெற்றவர்கள் திருப்தி அடைவார்கள்.

ஐயம் 2: கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும்போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு  இரு கணவர்களும் சொர்க்கவாசிகளாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்?

தெளிவு 2: பொதுவாக சொர்க்கம் செல்லும் தம்பதிகள் சொர்க்கத்தில் தம்பதிகளாக இருப்பர். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. (இறுதியில் அவற்றை குறிப்பிடுவோம்) இதற்கு அப்பாற்பட்ட நிலைகளுக்கும் முடிவுகள் உண்டு. அல்லாஹ் தான் நாடிய விதத்தில் நடத்துவான். உதாரணத்திற்கு இந்த ஐயத்தின் முதல் பகுதியில், மனைவி சொர்க்க வாசியாகவும் கணவன் நரகவாசியாகவும் இருந்தால் என்று கேட்கப்படுகிறது. இது ஒரு பெரிய விஷயமல்ல. சொர்க்கம் செல்லும் சில ஆண்களின் மனைவியர் நரகவாசிகளாக இருப்பார்கள். அத்தகைய ஆண்களில் ஒருவருக்கோ அல்லது சொர்க்கவாசியான ஏதோ ஒரு ஆணுக்கோ அந்தப் பெண் மனைவியாக்கப்படுவது சாத்தியமற்ற ஒன்றல்ல அல்லது அல்லாஹ் தான் நாடிய விதத்தில் எதையும் செய்வான்

இந்த ஐயத்தின் இரண்டாவது பகுதி ஒரு பெண் இரு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்து இருவரும் சொர்க்கவாசிகளாக இருந்தால் என்று கேட்கிறது. இது தொடர்பாக ஹதீஸ்களில் பேசப்பட்டுள்ளது.

அபுத்தர்(ரலி) அவர்கள் மரணித்தபின் அவரது (மனைவி) உம்முத் தர்தா(ரலி) அவர்களை முஆவியா(ரலி) அவர்கள் பெண் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா அறிவித்ததை நான் கேட்டுள்ளேன் எனச் சொன்ன உம்முதர்தா(ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "ஒரு பெண் தனது கணவனின் மரணத்துக்குப் பின் (இன்னொருவரை) திருமணம் செய்து கொண்டால் அப்பெண் (மறுமையில்) அவளது கணவர்களில் இறுதியானவருக் குரியவளாவாள்." இவ்வாறு சொன்ன உம்முத்தர்தா, அபுத்தர்தாவை விட உம்மை நான் தேர்வு செய்யமாட்டேன் என்று கூறினார்கள். அதன்பின்பு முஆவியா(ரலி) அவர்கள் உம்முத்தர்தா அவர்களுக்கு, அப்படியானால் நோன்பு வைத்துக்கொள் அது (ஆசையை)த் துண்டிக்கக்கூடியது என்று (கடிதம்) எழுதி அனுப்பினார்கள்.

நூல்: அல்முஅஜமுல் அவ்ஸத் (3130)

மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அவர்களின் மகள் அஸ்மா(ரலி) அவர்கள் தனது கணவர் ஸூபைர் பற்றி முறையிட்டார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள், மகளே திரும்பிச்செல்! நீ பொறுமையை மேற்கொண்டு அவருடன் நல்ல முறையில் இணைந்திருந்தால் பின்பு அவர் மரணித்து அவருக்கு பின் நீ திருமணம் செய்யமால் இருந்தால் பின்பு நீங்கள் இருவரும் சொர்கத்தில் நுழைந்தால் அதில் நீ அவரது மனைவியாக ஆவாய் என்று கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்திர்

ரஸ்ஸாக் 20599

இது போன்ற செய்திகள் நபித்தோழர்களுக்கு மத்தியில் பிரபலமாக இருந்துள்ளது என்பது தெளிவு.

ஐயம் -3: இங்கிருக்கும் துணையைவிடச் சிறந்த துணையைக் கொடு என்று ஜனாஸா தொழுகையில் பிரார்த்தனை செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். இறந்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இவ்வாறு பிரார்த்தனை செய்வது நபிவழியாகும். இங்கிருப்பதை விட சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கு இருப்பது கேபால் பெண்களுக்கும் உண்டு என்று அறிய முடிகிறது."

தெளிவு -3: இந்தப் பிரார்த்தனையின் வாசகங்களை சரியாகப் புரியாததால் ஏற்படும் ஐயம் இது. முதலில் அந்தப் பிரார்த்தனையைப் பார்ப்போம்.

(நீண்ட பிரார்த்தனையின் இடையில்) "மேலும் இங்குள்ள வீட்டை விடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக, இங்குள்ள குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தை அவருக்கு வழங்குவாயாக"

இந்த பிரார்த்தனையில் இடம்பெறும் சிறந்த வீடு என்பது இந்த உலக வீட்டோடு தொடர்பில்லாத வேறொரு வீடு என்பது சரி. ஆனால் அதற்கடுத்து கேட்கப்படும் மனிதர்கள் குறித்த பிரார்த்தனையில் அதே மாதிரி கருத்து கொள்ளவே முடியாது. ஏனென்றால் துணையைப்பற்றி கேட்பதற்கு முன்பு இந்தப் பிரார்த்தனையில், இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை அவருக்கு வழங்குவாயாக" என்று உள்ளது.

துணையைத் தவிர்த்த குடும்பம் என்பது பெற்றவர்களையும் பிள்ளைகளையும் குறிக்கும். இந்த (3வது) ஐயத்தைக் கிளப்பியவர்களின் வியாக்கியானத்தின் படி இங்கிருக்கும் அம்மா அப்பாவை விட சிறந்த வேறு அம்மா அப்பாவைக் அவருக்குக் கொடு. இங்கிருக்கும் பிள்ளைகளைவிட சிறந்த வேறு பிள்ளைகளைக் கொடு என்று கூறுவதாக அர்த்தம் வரும்.

ஆனால் அப்படிச் சொன்னால் அர்த்தமற்ற பிரார்த்தனையாகப் போகும் அதனால் அப்படி புரிவதில்லை.

அப்படியானால் இதற்கு என்ன கருத்து? மனிதர்கள் சொர்கத்திற்கு சென்று விட்டாலே அவர்கள் உடல் அமைப்பிலும் அழகிலும் வசதி வாய்ப்பிலும் இந்த உலகத்தில் இருந்ததை விட மிகவும் மாறுபட்ட உயர்ந்த நிலையை அடைந்து விடுவார்கள். இந்த (இறந்து போன) நபர் தனது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அப்படிப்பட்ட சிறந்த நிலையை அடைந்தவர்களாகக் கண்டு இணைய வேண்டும் என்பது இந்த பிரார்த்தனையின் கருத்து.

இதே விதத்தில் தான் துணையைப் பற்றிய பிரார்த்தனையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒழுங்காக புரிந்ததால் தான் ஹதீஸ் அறிஞர்கள் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்ட ஐயம் எழவில்லை.

இந்த (3வது) ஐயத்திற்கு இன்னொரு விதத்திலும் தெளிவு அளிக்க முடியும். அதாவது இந்த (இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை அவருக்கு வழங்குவாயாக என்ற) பிரார்த்தனையை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மனைவியருக்கான ஜனாஸா தொழுகையிலும் முஸ்லிம்கள் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்களைவிடச் சிறந்த துணையை அவர்களுக்காக கேட்டதாக கருத்துக் கொண்டால் மிகப் பெரிய தவறாகும். அதே நேரத்தல் நாம் தெளிவு படுத்தியுள்ள கருத்துப்படி புரிந்தால் எந்த தவறும் சிக்கலும் இருக்காது.

ஐயம் - 4: ஆண்களுக்கு சொர்க்கத்தில் ஹுருன் ஈன் மனைவியர் இருப்பது போல் பெண்களுக்கும் உண்டு என்று முடிவு செய்வதே குர்ஆனில் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று கூறும் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் ஏற்புடையதாகும். இது தான் இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

தெளிவு - 4: நற்கூலி உண்டு என்பதினால் அப்படியே சரிக்குச் சமமாக கிடைக்க வேண்டும் எனபதில்லை. அவரவர் தன்மைக்கும் தகுதிக்கும் தக்கவாறு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். அதுதான் நீதி. இன்னும் சொல்லப் போனால் கூடுதலாக வழிபட்டட சிலருக்கு அவர்களுக்கான கூலியை குறைவில்லாமல் அநீதமில்லாமல் கொடுத்து விட்டு அவர்களை விட குறைந்த அளவு வழிபட்ட சில மக்களுக்கு அவர்களை விட கூடுதலான சிறப்பான கூலியை அல்லாஹ் வழங்குவான். அப்போது கூடுதலாக வழிபட்ட முந்தையவர்கள் அதிகமாக வழிபட்ட எங்களுக்கு ஏன் குறைந்த கூலி? என கேள்வி எழுப்பும் போது அல்லாஹ் அவர்களிடம் நான் உங்களுக்கான கூலியில் எதையும் குறைக்கவில்லை. நான் சிலருக்கு கொடுக்கும் கூலியை அதிகரித்து சிறப்பிக்கிறேன். அது எனது தனிப்பட்ட கிருபை அதை நான் நாடியவர்களுக்கு கொடுப்பேன் என்று பதிலளித்து விடுவான்.

(இந்த கருத்து ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்க்க புகாரி: 557,2268,2269,3459,5021, திர்மிதி 2871 மற்றும் அஹ்மத் உள்ளிட்ட நூல்கள்)

அதனால் அல்லாஹ்வுக்கு நாம் நீதியை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

இதுவரை மறுமையில் சொர்க்கம் செல்லும் தம்பதிகள் சொர்கத்தில் தம்பதிகளாக இருக்கமாட்டார்கள் என் கூறி எழுப்பப்பட்ட ஐயங்களுக்கான தெளிவுகளைப் பார்த்தோம்.

இனி சொர்க்கம் செல்லும் நல்ல தம்பதிகள் அங்கும் கணவன் மனைவியாக இணைவார்கள் என்பதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் கூறுகிறான்"அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் நுழைவார்கள்." அல்குர்ஆன் 13:23

  இந்த வசனம் சொர்க்கத்தில் நுழையும்போது பெற்றோர் சந்ததிகள் உறவு இருப்பது போல் மனைவியர் உறவும் இருப்பதை உணர்த்துகிறது. இதைத் தெளிவாக கீழ்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

அம்மார்(ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து "அல்லாஹ் மீது சத்தியமாக அவர்கள் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் உங்கள் நபி(ஸல்) அவர்களின் மனைவியாவார்" என்று கூறினார்கள். - நூல்: புகாரி 7100, 7101

மேற்கண்ட இரு அறிவிப்புகளையும் படிக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களுக்கு எதிராக படை திரட்டிச் சென்றதற்கு எதிராக அம்மார்(ரலி) அவர்கள் மக்களிடம் பேசிய போது கூறியது என்பதை அறியலாம். அதாவது ஆயிஷா (ரலி) அவர்களின் அப்போதைய நிலைப்பாட்டை எதிர்த்தாலும் அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ளும் விதத்தில் இச்செய்தியைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.

எனவே அம்மார்(ரலி) அவர்கள் தனாக இதை சொல்லியிருக்க முடியாது! நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றிருந்தால் தான் இவ்வாறு கூற முடியும். அத்துடன் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இச்செய்தியைக் கூறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்களே கூறுவது: ஜிப்ரீல்(அலை) அவர்கள நபி(ஸல்) அவர்களிடத்தில் பச்சைப் பட்டுத் துணியில் என்னுடைய வடிவத்தைக் கொண்டு வந்து இது இவ்வுலகிலும் மறு உலகிலும் உமது மனைவி என்று கூறியுள்ளார்கள்.

நூல்: திர்மிதி 3880, இப்னு ஹிப்பான் 7094, பஸ்ஸார் 225)

மேலும் அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தலாக் செய்த போது ஜிப்ரீல்(அலை) நபியிடம் வந்து ஹஃப்ஸாவை மீட்டுக் கொள்ளுங்கள். அவர் அதிகம் நோன்பு நோற்பவர், அதிகம் நின்று வணங்குபவர், அவர் சொர்க்கத்தலும் உமது மனைவி என்று கூறியதாக ஒரு நபி மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் 151, ஹாகிம் 6754

இதன் அறிவிப்பாளர் தொடரில் குறை இருந்தாலும் வெவ்வேறு வழிகளில் அறிவிக்கப்படுவதன் மூலம் ஹசன் தரத்தில் அமைந்த நபிமொழி என்று ஷேக் அல்பானீ கூறுகிறார்கள். பார்க்க: ஸில்ஸித்துல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா 2007

மேலும் இந்தக் கட்டுரையில் இரண்டாவது ஐயத்துக்கான தெளிவில் நாம் குறிப்பிட்டுள்ள அபுத்தர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மற்றும் அபூபக்ர்(ரலி) அவர்கள்; தனது மகள் அஸ்மா(ரலி) அவர்களுக்கு கூறியது ஆகியவைவும் சொர்க்கம் செல்லும் நல்ல தம்பதியர் சொர்க்கத்திலும் தம்பதியராக இருப்பார்கள் என்பதற்கு கூடுதல் ஆதாரங்களாக உள்ளன.

 அல்லாஹுதஆலா கூறுகிறான்"யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின் தொடர்ந்தார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளை (சொர்க்கத்தில் ஒன்று) சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்கு பிணையாக்கப்பட்டவனாவான்." - அல்குர்ஆன்: 52:21

இந்த வசனத்தில் பெற்றவர்களுடன் சந்ததிகளை சேர்த்து வைப்பது பற்றி சொல்லப்படுகிறது. இதன்படி அந்த சந்ததிகளின் பெற்றவர்கள் சொர்க்கவாசிகள் எனும் போது அவர்கள் (அந்த பெற்றோர்) இணைந்திருப்பார்கள் என்றுதான் அர்த்தமாகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் சரியானதை அறிந்து கொள்ள அனைவருக்கும் நல்லுதவி செய்வானாக!

 

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

Admin
2450 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions