ஆய்வுகள்

October 14, 2015

மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்!

 “நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும்

 இது 14-03-2013 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு இச்செய்தியில் தனப்பிரியா என்ற நான்கு வயது சிறுமியை தெருநாய் கடித்து இழுத்துச் சென்றதில் அச்சிறுமி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், தனப்பிரியவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் முகச்சீரமைப்பு உட்பட சிறப்பான சிகிச்சயை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாய்களால் ஏற்படும் இது போன்ற கொடுமையான பாதிப்பு புதிதல்ல. பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள நடந்து கொண்டுதானிருக்கின்றன. சில சம்பவங்களில் கடிபட்ட சிறுவர் சிறுமியர் இறந்தும் போயிருக்கிறார்கள். நாய்க்கடியால் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி சிறுவர் சிறுமியர் தான் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

இந்த அவலம் அதிகரிப்பிற்குக் காரணம் புளூகிராஸ் என்ற பெயரில் மிருக நேயர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கும் அறிவீனர்களும் உள்ளாட்சி நிர்வாகமும்தான்!

நாய்கள் பற்றிய சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். பொதுவாக நாயைக் குறித்து நன்றியுள்ள மிருகம் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் நாயிடம் இருக்கும் கெட்ட குணத்தினால் தான் அது நன்றியுள்ளதாக தோன்றுகிறது. தான் அனுபவிப்பதை பிறர் அனுபவித்து விடக் கூடாது என்ற கெட்ட குணத்தினால் அது பிறரை நோக்கி குரைப்பது அதன் எஜமானருக்கு பாதுகாப்பாகவும் அதன் நன்றியாகவும் அமைந்து விடுகிறது.

நாய் இருக்கும் வீட்டுக்கு ஒருவர் நல்ல தோற்றத்தில் சென்றாலும் குரைத்து விரட்ட ஆரம்பித்து விடுகிறது. காரணம் அதனிடம் உள்ள இந்த கெட்ட குணம்தான். இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள நாம் காணும் சில காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம். பெருங்குவியலாக கிடக்கும் உணவுப் பொருள்களில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு நாய் அந்த குவியல் அருகே இன்னொரு நாய் வந்தால் குரைத்து அதை விரட்டி அடிக்கிறது. அது போல ஒரு தெருவிலுள்ள ஒரு நாயை அல்லது சில நாய்களை இன்னொரு தெருவை சேர்ந்த நாய் கடந்து சென்றால் உடனே அதன்மீது பாய்ந்து விரட்டி அடிக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் தான் அனுபவிப்பது எவ்வளவு அதிகமாக இருந்தாலும் கூட தன் இனத்தை சேர்ந்த இன்னொரு பிராணி கூட அனுபவித்து விடக்கூடாது என்று நினைக்கும் கெட்ட சுபாவம். அதனால் தான் ஒரு மனிதனைப் பார்த்து நாயே! என்று கூறுவது அவனை கடுமையாக பழித்துப் பேசுவதாக அமைகிறது.

இன்னொரு விதமாகவும் பாருங்கள். தெருவில் சுற்றும் நாயாக இருந்தாலும் கேட்டிற்குள் அடைபட்டிருக்கும் நாயாக இருந்தாலும் பரிதாபத்திற்குரிய தோற்றத்தில் ஒரு மனிதன் நடந்நு போனால் அவனைப் பார்த்து கடுமையாக குரைத்து விரட்டுகின்றன. மற்ற மிருகங்களோ பறவைகளோ இவ்வாறு நடந்து கொள்வதில்லை. இதெல்லாம் நாய்க்கென்றே உள்ள மோசமான தனித்தன்மை.

நாய்க்கடி

நாய்க்கடியால் கடுமையாக பதிக்கப்பட்டால் நாயைப் போலவே கத்துகிற அளவுக்கும் மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இது நாயின் கொடுமையான விஷத் தன்மைக்கு பெரிய அடையாளமாகும். உலக அளவில் வெறிநோய் (ராபிஸ்) ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 55000 என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இவர்களில் 20000 பேர் இந்தியர்கள். இதில் 14000 பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

நாய் கடித்து விட்டால் தொடர்ந்து 5 முறை நோய் தடுப்பு ஊசி போட வேண்டும். சில மருந்துகள் மூன்று முறை இந்த மருந்துக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு உள்ளது. வெளியில் வாங்கப்போனால் ரூ.1500 வரை ஆகிறது. இந்த வகையில் இந்தியர்கள் வருடத்திற்கு ரூ.125 கோடி செலவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இப்படி உயிரிழப்பிற்கும், நோய்க்கும், பொருளாதார நஷ்டத்திற்கும் நாய்கள் காரணங்களாக இருக்கின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட நாய்களைப் பிடித்து கொல்லும் எளிதான வழி உள்ளது. அதை அரசாங்கமும் முன்பு செயல்படுத்திக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் இப்போது புளுகிராஸ் என்ற பெயரில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் மூடர்களின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நாய்களை அழிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட்டுவிட்டது.

ஆளும் வர்கத்தினரின் வெட்டிச்யெல்

நாய்களால் ஏற்படும் தொல்லையிலிருந்து மக்களை காக்க ஆட்சியிலிருப்போர் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன தெரியுமா? நாய்களுக்கு தடுப்பூசி போடுவது ! அதாவது தடுப்பூசி போடப்பட்ட நாய் கடித்தால் அதனால் வரக்கூடிய நோய் வராமல் இருப்பதற்கு!

இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். நாய்கள் உங்களை கடிக்கட்டும் பரவாயில்லை என்கிறார்கள். நாய்க்கு தடுப்பூசி போட்டுவிட்டாலே அதன் கடியால் ஏற்படும் பாதிப்பு அறவே ஏற்படாது என்று சொல்ல முடியுமா? அல்லது தெருவில் சுற்றும் எல்லா நாய்களுக்கும் இவர்களால் தடுப்பூசி போட்டுவிட முடியுமா? அல்லது தடுப்பூசி போடப்பட்ட நாயாக பார்த்து மக்கள் கடி வாங்க வேண்டுமா?

இதில் வேறு தடுப்பூசியை ஒவ்வொரு வருடமும் நாய்களுக்கு போட வேண்டுமாம்! இந்த திட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருப்பவர்கள் கள்ள கணக்கு எழுதி சம்பாதிப்பதற்கு தான் பயன்படுகிறது.

நாய்களுக்கு போடும் ஒரு தடுப்பூசியின் விலை ரூ.70 முதல் ரூ.100 வரையாகும். ஆனால் நாய்களைப்பிடித்து தடுப்பூசி போடும் வேலையைச் செய்பவர்களுக்கு ரூ.500 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தை தங்கள் அறிவீனத்தால் எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள்.

ஜீவகாருண்யத்தின் படித்தான் இவர்கள் நாய்களை ஒழிப்பதற்கு தயங்குகிறார்கள் என்றயால் கொசுக்களை ஒழிப்பதற்கும் பூச்சிகளை அழிப்பதற்கும் மருந்துகள் அடிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்! ஆனால் இவர்கள் அப்படி ஒரு நிலைப்பாடடை எடுக்கவில்லை. நாய்களால் அதிக பாதிப்பு என்பதனால் கொசுக்கள் பூச்சிகளை ஒழிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட நாய்களை ஒழிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தெருக்களில் நிம்மதியாக நடக்க முடிவதில்லை, குறிப்பாக இரவுகளில் வேலை முடித்து வருபவர்கள் தெருக்களிலும் சந்துக்களிலும் நடக்கும் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியிருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு அதிக தொல்லையாகவும் உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் தீர்வுகாண வேண்டிய பெரய பதவியில் இருப்பவர்கள் காரில் செல்வதாலோ என்னவோ இத்தகைய பாதகங்களை உணராமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

பொதுவாக நாய்களை வைத்து வளர்ப்பது இறைவனின் தூதர்(ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூற்கள்: புகாரி 3225 முஸ்லிம்

முக்கிய தேவை இருந்தால் வளர்த்துக் கொள்ளலாம்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கால்நடை பாதுகாப்பு அல்லது வேட்டை அல்லது பயிர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பயன்படும் நாயைத் தவிர்த்து வேறு நாயை ஒருவர் வைத்திருந்தால் அவருடைய நற்கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கிராத் அளவு குறைந்து கொண்டிருக்கும்.” நூல்: அபூதாவூத் 2846

இத்தகைய அவசியத் தேவைகள் இல்லாமல் வைத்துக் கொள்வதால் என்ன பயன்? வீட்டுக்கு வருபவர்களை பயமுறுத்துவதும் விருந்தினரை விரட்டுவதும் தான். திடீரென வெறிவந்து மனிதர்களை கடித்துக் குதறுவதும் தான்.

நாய்கடித்து அதன் பாதிப்பு அதிகமானால் நாயைப்போல் குரைக்கும் அளவுக்கு மனிதனின் நிலை சென்றுவிடுகிறது. அந்த அளவிற்கு அதன் பல்லுக்கும் எச்சிலுக்கும் கொடிய விஷத்தன்மை உள்ளது.

அதனால் நாய் வாய் வைத்த பாத்திரங்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டியிருக்கிறார்கள்.

உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அந்த பாத்திரத்தை ஏழு தடவை கழுவ வேண்டும். அவற்றில் முதலாவது தடவை மண்ணைப் பயன்படுத்த வேண்டும்! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம் 420

எனவே நாய்களை அவசியத் தேவைகளுக்கு மட்டும் வைத்திருக்கலாம். வீட்டுக்குள்ளும் அறைக்குள்ளும் வைத்து செல்லப்பிராணி என்ற பெயரில் வைத்து வளரப்பதற்கு தகுதியற்ற பிராணிதான் நாய். ஆயினும் அதுவும் ஒர் உயிர் என்ற அடிப்படையில் அதற்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உதவுவது நன்மையான காரியம் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“(முன்னோர் காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்கு புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்கு பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரலி), நூல்: புகாரி 3467

நாய்களுக்கு அவற்றுக்குரிய மதிப்பையும் மனிதர்களுக்கு அவர்களுக்குரிய மதிப்பையும் வழங்க வேண்டும். மனிதர்களின் நிம்மதியும் ஆரோக்கியமும் உயிரும் தான் முதன்மையானவையாகும் முக்கியமானவையுமாகும். மனிதர்களை வதைக்கும் மிருக நேயம் கூடாது!

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

Admin
2880 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions