ஆய்வுகள்

April 30, 2014

காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1

காதல் என்பது கணவன் மனைவி ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நேசத்தைக் குறிக்கும் வார்த்தையாகும்அதுபோல கணவன் மனைவியாக ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்ப்படும் நேசத்தையும் குறிக்கும். இந்த இரண்டாவது வகை காதல் பற்றியே இந்த கட்டுரை.

காதல் ஓர் இஸ்லாமிய பார்வை

சீர்கெட்ட சமூக அமைப்பில் புரிந்து வைக்கப்பட்டுள்ள அல்லது புகுத்தப்படுகிற காதலை புறந்தள்ளிவிட்டு இன்னாரை திருமணம் செய்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒருவர் கொள்ளும் நேசம்காதல் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் செய்துகொள்ளுங்கள். [அல்குர்ஆன் 4:3]

இங்கு உங்களுக்கு விருப்பமானவர்களை என்று கூறியதிலிருந்து ஒரு பெண் மீது விருப்பம் ஏற்ப்பட்டு பின்பு அவளைத் திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதிப்பதை புரிந்துகொள்கிறோம்.

திருமணம் செய்வதற்காக பெண் பேசிய பின் ஏற்ப்படும் விருப்பத்தைத் தான் இது குறிக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் திருமணத்திற்க்காக பெண் பேசுவதற்கு முன்னரே ஒரு பெண் மீது விருப்பம் கொள்வதை அங்கீகரிக்கும் விதத்தில் இன்னொரு வசனம் உள்ளது.

“(இத்தா இருக்கும் பெண்ணை) பெண் பேசுவதை நீங்கள் சாடையாக எடுத்துக் கூறுவதிலோ அல்லது உங்கள் மனங்களில் மறைத்து வைப்பதிலோ குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். எனினும் நல்ல வார்த்தையை கூறுவதைத் தவிர (திருமணம் செய்வதாக) ரகசியமாக வாக்குறுதி கொடுத்துவிடாதீர்கள். மேலும் (இத்தாவின்) தவணை முடிகின்றவரை திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். [அல்குர்ஆன் 2:235]

இந்த வசனத்தில் இத்தாவில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஒருவர் இத்தா முடியும் வரை பெண் பேசக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்கின்றான். ஆனால் நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான் என்றும் கூறுகிறான். இதன் மூலம் பெண் பேசுவதற்கு முன்பே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் விரும்புவது குற்றமாகாது என்பதைப் புரிகிறோம்.

அண்ணலின் நினைவில் அன்னை ஹஃப்ஸா:

உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: கணவன் இறந்ததால் என் மகள் ஹஃப்ஸா விதவையான போது, உஸ்மானைச் சந்தித்து ஹஃப்ஸாவைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னேன், நீங்கள் நாடினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன், அதற்கவர் இது விஷயத்தில் நான் யோசிக்க வேண்டும் என்றார். சில தினங்கள் பொறுத்திருந்தேன். அதன் பின் அவர் இப்போது நான் திருமணம் செய்ய வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது  என்றார்.

பிறகு அபூபக்கரை சந்தித்து தாங்கள் நாடினால் உங்களுக்கு நான் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதற்கவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் அதனால் உஸ்மான் மீது இருந்த வருத்தத்தை விட அவர் மீது அதிக வருத்தப்பட்டேன்.

பிறகு சில நாட்கள் கழிந்தபின் நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் பேசினார்கள். அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன்.

பின்பு அபூபக்கர்என்னைச் சந்தித்து என்னிடம் நீங்கள் ஹஃப்ஸாவைப் பற்றி எடுத்துச் சொன்னபோது உங்களுக்கு நான் எதுவும் பதிலளிக்கவில்லை என்பதால் என்மீது நீங்கள் வருத்தப்பட்டிருக்கலாம் என்றார், அதற்க்கு நான் ஆம் என்றேன். அல்லாஹுவின் தூதர் (ஸல்) நினைவு கூர்ந்தார்கள் என்பதே உங்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. ஏனென்றால் அல்லாஹுவின் தூதரின் ரகசியத்தை நான் பரப்பமாட்டேன். ஒருவேளை நபி அவர்கள் அவரைத் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன் என்று கூறினார். நூல்: புகாரி 4005

இந்த ஹதீஸில் ஹஃப்ஸாவை அல்லாஹுவின் தூதர்(ஸல்)  நினைவு கூர்ந்ததாக அபூபக்கர் (ரலி) அவர்கள் சொல்வது திருமணம் செய்துகொள்கிற விருப்பத்தை வெளிப்படுத்தியது, அதனால்தான் அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்கிறீர்களா என்ற கேள்விக்கு ஒன்றுமே சொல்லாமல் இருந்தார்கள். அதோடு நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் தானே ஹஃப்ஸாவை ஏற்றுக்கொண்டிருப்பேன் என்றும் சொல்கிறார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து, ஒரு பெண்ணை பெண் பேசுவதற்கு முன்பே திருமணம் செய்வதற்கான விருப்பம் கொள்வதும் அதனை நெருங்கிய நண்பரிடம் வெளிப்படுத்துவதும் ஆகுமானது என்பதை புரிகிறோம்.

மேற்கண்ட வசனங்கள் மூலமும் ஹதீஸ் மூலமும் புரியப்படும் நேசம் கொள்ளுதல் என்பது மனிதனின் சுய அதிகாரத்தை மீறி அவனது மனதில் ஏற்ப்படும் விருப்பம் தான், அன்னியப் பெண்ணை பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மார்க்கத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் இது ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

ஒரு பெண் முகம் உட்பட தன்னை முழுமையாக மறைத்த நிலையில் இருந்தாலும் அவளது பேச்சின் மூலமோ அல்லது நல்ல நடத்தை மூலமோ ஒரு ஆண் கவரப்படுவதர்க்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அவளைப் பற்றி தெரியவரும் நல்ல விஷயங்களாலும் பிரியம் ஏற்ப்படலாம்.

இந்த விருப்பம் முறையான வழியில் திருமணத்தை நோக்கி முன்னேறுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஆண், பெண் தொடர்புகளுக்கு மார்க்கம் என்ன வரையறைகளை விதித்துள்ளதோ அவையெல்லாம் காதலர்களுக்கும் பொருந்தும்.

பார்வை:

ஒரு ஆண் அன்னியப் பெண்ணை பார்த்து ரசிக்கக் கூடாது என்பது மார்க்கத்தின் தடை உத்தரவு. இதை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை, அல்லாஹ் கூறுகிறான்:

இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
மேலும் இறைனபிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். [அல்குர்ஆன் 24:30,31]

இந்த வசனங்களில் ஆண், பெண் இருதரப்பினருக்கும் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளவும், கற்பைப் பேணிக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

இது எல்லோருக்கும் பொதுவான கட்டளைதான், ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்பதற்காக இதை மீறக் கூடாது. ஏனென்றால் அவள் இவரது மனைவியல்ல, இவர் அவளைத் திருமணம் செய்ய இயலாமல் கூடப் போகலாம்.

எதோ ஒரு சூழ்நிலையில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதிர்பாலர் மீது விருப்பம் ஏற்ப்படலாம், அந்த விருப்பம் திருமண பந்தத்தின் மூலம் இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க்கத்தில் தடை செய்யப்பட எதுவும் கலக்காமல் இருந்துகொண்டிருந்தால் அது தவறல்ல.

அல்லாஹ் திருமணம் செய்து கொள்வது பற்றி கூறுகின்றான்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல. நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.

ஆக, பார்வையிலும் அதற்குரிய வரையறைகளைப் பேணவேண்டும், மற்ற வரையறைகளையும் பேண வேண்டும்.

தான் விரும்பும் பெண்ணை தொடர்ந்து பார்ப்பதும் கூட தவறு என்று கூறும்போது காதலில் இதுகூட செய்யக்கூடாதா என்ற கேள்வி கேட்கப்படலாம்.

இறைநம்பிக்கையுடன் அவனது வழிகாட்டுதல் படி செயல்படவேண்டுமென்று நினைப்பவர் இதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இறைவழிகாட்டுதலுக்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவன் ஒருத்தியை காதலி என்று சொல்லிக்கொள்வதால், அவள் அன்னியப் பெண் என்கிற நிலை மாறிவிடாது, ஒரு அன்னியப் பெண்ணிடம் பேண வேண்டிய வரைமுறையை அவளிடத்திலும் பேண வேண்டும்.

இதனை இறைவழிகாட்டுதல் மட்டுமின்றி மனசாட்சியும் வலியுறுத்தத்தான் செய்கிறது. தவறான பார்வை மட்டுமின்றி தான் விரும்பும் பெண்ணுடன் கூடாத அசிங்கப் பேச்சுக்களைப் பேசுவதும், தவறான எண்ணத்துடன் தொடுவதும் சிறு விபச்சாரம் என்ற அடிப்படையில் இறைவனிடம் தீமையாக பதியப்படும். அதற்குத் தகுந்தாற்போல் மறுமையில் தண்டனையும் கிடைக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு மனிதனுக்கும் விபச்சாரத்திலிருந்து ஒரு பகுதி (பாவம்) கிடைத்துவிடுகிறது. இரு கண்களின் விபச்சாரம் பார்வை, இரு கைகளின் விபச்சாரம் பிடித்தல், இரு கால்களின் விபச்சாரம் நடத்தல், வாயின் விபச்சாரம் முத்தம், உள்ளம், ஆசைப்படுகிறது அல்லது பொய்யாக்கி விடுகிறது. நூல்: அஹ்மத் 10933

ஆனால் இந்த செயல்களெல்லாம் காதல் என்ற பெயரால் நடந்தால் தவறில்லை என்று ஒழுக்கங்கெட்ட சமூக விரோதிகளால் சினிமாக்கள் மூலமும், கதைகள் மூலமும் சித்தரிக்கப்படுகிறது.

வழிகேட்டு ஒழுக்கங்கெட்டுப் போனவர்கள் இந்த சித்தரிப்புகளை நடைமுறைப் படுத்தலாம் ஆனால் நல்வழியில் ஒழுக்கத்துடன் நடக்க விரும்பும் இறைநம்பிக்கையாளன் இதை எதிர்ப்பவனாகத் தான் இருப்பான்.


இறை வேதங்கள் மற்றும் இறைத்தூதர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளாவிட்டால் கூட பொதுவான நியாயமும் மனசாட்சியும் ஒரு பெண்ணை தவறாக தொடுவதும் அவளிடம் வரம்புமீறிய பேச்சுக்களைப் பேசுவதும் மற்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்வதும் கூடாதென்றுதான் சொல்கின்றன.

காதலன், காதலி என்று சொல்லப்படுபவர்கள் ஒருவர் மீது ஒருவர் நேசங்கொண்டு திருமண பந்தத்தின் மூலம் இணைய விரும்புகிறவர்கள் அதற்க்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தானே தவிர கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல.

காதலிப்பவர்கள் திருமணம் செய்யாமலும் போகலாம், அப்படித்தான் பலருக்கும் நடக்கிறது. இவ்வாறு இருக்கையில் மேற்கண்ட தவறுகளை செய்துவிட்டு பிரிந்தால் இறைவனுக்கு மாறு செய்த குற்றத்தோடு வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்த குற்றமும் வந்து சேரும். தவறுகள் திருமணத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் கூட! ஏனென்றால் திருமணம் செய்து கொள்பவர் அவ்வாறான தவறுகள் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு தான் திருமணம் செய்கிறார்.

 

காதலிப்பவர்கள் கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல

ஒழுக்கத்தையும் கவுரவத்தையும் விரும்பும் ஒருவன் இது போன்ற தீமைகளைத் தூண்டுகிற சூழ்நிலைகளை விட்டும் தூரமாக இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]

இது எல்லோருக்கும் பொதுவான எச்சரிக்கை என்றாலும் காதலிப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் அவசியம் பேண வேண்டியது. ஏனென்றால் அவர்களை ஷைத்தான் இலகுவாக வழிகெடுத்து விட வாய்ப்புள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் இருவர் கொள்ளும் நேசம் தடை செய்ய இயலாதது. ஆனால் அதில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட எதுவும் கலக்கக் கூடாது. திருமணம் நடக்காதவரை அந்நியர்கள் தான், அந்நியர்களிடம் பேண வேண்டிய ஒழுக்கத்தை எல்லா நிலையிலும் பேண வேண்டும்.

குறிப்பாக பெண் கூடுதல் கட்டுப்பாட்டுடனும், பேணுதலுடனும்   நடந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் கூடுதல் கட்டுப்பாட்டு உணர்வை பெண்களுக்கு கொடுத்திருக்கிறான். கூடுதல் வெட்க உணர்வையும் கொடுத்திருக்கிறான்.

தவறுகளிலிருந்து ஒதுங்கியிருக்கிற தன்னைத் தற்காத்துக் கொள்கிற அதிக வாய்ப்புகளை அல்லாஹ் பெண்ணுக்கு ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

“(பெண்களாகிய) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தய அறியாமைக் காலத்தில் பெண்கள் (அலங்காரத்தை) வெளிப்படுத்தியது போல் நீங்கள் வெளிப்படுத்தாதீர்கள். [அல்குர்ஆன் 33:33]


இந்த இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள உத்தரவும் தடையும் அப்படியே சமமாக ஆணுக்கு கூறப்படவில்லை, அப்படிக் கூறினால் அது அறிவுக்கும் இயற்கைக்கும் மாற்றமாக அமையும்.

பெண்ணிடம் இருக்கும் இயற்க்கை தன்மையின் படியும் அவளின் உடல் வாக்குப்படியும் பார்த்தால் அவள் ஆற்றவேண்டிய கடமைகள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும். அதுதான் அவளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

அழகை வெளிப்படுத்தி வெளியில் வருவதால் ஏற்ப்படும் பாதிப்புகளெல்லாம் பெண்ணுக்குத் தான்.

இந்த வசனத்திலுள்ள வழிகாட்டல் ஒருவனை திருமணம் செய்து வாழ்வதற்காக நேசிக்கும் பெண்ணுக்கு முக்கியமானது. தன் விருப்பத்திர்க்குரியவனை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியில் கிளம்பக்கூடாது. திருமணம் செய்யாத வரை அவனும் அந்நிய ஆண்தான். சொல்லப்போனால் காதலன் என்று சொல்லப்படுகிறவனாலேயே சிறிய, பெரிய அசிங்கச் செயல்களின் பாதிப்புக்கும் பாவத்திற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

இறைவனும் இறைத்தூதரும் வழிகாட்டியுள்ளபடி ஒழுக்கத்தைப் பேணினால் ஒரு பெண் இந்நிலையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாம். தவறான எண்ணத்துடன் அந்நிய ஆண் அன்னியப் பெண்ணைத் தொடுவதும் கூட விபச்சாரம் என்று கூறும் நபி மொழியைப் பார்த்தோம்.ஒரு நல்லப் பெண் இதற்க்கெல்லாம் எப்படி அனுமதி கொடுப்பாள்?

பெண் என்பவள் மறைந்திருக்க வேண்டியவள் அவள் வெளியே செல்லும்போது ஷைத்தான் அவளை அண்ணார்ந்து பார்க்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : திர்மிதி 1173

அவள் வெளியில் வருவதை பயன்படுத்தி தவறு நடைபெறச் செய்யவேண்டுமென ஷைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது தன்னால் தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று தெரியும் ஒரு சூழலுக்கு தன்னை கொண்டுசெல்லலாம ஒரு பெண்?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெண்களைத் திருப்திபடுத்துவதற்காக எதையும் செய்யத்துணிகின்ற) ஆண்களுக்கு (அந்தப்) பெண்ணைகளைவிட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை.
அறிவிப்பவர்: உஸாமா பின் சைத் (ரலி) நூல்: புகாரி 5096

பெண்கள் மூலமாக ஆண்கள் சோதனையிலும் குழப்பத்திலும் அவர்கள் தாமே செய்யும் தவறினால் சிக்குவது அவர்களின் குற்றம், அதே நேரத்தில் ஒரு பெண் தன் செய்கையாலும் நடத்தையாலும் ஒரு ஆணை அந்த நிலைக்கு ஆளாக்கினால் அது அவளுக்கு பெரும் இழுக்கு! இவள் மூலமாக அவன் சிறு அசிங்கச்செயல் செய்து அவன் அல்லாஹுவின் தண்டனைக்கு ஆளாகும் சோதனையில் வீழ்ந்தால் அதிக பழிப்புக்குரியவள் பெண்தான்! ஏனென்றால் அந்நிய ஆணைச் சந்திப்பதற்காக வெளியே கிளம்பியது, அந்நிய ஆணிடம் கூடுதல் நெருக்கமாக இருந்தது இதுவெல்லாம் இவளது குற்றம்!

கற்பு தொடர்பான ஒழுக்கத்தை அல்லாஹுதஆலா விளக்கமாகவே போதிக்கிறான்.

“(நபியே) இறைநம்பிக்கையாளர்களான  ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். அல்குர்ஆன் 24:30


அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.


இந்த வசனத்தில் ஆண்களுக்கு ஒழுக்கத்தை போதித்த அல்லாஹ் அடுத்த வசனத்தில் பெண்களுக்கு அவர்களுக்கு தகுந்தவாறு நல்லொழுக்கம் போதிக்கிறான்.

இறைநம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்திக்கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதில் (வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளை அவர்கள் நெஞ்சுப்பகுதிகளில் போட்டுக்கொள்ளவும் மேலும் தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களான அடிமைகள் அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும் தம் அலங்காரத்தில் தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும் நம்பிக்கயாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹுவின் பக்கம் மீளுங்கள் அல்குர்ஆன் 24:31

இந்த வசனத்தில் ஒரு பெண் தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள் யார் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான்.

இந்தப் பட்டியலில் காதலன் என்று ஒருவன் இல்லை, தன் கணவனாக வரவேண்டுமென்று ஒருவனைப் பற்றி ஒரு பெண் விரும்பிவிடுவதால் அவனுக்கு கூடுதல் சலுகை கிடையாது என்பதை உணரவேண்டும்.

இந்த வசனத்தில் அந்நிய ஆணின் கவனத்தை திருப்புகிற விதத்தில் காலை வேகமாகத் தரையில் தட்டிக் கூட நடக்கக் கூடாது என்று தடை செய்கிறான் இறைவன்!

ஒரு அந்நிய ஆணை கெட்ட எண்ணத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது என்பதில் ஒரு பெண் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறான். அப்படியிருக்கையில் ஒருவனின் தவறான ஆசைகளை தூண்டுகிற விதத்தில் நடந்துகொள்வதும் தவறு செய்ய அனுமதிப்பதும் எப்படித் தகும்?

இத்தனைக்கும் காதலிப்பதாகச் சொல்லி தங்கள் இச்சையை தீர்க்க மட்டும் பயன்படுத்திவிட்டு பெண்களை ஏமாற்றும் கயவர்கள் பெருத்திருக்கும் சூழ்நிலையில் பெண் கூடுதல் பேணுதலுடன் இருக்க வேண்டும்.

காதலித்து ஏமாற்றுபவர்களின் செய்திகள் பல்லாயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்தாலும் கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழும் காரியத்தை பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

என் காதலன் நல்லவன் என்று அவனுடன் தனித்திருக்க துணிகிறார்கள். இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, ஏமாற்றப்பட்ட எல்லா காதலிகளும் தங்கள் காதலர்களை இப்படித்தான் நல்லவர்கள் என்று நம்பியிருந்தார்கள்.

உண்மையில் நல்லவனாக இருந்தால் அன்னியப் பெண்ணுடன் காதல் என்ற பெயரை பயன்படுத்தி வெளியில் சுற்றவும் தனிமையில் இருக்கவும் முயற்சிக்க மாட்டான்.

தான் விரும்பும் பெண்ணுடனும் ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்வான்.

ஆக ஆணுக்கு ஏற்ப்படுவதுபோல் ஒரு பெண்ணுக்கும் இன்னவரை திருமணம் செய்து வாழ்வில் இணைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்படலாம். அது அந்த அளவோடு இருக்கும்போது குற்றமாகாது. ஆனால் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு மதம் தடுத்துள்ள ஒழுக்கமில்லா எந்த செயல்களுக்கும் உடன்படுவது தவறாகும்.அத்தோடு, அதனால் ஏற்ப்படும் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்தான்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்காக, தாய், தந்தையரை பொய் சொல்லி ஏமாற்றுவதும் ஒரு துரோகம் தான். தன் பிள்ளை நல்லவள் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது அந்நியனுடன் வெளியில் செல்வதற்கு பொய்க் காரணங்களைச் சொல்லி ஏமாற்றுகிற செயல் இறைவனுக்கு மாறுசெய்தல் என்ற பாவத்தோடு பொய், துரோகம் போன்ற பல வகைத் தவறுகள் கொண்டதாகும்.

ஒருவர் மீது கொள்ளும் நேசம்தான் உள்ளம் தொடர்பானது, தன்னை மீறியது. ஆனால் அதைக் காரணமாக வைத்து ஒழுக்கம் கெட்ட கண்ணியக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தன்னை மீறியது அல்ல.அதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள முடியும்.

Admin
3049 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions